கே.பி.என் ஆம்னி பஸ்கள் தொடர் விபத்தின் காரணமாக அதில் பிரயாணம் செய்வதை சமீபகாலாமாக தவிர்த்து வந்தேன். சென்ற மாதம் கூட ஒரு முக்கிய விஷயமாக சென்னை செல்வதற்கான அவசியம் ஏற்பட்டது. ரிட்டர்ன் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டும், புறப்படுவதற்கான டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் கடைசி நேரத்தில் கே.பி.என்’னையே நாட வேண்டி இருந்தது. எனக்கும், என்னுடன் வரவிருந்த ஒரு நண்பருக்கும் அதில் துளியும் இஸ்டமில்லை. அதனால் அந்த பிரயானத்தையே ரத்து செய்தோம். கே.பி.என்’னின் அலட்சியத்தால் ஏற்பட்ட தொடர் விபத்துகளும், உயிர் இழப்புகளுமே அதற்கு காரணம்.
சென்ற வாரம் மீண்டும் அவசரமாக சென்னை செல்ல நேரிட்டது. சென்னையில் இருந்து நண்பர் ஒருவர் சேலம் வந்திருந்தார். அன்று இரவே புறப்பட்டு மறுநாள் காலை இருவரும் சென்னையில் இருக்க வேண்டிய சூழ்நிலை. காலையிலேயே தட்கலில் இருவருக்கும் ரயில் டிக்கெட் பதிவு செய்தேன். இரண்டும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தது. இரவுக்குள் கன்பார்ம் ஆகிவிடும் என்று நம்பிக்கை இருந்தது. மாலையில் எனக்கு மட்டுமே டிக்கெட் கன்பார்ம் ஆனது, நண்பருக்கு கடைசி வரை கன்பார்ம் ஆகவில்லை. மாலை வரை இதையே நம்பி இருந்தது தான் தப்பு!
வேறு வழி இல்லாமல் இருவருக்கும் உடனே கே.பி.என்’னில் டிக்கெட் பதிவு செய்தேன். குளிர் சாதனமற்ற பேருந்தில் கடைசி இரண்டு சீட் தான் கிடைத்தது. அதுவும் ஒரு டிக்கெட் ரூபாய் நானூறு என்று. விலை கொஞ்சம் அநியாயம் தான். அவ்வளவு விலை கொடுத்து ரிஸ்க் எடுக்கனுமா? தினமும் நாளேடுகளில் படித்த கே.பி.என் பேருந்துகளின் விபத்து செய்திகளும், புகைப்படங்களும் மனத்திரையில் விரிந்து மறைந்தது. எத்தனயோ பேருந்துகள் இவர்கள் இயக்குகிறார்கள், எல்லா பேருந்துமா விபத்தில் சிக்கியது? ச்சே ச்சே ஒன்னும் ஆகாது என மனதிலேயே நினைத்துக்கொண்டு பேருந்தில் ஏறினோம்.
நேரம் சுமார் இரவு பத்துமணி.. பேருந்து புறப்பட சில நிமிடங்களே இருந்ததால் ஒரு நபர் வந்து அனைவருடைய பயணச்சீட்டையும் ஒவ்வொன்றாக சரி பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது தான் தெரிந்தது நான் அமர்ந்துள்ள சீட்டை என்னால் பின்னால் சாய்க்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்து பார்த்தும். ம்.ஹும்.. அசையவில்லை. ஒரு வேலை என்னால் அதை செய்ய முடியவில்லையா? முதன் விமான பயணத்தில் கூட சீட்டை பின் புறம் சாய்ப்பதில் எனக்கு சிரமம் இருந்ததில்லையே. ஒரு வேலை பேருந்தின் கடைசி சீட் என்பதால் அந்த வசதி இல்லையோ? சரி நண்பரின் சீட்டை சோதித்தால் தெரிந்துவிடும் என்று அருகில் திரும்பி பார்த்தேன். அவர் ஏற்கனவே தன் சீட்டை பின்னால் சாய்ந்து சொகுசாக தூங்க ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார்.
“அப்போ எனக்கு மட்டும் தான் இந்த சோதனையா!” என நினைத்துக்கொண்டு பேருந்து டிக்கெட் சரிபார்த்துக்கொண்டு இருந்த அந்த நடத்துனரை அழைத்தேன்! அவர் பல முறை அதை சாய்க்க முயற்சித்தும் கூட பலனில்லை. வேறொருவரை உடனே அனுப்பி வைக்கிறேன் என்று கூறி அவர் சென்றார். இரு நிமிடங்களில் பேருந்து நகர ஆரம்பித்தது. ஆனால் யாரும் அதுவரை வரவில்லை. வேறென்ன செய்ய? அதனால் ஒன்னும் பாதிப்பில்லை என விட்டுவிட்டேன். அது தான் நான் செய்த தவறு என்பதை பின்பு உணர்ந்தேன். பேருந்து புறப்பட்டு அறை மணி நேரம் இருக்கும். முதுகும், கழுத்தும் சுள்ளென வலிக்கத் தொடங்கியது. தூக்கம் என் கண்ணை துளைத்தது. ஆனால் உறங்க முடியவில்லை. சீட் கொஞ்சம் சாய்ந்தவாறு பழுது அடைந்து இருந்திருந்தால் கூட இந்த பிரச்சனை இருந்திருக்காது. அதுவோ 90 டிகிரி நேர்கோட்டில் நின்று என்னை பாடாய்படுத்தியது. என் நிலை புரிந்தவராய் நண்பர் தன் சீட்டில் இடம்மாற என்னை அழைத்தார். இது மிகவும் சிரமமாக இருக்கிறது, அவராவது நிம்மதியாக உறங்கட்டும் என மறுத்தேன்.
ஒருமணி நேரம் கூட இருக்காது, வலி உச்சமடைந்தது. என்னால் பொறுக்க இயலவில்லை. ஆத்திரம் அதிகரித்தது அந்த நடத்துனர் மேல். உடனே யாரேனும் அனுப்பி சரி செய்கிறேன் என்று கூறினாரே. எங்கே போனார்? சட்டென எழுந்து, முன்பக்கம் நோக்கி நடந்தேன். அப்போது அனைவரும் தூக்கக்கலக்கத்தில் என்னை வித்யாசமாக பார்ப்பதை உணர்ந்தேன். ஏன் என தெரியவில்லை. அனைத்து பார்வைகளையும் தாண்டிச்சென்று முன்பகுதியில் இருந்த கதவை தட்டினேன். ஓட்டுனரை தவிர மூவர் அங்கு அமர்ந்து இருந்தனர். ஆனால் நான் தேடிச்சென்ற அந்த நபரை காணவில்லை. பல முறை தட்டிய பிறகு கதவு திறக்கப்பட்டது. திறந்தவர் ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன். “என்ன சார் யூரின் போகனுமா” என கதவை திறந்தவாறு அவர் கேட்க, ஓட்டுனர் அவராகவே வண்டியின் வேகத்தை குறைத்து ஓரங்கட்டினார். ஆஹா இப்போது புரிந்தது அந்த பயணிகளின் பார்வையின் அர்த்தம். அது இல்லை பிரச்சனையை என கூறி என் நிலையைச்சொன்னதும் வண்டி மீண்டும் வேகமெடுத்து.
