சென்ற மாதம் வழக்கு எண் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அத்திரைப்டத்தின் ஒளிப்பதிவாளர் திரு விஜய் மில்டன் அழைத்திருந்தார். சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு முதல் நாள் இரவு ஒரு பேருந்தில் முன்பதிவு செய்திருந்தேன். சில வேலைகள் காரணமாக அன்று இரவு நான் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு காலதாமதமானது. பேருந்து புறப்பட பதினைந்து நிமிடங்களே இருந்ததால் அவசர அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பி இரு சக்கரவாகனத்தை சேலம் மத்திய பேருந்தை நோக்கி விரட்டினேன். பேருந்து கிளம்புவதற்குள் சென்று விட முடியும் என்ற நம்பிக்கையில் வண்டி வேகம் பிடித்தது. அப்போது சேலம் முழுக்க திருவிழா சமயம். நான் சென்று கொண்டிருத்த திசையில் தூரத்தில் ஒலி பெருக்கியில் எங்கோ கூத்து நடை பெற்றுக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
அது எனக்கு ஒரு வகையில் ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. சிறு வயதில் என் உறவினர்களின் கிராமத்துக்கு திருவிழாவிற்கு செல்கையில் அங்கு தான் எனக்கு கூத்து முதன் முதலாய் பரிச்சயம் ஆனதாய் நியாபகம். அச்சயமயத்தில் அவ்வூர் கோவில் அருகே ஒரு மேடையில் கூத்து நடக்கும். அதை கண்டு ரசிக்க கிட்டதட்ட ஊரே திரண்டு வரும். ஒவ்வொருவரும், உட்காருவதற்கு பாய், போர்வை அனைத்தும் வீட்டிலிருந்து கொண்டு வந்து தங்களுக்கு சவுகரியமான இடங்களை பிடித்துக்கொள்வர். பெருசுகள் தலையில் குளிருக்காக காதை மறைத்தவாறு முண்டாசு கட்டியும், தலையோடு போர்வை போர்த்தியவாறு கூத்தை ரசிப்பர். அவ்வூர் பெரிய தலைகள் கூத்து கலைஞர்கள் உடையில் அவ்வப்போது ருபாய் நோட்டுகளை குத்திவிட்டு தங்கள் பெயரை மைக்கில் கேட்டு மகிழ்வர். இப்படியே விடிய விடிய நிலவொளியில் கூத்து நடக்கும். எனக்கு அது இன்னும் நினைவிருக்கிறது.
இப்போது அதே கிராமத்தில் கூட அந்த திருவிழாவின் போது கூத்து நடப்பது இல்லை. நான் சமீபத்தில் அங்கு சென்ற போது கூத்து இப்போது “சினிமா மேடை நடன நிகழ்ச்சி”யாக அது உருமாறி இருந்தது. அதுவும் இரவு பதினோரு மணியோடு முடிந்துக்கொள்ள வேண்டும் என்று காவல் துறையின் உத்திரவோடு. இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன கலை ஆகிவிட்டது கூத்து.
சேலத்தில் இப்போதும் கூத்து நடப்பதை உணர்ந்தவுடன் என் சந்தோசம் அதிகமானது. அந்த நினைவுகளை அசைபோட்டவாறு இருசக்கரவாகனத்தில் சிறிது தூரம் சென்றிருப்பேன். சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலை கடக்கையில் அங்கு தான் கூத்து நடந்துக்கொண்டிருப்பதை கவனித்தேன். ஆனால் அந்த சந்தோசம் மறு நொடியே சுக்குநூறானது. மேடையில் கூத்து கலைஞர்கள் பாடுப்பாடி நடித்துக்கொண்டு இருந்தனர். மேடை கீழே வெறும் ஐந்து பேர் மட்டுமே உட்கார்ந்து இருந்தனர். அனைவரும் வயதானவர்கள். யாருமற்ற அந்த இடத்தில் அவர்கள் நடித்துக்கொண்டு இருந்தது வேதனை அளித்தது. இதை விட அந்த கலைஞர்களுக்கு பெரிய அவமானம் இருந்து விடப்போவதில்லை. மீதமுள்ள மக்கள் எங்கே? குறைந்த பட்சம் அருகில் இருக்கும் இரண்டு மூன்று தெருவில் இருக்கும் நபர்கள் வந்திருந்தால் கூட ஒரு சொற்ப கூட்டம் சேர்ந்திருக்குமே?
