போட்டோ கிரெடிட் – பாண்டியன்
முந்தைய பாகங்கள்:
ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று (கிளிக்க)
ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு (கீழே)
மொபைலில் காலை நான்கு முப்பதிற்கு அலாரம் அடிக்கவும், ரயில் சரியாக அதே நேரத்தில் எக்மோர் ரயில் நிலையத்தை அடைந்து இருந்தது எனக்கு சிறிது ஆச்சர்யம்தான். கீழே இறங்கிய அந்த தூக்க கலக்கத்திலும் போர் ஸ்கொயரில் செக் இன் செய்ய மறக்கவில்லை. வெளியே வந்ததும் வராததுமாக காக்கிச்சட்டை மனிதர்கள் என்னுடைய லக்கேஜை பிடுங்குவதிலேயே ஆர்வம் காட்டினர். “புரசைவாக்கம் சங்கம் தியேட்டர் போகணும் எவ்வளோ” என்றேன். நூறு ரூபாய்க்கு குறைவாக யாரும் வருவதாக தெரியவில்லை. வெறும் ஐந்து நிமிட பயணத்தில் நூறு ரூபாய் சென்னையில் சம்பாதிக்க முடியுமென்றால் எங்க ஊர் பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் கூட சென்னையில் எப்போதோ ஆட்டோ வாங்கி விட்டு இருப்பார்கள்.
ஆட்டோ இப்போது வந்து சேர்த்த இடம் புரசைவாக்கத்தின் பிளவர்ஸ் ரோடு.. விடியாத அந்த காலைப்பொழுதில் நண்பர் முன்பதிவு செய்து கொடுத்திருந்த அந்த ஹோட்டலை சென்றடைந்த போது இன்னொரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. முன்னொரு காலத்தில் நான் சென்னையில் அதிகாமாக சுற்றி திரிந்த பகுதியின் ஒரு தெரு தான் அது. ஆனால் இங்கே இப்படி ஒரு ஹோட்டல் இருந்திருக்கிறது என்று எனக்கு அது நாள் வரை தெரிந்திருக்கவில்லை. அமைதியான, அழகான அதற்கும் மேலே மிகவும் சுத்தமான அந்த அறைக்குள் நுழைத்தும், குளிசாதனப்பெட்டியை முடுக்கி விட்டு மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்.
காலை ஒன்பது மணிக்கு நானும் இரு நண்பர்களும் டைடல் பார்க்கை சென்றடைந்த போது மீண்டும் போர் ஸ்கொயரில் ஒரு செக் இன். அங்கு தான் இந்தியா சர்ச் சம்மிட் 2010 நடை பெற இருந்தது. நாங்கள் சென்றதன் நோக்கமே அதில் கலந்துக்கொள்ளதான். சர்ச் சம்மிட் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து இன்டர்நெட் மார்கெட்டிங் நிபுணர்களும் ஒன்று கூடி கலந்துரையாடும் இந்தியாவின் ஒரே கருத்தரங்கம். அதாவது இது யாருக்கு பயன்படுமென்றால் இணையத்தில் வர்த்தகம் புரிபவர்களுக்கும், தங்களுடைய பிராண்டை இன்டர்நெட்டில் வலுப்படுத்த நினைப்பவர்களுக்கும், சோசியல் நெட்வொர்க்கிங் இணைய தளங்களில், கூகிள் போன்ற தேடுபொறிகளில் எப்படி வர்தகங்களுக்காக கையாளுவது, இணையத்தில் வாடிக்கையாளர்களை பெறுவது போன்ற தேவை இருப்பவர்களுக்கும், அதில் ஏற்கனவே அனுபவமுள்ள நிபுணர்களுக்கும், புதிதாக இத்துறையில் நுழைய விரும்புவர்களுக்குமாகும்.