அந்த நபரும் வந்து நான் அமர்ந்திருந்த அந்த சீட்டை பின்னால் சாய்க்க முயற்சித்து பார்த்தார். அவராலும் இயலவில்லை. “பேருந்தில் ஏறியபோதே சொல்ல வேண்டியது தானே சார், இவ்வளவு தூரம் வந்த பிறகு சொல்லறீங்களே” என சலித்துக்கொண்டார். “டிக்கெட் சரி பார்க்க வந்த அவரிடம் சொன்னேனே… ஆள் அனுப்புறேன் என்று அவரும் சொன்னாரே” என்றேன் நான். “சரியா போச்சி சார், அவர் வேலை அங்கேயே முடிஞ்சிது. என்னிடம் சொல்ல வேண்டிது தானே” என்றார். ஹம்ம்.. பயணிகளை பற்றி கவலை ஏதும் இன்றி, தன் வேலை முடிந்தால் சரி என புறப்பட்டு சென்ற அந்த நபரை என்னவென்று சொல்ல?.
“சரி, இப்போ நான் என்ன செய்ய. என்னால் உறங்க முடியவில்லை. கழுத்து மிகவும் வலிக்கிறது. இங்கே சத்தியமாக உட்கார முடியாது. அதுவும் சென்னை வரை சான்சே இல்லை” என்றேன். “இப்போதைக்கு இந்த பேருந்தில் வேறு சீட் ஏதும் இல்லை சார். அப்படி இருந்தால் மாத்தி கொடுத்து விடுவேன். இன்னும் சிறுது நேரத்தில் உளுந்தூர் பேட்டை வந்து விடும். அங்கு வேண்டுமானால் வேறு பஸ் மாற்றி தருகிறேன்” என்றார். இன்னும் அங்கு சென்றடைய நீண்ட நேரம் ஆகும் என்பது எனக்கு தெரிந்திருந்ததால், நான் அப்படியே ஒவ்வொரு சீட்டாக, ஏதேனும் காலியாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரே ஒரு சீட் நடுப்பகுதியில் காலியாக தென்பட்டது. “அவரிடம் அதை காண்பித்தேன். “ஆனால் பக்கத்தில் லேடீஸ் இருக்காங்க சார்.” என்று இழுத்தார். அப்போது தான் கவனித்தேன். தலையோடு மூக்கோடு போர்த்திக்கொண்டு அந்த சீட் அருகில் ஒரு பெண் எங்களை கவனித்துக்கொண்டு இருந்தார்.
சென்னை வரை காலியாக வரும் அந்த சீட்டை வெறுமனே பார்த்துக்கொண்டு வலியோடு உறக்கமின்றி வருவதில் எனக்கு விருப்பமில்லை. உடனே நான் “லேடிஸ் தான் பிரச்சனைனா, ஜென்ட்சை மாத்திவிடுங்கள்” என கூறினேன். “அவங்களை எப்படி ஜென்ட்ஸாக மாற்றுவது, என்ன சார் விளையாடறீங்களா” என குரலை உயர்த்தினார் அவர். “அவங்களை நான் ஜென்ட்ஸாக மாத்த சொல்லவில்லை, வேறு சீட்டில் ஜோடியாக அமர்திருக்கும் பெண்னருகே இவரை உட்கார வைத்து விட்டு, அந்த ஆணை இங்கே இங்கே மாற்றிவிடுங்கள்” என்றேன். “இல்ல சார்.. அதுக்கு யாரும் ஒத்துக்க மாட்டாங்க” என மீண்டும் இழுத்தார்.
அதுவரை இங்கு என்ன நடக்கிறது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அந்த பெண் இதை கேட்டதும் சட்டென முகத்தை முன்பக்கம் திருப்பிகேகொண்டார். அதிலிருந்து அவருக்கு என்னை அங்கு அமரவைக்கவும் இஷ்டமில்லை, வேறொரு சீட்டில் மாற்றி அமரவும் இஸ்டமில்லை என்பதை உணர முடிந்தது. ஆணாக பிறந்ததால் இதையெல்லாம் அனுபவித்து தான் ஆகவேண்டும். “பெண் பாவம் பொல்லாதது” என அந்த யோசனை விட்டு விட்டு, மீண்டும் என் சீட்டிலேயே அமர்த்து ஜன்னலோர நிலவை ரசிக்க ஆயத்தமானேன்.
நேரம் நடு நிசியை கடந்து இருந்தது. அனைவரும் நித்திரையில் இருந்தனர். கழுத்துவலி இப்போது என்னை பாடாய்படுத்தியது. என்னுடைய மொபைலில், கூகிள் உலக வரைபடத்தின் மூலம் நான் இருக்கும் இடத்தை பார்த்தேன். கள்ளக்குறிச்சியை தாண்டித்தான் பேருந்து சென்று கொண்டிருந்தது! விரைவில் சென்னை போய் சேரமாட்டோமா என்று ஏக்கத்துடன் மொபைலை பாக்கட்டில் நுழைத்து விட்டு கண்களை மூடினேன்.
திடீரென ஓர் உள்ளுணர்வு. உடனே கண்விழித்தேன். அப்போது வலியையும் மீறி நான் கண்ணயர்ந்து இருக்கிறேன் என புரிந்தது. சாலையெங்கும் அமைதி. அனைவரும் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தனர். பேருந்து பயனித்துக்கொண்டு இருந்தவாறு தெரியவில்லை. அது யாருமற்ற அந்த சாலையில் குறுக்கு வாக்கில் இன்ச் இஞ்ச்சாய் பின்னால் நகர்ந்துக்கொண்டு இருந்தது போல் இருந்தது. என்ன நடக்கிறது என்று எனக்கு சிறிது நேரம் வரை ஒன்றும் புரியவில்லை. வலது பக்கம் பார்க்கிறேன். நாங்கள் வந்த அந்த வழி அது. கண்ணுக்கெட்டிய வரை தூரம் வரை வாகனங்கள் ஏதும் தென்படவில்லை. பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து வந்த வழியில் மீண்டும் திரும்பிச்செல்ல முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள் என தெரிந்தது. இப்போது இடது பக்கம் பார்க்கிறேன். ஆனால் அந்த பக்கமோ நீண்டு செல்லும் சாலைக்கு பதில் முழுதாய் கட்டி முடிக்கப்படாத ஒரு பாலத்தின் விளிம்பு. இந்த கணப்பொழுதில் இங்கு என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது.
