செய் அல்லது செத்து மடி – கவிதை

 

IMG_7829

எங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.
எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.
எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.
நம் வெற்றியை கண்டு
உளம் மகிழ யாருமில்லை என்றாலும்
நம் தோல்வியை கொண்டாட
பெரும் கூட்டமே இங்கு காத்திருக்கிறது…
சற்று தடுமாறினாலும்,
நம்மை உயிரோடு விழுங்க
அது தூங்காமல் விழித்திருக்கிறது.

“காலம் கனியும்”
என காத்திருத்தலும் பயனுக்கில்லை.
“வாழ் அல்லது வாழவிடு”
என்ற அறசீற்றமும் பிரயோஜனமில்லை.
உனக்கு இருக்கும் ஒரே வழி,
“செய் அல்லது செத்து மடி..”

– பிரவீன் குமார் செ

லைப் ஆப் பை- ஒரு வாழ்க்கை அனுபவம்.

 

life of pie - review - suvadugal praveen

நடுக்கடலில் சிக்கிக்கொண்ட ஒரு உயிர் காக்கும் படகு. அதில் கரைசேர தவிக்கும் ஒரு இளைஞன், அவனுடன் கூடவே ஒரு பெங்கால் புலி. இது தான் “லைப் ஒப் பை” படத்தின் கதை என்று கேள்விப்பட்டு திரையரங்கம் சென்றேன். ஆனால் அங்கு போனவுடன் தான் எனக்கு தெரிந்தது அந்த புலி மற்றும் இளைஞனுடன் சேர்ந்து நானும் அந்த படகில் பயணிக்க நேரிடுமென்று. 3D யின் உதவியோடு அந்த காட்சிகளில் நாமும் பயணித்தாலும், கதையில் தாக்கத்தால் நம் வாழ்க்கையும் அதனோடு பயணப்படுவது போல் இருக்கிறது என்பது தான் உண்மை.

எனக்கு சிறு வயது முதலே விடை  தெரியாமல் இருந்த ஒரு கேள்விக்கு இந்த திரைப்படம் விடை கொடுத்தது. அது என்னவென்றால். பல ஆங்கில படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து பார்க்கிறோம், ரசிக்கிறோம். வியக்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் அதே போன்ற நேரடி தமிழ் படம் நம் ஊரில், நம் நடிகர்களை வைத்து எடுத்தால் அதில் நம்பகத்தன்மை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.  உதாரணத்திற்கு சூப்பர் மேன் படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்தால்? அவதார் படத்தில் விஜயும், அனுஷ்காவும் வந்தால்? டைட்டானிக் படத்தில் அஜித்தும், நயன்தாராவும் கப்பல் தளத்தில் கையை நீட்டியபடி நின்றிருந்தால்? நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அது ஏன்? ஒரு வேலை அது வெள்ளைக்காரன் நடித்திருப்பதால் நம்பிவிடுகிறோமா? அவனது இனத்தை நாம் எப்போதும் உயரத்தில் வைத்து பார்க்கும் கலாச்சாரமா? (அதாவது செவப்பா இருக்கிறவன் போய் சொல்லமாட்டான் என்பது போல்)

“லைப் ஆப் பை”  ஒரு ஹாலிவுட் படம் என்றாலும், இந்தியாவில், அதுவும் பாண்டிச்சேரியை சார்ந்த கதைக்களம். நம்முடைய நேட்டிவிட்டி அதில் இருக்கிறது. நமக்கு பழக்கப்பட்ட இந்திய முகங்கள். நம்முடைய கலாச்சாரத்தை பேசுகிறது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்படி இருப்பதாலோ என்னவோ ஹாலிவூட் தரத்தில் ஒரு நேரடி தமிழ் படமாக நாம் கருதிக்கொண்டு இதை பார்க்க முடிகிறது. அப்படி பார்த்தும் காட்சிகளை நம்மால் நம்ப முடிகிறது. வியக்க முடிகிறது. பாராட்டவும் முடிகிறது. ஆக “மேக்கிங்” தான் எல்லாவற்றிக்கும் காரணம். அது சரியாக இருந்தால் விண்வெளியில் பறந்தபடி அயல் கிரகவாசிகளுடன் “தனுஷ்” சண்டை போட்டால் கூட கண் சிமிட்டாமல் நம்மால் ரசிக்கமுடியும்.