என்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, முதுகில் மாட்டி இருந்த பையில் இருக்கும் காமராவை எடுத்து, உடனே இதை படம் பிடிக்க மனம் கட்டளை இட்டது. பேருந்தை தவற விட்டு விடுவோம் என்று உள்ளுணர்வு தடுத்தால் சிறு உறுத்தலோடு வண்டியை நிறுத்தாமல் சென்றேன். இரு சக்கர வாகனத்தை ஸ்டாண்டில் போட்டு விட்டு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த போது, என்னுடைய பேருந்து மெதுவாய் நகர்ந்துக்கொண்டு இருந்தது. புகைப்படம் எடுக்காமல் வந்துவிட்டதற்காக உறுத்திக்கொண்டு இருந்த என் மனம் இப்போது அமைதியானது.
அடுத்த நாள்… வழக்கு எண் படத்தில் ஒரு காட்சி. தன்னுடன் சென்னையில் பிளாட்பார ஹோட்டல் கடையில் வேலை செய்யும் கூத்து கலைஞனான சின்னசாமியின் திறமையை பார்த்துவிட்டு கதாநாயகன் ஸ்ரீ ஆச்சர்யமாகி அவனிடம் ஒரு கேள்வி கேட்பான் ‘”டேய்.. உனக்கு இவ்வளவு திறமை இருக்கும்னு நான் நினைச்சி கூட பாக்குலடா. சூப்பர்டா.. கலக்கிட்ட… இவ்வளவு திறமைய வச்சுக்கிட்டு இந்த பிளாட்பாரம் கடையில வந்து கஷ்டப்படுறயேடா?”.
அதுக்கு அந்த சிறுவன் பதில் சொல்லுவான் “ஒரு நாள் கூத்துனு சொல்லுவாங்களே, அது போல அதுவும் நாங்களும். என்னிக்காவது தான் வரும். இப்போலாம் யாருய்யா கூத்தை ரசிக்கிறா? கூத்தை ரசிக்கிற பெருசுகளும் ஒன்னொன்னா, ஒன்னொன்னா மண்டைய போட்டுட்டு இருக்குதுங்க. இப்படியே போச்சுனா வயிறுன்னு ஒன்னு இருக்குல்லாயா? அதான் பொழப்ப தேடி வந்துட்டேன்.“
முந்தைய இரவு பார்த்த கூத்து மேடை ஞாபகம் வந்தது. யாருமற்ற இடத்தில் நடித்துக்கொண்டு இருந்த அந்த கலைஞர்கள் ஞாபகம் வந்தனர். அதை ரசித்துக்கொண்டு இருந்த அந்த நான்கைந்து பெருசுகளும் ஞாபகம் வந்தனர். லேட் ஆகி இருந்தால் கூட பரவாயில்லையென்று அந்த நிகழ்வை படம் பிடித்து பதிவு செய்திருக்கலாம். மீண்டும் என் மனசாட்சி உறுத்த ஆரம்பித்தது…..
போட்டோ கிரெடிட் – Ayashok
இன்றய நடிகர்களின் பழைய பெயர் கூத்தாடிகள் – நடிகர் M R ராதா
பிரவீன் – ஆதங்க பதிவு. வருத்தப்படவேண்டாம். விடுமுறை நாட்களில் Canonodu களமிறங்குங்கள். ஆத்தூர் தாலுகாவில் இன்னும் சில இடங்களில் கூத்து நடைபெறுவதாக கேள்விபட்டேன். அதை பதிவு செய்யுங்கள். மாரியம்மன் பண்டிகை – சேலத்திற்கே உரித்தான மெரவனை போன்றவற்றை கிளிக்குங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி C.K சார்..
“நெகிழ்ச்சியான பதிவு !”
சினிமா என்ற கலைவடிவத்தால் கூத்து என்ற கலை அழிவது வருத்தப்படவேண்டிய விஷயம்.
அருமையான, மன நெகிழ்வைத் தரக்கூடிய பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
சுவரசியமான ஆனால் நெகிழ வைத்த பதிவு!
நானும் கூத்து என் சின்ன வயசில் ரசித்திருக்கிறேன். அருமையான பதிவு.
அதிக எடிட்டிங் இல்லாமல் ஒவ்வொரு காட்சியும் திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம்( இது அவரே கோவை பாராட்டு நிகழ்ச்சியில் தெரிவித்தது) அந்த படத்தில் வரும் காட்சிகள் பலவும் அவரின் மனதில் பலவருடங்கள் அசை போடப்பட்டவை. இந்த சமுதாயத்திற்கு விளிப்புணர்வை எற்படுத்த எடுக்கப்பட்ட சிறந்த படம்.
[கலாகுமரன்] http://eniyavaikooral.blogspot.in
இத்திரைப்படம் குறித்த பதிவு தங்களின் பார்வைக்கு
http://worldcinemafan.blogspot.in/2012/05/blog-post_05.html