டைடல் பார்க்கின் முதல் தளத்திலேயே அமைந்து இருந்த குளிரூட்டப்பட்ட ஆடிட்டோரியமும், இலவச வை-பை இன்டர்நெட்டும் இந்த கருத்தரங்கிற்காக ஸ்பான்சர் செய்திருந்தது சிப்பி (SIFY). சுமார் நூற்றி சொச்சம் நபர்களின் வருகையால் அரங்கம் நிறைந்து போயிருந்தது. பல வடஇந்திய வாசனைகளும் ஆங்காங்கே அரங்கத்தில் கலந்திருந்தது. வந்திருந்த அனைவரும் அமர்ந்து இருந்த இடத்திலேயே மைக் வழங்கப்பட்டு சுயஅறிமுகம் செய்துகொள்ளப்பட்டது. அனைவரும் அவர்களது ட்விட்டர் அக்கவுன்ட்டை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது தான் இந்த கருத்தரங்கின் மிக முக்கியமாக ஒன்று. இக்கருத்தரங்கு நடைபெறும் இரு நாட்களும் அனைவரும் நேரடி ட்வீட் பதிப்பாளர்களாக செயல்படவேண்டும் என்பதே நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களின் வேண்டுகோளாக வைக்கப்பட்டது.
அது சரி நேரடி ட்வீட் பதிவாளர்கள் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளால் நடந்த துப்பாக்கி சூடு ஞாபகம் இருக்கிறதா? அங்கு நடந்த செய்திகளை தொலைக்காட்சி, வானொலியை விடவும் மக்களிடம் நேரிடையாக உடனுக்குடன் கொண்டு சேர்த்த ஊடகமாக செயல்பட்டது இந்த ட்விட்டர் தான். அது போல் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ள இந்த கருத்தரங்கின் நிகழ்வுகளை நேரிடையாக கொண்டு செல்லவே ட்விட்டர் இங்கும் பயன்படுத்தப்பட்டது. அதற்காக பயன்படுத்தப்பட்ட ஹாஸ் டாக் #iss2010
பேச்சாளர்கள் உரையாற்றிக்கொண்டு இருக்க அங்கே இருந்த அனைவரும் அதை நேரிடையாக தாங்கள் கொண்டு வந்திருந்த மடி கணினி மூலம் ட்விட்டரில் பதிவித்துக்கொண்டு இருந்தனர். நான் முதல் நாள் என்னுடைய மடி கணினியை எடுத்துசெல்லவில்லை இருப்பினும் என்னுடைய ப்ளாக்பெர்ரியில் வந்து விழுந்தது ஒரு ட்வீட்டு. “ஹாய், நிறைய பிரவீன்கள் இந்த அரங்கில் இருக்கிறார்கள் போலும்., நானும் பிரவீன் தான். தேநீர் இடைவேளையின் போது சந்திப்போம்” என்று இருந்தது. அந்த அளவுக்கு அந்த அரங்கில் வெவ்வேறு மூலையில் இருந்தவர்களையும் நேரடி தொடர்பில் வைத்திருந்தது இந்த ட்விட்டர். உலகின் வெவ்வேறு மூலையில் இருப்பவர்களையே தொடர்பில் வைத்து இருக்கும் போது இது என்ன…
அது சரி விளையாட்டு குணமுள்ளவர்கள் இங்கும் இல்லாமல் போய் விடுவார்களா? அவர்கள் கையில் ட்விட்டர் அங்கே என்ன பாடு பட்டது தெரியுமா? அந்த அரங்கில் யாரோ தெனாலி ராமன் என்கிற பெயரில் பொய்யான ட்விட்டர் கணக்கை தொடங்கி ஒரு நகைச்சுவை தர்பாரே நடத்திவிட்டார். அங்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் டைமிங் காமடியும், நக்கலும் அடித்து கலகலப்பை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தார் அவர். நல்ல வேலை கைகலப்பு அளவுக்கு போகவில்லை! கடைசி வரை அரங்கில் இருந்த மற்ற ட்விட்டர் பயனாளர்கள் அவரை