ஓட்டுனர் வழக்கமான சாலையை விட்டு புதிதாய் அமைக்கப்பட்டுக்கொண்டு இருந்த ஒரு நான்கு வழிச்சாலையில் நீண்ட தூரம் சென்றிருக்கிறார். அந்த தவறை உணராமல் அங்கு கட்டி முடிக்கப்படாத ஒரு பாலத்தில் மேலும் ஏறி இருக்கிறார். பாலத்தின் உச்சியை அடைந்தபோது திடிரென சாலை முடிவடைவதை அறிந்து அதன் விளிம்பில் பேருந்தை உடனே ப்ரேக் போட்டு நிறுத்தி இருக்கிறார். இப்போது தான் நான் கண்விழித்து இருக்கிறேன். பாலம் கட்டப் படாததை கவனிக்காமல் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தால் கூட அடுத்த நாள் பேப்பரில் எங்கள் பெயர்கள்! நினைத்தாலே குலை நடுங்குகிறது.
இது நடந்தது அந்த பேருந்தில் வேறு யாருக்கும் தெரியவில்லை. இன்னமும் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்தனர். இதையெல்லாம் யோசித்துக்கொண்டு இருக்கும் போது கண்டக்டர் கடைசி ஜன்னலின் அருகே, எங்களுக்கு கீழே நின்று கொண்டு விசில் ஊதுவது கேட்டது. அருகில் இருந்த என் நண்பரும் அந்த சப்தம் கேட்டு இப்போது கண்விழித்து இருந்தார். ஜன்னலில் வெளியே எட்டிப் பார்த்த என் நண்பர் பதட்டமாகி டிரைவரை நோக்கி கத்த ஆரம்பித்தார்.
நானும் உடனே வெளியே எட்டி பார்த்தேன். இப்போது இன்னொரு பிரச்சனை. எங்கள் சீட்டின் கீழே 50 அடி அல்லது அடி 100 அடி பள்ளம் இருந்தது. அதாவது பேருந்து இப்போது ரிவர்ஸ் எடுத்து திரும்பும்போது பாலத்தின் ஓரத்தில் இருந்தது. எனக்கு மீண்டும் தூக்கி வாரி போட்டது. கண்டக்டர் நிறுத்தச்சொல்லி விசில் அடித்தும் பஸ் இன்னும் இன்ச் இஞ்சாய் பின்னால் நகர்ந்தது. இன்னும் ஓரிரு அடிகள் பின்னால் வந்தால் கூட டயர் கீழிறங்கி பஸ் கவிழ்ந்து விடும் நிலை. பதட்டம் இப்போது எனக்குள்ளும். நண்பரோடு சேர்ந்தும் நானும் ஓட்டுனரை நோக்கி நிறுத்தச்சொல்லி கத்த ஆரம்பித்தேன். பஸ் சட்டென நின்றது. இப்போது முன்னோக்கி இன்ச் இஞ்சாக நகர ஆரம்பித்தது. அப்பாடா மீண்டும் உயிர் தப்பினோம் என்ற நிம்மதி.
பேருந்தை திருப்புவதற்கு போதுமான அளவிற்கு அந்த பாலத்தின் அகலம் இல்லை. சரியாக அந்த பேருந்தின் நீளத்திற்கு தான் பாலத்தின் அகலம் இருந்திருக்கிறது. எங்களின் பின்பக்கம் இருந்த சாலையோரத்தில் நெடுகிலும் பாதுகாப்பிற்காக சிறு தூனைப்போன்ற தடுப்பு எழுப்பப்பட்டு இருந்தது. பஸ்ஸை இந்த பாலத்தில் திருப்ப வாய்ப்பே இல்லை. ஒரு இடத்தில் மட்டும் ஒரு பத்து அடிக்கு அந்த தடுப்பு இல்லை. அந்த இடைப்பட்ட இடத்தில் தான் பேருந்தை இப்போது முன்னேயும், பின்னேயும் மெதுவாக நகர்த்தி வந்த வழியில் திரும்ப முயன்றுக்கொண்டு இருந்தார் ஓட்டுனர். முன்னேயும் ஆபத்து. பின்னேயும் ஆபத்து. நிலைமை இன்னும் மோசமாவதை உணர்த்தேன்.
இப்போது சுமார் இரண்டு அடி முன்னே நகர்ந்த பேருந்து அதேபோல் மீண்டும் மெதுவாய் பின்னால் நகர்ந்து வந்தது. மறுபடியும் அது அந்த சாலை ஓர விளிம்பை தொட்டது. இந்த முறையும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கண்டக்டர் விசில் அடித்தும் அதை காதில் வாங்காமல் அந்த ஓட்டுனர் மெதுவாக விட்டு விட்டு பின்னால் நகர்த்திக்கொண்டு இருந்தார். இப்போது நாங்கள் அமர்ந்து இருந்த அந்த பின் சீட் பகுதி அந்த அதல பாதாளத்தில் மீது. ஜன்னலோரத்தில் நாங்கள் கீழே பார்க்க, மீண்டும் எங்களுக்கு உயிர் பயம். இருவரும் சேர்ந்து ஓட்டுனரை நோக்கி மறுபடியும் கத்த ஆரம்பித்தோம். அவர் உடனே ப்ரேக் போட்டு நிறுத்தி பேருந்தை முன்னே செலுத்தினார். சப்தம் கேட்டு எங்களுக்கு முன் சீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர் மட்டும் எங்களை வித்யாசமாக பார்த்து விட்டு மீண்டும் தூங்கினார். வேறு யாரும் இன்னமும் நிஜ உலகத்திற்கு வரவில்லை. உயிர் தப்பியது எங்களை தவிர அந்த பேருந்தில் வேறு எந்த பயணிகளுக்கும் கடைசி வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது பேருந்து முழுதாக திருப்பப்பட்டு வந்த வழியே மீண்டும் சீறிப்பாய்ந்தது.
கழுத்து வலி, முதுகு வலியை விட உயிர் பயம் என்னை தூங்க விடவில்லை. உளுந்தூர் பேட்டையை பேருந்து வந்தடைந்த போது ஒரு மன நிம்மதி. இரவில் அந்த வழியில் பயணம் செல்லும் அனைத்து கே.பி.என் பேருந்துகளும் வந்து நிற்கும் இடம் அது. வாழ்க்கை கனவுகள் நிறைய இருக்க இந்த பேருந்தில் என்னுடைய கடைசி இரவை முடித்துக்கொள்ள விருப்பமில்லை. ஓட்டுனர் முன்பு சொன்னது போல் இங்கு சென்னை செல்லும் வேறு பேருந்தில் மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.