அது சரி, கதைக்கு வருவோம். நாம் கண்ணீர் சிந்தும் நேரங்களில் சாயக்கிடைக்கும் தோள்கள். கீழே விழும்போது நம்மை தூக்கிவிட நீட்டப்படும் கைகள். இப்படி சிந்தித்து பார்த்தால் நாம் ஒவ்வொரு முறை வாழ்க்கையில் சோர்ந்து போகும் தருணங்களில் ஏதேனும் ஒரு ரூபத்தில் ஒரு சக்தி நம்மை முன்னோக்கி உந்திக்கொண்டு தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. எதற்காக ஒரு சம்பவம் நமக்கு நடத்தது என்று பின்னர் யோசித்து பார்த்தால் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும்.  நமக்கு வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.

சென்ற வருடம் எனது சித்தி அவரது கிராமத்தில் இறந்து போயிருந்தார். தற்கொலை என்பதால் அவர்களது கிராமத்தின் வழக்கத்துக்கு மாறாக அவர்களது நிலத்தில் புதைக்காமல் அவரது உடலை அருகில் உள்ள ஒரு ரிசர்வுட் பாரஸ்ட் உள்ளே ஒரு இடுகாட்டில் ஏறியூட்டினார்கள். இரவு நேரம் அது. அனைவரும் அதே பாரஸ்ட் வழியாக இப்போது திரும்பி வந்துக்கொண்டு இருந்தோம். மனித நடமாட்டம் இல்லாத, கண்ணுக்கெட்டிய தூரம் உயரமான மரங்களை கொண்ட காடு அது. பவுர்ணமி நிலா வெளிச்சத்தில் ஒரு அமனுஷ்யத்தை தனக்குள் பரப்பி இருந்தது. எனக்கு முன்னேயும், பின்னேயும்,  உறவினர்கள் அனைவரும் நடந்துக்கொண்டு இருந்தனர். ஆங்காங்கே அவர்களது கைகளில் டார்ச் லைட்டும், பந்தமும் இருந்தது. எங்கும் நிசப்தம். தூரத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் மைக் செட்டில் இருந்து ஒரு பாடல் மெல்லியதாய் கேட்டுக்கொண்டு இருந்தது.

தலையில் கிர்ரென்று ஒரு உணர்வு. இந்த காட்சியை, இந்த சப்தத்தை, இந்த நிகழ்வை ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன், அனுபவித்து இருக்கிறேன். கனவிலா? அல்லது நனவிலா? இனம்புரியா ஒரு உணர்வு. ஏற்கனவே பார்த்த சம்பவம் திரும்பவும் நமக்கு நடந்தால் எப்படி இருக்கும்!  ஒரு நிமிடம் உறைந்து போனேன். உடனே தலையை சிலுப்பினேன். மீண்டும் வேகமாக சிலுப்பினேன்.  அருகில் இருந்த ஒருவர் என்ன ஆச்சு உனக்கு என்று கேட்டார்?  ஒன்றும் இல்லை என்றேன். அவருக்கு என்ன சொல்லி புரிய வைக்க? அதை நான் மட்டுமே உணரமுடிந்த விஷயம். அமைதியாய் வீடு வந்து சேர்ந்தேன்.

அதே போல் ஆறு வருடங்களுக்கு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்துக்கொண்டு இருந்த அலுவலகத்தில் இருந்து வேலை முடிந்து பைக்கில் சேலம் செவ்வாய்பேட்டை வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். மணி இரவு பன்னிரெண்டை கடந்திருக்கும். வீட்டிற்கு அருகில் வந்துவிட்டேன். அன்னதானப்பட்டி பகுதி நான்கு ரோட்டை கடக்க வேண்டும். அதாவது நான்கு சாலைகள் சந்திக்கும் ஜங்க்ஷன் அது. நடு நிசி என்பதால் ஊரே வெறிச்சோடி கிடந்தது. சாலையில் யாரும் இல்லை. அதை கடக்கும் முன்னர் வலது பக்கம் பார்த்தேன் வாகனம் ஏதும் வரவில்லை. இடப்பக்கம் கட்டடம் இருந்ததால் அந்த சந்திப்பின் அருகில் செல்லும் வரை  என்னால் பார்க்க முடியாது. ராங் ரூட் என்பதால் யாரும் அந்த பக்கம் இருந்து வரவும் வாய்ப்பு இல்லை.

