பாதச்சுவடுகள் – 2 (23/01/2014) – கோலிசோடா

Director Vijay Milton & Praveen Kumar C

05 ஜனவரி 2015:

ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், எனது இனிய நண்பருமான விஜய் மில்டன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வனயுத்தம் படப்பிடிப்பு சேலத்தின் அருகில் நடந்துக்கொண்டிருந்தபோது அந்த படத்தில் வசனகர்த்தாவான நண்பர் அஜயன் பாலா மூலம் அவரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகமான சிலநோடிகளிலேயே செலிப்ரிட்டி என்ற பந்தா துளியும் இல்லாமல் மிகச்சாதாரணமாய் பழகிய, உரையாடிய, அந்த பண்பு எனக்குள் ஏற்ப்படுத்திய ஆச்சரியம் இன்னும் என்னில் இருந்து விலகவில்லை. என்னிடம் மட்டும் இல்லை, அவரிடம் பழகிய அனைவரும் அவரின் பண்பை கூறக்கேட்க்கும் போது அவரின் மேல் மரியாதை இன்னும் தான் எனக்கு அதிகமானது.

அதன் பிறகு அவரே தாயரித்து இயக்கிய “கோலிசோடா” படப்பிடிப்பிற்கு சேலம் வழியாக கேரளா செல்லும் போது, என் வீட்டிற்க்கு வந்து என்னையும் “வாங்க ப்ரதர் ரெண்டு நாள் சுற்றுலா போயிட்டு வரலாம்” என்று அழைத்துச்சென்றார். அந்த படத்தில் என்னை ஆன்லைன் ப்ரோமோஷனில் பணியாற்றவைத்த அந்த நட்பு, படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது சேலத்திற்கு வந்த அந்த திரைப்படக்குழு அனைவரையும் எங்கள் வீட்டிற்க்கு அழைத்துவந்து எங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் திக்குமுக்காடவைத்தது. (சொல்லப்போனால் இதை போன்ற இன்னும் பல அனுபவங்களை ஒரு கட்டுரையாகவே எழுதலாம். )

Goli Soda Movie Team at our home

மாதங்கள் பல ஓடிவிட்டது. கோலிசோடாவின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வீற்றிருக்கும் அவர், தற்போது விக்ரமை வைத்து “பத்து என்றதுக்குள்ள” என்ற திரைப்படத்தை மிகுந்த பெரும்பொருட்செலவில் இயக்கிவருகிறார். சென்ற மாதம் அதன் படப்பிடிப்பு கோவையில் நடந்துக்கொண்டு இருந்தபோது அங்கு அம்மாவை அழைத்துச்சென்றிருந்தேன். அவர்கள் இதுவரை படப்பிடிப்பு எதுவும் நேரில் பார்த்ததில்லை என்பதால் ஒரு புது அனுபவமாக இருக்கும் என கருதினேன். மிகவும் பரபரப்பாக இயங்கிவரும் விஜய் மில்டன் அவர்களை கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சந்திக்கிறேன். ஆனால் அப்போது அது மதிய உணவு இடைவேளை. உணவருந்த ஹோட்டலிற்கு சென்றவிருந்த எங்களை கட்டாயப்படுத்தி “நம்ம எங்க வேணும்னாலும் சாப்பிடலாம் ப்ரதர். அம்மா இருக்காங்க இல்ல.” என்று அவரின் “கேரவனில்” அழைத்து எங்களுக்கு உணவு தருவித்தார்.

கட்டுபடுத்தப்பட்ட பெரும்மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னுடைய கேரவனில் இருந்து ஒரு முக்கிய காட்சியில் நடித்துவிட்டு மீண்டும் கேரவணிற்கு சென்றார் விக்ரம். வேறு இடத்திற்கு படப்பிடிப்பை மாற்றுவதற்கு படக்குழுவும் பரபரப்பாக சுழன்றுக்கொண்டு இருந்தது. வீட்டிற்க்கு கிளம்ப ஆயத்தமான எங்களை அந்த கேரவணிற்கு அழைத்து சென்று “விக்ரம்” என்ற இன்னொரு இனிய மனிதரை அறிமுகம் செய்துவைத்து ஆச்சர்யப்படுத்தினார். என் அம்மாவிற்கு அந்த காரவேனில் நடந்த உரையாடல்கள் நிகழ்வுகள் அனைத்தில் இருந்தும் வெளிவர பல நிமிடங்கள் பிடித்தது. இவ்வளவு உயரத்திற்கு சென்றும், தன் காலை அழுத்தமாக தரையில் பதித்து நடக்கும் பண்பு நிச்சயம் நாம் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.