கண்டக்டரிடம் போய் வேறு பேருந்தில் சீட்டை மாற்றி தருவதாகச்சொன்னதை மீண்டும் ஞாபகப்படுத்தினேன். இதை சற்றும் எதிர்பார்க்காதவராய் அவர் முகம் மாறியது. நான் அதை மறந்து விடுவேன் என்று நினைத்திருந்தாரோ என்னவோ. அங்கு அனைத்து பேருந்துகளின் சீட்டுகளை சரி பார்த்து அனுப்பும் பணி செய்து கொண்டு இருந்த இன்னொருவரை காண்பித்து, அவர் தான் இதற்க்கு பொறுப்பு அகவே அவரிடம் சொல்லுகிறேன் என கூறிவிட்டு அவரை நோக்கி நடந்தார். நானும் அவர் பின்னாலேயே சென்றேன். மீதி இருக்கும் சில மணி நேரமாவது சென்னை போவதற்குள் தூங்கிவிடலாம் என்கிற நப்பாசை.
“சீட்டை பின்னால் தள்ள முடியவில்லையாம், கழுத்து வலிக்கிறதாம், பெசன்ஜெர் வேறு பஸ்சில் மாற்றி தரும்படி கேட்கிறார்” என அவரிடம் கூறினார். சரியாக அப்போது அவர்கள் அருகே சென்றேன். அதற்க்கு அந்த புதிய நபர் கூறிய பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் அருகில் இருப்பதை அந்த இருவரும் உணரவில்லை. “வலிச்சா அதுக்க நான் என்ன பண்றது, அப்படியே ஒக்காந்து போக சொல்லு. பஸ் எல்லாம் மாத்தி தர முடியாது” என்ற தோரணையில் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இருந்தது அந்த பதில். இங்கு மனிதாபிமானம் என்பது கூட அவசியமில்லை. அனைவரும் நானூறு ருபாய் செலுத்தி செல்லும் அதே பேருந்தில், அதே பணம் செலுத்தி முதுகு வலியோடு செல்வது எவ்விதத்தில் நியாயம்? நான் ஒன்னும் இலவசமாக செல்லவில்லையே? அந்த சீட் பழுதடைந்து இருப்பது தெரிந்தும் வருமானத்தை இழக்க மனமில்லாமல் எனக்கு அந்த சீட்டை விற்றது யார் தப்பு? எனக்கு கோபம் பயங்கரமாக வந்தது. இருப்பினும் அவரிடம் பொறுமையாக என் நிலையை விளக்கி வேறு பேருந்து மாற்றி தருமாறு கேட்டேன்.
நான் அருகில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இப்போதும் அதே தோணியில் “வேற பஸ் எல்லாம் இல்ல சார். எல்லா சீட்டுலயும் ஆளுங்க இருக்காங்க. அஜ்ஜெஸ் பண்ணிகோங்க” என்று என்னை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். பெயருக்கு கூட மற்ற பேருந்துகளை அவர் விசாரிக்கவில்லை. தன்னுடைய பதிவேடுகளையும் அவர் புரட்டி பார்க்கவில்லை. இத்தனைக்கும் அங்கு இருபது அல்லது முப்பது கே.பி.என் பேருந்துகள் நின்று கொண்டு இருந்தது. எப்படியும் அதில் பாதி சென்னை செல்வதாகத்தான் இருக்க வேண்டும்.
எனக்கு அவர் பதிலில் திருப்தி இல்லை. அதுவரை கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இருந்தது அவர் செயல். வேறு பேருந்து மாற்றி தர வேண்டும் என்று என் தரப்பு நியாயங்களை கூறி நான் பிடிவாதமாய் இருந்தேன். உடனே அவர் மேலும் கோபமாகி, மீண்டும் பொறுப்பற்ற பதிலையே கூறிக்கொண்டு இருந்தார். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்பு கடைசியில் அவர் அருகில் இருந்த சென்னை பேருந்துகளை விசாரிக்க சென்றார். ஐந்து நிமிடத்தில் மீண்டும் திரும்பி வந்து “அந்த பேருத்தில் சீட் இருக்கிறது, நீங்களும் உங்கள் நண்பரும் போய் ஏறிக்கொள்ளுங்கள்” என்று ஒரு பேருந்தை காண்பித்தார். அவர் வார்த்தைகளில் கோபம் தெரிந்தது, அவர் உடல் மொழி அசாதாரணமாய் இருந்தது.
நானும் நண்பரும் அவர் கூறிய அந்த பேருந்தில் ஏற முயன்றோம். நடத்துனர் எங்களை ஏற விடவில்லை. நாங்கள் தூரத்தில் சென்று கொண்டிருத்த அந்த நபரை காண்பித்து, அவர் தான் இதில் மாற்றி அமர சொன்னார் என்றோம். எங்களுடைய டிக்கெட்டையும் காண்பித்தோம். “டிக்கெட் காண்பித்தால் ஏற்றிவிடுவோமோ? யாரும் எங்களிடம் இதை பற்றி சொல்லவில்லை” என்றனர். அவர்கள் பேச்சும் கடுமையான தோனியில் இருந்தது. மீண்டும் அந்த நபரை அழைத்து வந்து சொல்லச்சொல்வோம் என்று நான் தூரத்தில் இருந்த அவரை நோக்கி நடந்தேன்.
என்னை மீண்டும் பார்த்ததும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சம்பந்தம் இல்லாமல் கடுமையாக பேச ஆரம்பித்து விட்டார். நான் இன்னும் பேருந்தில் ஏறாமல் அவரிடம் நடந்து வந்தது அவருக்கு எரிச்சலை தந்து இருக்கிறது. நான் அந்த பேருந்தில் எங்களை ஏற விடவில்லை என்று கூறுவதை கூட அவர் காதில் விழாமல் தடுத்தது அவர் கோபம். இதை பார்த்த அந்த பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் சம்பந்தமே இல்லாமல் இவருடன் சேர்ந்து எங்களுடன் வாக்குவாதத்தில் இடுபட்டனர். அவர்கள் யாருமே அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. அவர்கள் நோக்கம் எங்களை காயப்படுத்த்துவதாக மட்டுமே இருந்தது. நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு தான் நாங்கள் அந்த பேருந்தில் அனுமதிக்கபட்டோம். பேருந்தில் ஏறியவுடன் என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்றுதான். கே.பி.என்’னில் என் உயிர் போய் விடக்கூடாது என்பது மட்டும் தான். உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கே அவர்களிடம் மதிப்பில்லை!
பின் குறிப்பு:
இந்த பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. கே.பி.என் டிராவல்ஸில் இந்த போக்கு ஏற்புடையதா? இது போல் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ ஏதேனும் அனுபவம் நிகழ்ந்து இருக்கிறதா? இந்த சம்பவத்தை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
நீங்கள் சொல்ல்வது நூற்றுக்கு நூறு உண்மை..KPN பஸ் என்று இல்லை,அனைத்து ஆம்னி பஸ்களுமே இப்படி தான் அதி வேகத்தில் செல்கின்றன.முக்கால்வாசி ஆம்னி பஸ் ஓட்டுனர்கள் குடித்து விட்டு ஓடுகின்றனர்.வேளாங்கண்ணி யில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் மயூரா ட்ராவல்ஸ் பஸ் எனக்கு பல முறை உயிர் பயத்தை காட்டி இருக்கிறது.மயூரா ட்ராவல்ஸ் ஆடுனர்கள் குடித்துவிட்டு பேருந்தை கண்டபடி மிக வேகமாக ஓட்டுகின்றனர்.ஆம்னி பஸ்களில் வேக கட்டுப்பாடு கருவி பொறுத்த வேண்டும்.ஆம்னி பஸ்கள் நம்மளிடம் இருந்து பணம் பறிப்பதில் தான் குறியாய் இருகின்றனர்.என்னை கேட்டால் ஆம்னி பஸ்சில் செல்வதை விட ரயில் அல்லது அரசு பேருந்தில் சென்றுவிடலாம்.உயிர் பயம் இல்லாமல் தயிரியமாக செல்லலாம்.இதை தவிர வேறு வழியே இல்லை.
நான் தொடர்ந்து கே.பி.என்,னில் தான் பயணம் போய் வருகிறேன்,உங்களின் அனுபவம் புதிதாக இருக்கிறது .
இதுவரை கே.பி.என் பஸ் என்றாலே வாயை பிளந்து பார்த்த நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவன் நான்.ஒருமுறையாவது அதில் பயணம் செய்யவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன்.உங்கள் பதிவை படித்தவுடன் அந்த ஆசை போய்விட்டது.வசதியாக இருப்பதற்கும் உயிர் முக்கியம்.
16 ஆகஸ்ட் இரவு திருச்சியில் இருந்து காரில் சென்னை சென்று கொண்டு இருந்தேன்…பர்வீன் ட்ராவல்ஸ்-னு ஒருத்தன்…சென்னையிலிருந்து கொலவெறியோட ஓட்டிட்டு வந்தவன், திடீர்னு டிவைடர்-ல ஏத்தி இந்தப் பக்கம் இறங்கி எனக்கு 2 வண்டிக்கு முன்னாள் போன காரை நசுக்கிக்கொண்டு இடது பக்கப் பள்ளத்தில் இறக்கி பஸ்ஸை நிறுத்தினான் …பஸ்ஸில் பலருக்கு காயம்..எலும்பு முறிவு..காரில் வந்தவர்களும் ரத்தக் காயத்துடன் உயிர் தப்பினர்..இவனுங்களால பஸ்ஸில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல …சாலையில் பிரயாணம் செய்வோர் எல்லாருக்கும் ஆபத்து..
@Murugan. என் அனுபவமே உங்களுக்கு புதிதாய் தோன்றினால் கொஞ்சம் கூகிளில் அவர்களை பற்றி தேடி பாருங்கள். குடித்து விட்டு வண்டியை ஓட்ட முடியாமல் ஸ்டேரிங்கில் மேல் நடு வழியில் மட்டையாகி விட்ட ஓட்டுனரை போட்டோ பிடித்து நிறைய பேர் எழுதித்தள்ளி இருக்கிறார்கள். இன்னும் பல அதிர்ச்சி தரும் பதிவுகளும் காணக்கிடைத்தது. அதை இங்கே சம்பந்தம் இல்லாமல் சேர்க்க வேண்டாம் என விட்டு விட்டேன்!
@ram இரண்டு நாட்களுக்கு முன்னர்? நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது!
வர வர அவங்களோட சர்வீஸ் தேய்ந்து கொண்டு இருக்கிறது.ஒருதடவை நான் சென்னை செல்லும் போது, திடீரென்று ஏற்பட்ட குலுக்களால் விழித்து பார்த்த போது, வண்டியின் வேகம் கண்டு எனக்கு தூக்கம் என்பதே வரவில்லை.5 மணி நேரம் விழித்துக்கொண்டே சென்றேன்.
எல்லோரும் அப்படிதான் நடந்து கொள்கிறார்கள் ……..
\\என் அனுபவமே உங்களுக்கு புதிதாய் தோன்றினால் கொஞ்சம் கூகிளில் அவர்களை பற்றி தேடி பாருங்கள்.//
எனது கருத்து தவறாக,புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது,பலவருடங்கள்ளக கே.பி.என், னில் பயணம் போய் வருகிறேன் என்கின்ற முறையில் பார்க்கும் போது சேவையின் தரம் குறைந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் மற்ற ஆபரேடர்களை ,ஒப்பிடும்போது கே.பி.என் சேவை பரவாயில்லை என்றே தோன்றுகிறது.கோயம்பேட்டில் சொகுசு பஸ்சை காட்டி ஏற்றிவிட்டு செகல்பட்டில் ஒரு டப்பா பஸ்ஸில் மாற்றி ஏற்றிவிட்ட ஒரு ஓமினி அனுபவமும் எனக்கு இருக்கிறது.தற்சமயம் ஏ.பி.டி சேவையும்,டிக்கெட் கட்டணமும் கே.பி.என் னை விட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
அன்புடன் நண்பருக்கு வணக்கம்
சுமார் 14 ,,வருடங்களுக்கு முன்பு சேலத்திலிருந்து பெங்களூருக்கு இந்த ட்ராவல்ஸ்ல டிக்கெட் போட்டேன் இரவு 12.30 pm…போய் வண்டி எங்கே என்று கெட்ட வரும் சார் வரும் வண்டில ஏத்தி விடுறோம்.. நான் போறது பொண்ணு சம்பந்தம் பேச நேரத்து க்கு போய் நிக்கணும் .!!!!!…இந்த சண்டாளங்க.???. பணத்தை வாபஸ் வாங்கிட்டு திருவள்ளுவர்ல கண்டக்டர் பக்கம் நல்ல வார்த்தை சொல்லி உட்கார்ந்து போனேன்.. வந்து கம்பனி முதலாளிக்கு தபால் போட்டேன் இன்று வரை பதில் இல்லை நல்லா இருப்பானுகளா??
நீங்கள் இட்ட பதிவை பார்த்து இன்னும் பல அன்பர்கள் ஒதுக்குங்கள் இவனுகளை..நன்றி.
இந்த சம்பவத்தால் எனக்கு தோன்றிய சில கருத்துக்கள் சில……
1.பழுதடைந்த சீட்டின் தன்மையை கருத்தில் கொண்டு அதை பயணிக்கு விற்று இருக்கக் கூடாது. இல்லையேல் பயணிகளுடன் பழுதின் தன்மையை தெரியப்படுத்தி அவர்களின் விருப்பம் பெற்று விற்று இருக்கலாம். பழுது என தெரிந்தும் வருமானத்தை மட்டும் குறியாகக்கொண்டு அந்த பயணச்சீட்டை விற்றது நியாயமில்லை. .
2. பேருந்து புறப்படுவதற்கு முன்பே புகார் கூறியும் அது கவனிக்கப்படவில்லை. அதற்கு மாற்று ஏற்பாடும் செய்துத்தரப்ப்படவில்லை.
3. புகார் அளிக்கப்பட அந்த நபர் உடனே ஆள் அனுப்பி சரி செய்வதாகக்கூறி நழுவியது தவறு. பேருந்து புறப்பட்டு விட்டால் எப்படியும் சென்னை போய் தானே தீர வேண்டும் என்ற அவரது அலட்சியம் மோசமானது.
4. பெண் என்ற ஒரே காரணத்தினால் அருகில் காலியாக இருக்கும் சீட்டில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு கே.பி.என் நிச்சயம் பொறுப்பில்லை. அவர்களையும் இந்த விஷயத்தில் நான் குறை கூறவில்லை இது பொதுவாக அனைத்து இடத்திலும் நடப்பது. இது நம் ஊரில் மட்டுமா? அல்லது பெண்களின் மனநிலை அப்படியா? இதை எப்படி எடுத்துக்கொள்வது சொல்வது என்று தெரியவில்லை. அது போகட்டும். பொதுவான என் கருத்து இது. இது போன்ற சூழ்நிலையில் மனிதாபிமானத்தோடு ஆண்களை அமர அனுமதிக்கலாம். அல்லது வேறு சீட்டில் பெண்ணும் ஆணும் அமர்ந்து இருந்தால் அந்த ஆணை இங்கே மாற்றி அமரச்செய்து அவர்கள் அங்கே போகலாம். ஆனால் போது இடத்தில் அனைவரிடமும் இவ்வித மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நடை முறையில் மிகக்குறைந்த சாத்தியமே அது.
5.. பொதுவாக ஓட்டுனர்களின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம். கட்டி முடிக்கப்படாத ஒரு பாலத்தில் ஏறி அனைவரையும் கவிழ்க்கப்பார்த்தார் அந்த ஓட்டுனர். பேருந்தை திருப்பும் போதும் கண்டக்டரின் சைகையை கவனிக்காமல் இரு முறை பள்ளத்தில் கவிழ்த்து இருப்பார். இம்மாதிரி இக்கட்டான தருணத்தில் பயணிகளின் உயிரை பணயம் வைத்ததற்கு பதில் அனைவரையும் இறக்கி விட்டு பேருந்தை திருப்பி இருக்கலாம். தான் செய்த தவறு யாருக்கும் தெரியக்கூடாது என நினைத்தாரோ என்னவோ?
6. நான் அருகில் இருப்பதை அறியாமல், பேருந்தை மாற்றி தரக்கேட்ட நடத்துனரிடம் மனிதாபிமானமற்று நாகரீகம் இல்லாமல் பேசிய அந்த ஊழியர். பணம் கொடுத்து பயணம் செய்தும் பயணிகளை மதிக்காமல் இரக்கமின்றி நடந்து கொள்ளும் அவர்களின் மெத்தனம். இவை அனைத்தும் தொழில் தர்மம் அல்ல.
Dear Praveen ,
I have always travelled in Govt buses . Knowing well about their condition of the buses. I rarely travel in these omni buses because of their exhorbitant rates and poor service. I suggest that you could put a case in consumer court.
i too had a bad exp , while i was travelling from coimbatore to bangalore AC bus , the bus got repaired in mid way , they said alternate bus is coming from salem , we waited for 4 hrs , but bus dodnt arrived , finally all passengers started shouting @ THE DRIVER , HE THEN REVEALED THAT NO BUS IS COMING , WE HAVE ARRANGE OUR OWN TRANSPORT , by the time it was almost midnite , there were so many children & ladies. finally somehow managed to reach bangalore by 5am , actually i should have reached by 10pm itself , after that i never travelled in KPN again.
திகில் பயணம். இதய் படிக்கும் போது நானும் பயணம் செய்த அனுபவம். KPN சேவை சரி செய்யப்பட வேண்டும்.
பதிவுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
நீங்கள் சொல்லி என்ன யூஸ், கொஞ்சம் நாளுக்கு முன்பு பஸ் எரிந்த பின்பும் கவர்மென்ட் ஒரு ஸ்டெப்பும் ;எடுக்கல, அப்பறம் எரிச்சா என்ன, கவுத்தா என்ன? கவர்ன்மென்ட் அவர்களோடு ம்யூட்சுவலா இருக்கும்போது, பயணிகள்,பொது மக்கள் ஒன்னும் பண்ண முடியாது
நல்ல பயனுள்ள பதிவு.
கடவுள் கிருபை. உங்கள் பதிவை எனது முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
அரசு முதலில் இது போன்ற தனியார் பஸ் கம்பேனிகளின் பயணம் குறித்த சட்டங்களை கடுமையாக்க வேண்டும். கட்டணத்தையும் அரசே நிர்னயிக்க வேண்டும். பயணிகளின் புகாருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதும் இவர்கள் திருந்தவில்லை என்றால் நெடுந்தொலைவு செல்லும் ஆம்னி பஸ்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
ஒரு முறை நான் செல்லவேண்டிய வண்டிக்கு பதிலாக ஒரு மணி நேரம் களித்து செல்லவேண்டிய பேருந்தில் என்னை போன்ற பத்திற்கும் மேலான பயணிகளை ஏற்றி விட்டு சீட்டையும் மாற்றி கொடுத்தார்கள்.
சென்னையிலிருந்து காரைக்கால் செல்லும் யுனிவர்ஸல் பஸ்சில் பயணம் செய்தேன், பாண்டிச்சேரி வந்து சில கிலோமீட்டர் வந்தவுடன் மலையிலிருந்து விழுந்தாமாதிரி சத்தம் என்ன வென்று பார்த்தால் டிவைடர்யில் பஸ் ஏறி எறங்கி இருக்கின்றது. சில பேருக்கு லேசான காயம். டிரைவர் இடம் என்ன வென்று கேட்டால் மூன்று நாட்களாக தூங்கவிலையாம். மூன்று நாட்களாக தொடர்ந்து பணியாம். பெரும்பாலான ஆம்னி பஸ்கள் எல்லாம் அப்படிதான் இருக்கின்றது
\\இந்த பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. \\ விறுவிறுப்பாக எழுதியுள்ளீர்கள், நீங்க போன பஸ்சை விட வேகமாக கதையை படித்து முடித்தேன். பொதுவாக தனியார் என்றால் மக்கள் சேவையை எதிர் பார்க்கவே முடியாது, அவர்களது லாபத்தை தான் முன்னிறுத்தி வியாபாரம் செய்வார்கள். மேலும் அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குகையில் அங்கங்கே சில பிரச்சினைகள் வருவது இயல்பே. ஆனாலும், வழி தவறி வேறெங்கோ கொண்டு சென்றது டூ மச்.
Praveen, you should have fought with that guy. That lady paid only for her seat not the next free seat. If I would have been in your position, I would take them to nearby police station to file a case…. I will share my one of my experience with Tamil Nadu (SETC) Air condition bus travel from Bangalore to Chennai. I have booked the ticket up to Vellor, whereas the bus does not go in to Vellor bus stand. He stopped somewhere on the main road and asked me to get down at 2:00 AM night. I asked to stop the bus at Bus stand. he is not listening and continuous driving ahead to chennai. I was completely helpless (all co-passengers not opened their mouth)…. Then I allowed him to drive little distance (nearly 2 to 3 KM) and reached nearby Sathuvacheri … I was shouted on top of my voice and force the bus to get in to Sathuvacheri police station. He was shocked and stopped the vehicle… I was above to get down to log a complaint,, then the driver/conductor realized the situation and taken the bus back to Vellor Bus station. Journey is always pain at any mode of transport…. Now a days even people (Co-passengers) does not think about others. If we all join together, we can bring the change… What do you say?
நீங்க அரசு பேருந்தில் பயணம் செய்து பாருங்கள்,
1 .கட்டணம் குறைவு
2 .பாதுகாப்பானது
3 .நிச்சயம் சீட் கிடைக்கும்.
கரெக்ட்.நீங்க சொன்னது. நான் honeymoon போக கொடைக்கானல் கு KPN புக் செய்தோம் .பஸ் நைட் 10 30 கு சொல்லிடு 12 45 கு ஆல் வந்து பஸ் ல totala 7 பேருதான்.சோ பஸ் கன்சல் பனுரோம்னு easya சொல்லிடக.திங் வீடுல சொல்லிடு வந்துடு திறேபி போக முடிமா? நைட் 12 45 சொன்ன எஅன பன்னுவோம். பயகர டென்ஷன் ல சண்டை போடுடு வந்தோம்.அவுக லுக்கு oneum ப்ரோப்லேம் இல்லை. அனா நாம ?……….
@செல்வா.. உங்கள் அனுபவமும் மோசமானது.. உங்கள் செயலை நிச்சயம் பாராட்டுகிறேன். எனக்கு மரண பயத்தையே அவர்கள் காட்டிவிட்டார்கள் நண்பா!!!
///. That lady paid only for her seat not the next free seat. If I would have been in your position, I would take them to nearby police station to file a case….////
அதற்க்கு நான் ஏற்கனவே கூறிய கருத்து கீழே….
//4. பெண் என்ற ஒரே காரணத்தினால் அருகில் காலியாக இருக்கும் சீட்டில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு கே.பி.என் நிச்சயம் பொறுப்பில்லை. அவர்களையும் இந்த விஷயத்தில் நான் குறை கூறவில்லை இது பொதுவாக அனைத்து இடத்திலும் நடப்பது. இது நம் ஊரில் மட்டுமா? அல்லது பெண்களின் மனநிலை அப்படியா? இதை எப்படி எடுத்துக்கொள்வது சொல்வது என்று தெரியவில்லை. அது போகட்டும். பொதுவான என் கருத்து இது. இது போன்ற சூழ்நிலையில் மனிதாபிமானத்தோடு ஆண்களை அமர அனுமதிக்கலாம். அல்லது வேறு சீட்டில் பெண்ணும் ஆணும் அமர்ந்து இருந்தால் அந்த ஆணை இங்கே மாற்றி அமரச்செய்து அவர்கள் அங்கே போகலாம். ஆனால் போது இடத்தில் அனைவரிடமும் இவ்வித மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நடை முறையில் மிகக்குறைந்த சாத்தியமே அது.////
மனிதாபிமானத்தை சண்டையிட்டு பெற முடியாது என விட்டு விட்டேன். ஆனால் கே.பி.என் ஊழியரிடம் சண்டயிட்டே மாற்று பேருந்து பெற்றேன்.. என்னை அதே பேருந்தில் எறச்சொல்லி வற்புறுத்தியபோது எறமுடியாது வேண்டுமானால் என்னை விட்டு செல் என நான் கூறினேன். அதன் பிறகு தான் என்னை வேறு பேருந்தில் ஏற்றி விட்டனர். நீங்கள் கூறியவாறு அனைத்து பயணிகளும் வேடிக்கை தான் பார்த்தார்கள்.. நாம் என்னசெய்து அவர்களுக்கு மனிதாபிமானத்தை, இரக்கத்தை கொண்டு வர முடியும் என நினைக்கிறீர்கள்?
@Jaya Dev \\இந்த பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. \\ விறுவிறுப்பாக எழுதியுள்ளீர்கள், நீங்க போன பஸ்சை விட வேகமாக கதையை படித்து முடித்தேன்.///
மிக்க நன்றி… இதை எழுதி முடிக்க நான் பட்ட சிரமம் இப்போது காணாமல் போய் விட்டது. 🙂
நண்பா,
எனக்கும் இந்த நாய்களிடம் மோசமான அனுபவம் உண்டு , மிக கேவலமான ஜென்மங்கள் .என்ன செய்வது வாடிக்கையாளர் சேவை என்பது கொஞ்சம் கூட கிடையாது . அனைவரும் கேள்வி கேட்காத வரை இவர்கள் காட்டில் மழைதான் .
ரதி மீனா கூட இது போல் தான். ஒருமுறை சென்னைலிருந்து நாகர்கோயில் முன்பதிவு செய்தேன். அந்த வீணாப்போன travel agent (வண்டலூரில் உள்ள ஒரு ஆட்டோ parts கடை) seat நம்பர் 29 கொடுத்தான். நான் பேருந்தில் ஏறிய போதுதான் தெரிந்தது அந்த பேருந்தில் 28 seat தான் உள்ளது என்று. அந்த travel agent ஏமாற்றியது புரிந்தது. பஸ் டிரைவரோ கண்டக்டரோ இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து வந்தேன். இதற்கு நான் ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டேன். அதற்கு பின் ரதி மீனா வில் முன்பதிவு செய்வதே இல்லை.
எனக்கு ஒரு அனுபவம்.: ஒருமுறை இன்டர்நெட்டில் டிக்கெட் புக் செய்தேன். தொகை எனது வங்கியில் இருந்து கழிக்கப்பட்டதே தவிர டிக்கெட் புக் ஆகவில்லை. உடனே அவர்கள் சேலம் நெம்பருக்கு பொன் செய்தேன். அவர்கள் அந்த இடம் காலியாகத்தான் உள்ளது எனவே மறுபடி ஒருமுறை புக் செய்யுங்கள் என்று சொன்னார். பழைய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும் என்றார். நானும் அதன்படியே செய்து டிக்கெட் பெற்றேன். ஒரு வாரம் காத்திருந்ததுதான் மிச்சம். பணம் வரவு வைக்கப்படவில்லை. நான் மீண்டும் சேலத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் பதினைந்து நாட்களாகும் என்றார்கள். சரி என்று பொறுத்துக்கொண்டேன். பதினைந்து நாட்களாகியும் பணம் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டால் பதினைந்து வேலை நாட்களாகும் என்றார்கள். சரி என்றேன். அதன் பிறகு இருபது நாட்கள் கழித்து பணம் வரவு வைக்கப்பட்டது. இப்படி எத்தனை பேரின் பணத்தை இவர்கள் எத்தனை நாட்கள் சர்குலேஷனில் விடுகிறார்களோ தெரியவில்லை. ஏன் இந்த நிலை. இதை மீண்டும் வரவு வைக்க இரண்டு நாட்கள் போதாதா? நம்முடைய பணத்தை இவ்வளவு நாட்கள் அவர்கள் வைத்துக் கொள்ள வேண்டுமா?
இந்த சம்பவம் குறித்து முழுமையான விவரத்துடன் கே.பி.என். தலைமை அலுவலகத்திற்கு முறைப்படி புகார் செய்யலாம். பிரசினைக்குள்ளான பயணத்தால் ஏற்பட்ட (அ) அதிகரித்த உங்கள் முதுகு அல்லது கழுத்து வலிக்கு சிகிச்சை எடு்த்திருந்தால் அதற்கான இழப்பீடு கோரலாம். இந்த சிரமங்கள் காரணமாக வேறு ஏதேனும் அலுவல் இழப்புகள் ஏற்பட்டிருந்தால் சட்டப்படி நுகர்வோர் நீதி்மன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அருகில் உள்ள வழக்கறிஞரை அணுகவும்.
இவ்ளோ கேவலமா இருக்காங்களே ….அவர்களுக்கோ அல்லது அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ இப்படி நேர்ந்தால் ????? ஓட்டுனரும் கொள்ள பாக்குறாங்க …ஏன் இப்படி இருக்காங்க …
நீங்கள் சென்ற வண்டியின் பதிவு எண், மற்றும்புறப்பட்ட நேரம் , பிறகு மாறின வண்டியின் எண் எல்லாம் குறிப்பிட்டு இருந்தால், அந்தவாகன ஓட்டுனரும் நடத்துனரும் படித்து இருந்திருப்பார்கள் ,நீங்க தினமலர் ,தினகரன் பத்திரிகையிலும் போட்டு இருந்திருக்கலாம்..
எனக்கு இது போன்ற அனுபவம் 2006 இல் ஒருமுறை சென்னை – கோவை இடையே பயணம் செய்யும்போது ஏற்பட்டது. வேலூர் வழியில் பயணம் செய்ததாக ஞாபகம். நல்ல உறக்கத்தில் பேருந்து மிகவும் அதிர்வது தெரிந்தது. விழித்து பார்த்தபோது தான் அதிவேகமாக போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. சேலம் வரை உறக்கம் இல்லை. பிறகும் நான் KPN இல் பயணம் செய்வது வழக்கம். இப்பொழுது ABT அல்லது ARC இல் தான் பயணம்.
@சுந்தரராஜன் மிகக் நன்றி.. நீங்கள் சொல்வது போல் நுகோர்வோர் நீதி மன்றம் சென்றிருக்கலாம்… ஆனால் அதனால் அவர்கள் திருந்துவார்கள் என எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே அனைவருக்கும் என் அனுபவத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என இதை பதிவு செய்தேன்!
பயணங்களில் நாம் எதிர்பார்ப்பது எல்லாம் நிறைவேறும் என்று நம் இந்தியாவில் நினைப்பது,,,, முட்டாள் தனமாகவே தோன்றுகிறது…….நான் கடந்த 3 வருடங்களாக சென்னையில் இருந்து திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என பயணம் செய்த அனுபவம் நிறைய இருக்கின்றன…..நீங்கள் கூறிய…. பேருந்தின் இருக்கை பழுதடைந்த அனுபவம் போலவே,, கடந்த வருடம் சென்னை லிருந்து ஈரோடு சென்ற அரசு குளிர் சாதன பேருந்தில் எனக்கு ஏற்பட்டுள்ளது…….அடுத்து கடந்த 2009 மே மாதம் கரூரிலிருந்து சென்னை பயணித்த விவேகம் டிராவல்ஸ் பேருந்து முசிறி அருகே புளியமரத்தில் மோதியது…. என் முதல் தொலை தூர பயண அனுபவம் இப்படிதான் துவங்கியது………
good
நல்ல பயனுள்ள பதிவு.
மதுரை டு சென்னை குட் சர்வீஸ் எனி தேடைல்ஸ் மதுரை ராதா பஸ் சர்வீஸ் செல் நம்பர் 7373756633
ஆம்னி பேருந்தை நினைத்தால் உயிருடன் எரிப்பது தான் நினைவுக்கு வருகிறது ………….
சேலம் டு சென்னை 350 km ஜஸ்ட் five hours இன் KPN அண்ட் விஜயலட்சுமி பஸ்
அன்பின் பிரவின் – இப்பொழுதெல்லாம் கேபிஎன் பஸ் பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிற்து. ஒரு காலத்தில் பெயர் பெற்ற நிறுவன்மாக இருந்த கேபிஎன் – தற்போதைய நிர்வாகம் செய்யும் தவறுகளால் பெயரைக் கெடுத்துக் கொண்டு இருக்கிறது. …. என்ன செய்வது – கேபிஎன்னைத் தவிர்க்கலாம். நட்புடன் சீனா
“13ம்தேதி! இல்ல…இல்ல….20ம்தேதி! என சிவக்குமார் அதிமுக அமைச்சரை அம்மா மாத்துகின்ற மாதிரி தேதிய மாற்ற, வேறு வழியில்லாம பிளைட்ல போகவேண்டியதா போச்சு! என்னங்க ஙே! என்று முழிக்கிறீங்க? பிரபல நிறுவனத்தின் ஆம்னி பஸ்தான் பிளைட் மாதிரி ஓட்றாங்க தரையில டயர் படுவதேயில்லை,பறக்குதுய்யா…பறக்குது எங்கயாவது டச் ஆச்சு! மர்கையாதான்…! யப்பா சாமீ! புள்ள குட்டிகாரங்க…இதுல போகாதிங்க….! “
எனக்கும் நேர்ந்த ஒரு கசப்பான அனுபவத்திலிருந்து, சக மனிதன் போன்றும் மதிக்காத இந்த கே.பி.என் -னில் , பயணம் தவிர்க்க ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது !
இதுவரை செய்த நான்கு ஐந்து கேபிஎன் பயணங்களில் எனக்கு இரண்டு அனுபவங்கள் உண்டு. [அவை இங்கே http://www.mouthshut.com/review/KPN-Travels-India-Ltd-Bangalore-review-ortmsluqnn , http://www.mouthshut.com/review/KPN-Travels-Bangalore-review-qtlrulpoom%5D . புகார் கடிதங்களுக்கு பதிலே கிடையாது. கோர்ட் செல்ல நேரம் இல்லை.
நான் கேபிஎன் மற்றும் இதர தனியார் பேருந்துகளை தவிர்த்து வருகிறேன். முடிந்தால் ரயில் இல்லையேல் அரசு பேருந்து. அதுவும் இல்லையேல் பயணம் ரத்து.
its definitely bad experience. but i wish that woman would have adjust her seat for you.
I agree that KPN service is very bad but in this case, how come the uncompleted bridge was opened widely for the bus to get in? shouldn’t it be closed? whose mistake was it?