பார்க்கும் ஆர்வத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுகோள் ட்வீட் விடுக்க, அவரோ சட்டென்று காணமால் போய்விட்டார். கடைசி வரை அவர் யாரென அவரை தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அது கூட பரவாயில்லை, மதிய உணவு உண்ட களைப்பில் ஒரு நபர் கருத்தரங்கு நடந்துக்கொண்டு இருக்கும்போதே கண் அயர்ந்து விட, அருகில் இருந்த மற்றொரு நபர் தன் கேமரா போனில் கிளிக்கி ட்விட்டரில் போட, ஐந்தே நிமிடத்தில் அனைவாராலும் மறு ட்வீட் செய்யப்பட்டு அவர் பேமஸ் ஆகி விட்டார். அதற்கடுத்து நடந்த தேநீர் இடைவேளையின் போது அனைவரும் இவரை “அவரா இவர்” என்ற தோணியில் நோட்டம் விட, இவரும் என்னவென்று புரியாமல் அம்மாஞ்சியாக முழித்துக்கொண்டு இருந்தார். (கிளிக்க)
நேற்று (08-09-2010) ஜெயா பிளஸ் சானலில் கூட இந்த நிகழ்ச்சியின் பதிவை தொகுத்து வெளியிட்டனர். இந்த கருத்தரங்கின் முக்கியத்துவத்தையும், அதில் நடந்த பயனுள்ள சம்பவங்களையும் இங்கே தமிழில் போட்டால் அது சென்றடையும் மக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இது வெறும் பயனக்கட்டுரையாக இருக்கட்டும் என எண்ணுகிறேன். அதனால் அதை இன்னும் டீடெயில்டாக என்னுடைய ஆங்கில வலைப்பூவில் இடுவாதாக உள்ளேன். இருந்தாலும் அந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வை இங்கே நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரே விஷயம் என்னவென்றால் அது “ரிமோட் வீடியோ கான்பரன்சிங்”.
ஆம் இரண்டாம் நாள் காலையில் கலிபோர்னியாவிலிருந்து ஒரு பெண்மணி வீடியோ கான்பரன்சிங் மூலம் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இங்கே அனைவரும் பெரிய ப்ரொஜெக்டர் திரையில் அவரை பார்த்தவாறே ஒவ்வொருவராய் கேள்விகள் கேட்க, அவர் அங்கே அறையிலிருந்துக்கொண்டு தன் கணினியின் மூலம் அரங்கில் இருப்பவர்களை பார்த்தவாறே கலந்துரையாடினார். “வீடியோ கான்பரன்சிங்” என்பது என்னை போன்ற இணையத்தில் பிழைப்பை நடந்துவர்களுக்கு பெரிதாக தெரியாவிடிலும், இங்கே அதை பயன்படுத்தி இருந்த விதம் பாராட்டத்தக்கது. இந்தியாவிற்கே வராமல் தன்னுடைய கருத்துக்களை அந்த பெண்மணி பகிர்ந்து கொள்ள இந்த டெக்னாலஜி வாய்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் மதிய உணவின் போது அருகில் இரண்டு வட இந்தியர்கள் “Sify has sponsored the auditorium and free wi-fi internet right? so I dont think 1000 bucks for each ticket is going towards the expenses on organising this event” என்று பேசிக்கொண்டது காதில் வந்து விழுந்தது. குறைகள் பல இருந்தாலும் அனைத்து இன்டர்நெட் மார்க்கட்டிங் ஸ்பெஷலிஸ்டுகளையும் ஒன்று திரட்டிய முயற்சிக்காக பாராட்டலாம் என எங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.