சென்ற வருடம் எழுதி இருந்தேன். அவரின் மிகபெரிய பிறந்தநாள் பரிசாக கோலிசோடாவின் வெற்றி கிடைக்குவேண்டும் என. அதே போல் இந்த வருடமும், புத்தாண்டு பரிசாகவும், அவரின் பிறந்தால் பரிசாகவும் “பத்து என்றதுக்குள்ள” படத்தில் வெற்றி கிட்டி, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனர் பட்டியலில் அவர் பெயரை நிரந்தரமாகிக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன். காலன் “நூறு என்றதுக்குள்ள”, அவர் இன்னும் பல சாதனைகள் புரிந்து, இன்னும் பல உயரங்கள் அடைந்து ஆனால் அதே உயர்நிலை பண்போடு வாழ்ந்திட இறைவனை பிராத்திக்கிறேன்.

(சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் முதல் சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் கீழே. நாங்கல்லாம் அப்பவே செல்பிபுள்ள! )

vijay milton -  ajayan bala  - praveen

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

யோசித்துப்பார்த்தால் இவ்வுலகத்தில் அனைத்து திறமைசாலிகளின் ஆரம்பக்கட்டபோராட்டம் தனக்கான ஒரு அடையாளத்தை நிறுவிக்கொள்வதை நோக்கியே தான் இருக்கும். அதைத்தாண்டிய பணம், புகழ் இத்யாதிகள் அனைத்தும் அவரவர் தனிப்பட்ட முற்ச்சியின் பலனும், கிடைக்கப்பெறும் அங்கீகாரத்தின் அளவைப் பொறுத்த பிரதிபளிப்புமே. சொல்லப்போனால் திறமைசாலிகள் அனைவரையும் இவ்வுலகம் எளிதில் அங்கீகரிப்பது இல்லை. சிலசமயம் போராட்டங்கள் தேவை. சில சமயம் பெரும் போராட்டங்கள் தேவை. இன்னும் சில சமயத்தில் வாழ்நாள் முழுவதும் இந்த போராட்டம் முடிவில்லாமல் தொடர்ந்துக்கொண்டே இருக்கும். அதுவும் சினிமாத்துறையில் இந்த போராட்டக்களம் கொஞ்சம் ரணமானது.

சென்னை கே.கே நகரில் பெயர் தெரியா ஒரு திருமணமண்டபத்தில் அவரை முதன்முறை சந்திக்கிறேன். ஆனால் அது திருமணவிழாவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நிகழ்ச்சியோ அல்ல.  கோலிசோடா படத்தின் சண்டைகாட்சியின் ஒத்திகை அப்போது அங்கு நடந்துக்கொண்டு இருந்தது. அதன் இயக்குனர் விஜய் மில்டனை ஒரு வேலை நிமித்தமாக சந்திக்கச்சென்றேன். (மண்டபத்தின் உள்ளே நுழைய முற்படுகையில், தாடியுடன், நெட்டையாக ஒரு மனிதர் என்னை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி விசாரித்து விட்டு தான் அனுப்பினார். கொஞ்சம் கெடுபிடி மனிதர் போல. ஏற்கனவே ஒரு நாள் அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது என்னை அங்கே முதலில் அனுமதிக்காமல், பிறகு விளக்கம் கொடுத்தவுடன் தான் அனுமதித்தார். இந்த முறை என்னை மறந்திருந்தார் என நினைக்கிறேன். அவரை பற்றி பிறகு வருகிறேன்.)

படத்தில் நாயகர்களான நான்கு பசங்களும், ஸ்டண்ட்மேன்களுடன் மோதிக்கொள்ளும் காட்சி அங்கு ஒத்திகை நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது அங்கு வியர்வை நனைத்த டி-ஷர்ட், ஷார்ட்ஷுடன் ஒருவரை இயக்குனர் அறிமுகப்படுத்திவைத்தார். அவர் தான் அந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர். மிகப்பரபரப்பாக  அனைவருக்கும் சண்டைபயிற்சி அளித்துக்கொண்டு இருந்த அவர்,  முகத்தில் வியர்வை சொட்ட சொட்ட கைக்குளுக்கிவிட்டு மீண்டும் தன் பணியை தொடரஆரம்பித்தார். அவ்வளவுதான் எங்கள் முதல் அறிமுகம்.