அதனால் வேகத்தை குறைக்காமல் வந்த வேகத்திலேயே அந்த சாலை சந்திப்பை கடக்க முயன்றேன்.  அந்த கட்டிடிடங்களை தாண்டுகையில் திடீரென்று  விர்ரென  மண்டைக்குள் கரண்ட் பாய்தது போல் இருந்தது. இடப்பக்கம் இருந்து என்னை நோக்கி ஏதோ அதி வேகத்தில் என்னை மோத வந்துகொண்டு இருந்தது போல் ஒரு உள்ளுணர்வு. நான் அதுவரை இடப்பக்கம் திரும்பவே இல்லை. என்னையறியாமல் என் கை பைக்கின் விசையை கூட்டியது. அந்த சாலையை தாண்டிய அடுத்த நொடிகளில் ப்ரேக் போட்டு நிறுத்தி திரும்பிப்பார்த்தேன். கீர்ச்….  கீர்ச்… என சத்தம் எழுப்பிக்கொண்டே நான்கைந்து கடைகளை தாண்டி ஒரு டெம்போ நின்றது. என் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தது. வாயில் இருந்து வார்த்தை வரவில்லை. என்ன நடந்தது என்று நான் உணருவதற்க்குள் அந்த வாகனம் மீண்டும் வேகமெடுத்து. அதாவது பயங்கர வேகத்தில் ராங் சைடில் இருந்து அந்த டெம்போ வந்திருக்கிறது. மயிரிழையில் என்னை அது மோதுவதில் இருந்து தப்பித்து இருக்கிறேன்.

சில நொடிகளில் நடந்துவிட்ட விட்ட இந்த சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நான் அப்போது இடப்பக்கம் திரும்பி பார்த்திருந்தால், நான் என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் அந்த வாகனம் என்னை மோதி இருக்கும், பதட்டத்தில் பிரேக் அடித்திரிந்தாலோ, வண்டியின் விசையை கூட்டாமல் இருந்திருந்தாலோ கூட அது தான் நிகழ்த்திருக்கும். அந்த சம்பவத்தை என்னால் சரியாக எழுத்தால் விவரிக்க முடியவில்லை. (இந்த புகைப்படத்தை பார்க்கவும். சம்பவம் நடந்த இடம் அது. பச்சை கோடு நான் சென்ற திசை, சிகப்பு அந்த டெம்போ வந்தது, நீளம் அந்த டெம்போ சென்றிருக்க வேண்டிய திசை). நான் எப்படி தப்பித்தேன் என்று இன்னமும் தெரியவில்லை.அது ஒரு விளக்க முடியா அனுபவம். சுருக்கமாய் சொன்னால் ஏதோ ஒரு சக்தி, என் உள்ளுணர்வை தூண்டி என்னை விபத்தில் இருந்து காப்பற்றி இருக்கிறது. அது என்ன என்று வெளியே விளக்கம் தேடினால் நிச்சயம் பதில் கிடைக்காது.

Annathanapatti

இப்படி உலகம் நம்ப மறுக்கும் ஏதேனும் நம் வாழ்வின் நிகழ்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதில் இருந்து கிளறுகிறது இப்படம். படத்தின் கதாநாயகனுக்கு நடக்கும் சம்பவங்களும் அதை போன்றது தான். கடைசிவரை அவனுக்கும், பார்வையாளர்களான நம்மை தவிர யாரும் அதை நம்பப்போவதில்லை. கடலில் சிக்கிய ஒருவன் இருநூற்றி இருபத்தி ஏழு நாட்கள் கழித்து கரை ஒதுங்குகிறான்.  இது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் இயற்கை, சம்பவங்கள் அதுவரை அவன் பிழைத்திருப்பதற்க்கு அதுவரை ஏதேனும் வகையில் அவனுக்கு ஒத்துழைக்கிறது.அது கடவுளா? அல்லது  இயற்கையை மீறிய ஒரு சக்தியா?  விடையை படத்தின் முடிவில் நீங்களே யூகியுங்கள். மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை அந்த புலியின் மூலமாகவும், மனிதனுக்கும் இருக்கும் கடவுளை அந்த இளைஞன் மூலமாகவும் தோலுரித்து காட்டுகிறது இப்படம். மொத்தத்தில் “லைப் ஆப் பை” ஒரு வாழ்க்கை அனுபவம்.