அதன் பிறகு இரண்டாம் நாள் நிறைய முக்கிய பேச்சாளர்கள் மிஸ்ஸிங் போல தெரிந்தது. அதிலிருந்து கொஞ்சம் மந்தமாகத்தான் சென்றது கருத்தரங்கம். அதன் பிறகு பேசிய பேச்சார்கள் கவனத்தை ஈர்க்க தவறிக்கொண்டு இருந்தனர். ட்விட்டரிலும் அது எதிரொலித்தது. சூடான விவாதங்கள் ட்வீட்டாக அரங்கேரிக்கொண்டிருந்த நேரம் அது. மீதமிருந்த ட்விட்டர் பயன்படுத்தாதோர் அநேகமாக குளிரூட்டப்பட்ட அறையின் சொகுசால் மெல்ல மெல்ல கண்ணயர்ந்துக்கொண்டு இருந்தனர். நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தை நெருங்க பொறுமையிழந்த நண்பர் மெல்லமாய் எங்களிடம் “ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்… போலாமா” என்றார். சூழ்நிலையை புரிந்தவர்களாய் மடிகணினியை மடித்துக்கொண்டு டைடல் பார்க்கிலிருந்து விடைபெற்றோம் மூவரும். (அது என்ன ““ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்” என்று கேள்வி உங்களுக்கு எழும்பினால் இந்த வீடியோவை பார்க்கவும் http://youtu.be/sBidvDcweEk )
இப்படியே இருநாள்களும் கருந்தரங்கிலேயே முடிந்துபோனதா என்றால் கண்டிப்பாக இல்லை. அந்த இரண்டு இரண்டு நாட்களையும் நாங்கள் மறக்க முடியாத நாட்களாக்கிஇருந்தோம். முதல் நாள் இரவு எக்ஸ்பிரஸ் அவன்யூவில் புதிதாக ஆரம்பம் செய்து இருந்த சத்யம் எஸ்கேப் தியேட்டரில் ஒரு வாரம் முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து சென்றோம். இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மால் அது. எவ்வளவு பெருசு என்றால் கீழே பேஸ் மென்ட் கார்பார்கிங்கில் காரை நிறுத்துமிடத்தை மறந்து போனால் அதை கண்டு பிடிப்பதற்கே ஒரு நாள் வேனுமுங்கோ… அப்போ மால் எவ்வளவு பெருசு என்று கற்பனை செய்து பாருங்கள்.
மேலே மேலே எஸ்கலேட்டரில் போய் கொண்டே இருக்கிறோம். முழுதாக சுத்திப்பார்க்க இது சரியான நாளில்லை. ஏற்கனவே சரியாக தூங்காமல் பயண அலைச்சலால் உடல் சோர்வு. திரைப்படம் தொடங்க நேரம் வேறு சிறிது தான் இருந்தது. அங்குள்ள கே.ஏப்.சீ யில் சீஸ் பர்கரும், சிக்கனையும் அவசரம் அவசரமாக மென்று முழுங்கி பெப்சி குடித்து தியேட்டருக்குள் நுழைந்தோம்.
அந்த திரையரங்கில் கவுண்டரே கிடையாது. (ரெட்டி இருக்காரானுலாம் கேட்கக்கூடாது!). எல்லாரும் முழுக்க முழுக்க ஆன்லைனில் அவர்களது இணையதளத்தின் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். வேண்டுமானால் அவர்கள் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி தொடு உணர் மிஷினில் தங்களுடய கடன் அட்டையை தேய்த்து டிக்கட் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுடைய டார்கெட் முழுவதுமாக மேல்தட்டு மக்களையே குறிவைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது. அப்போ உள்ளே திரையரங்கம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஸ்டார் ஹோட்டலையே மிஞ்சிவிடும். அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் திரையரங்கில் சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை இங்கயே கிடைக்கச்செய்கிறார்கள் இவர்கள்.
உதரணமாக மெல்லிய ஒளி பரவிய ரெஸ்ட் ரூமில் ஒவ்வொரு யூரினல்சின் மேலேயும் ஒரு சின்ன ஸ்க்ரீன் வைக்கப்பட்டு திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் படங்களை காண்பித்துக்கொண்டு இருந்தனர். கூழாங்கற்களால் தரை அலங்கரிக்கப்பட்ட அந்த அறையில் கையை அலம்பிவிட்டு இந்த பக்கம் உள்ள ட்ரையரில் நீட்டினால் மென்சூடான காற்று வீசப்பட்டு மூன்று நொடிகளில் கையை உலர்த்தி விடுகிறது. இது எல்லாம் பாமரனுக்கான சாத்தியமேயில்லை என்று தோன்றுவதால் தானோ என்னவோ அவனால் சாத்தியமில்லாத இணையத்திலும், கடன் அட்டையின் மூலம் மட்டுமே டிக்கெட் வழங்குகிறார்கள் என்பது தெளிவாகிறது.