பின்னொரு நாள் கேரளாவில் நடந்த படப்பிடிப்பின் போது நானும் அவரும் ரூம் மேட். அப்போதுதான் இருவருக்கும் நன்கு அறிமுகம் கிடைத்தது. அவர் தொழில் வேண்டுமானால் சண்டை பயிற்சி இயக்குனராக இருக்கலாம். பார்க்க கூட கரட முரடாக இருக்கலாம். பேசும் மொழியும் சென்னைசெந்தமிழ் தான். ஆனால் பழக மிகவும் மென்மையான மனிதர். பலமணிநேரம் இருவரும் தொடர்ந்து உரையாடியிருப்போம். இருவருக்குமான பலவருட நிகழ்வுகள் அனைத்தும் அப்போதே பரிமாறிக்கொண்டோம். என்னுள் மிகப்பெரியதாக்கத்தை ஏற்படுத்திய காதல் கொண்டேன் படத்தில் அவர் மாஸ்டர் ஆவதற்கு முன்னர் பணிபுரிந்தார் என்ற ஈர்ப்பு மேலும் அவரிடம் நெருக்கப்படுத்தியது. அதன் பிறகு  பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அவர் பணிபுரிந்திருக்கிறார்.

நகுல், அருண் விஜய், பிரசன்னா, சத்தியராஜ்  என பல நடிகர்களின் படங்களில் தான் இயக்கிய சண்டைக்காட்சிகளை  தனது ஐபேட்டில் காண்பித்தார். எல்லாமே அட்டகாசம். பிரமாதமான உழைப்பு. ஆனால் அனைத்தும்  விழலுக்கு இறைத்த நீராகதான் போனது. தான் பணிபுரிந்த பெரும்பான்மையான படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறாத காரணத்தினால் தனது உழைப்பு அதுவரை கவனிக்கப்படமாலே போய்க்கொண்டிருந்தது. தனது திறமைக்கான அங்கீகாரம் சரிவர கிடைக்காமல் போனதன் வருத்தம் அவருக்கு இருந்தது. இருந்தும் கொஞ்சமும் அசராத உழைப்பு. மனம் தளராமல் அவர் முயற்சி தொடர்ந்தது.  கோலிசோடா படத்தில் தொடர்ந்து மூன்று நிமிடத்திற்கு மேல் நடக்கும் சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கும் வகையில் இயக்கி இருந்தார். இதுவரை எந்த சினிமாவிலும் செய்திடாத சாதனை அது. (கடைசி நேரத்தில் படத்தொகுப்பில் அதன் நீளம் சற்று குறைக்கப்பட்டது). நிச்சயம் இந்த திரைப்படம் அவருக்கு அங்கீகாரம் பெற்றுத்தரும் என்று அனைவரும் நம்பினோம். அவரும் பெரிதும் நம்பினார்.

அடையாளத்தை தேடிச்செல்லும் இளைஞர்களின் கதையை எடுத்துக்கொண்டு, அடையாளங்களை தேடிக்கொண்டிருக்கும் சக கலைஞர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, தனது அடையாளத்தை நிலைநாட்ட இயக்குனர் விஜய் மில்டனே தயாரித்து இயக்கிய படம் தான் கோலிசோடா. படம் சென்ற வருடத்தில் மிகபெரிய ஹிட் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு தியேட்டரிலும் சண்டைகாட்சிகளில் விசில் பறந்தததை படக்குழுவினருடன் சென்று கண்கூடாக பார்த்தோம். படத்தை மக்கள் வெறுமனே ரசிக்கவில்லை, கொண்டாடினார்கள். சேலம் கைலாஷ் பிரகாஷ் தியேட்டரில் படக்குழுவினர் அனைவரும் சென்ற போது, பாதுகாப்பிற்கு வந்த ஒரு இன்ஸ்பெக்ட்டர் ஒருவர் “சண்டை பயிற்சியாளர் யார்?” என்று கேட்டறிந்து வந்து. கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவரை பாராட்டியும், சின்ன சின்ன நுணுக்கங்களை சிலாகித்தும் பேசினார்.  (துண்டில் பிளேட் வைத்து சண்டைபோடும் நுணுக்கத்தை கண்டு ஒரு போலிஸ்காரராக  அவர் பகிர்ந்துக்கொண்ட ஆச்சர்யங்கள் உண்மையில் அன்றே கிடைத்த பெரிய அங்கீகாரமாகப்பட்டது).

இப்போது அத்திரைப்படத்தில் பணிபுரிந்த அநேகமானவர்களும் புதிய படங்கள் ஒப்பந்தமாகி அடுத்தகட்டத்திற்கு நுழைந்துவிட்டார்கள். (நான் சொன்ன அந்த நெட்டையான தாடிவைத்த நபர் வேறு யாருமல்ல. சென்றவருடம் வெற்றிகரமாக ஓடிய இன்னொரு திரைப்படமான “சதுரங்கவேட்டையின்” இயக்குனர் வினோத்)  படம் இப்பொழுது வெளிநாட்டில் பல திரைப்பட விழாவில் பங்கேற்று  பாராட்டுக்களை குவித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் விகடன் 2014காண விருதுகளை அறிவித்து இருக்கிறது. அதில் சுப்ரீம் சுந்தர் அவர்களை சென்ற வருடத்திற்கான சிறந்த சண்டை பயிற்சி இயக்குனராக தேர்ந்தெடுத்து கவுரவித்து இருக்கிறது. அவருடன் போட்டியிட்டது சாதாரண படங்களோ, சண்டை பயிற்சி இயக்குனர்களோ அல்ல. கத்தி, மெட்ராஸ் போன்ற வணிகரீதியாக பெரும் வெற்றிபெற்ற ஜாம்பவான்களின் படங்கள். இருப்பினும் வெறும் நான்கு இளைஞர்களை வைத்து, நம்பகத்தன்மைக்கு கொஞ்சமும் குந்தம் விளைவிக்காமல் சண்டைகாட்சி அமைத்து, மக்கள் அனைவரும் மிகவும் ரசிக்கவைத்த அந்த உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது. “இது வெறும் தொடக்கம் தான் மாஸ்டர். இந்த வருடங்கள் பல விருதுகளை கோலிசோடா அள்ளிக்குவிக்கப்போகிறது, உங்களை பல மேடைகளில் விருதுகளோடு பார்க்கப்போகிறேன்” என்று எனது வாழ்த்துக்களை அவருடன் பகிர்ந்துக்கொண்டேன்.

கோலிசோடா படத்தின் சண்டைகாட்சி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் கருத்துக்களையும் வாழ்த்துக்களை இங்கே பகிருங்கள். நிச்சயம் அவருக்கு அது தெரியப்பெறும். அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் விட  பெரிய சன்மானத்தை ஒரு கலைஞனுக்கு யாரும் வழங்கிட முடியாது.

Supreme Sundar & Praveen Kumar C

இதோ விகடனில் இருந்து….

விகடன் அவார்ட்ஸ் 2014:

சிறந்த சண்டைப் பயிற்சி: சுப்ரீம்சுந்தர் (கோலிசோடா)

கோயம்பேடு மார்க்கெட்டையே அலறடிக்கும் அடியாள் கோஷ்டி. நான்கே நான்கு சுள்ளான்கள். இவர்களுக்கு இடையே சண்டை. ஒரு சினிமாகூடப் பார்க்காதவரும் சொல்லிவிடுவார்… அடியாள் கோஷ்டிதான் சுள்ளான்களை சுளுக்கெடுக்கும் என்று! ஆனால், மதம்கொண்ட ‘சுண்டெலி’களாக அடியாட்களைச் சுத்திச் சுத்தி வெளுத்தது சுள்ளான் படை. அந்த அடி, உதைகளை எந்த லாஜிக் உதறலும் இல்லாமல் நம்பவைத்தது சுப்ரீம் சுந்தரின் ஸ்டன்ட் கலாட்டா. பாய்ந்துவரும் அடியாட்களிடம் இருந்து லாகவமாகத் தப்பித்தல், கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டே மொத்துவது, கால்களின் இடுக்கு இடைவெளியில் நழுவி தோளில் ஏறி அமர்வது… என ‘டாம் அண்ட் ஜெர்ரி’ சண்டைக் காட்சிகளை கேண்டிட் சினிமாவாக்கியதில் அள்ளியது அப்ளாஸ். ‘சின்னப் பசங்க வெளையாட்டு’ என உதாசீனப்படுத்த முடியாமலும், ‘அடி ஒவ்வொண்ணும் இடி’ என ஹீரோயிச வகையில் சேராமலும் செம கெத்து காட்டியது இந்த ஆக்ஷன் குத்து!

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

@ மேலும் சில புகைப்படங்கள்.

Goli Soda Movie Team

Goli Soda Sree Raam @ Home

Goli Soda Movie Team

விகடனில் இருந்து வந்த முதல் காசோலை

சிறுவயது முதல் இதுவரை நான் தான் விகடனிற்கு பணம் கொடுத்து வந்திருக்கிறேன். முதல் முறை விகடனில் இருந்து எனக்கு பணம் வந்திருக்கிறது. முதன் முறை என் எழுத்திற்கு கிடைத்த சன்மானம் இது. அதுவும் 2013ஆம் ஆண்டின் முதல் நாளன்று!  விகடனிற்கு நன்றி!

. vikatan cheque