என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே!

life-purpose

அரைக்கால் ட்ரவுசர் வயதில், பிறந்த நாள் என்றால் புத்தாடை கிடைக்கும் ஒரு மகத்தான நாளாகவே கருதினேன். என்றுமே இல்லாமல் அன்று மட்டும் பள்ளி கூடம் செல்லுவதற்கு  மனம் மிகவும் சுறு சுறுப்பாகிவிடும். அரை கிலோ, ஒரு கிலோ சாக்லேட் பாக்கெட்டுகளை வாங்கி, புத்தகப்பைகளுக்குள் துருத்தி, புது கலர் சட்டை அணிந்து, பள்ளிக்கூடம் சென்று உள்ளே நுழையும்போது, அடேங்கப்பா என்ன ஒரு மிடுக்கு வந்துவிடுகிறது! எல்லோரும் சீருடையில் வரும் போது நான் மட்டும் தனித்து கலர் சட்டை அணிந்து நடந்து செல்வது அப்போது ஒரு இனம் புரியா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளிக்கூட மைதானத்தில், கடவுள் வாழ்த்திற்காக அனைவரும் கூடி இருக்கும் அந்த காலை நேரத்தில், நான் மட்டும் அனைவரின் முன்னால் நிறுத்தப்படுவேன். அன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் அனைவரும் அப்படி தான் நிற்க வைப்பார்கள். என் பேரை ஒலி பெருக்கியில் சொல்லுவார்கள். குட்டி தம்பிகள் முதல், பெரிய அண்ணன்கள் வரை எல்லோரும் என்னை பார்பதற்காக வரிசையை நிற்பது போல் இருக்கும். அனைவரும் எனக்காக “ஹாப்பி பார்த் டே டூ யூ” என பாடும் போது பார்பதற்க்கே ஒரு கர்வம் வரும்.

பிறந்த நாள் அன்று  யாரும் திட்ட மாட்டார்கள்.  டடீச்சர் நம்மை அடிக்க மாட்டார்கள். என்னை சுற்றி தான் அன்று முழுவதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும்.  போதா குறைக்கு அன்று ஒரு நாள் முழுதும்  நான் தான் என் பள்ளியில் ஹீரோ என்ற நினைப்பு வேறு தொற்றிக்கொள்ளும். தினமும் அப்படியே இருந்தால் நான்றாக இருக்குமே என்று கூட நினைத்ததுண்டு. எல்லாம் என்னிடம் இருந்து சாக்லேட் காலியாகும் வரைதான் என்று அந்த பிஞ்சு மனதிற்கு தெரியாது. அடுத்த நாள் நிலைமை தலை கீழாக மாறி, கலர் சட்டை அணிந்து வரும் இன்னொருவன் பின்னால் நானும் அலையை வேண்டி வரும் என்பதும் அப்போது  புரியாது.

அரைக்கால் ட்ரவுசர் நீண்டு முழுக்கால் ட்ரவுசராய் மாறிய ஆரம்ப காலங்களிலும் அந்த பிறந்த நாள் ஹீரோயிசம் முழுதாக மறைந்ததாக நினைவில்லை. தட்டு நிறைய சாக்லேட் வைத்துக்கொண்டு.. இல்லை இல்லை.. இப்போது சாக்லேட்டுகள் அனைத்தும் கேக்காய் மாறி இருந்தது.  தட்டு நிறைய கேக்கை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டுக்கு எங்க ஏரியா நண்பர்கள் பட்டாளத்துடன் சென்று கொடுப்பேன். அவர்களும் வெறும் கையுடன் என்னை அனுப்ப மாட்டார்கள். நான் விடா பிடியாய் வாங்க மறுத்தும், ஒவ்வொரு வீட்டிலும் பத்து ரூபாய் முதல் நூறு ருபாய் தாள்கள் வரை என் பாக்கட்டில் திணித்து அனுப்புவார்கள். அப்போது பணத்தின் அருமை எனக்கு தெரியாததாலும், வீட்டிற்கு வந்தால் அதற்காக அம்மா திட்டுவார்கள் என்று எண்ணியதாலும் தான் பணம் வாங்க மறுத்தேன் என்று நினைக்கிறேன்.

லிட்டில் சூப்பர் ஸ்டார் (உண்மையாலுமே அப்போ அவர் லிட்டில் தான்) சிலம்பரசன் ஒரு  குட்டி  பைக்கை ஏதோ ஒரு படத்தில் ஓட்டுவதை அப்போது பார்த்ததாய் ஞாபகம். பார்க்க குட்டி சைக்கிள் அளவிற்கு அச்சு அசலாக பைக்கை போல தான் இருந்தது அது.  அதை நானும் வாங்கியே தீர வேண்டும் என்று முடிவெடுத்தேன். சரி அதற்க்கு காசு? அதான் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வருமானம் வருதுல்ல!