அந்த சிறிய அரங்கில், சிறிய ஸ்க்ரீனில் படம் பார்த்தது வீட்டில் ஒரு ஹோம் தியேட்டர் அமைப்பை ஏற்படுத்தி பார்த்த ஒரு அனுபவம். திரையரங்கில் இருக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை. ஆபரேட்டர் ரூமே கிடையாது. டிஜிட்டல் ஆர்.டீ.எக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் அந்த ஆபரேட்டர் ரூம் சிறிய பெட்டியில் அடைபட்டு அரங்கில் வெளியே மாட்டப்பட்டு இருந்தது. ஒரு பெரிய எல்.சீ.டீ ஸ்க்ரீனில் பார்ப்பது போன்ற மிகத்துல்லியமான சினிமா. ஆனால் என்ன செய்வது, ஏற்கனவே சொன்னது போல் மிகவும் பயணக்களைப்பில் நானும் மற்றோரும் நண்பரும் அப்போது அமர்ந்திருந்தோம். அந்த தூக்கக்கலக்கத்தில் கனவில் கூட படம் பார்க்க முடியாத போது இப்படி ஒரு கனவு படத்தை எப்படி பார்ப்பது என்று, படம் ஆரமித்து சில நொடிகளிலேயே சீட்டில் சரிந்து விட்ட என் வலப்பக்க நண்பரை, இடைவேளையின் போது தட்டி எழுப்பி கிளிக்கிய படமே இது.
அது சரி என்ன திரைப்படம் என்கிறீர்களா?…… ம்ம்ம்ம்….அ….அது..… ஆங்! ரைட்.. “இன்செப்சன்”.
இரண்டாம் நாள் மாலை திருவான்மியூர் கடற்கரையில் மூவரும் உலாவிக்கொண்டு இருக்கையில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து கடற்கரை ஒரமாக தாழ்வாக வந்தது. சரி ஞாற்றுக்கிழமை கடற்ப்படை ரோந்துக்கு வருவது சகஜமென்று நண்பர் கூறினார். ஆனால் அவர்கள் திருவான்மியூர் கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் கடற்கரைவரை தொடர்ந்து வட்டமடித்துக்கொண்டே இருந்ததும் ஏதோ விபரீதம் என்பது போலிருந்தது. அது என்ன என்று கடைசிவரை தெரியவில்லை. இருட்டும் வரை தென் சென்னையில் இருந்து வட சென்னை வரை பையா படத்தில் வருவது போல் பயணித்து களைத்து விட்டு. ஊருக்கு ஒதுக்கு புறம் என்பது போல், சிட்டியை விட்டு சிறிது ஒதுக்குப்புறமான தமிழ்நாடு ஹோட்டலில் தான் இரவு உணவு முடித்தோம். ஏனோ தெரியவில்லை, அந்த இடம் எனக்கும் நண்பருக்கும் மிகவும் பிடித்திருந்தது. சென்னையில் அமைதியான சூழ்நிலையில் இதை விட வேறு ஏதேனும் இடம் உண்டா என்று தெரியவில்லை.
இரவு சரியாக பத்து முப்பது மணிக்கு நண்பர் எக்மோரில் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு “ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்…” என்று நகைச்சுவையாக கூறி அனைவரும் விடை பெற்ற தருணம் வரை அனைத்தும் நினைவில் நிற்கக்கூடிய தருனங்களே. ரயில் சென்னை விட்டு விலகிச்சென்று கொண்டிருக்கையில் யோசித்துப்பார்கிறேன். ஏனோ தெரியவில்லை, நான் முதன்முறை சென்னை சென்ற போதிலிருந்து ஒவ்வொரு முறையும் சென்று வந்தபோதும் பல நினைவுகளை சுமந்து கொண்டே திரும்பியிருக்கிறேன். இம்முறையும் தான்… ஆனால் இது மிகவும் இனியமையான பயணமாக அமைந்தது இருந்தது.
ஆனால் ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்…. “விருந்தினராக செல்லும் வரையில் தான் சென்னை சொர்க்க பூமி”. விடிந்த பிறகு சேலத்திற்கு ரயிலில் வந்து இருங்கிய மறுகனமே நான் ட்வீட்டியது இதுதான் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா”.
ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று (கிளிக்க)
ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க். சென்னை பயணம் பாகம் இரண்டு (கீழே)