முதன் முறையாக நேற்று தந்தூரி சிக்கன் சமைத்தேன். நம்புங்கள், என்னுடைய தாய்லாந்து பயணத்திற்கு பிறகு நான் மிகவும் ரசித்து சிக்கனை சாப்பிட்டது இப்போது தான். அப்படி ஒரு அருமையான ருசி. இதை தயார் செய்ய மிகவும் எளிய முறை மற்றும் குறைந்த நேரமே பிடித்தது. ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதை விட செலவும் மிகக்குறைவு. மீண்டும் இதை கட்டாயம் செய்து சாப்பிட தூண்ட இதுவும் ஒரு காரணம். சொல்லப்போனால் மைக்ரோ ஓவனின் உதவியின்றி இது நிச்சயம் சாத்தியம் ஆகியிருக்காது.
என் வீட்டில் உள்ள விரும்பி சாப்பிட்டனர். தொலைபேசியிலும், முகப்புத்தகத்திலும் நிறைய நண்பர்கள் அவர்களை சாப்பிட அழைக்கவில்லை என்று கடிந்து கொண்டனர். அதுமட்டும் இல்லாமல் அதை எப்படி செய்வது என்றும் சிலர் கேட்கத்துவங்கினர். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கட்டுமே என்று அதன் செய்முறையை இங்கே எழுதுகிறேன்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ் – ஒரு கிலோ. (கத்தியில் நன்றாக கீறிவிட்டு வாங்கவும்)
எலுமிச்சை சாறு – இரண்டு டீ ஸ்பூன்.
எவரெஸ்ட் தந்தூரி சிக்கன் மசாலா – நாலு டீ ஸ்பூன்.
கெட்டி தயிர் – ஆறு டீ ஸ்பூன்.
இஞ்சி பூண்டு அரைத்தது – இரண்டு டீ ஸ்பூன்.
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி, எழுமிச்சை சாறையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக தடவவும். கீறிய இடங்களுக்குள்ளும் படுமாறு நன்றாக தடவி 15 ஊறவைக்கவும். பிறகு தந்தூரி சிக்கன் மசாலா, தயிர், அரைத்த இஞ்சி பூண்டு, தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் மிளகாய் தூள் போட்டு கலக்கி மீண்டும் அந்த சிக்கனில் தடவவும். இம்முறையும் கீறிய இடங்களுக்குள்ளும் படுமாறு நன்றாக தடவவும். சுமார் இரண்டு மணிநேரம் கழித்து, க்ரில்+மைக்ரோ வேவ் காம்பி மோடில் 15 நிமிடம் செட் செய்து சூடு பண்ணவும். சிக்கனை திருப்பி வைத்து அதே போல் மீண்டும் 15 நிமிடம் சூடு செய்யவும். சூடான, சுவையான, மொறுமொறு தந்தூரி சிக்கன் ரெடி.