அதிலிருந்து எல்லா  பிறந்த நாளின் போதும் கலெக்சன் ஆகும் பணத்தை அப்படியே பைக் வாங்கும் ஆசையில் அம்மாவிடம் சேமிப்பதற்கு கொடுத்து வைத்தேன். அப்போது அந்த பைக் எவ்வளவு விலை இருக்கும் என்று எனக்கு தெரியாது. என்றாவது ஒரு நாள் வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கையில் பல வருடங்கள் அந்த பணத்தை அப்பாவியாய் அவர்கள் கை செலவிற்கு கொடுத்துக் இருந்திருக்கிறேன் என்று வளர்ந்த பிறகு தான் விளங்கியது. இப்போது பெரிய பைக்கும் வாங்கியாச்சு, காரும் வாங்கோயாச்சு. இருந்தும் பத்து, பன்னிரண்டு வயதில் அந்த குட்டி பைக் கிடைத்து இருந்தால்  நான் அடைந்திருக்கக் கூடிய அந்த சந்தோசத்தை எதுவும் இன்று வரை கொடுக்கவில்லை!

சரி மீண்டும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருவோம். ஜீன்ஸ் பான்ட், டி ஷர்ட் என்று மாறிய டீனேஜ், காலேஜ்  பருவங்களில் அதுவும் சுத்தமாக மாறி இருந்தது. பிறந்த நாள் என்றாலே  “மச்சான் ட்ரீட் எப்போ? “ என்று தான் அன்று சந்திக்க நேரிடும் அனைவரின் வாயிலும் வந்து விழும். இப்போது வளர்ந்து தொலைத்த காரணத்தினால் முதல் மாதிரி பிறந்த நாள் கலெக்சன் இப்போ வாய்ப்பே இல்லை. அப்படியே இருந்தாலும் ஐம்பது நூறு எல்லாம் இப்போது பத்தாது. அப்பாவிடம் கையேந்த வேண்டியது தான் ஒரே வழி. இவ்வளவு பணம் எதுக்குடா? என்று அவர் கம்மியாக கொடுத்தாலும் ஐஸ் வைத்து அம்மாவிடம் இருந்து இன்னும் கொஞ்சம் தேத்தி விடலாம். என்ன செய்வது! அந்த வயதில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்கவில்லை என்றால் அய்யோ அது தெய்வ குத்தம் ஆகி விடுமே! பாக்கட்டில் காசு கூட இல்லை என்றால் அவ்வளவு தான் அது கொலை குத்தம் ஆகி விடும்! பிறந்தாளன்று பள்ளிக்கு விரும்பி சென்ற கால்கள் இப்போது கல்லுரி வாசலை மிதிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. அதுவரை பிறந்த நாளின் போது பெற்றோர், உறவினர்கள் என்பது இருந்து  நண்பர்கள் தான் உலகம் என்று மாறி போகும் காலம் அது!

வருடத்தின் அந்த ஒரு நாளை நாம் அணுகும் விதமே ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுகிறது. அனைத்தையும் கடந்து சென்று நமது கடைசி பிறந்த நாளையும் ஏதோ ஒரு வகையில் கொண்டாடியே தீருவோம் நாம். அது சரி கடைசி பிறந்த நாள் என்று ஒன்று உண்டா என்ன?

சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு பிறந்த நாள்.  இன்னும் சொல்ல வேண்டுமானால் என்னுடைய தாய் மாமன் அவர். அன்று வழக்கம் போல் அவர்கள் வீட்டில் குதூகலம் இல்லை. அவருடைய குழந்தைகள் அவரை வெளிய அழைத்துச்செல்ல வற்புறுத்தவில்லை.  கோவிலுக்கு செல்ல அவருடைய மனைவியும் அவரை அழைக்கவில்லை. தினமும் வீட்டிற்கு வரும் நண்பர்கள் கூட அன்று மட்டும் யாரும் வரவில்லை. உறவினர்கள் யாரும் பிறந்நாள் வாழ்த்து சொல்ல அவரை தொலைபேசியில் அழைக்கவில்லை.

இத்தனைக்கும் பிறந்த நாளை பெரிதாய் பொருட்படுத்தாமல் ஒதுக்கும் அளவிற்கு அவருக்கு பெரியாதாய் வயது ஒன்றும் ஆகி விடவில்லை. சொல்லப்போனால் அன்று அவருக்கு 37வது பிறந்த நாள். கோவில், குழந்தைகள் , நண்பர்கள் என்று பிறந்தநாளை நம்மை போல் கொண்டாடும் சாராரி மனிதர் தான் அவரும். ஆனால் முடிந்த வரை தனிமையிலே அந்த நாள் முழுவதும் அவர் செலவிட்டார். காரணம்…..?

அது அவருடைய கடைசி பிறந்த நாள் என்று அவருக்கு தெரிந்து இருந்தது. புற்றுநோயால் தன் நாட்களை எண்ணிக்கொண்டு இருந்த அவருக்கு அது தெரியாத என்ன.  அன்று முழுவதும் அவருடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும் என்று நம்மால் யூகிக்க  முடியாது . ஆனால் அதை விட கொடுமை உலகில் இல்லை என்று புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு வருடமும் வாழ்கையை பற்றிய ஒரு புரிதலை மேலும் மேலும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அது நமக்கு மிகப்பெரிய பெரிய பாடத்தை கற்றுக்ககிறது . இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இதுவரை என்ன சாதித்து விட்டாய் என்று உள்ளே மிஸ்டர் மனசாட்சி கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்! நேற்றைய எனது பிறந்த நாளும் எனக்கு ஒரு வித பயம் கலந்த வேகத்தை ஏற்படுத்தியது. பயம் என்பது இன்னும் எத்தனை பிறந்த நாள் இருக்கிறது என்பதல்ல. கடைசி பிறந்தாளிற்கு முன்  பிறந்த பயனை அடையும் நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதே அது! அந்த ஒரு நிம்மதி தான் சிறு வயதில் கலர் சட்டை அணிந்து சாக்லேட் பாக்கட் வாங்கி பள்ளிக்கு சென்ற அந்த ஹீரோவை நமக்குள் மீண்டும் அழைத்து வரும்!

சென்ற பிறந்த நாளின் போது கண்களை தானமாக பதிவு செய்தேன். இம்முறை உடல் தானம் செய்ய பதிவு செய்துஇருக்கிறேன். இறந்த பின்னும் உயிர்வாழ, பிறருக்கு பயனுற இதை விட வேறு ஏதேனும் வழி உன்டா என்ன? நீங்களும் உங்கள் அடுத்த பிறந்த நாளன்று இதை செய்திட எண்ணி பாருங்களேன்! பிரபலங்களை போல் பிறந்த நாளன்று இதை செய்வது நிச்சயம் மற்றவர்களுக்கு உறுத்தலை வர வைக்க வாய்பிருக்கிறது. ஆனால் சரா சரி மனிதர்களாகிய நாம் நம் அன்றாட வாழ்க்கையில் இதற்காக நேரம் ஒதுக்குவது நிச்சயம் சற்று கடினம் தான். பிறந்த நாளன்று இதை செய்தே தீர வேண்டும் என்று எண்ணுவது நமக்குள் உந்துதலை ஏற்படுத்தும். அதை செய்து முடித்த அந்த பிறந்தநாள் மிகவும் திருப்திகரமாக இருக்கும்.  கண் தானம் பதிவு செய்வது போல் உடல் தானம் செய்வது அவ்வளவு சுலபமான வழி முறை கொண்டிருக்கவில்லை.  அதை பற்றி விரிவாக விரைவில் ஒரு பதிவிடுவதாக உள்ளேன்.

இந்த பிறந்த நாளின் போது முகப்புத்தகத்தில், குறுஞ்செய்திகளில், சாட்டிங்கில், அலைபேசியில், மின்னஞ்சலில் என்று வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்கே தெரியாமால் கேக் வாங்கி வைத்து மாலை அதை வெட்டி கொண்டாட வைத்த என் தம்பி. அதற்கும் மேலாக காலையில் நான் கண் விழிக்கும் நேரம் உணர்ந்து, அதற்கு முன்னமே என் அருகே வந்து அமர்ந்து, நான் கண் திறக்கும் வரை காத்திருந்து, கண் திறந்ததும் முகம் மலர்ந்து கைபிடித்து வாழ்த்திய என் தாயின் அன்பிற்கு எதுவும் நிகரில்லை இவ்வுலகில்.

என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே…

எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே….

நான் அடிக்கடி கேட்கும் மயக்கமென்ன திரைப்படத்தின் பாடல் நேற்று முழுவதும் காதில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது!