தாமஸ் அண்ணா என்கிற அஜயன் பாலா

2006ஆம் வருடம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஆரம்ப காலம். எப்படியும் அப்போது வாரம் ஒருமுறை  ஏதேனும் புதிதாய் வெளிவந்த படத்திற்கு உடன் பணிபுரிந்த நண்பர்களுடன் சென்று விடுவோம். வெள்ளிக்கிழமை ஆகிவிட்டால் போதும், பர்ஸ்ட் ஷிப்ட் மதியம் இரண்டு முப்பது மணிக்கு முடியும் என்றால் எப்படியும் இரண்டே காலுக்கே தியேட்டரில் ஆஜராகிவிடுவோம். அவ்வளவு கடமை தவறாத ஈடுபாடு.

அதே போன்ற ஒரு வெள்ளிகிழமை நாளென்று நினைக்கிறேன். நண்பர்கள்  சிலபேர் அலுவலகத்தில் தேனிர் இடைவேளையின் போது ஒன்று கூடிய நேரம். போன வாரம் “சித்திரம் பேசுதடி”னு ஒரு படம் வந்து இருக்கு, அதற்கு இன்றைக்கு போலாமா என்று நான் கேட்டேன். ஆனா அது பெரிய மொக்கை படம்னு சொல்லி யாருக்கும் வர விருப்பம் இல்லை என்று நழுவிவிட்டனர். நானோ அந்த படத்திற்கு போயே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றேன். அதற்கு காரணம் “பாவனா”…… வெறும் புகைப்படம், மற்றும் ட்ரைலர் மட்டுமே அப்போது பார்த்ததாய் ஞாபகம். பாவனாவிற்காக அந்த படத்திற்கு கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று விட வேண்டும் என் முடிவெடுத்து இருந்தேன். ஆனால் யாரும் அந்த படத்திற்கு என்னுடன் வருவாதாய் தெரியவில்லை.

தியேட்டர் காத்து வாங்குது என்று ஒருவர் சொல்ல . வாள மீனுக்கு பாட்டு மட்டும் தான் படத்துல நல்லா இருக்கு அதை தொலைகாட்சியிலேயே பார்த்துவிடலாம் என்று இன்னொருவர் சொல்ல.  அனைவருக்கும் அந்த படத்தை ஒதுக்க கண்டிப்பாக ஒரு காரணம் கிடைத்து இருந்தது ஆனால் நண்பர் ஒரே ஒருவர் மட்டுமே அப்போது என்னுடன் வர ரெடியாக இருந்தார்.  அதுவும் நான் பாவனாவின் அருமை பெருமைகளை மீண்டும் மீண்டும் அவரிடம் சொல்லி இருந்ததால் அவரும் பாவனாவை பார்த்தே தீர வேண்டும் என்ற முடிவோடு இருந்தார். இப்படி முழுக்க முழுக்க பாவனாவிற்காக மட்டுமே அந்த படத்திற்கு நானும் அந்த நண்பரும் அன்று மதிய காட்சிக்கு சென்றோம்.

படம் முடிந்து வரும்போது தான் உணர்ந்தோம் கண்டிப்பாக இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் அதுவாகத்தான் இருக்கும். இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை மிஸ் பண்ணி இருப்போமே என்று இரண்டு பெரும் கூறிக்கொண்டோம். நீண்ட நேரம் இருவரும் விடை பெறும்வரை அந்த திரைப்படத்தை மட்டுமே பேசியிருப்போம் என நினைக்கிறன். பாவனாவிற்காக மட்டுமே அந்த படத்திற்கு சென்ற போதும் அவரை தவிர இரண்டு விஷயம் அந்த படத்தில் என்னை கவர்ந்து இருந்தது. ஒன்று அந்த  படத்தின் இசை மற்றொன்று அதில் தாமஸ் என்று  வரும் ஒரு கதாபாத்திரம். மிக இயல்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் அவர். எப்போதும் பேன்ட் பாக்கட்டில் சோம பானம் வைத்துக்கொண்டு படம் முழுதும் ஸ்ருதியோடுதான் வலம் வருவார். ஏனோ தெரியவில்லை திரையில் பாவனா தோன்றாத நேரத்தில் நான் அவரை தான் கவனித்துக்கொண்டு இருந்தேன். முக்கியமாக மூன்று காட்சிகள் இருக்கிறது. அதில் ஒன்று கீழே.

[xr_video id=”2cd9d7dd4e5f44b0ab0dac8189ac6cd4″ size=”md”]

அவ்வளவு தான் அதன் பிறகு பல படங்கள் பார்த்தாயிற்று. வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளும் நடந்தாயிற்று. சித்திரம் பேசுதடி வழக்கமான படங்களில் ஒன்றாக மறந்தே போயிற்று…

சரியாக நான்கு வருடம் கழிந்தது. 2010 ஆரம்ப மாதங்களில் சேலத்தில் சொற்கப்பல் என்றொரு கருத்தரங்கம் நடைபெற்றது. நான் இயக்கி வரும் சேலம்ஜில்லா இணையத்தளத்தில் மூலம் செய்தி சேகரிக்க விளைந்த போது தான் முகப்புத்தகத்தில் “அஜயன் பாலா” அவர்களின் அறிமுகம் கிட்டியது. கருத்தரங்கில் அவரை நேரில் சந்தித்த  சிலநாட்கள் முன்புதான் சற்றும் எதிர் பாராவண்ணம் சித்திரம் பேசுதடி படத்தில் நான் ரசித்த அந்த தாமஸ் கதாபாத்திரத்தில் நடித்தது இவர் என தெரியவந்தது. மிகபெரிய ஆச்சர்யம் அது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அப்படி எனக்கு அறிமுகமான அவர்  பின்பு என் வலைப்பூவை வாசித்து கருத்து கூறும் அளவிற்கு நண்பரானார்.  அதுவரை போனிலும், சாட்டிலும், இமெயில் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்த அவர், நேற்று வெள்ளிக்கிழமை என் வீட்டிற்கு வந்து என்னுடன் எங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டு மீண்டும் ஒரு ஆச்சர்யத்தையும், அளவில்லா மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிட்டு சென்றார். பழக மிக மிக எளிமையான மனிதர் என்று அப்போது தான் தெரிந்தது. சித்திரம் பேசுதடி உருவானதை பற்றியும், எழுத்துலகை பற்றியும், வலைப்பூ, டெக்னாலஜி என்று என்று பல விஷயங்கள் பேசி இரவு உணவு வரை கிட்டதட்ட ஐந்து மணிநேரம் ஒன்றாக ஒன்றாக செலவிட்டது அனைத்தும் இனிமையான தருனங்களே.

DSCF1022

நாங்கள் இருவருமே அக்டோபர் 19ஐ பிறந்த நாளாக கொண்டாடுவது இதில் இன்னொரு ஆச்சர்யம். அவரை ஒரு எழுத்தாளராக, இயக்குனராக, பேச்சாளராக, பண்முக பண்பாளராக அறிவதற்கு முன்னர் தாமஸ் அண்ணனாக அவரை  தெரியுமென்பதால் இன்னமும் தாமஸ் அண்ணே என்று தான் கூப்பிடுகிறேன். அவர் தற்போது நடித்து வரும் இரண்டு திரைப்படங்களுக்கும் எதிர்வரும் திரைப்பணிகளுக்கும், எழுத்துப்பணிகளுக்கும் அவரை வாழ்த்துவோமாக!

2 thoughts on “தாமஸ் அண்ணா என்கிற அஜயன் பாலா”

  1. எங்கோ திரைபடத்தில் பார்த்த நபரை, நாம் நேரில் பார்த்தால் அவர் யார் என்று நமக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வராது, அப்படி வருபவரை எந்நாளும் மறக்க முடியாது.

    என்னால் எண்ணமும் நம்ப முடியவில்லை. வாழ்த்துகள் !!!

  2. நன்றி செல்வா.. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. அவரை அந்த கதாபாத்திரமாக பல வருடங்களுக்கு முன்பு பார்த்து ரசித்துவிட்டு இப்போது நேரில் பார்க்கும் போது அவர்தான் இவர் என்று என் மனம் நம்ப மறுத்தது உண்மை தான். நேரில் மிகசாதரனாமாக, எளிமையாக பழகும் நபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *