இன்று மாலை சேலம் சென்னிஸ் கேட்வே அருகே நடந்த சம்பவம். ட்ராபிக் அதிகம் இல்லாத நேரம் அது. இருசக்கர வாகனத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்றுக்கொண்டு இருந்தார். திடீரென சாலையின் நடுவில் இருந்த மதில் சுவரில் இருந்து ஒரு பையன் எகிறி குதித்து சாலையை அதிரடியாய் கடக்க முயற்சிதான். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இரு சக்கர வாகன ஓட்டுனர் அவன் மேல் மோதிவிடாமல் இருக்க சடன் ப்ரேக் அடித்தார். அதை பற்றியெல்லாம் துளியும் கவலையில்லாமல் அந்த பையன் நிற்காமால் தொடர்ந்து ஓடிசென்று சாலையை கடந்து சில நொடிகளில் மறைந்து போனான்.
சாலையின் நடுவில் மதில் சுவர் எழுப்பி இருப்பதே அதை யாரும் கடக்க கூடாது என்பதற்கு தான். அதை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த பையன் செய்த காரியத்தின் விளைவு என்னவென்று அவன் யோசித்து பார்க்கவில்லை. இந்நேரம் அவன் வீட்டிற்கு சென்று டீ.வி சீரியல் பார்த்துக்கொண்டோ, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டோ தன் வழக்கமான வாழ்கையை எந்த வித குற்றவுணர்வுமின்றி தொடர்ந்துக்கொண்டு இருப்பான். ஆனால் எந்த தவறும் இழைக்காமல் இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த அந்த நபர்?
அவன் மேல் மோதிவிடமால் இருக்க ப்ரேக் அடித்ததில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து, முகம் சேதமாகி, ரத்தம் வழிந்த நிலையில் சாலையில் விழுந்துக்கிடந்தார். அனைவரும் சேர்ந்து அவரை தூக்கி சாலை ஓரமாக உட்கார வைக்க முயற்சிக்கையில் இந்த சம்பவத்தை நான் பார்க்க நேர்ந்தது. அப்போது சாலையெங்கும் காயாத நிலையில் ரத்தம் ஓடிக்கொண்டு இருந்தது. முகம் முழுவதும் வீங்கி, படு கோரமாகி, ரத்தம் வழிந்து அடையாளம் தெரியாத நிலையில் இருந்தார் அந்த நபர். பார்க்கவே முடியவில்லை. 108 எண்ணிற்கு யாரோ போன் செய்ய, அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து அவரச அவசரமாய் அவரை அள்ளிப்போட்டுகொண்டு சென்றது.
அந்த சாலையில் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த ரத்தம் உறைந்துகொண்டிருந்ததை பார்த்தபோது, “இந்த நபர் இப்போது எங்கே, எந்த வேலை நிமித்தமாய் சென்றுக்கொண்டிருந்திருப்பார்? ஒருவேளை பள்ளியில் படித்துகொண்டிருக்கும் தன் மகளையோ, மகனையோ அழைக்க சென்றிருப்பாரோ? இப்படி ஒரு விபத்து நடந்திருக்கிறது என்று அவர் குடும்பத்திற்கு தெரியவரும்போது அவர்கள் படப்போகும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லையே. அவர் தலையில் வேறு மிக மோசமாய் அடிபட்டு இருக்கிறது. ஒருவேளை பிழைக்காமல் போய் விடுவாரோ. இல்லை இல்லை. அப்படியெல்லாம் ஆகக்கூடாது” இவ்வாறு மனம் தன் போக்கிலே சிந்தித்துக்துவங்கியது.
அப்போது அருகில் இரு நபர்கள் பேசிக்கொண்டிருந்தனர். “ஒருவேளை தலைக்கவசம் அணிந்து வந்திருந்தால் இந்நேரம் அவராகவே எழுந்து, வண்டியை எடுத்துக்கொண்டு சென்றிருக்கலாம், இவ்வளவு பெரிய சேதம் ஆகி இருக்காது”. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் பரணில் நீண்ட மாதங்களாய் கிடந்த என் தலைக்கவசத்தை தூசு தட்டி எடுக்கத்துவங்கினேன்.
சோம்பல் படாமல் எந்நேரமும் தலைக்கவசம் அணிவது இன்றைய நிலைக்கு நல்லது…
பயனுள்ள பதிவு.
நன்றி.