சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள கலையரங்கம் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி “கத்தி” திரைப்படம் சென்றேன். “ ‘ரமணா’ மாதிரி பவர்புல்லா ஒரு படம் கூட அதன் பிறகு நீங்க பண்ணலையேனு கேட்டவங்க யாரும் ‘கத்தி’ பாத்துட்டு அப்படி சொல்லமாட்டங்க” என்ற முருகதாஸின் வார்த்தைக்காக அந்த ரிஸ்க் எடுத்தேன். ரமணா பக்கத்தில் கூட இந்த படம் நிற்கப்போவதில்லை என்று படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தெரிந்தது. இது முதல் பாதி டிபிகல் விஜய் படம். இரண்டாம் பாதி முருகதாஸ் + விஜய் படம்.
கொல்கத்தா சிறையில் இருந்து தப்பிக்கும் கத்தி என்கிற கதிரேசன் முதல் காட்சியிலேயே தான் ஒரு இன்டலெக்ஸுவல் கிரிமினல் என்று நம்மில் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறார். கத்தி யார்? எதுக்கு சிறைக்கு செல்கிறான்? அங்கிருந்து ஏன் தப்பிக்கிறான்? என்று துவக்கதிலேயே கதை சூடு பிடிக்கிறதே என்று கொஞ்சம் நிமிர்த்து உட்கார்ந்தால் அடுத்த காட்சியிலேயே அது புஸ்ஸ்…
சதீசுடன் சேர்த்து இந்தியாவை விட்டு ஓடி தப்பிப்பதற்கு பாங்காக் கிளம்புவதும், விமான நிலையத்தில் சமந்தாவை பார்த்ததும் பாங்காக் டிக்கெட்டை கிழித்து போட்டுவிட்டு அவரை உருகி காதல் பண்ண துவங்குவதும், உடனே பாட்டு நடனம் என்று காட்சிகள் மாறும்போது நம் காதில் பூ சுற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று தெளிவாக புரிந்தது. ரமணாவின் ஆரம்பம் முதலே ஒரு டென்ஷன் மெயின்டென் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இங்கு இன்னொரு விஜய், ஜீவானந்தமாக திரையில் அறிமுகமாகியும் கொஞ்சமும் சுவாரசியம் இல்லை. கத்தி ஜீவானந்தமாக மாறி அதன் பிறகு வந்த காட்சிகள் கூட எதுவுமே கதைக்குள் நுழையவில்லை.
ஏனோ இப்போது “சுறா” படத்தை பார்த்த பாதிப்பு வேறு எனக்குள் அப்போ அப்போ எட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தது. ரமணா மாதிரின்னு முருகதாஸ் சொன்னாரே. துப்பாக்கி மாதிரி கூட இல்லையே என்று யோசிக்கும் போது, ஒரு டாகுமெண்டரி மூலம் பிளாஸ் பேக் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தை பெற, ஒரு நல்ல விஷயத்திற்கு, கூட்டமாக விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். யாரும் போயிடாதீங்க. படத்தில் கதை இருக்கிறது என்ற ஒரு சிக்னல் அது. ஆனால் அந்த தற்கொலை பின்னணி நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ரமணாவின் பிளாஸ் பேக் இன்னமும் மறக்க முடியுமா? ரமணா விஸ்வரூபம் எடுக்க, அந்த காதபாத்திரத்தின் மேல் மதிப்பு வர அது மிகவும் உதவியிருந்தது.
முதல் பாதி முடிந்ததும், இண்டர்வல் பிளாக்கில் “I am waiting” என்று துப்பாக்கி படத்தில் வருவது போல விஜய் சொன்னதும் வெறுப்பின் உச்சத்தில் “I am Leaving” என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பலாம் என்று கூட தோன்றியது. பட் “ரமணா மாதிரி”னு முருகதாஸ் சொன்னாரே? வடகுப்பட்டி ராமசாமியிடம் பணம் வாங்கியே தீருவேன் என்று கவுண்டமணி அனைத்து இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு சைக்கிள் தள்ளிக்கொண்டு சென்றது போல் நானும் அந்த “ரமணா மாதிரி”யை கண்டே ஆகவேண்டும் என்று பொறுத்துக்கொண்டு சீட்டில் உட்கார்ந்து இருந்தேன்.
ஸ்க்ரீனில் பிரேமை அழகாக காட்ட ப்ராபர்ட்டி பயன்படுவது போல சமந்தா பயன்படுத்தப்பட்டு இருந்தார். இயக்குனர் “நீ தானே என் பொன் வசந்தம்” படத்தை பார்த்து இருந்தால் சமந்தாவை இப்படி வீணடித்திருக்கமாட்டார் . ஒருவேளை அஞ்சான் போஸ்டர் பார்த்துவிட்டு புக் செய்துவிட்டார் போல. சதீஷையும் இந்த படத்தில் நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் அவரும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. இரண்டாம் பாதியில் மீண்டும் வழக்கம் போல நடக்கும் நாடகத்தன்மையான காட்சிகளுக்கு பிறகு ப்ரீ க்ளைமாக்சில் வந்தது முருகதாஸ் சொன்ன அந்த ”ரமணா மாதிரி”.
கார்பரேட் கம்பனிகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நம் நீர்நிலைகளை பாதுகாக்க விஜய் பேசும் அந்த வசனங்கள் இருக்கிறதே. நமது ரத்தம் சூடேறி, நாடி நரம்பு புடைக்க, கண்கள் சிவந்து ஒரு உணர்ச்சிக்குவியலாய் நம்மை மாற்றும் தருணம் அவை. ரமணாவில் விஜயகாந்த் கூறும் புள்ளி விவரங்களை போல் இதில் விஜய் பேசி கைதட்டல்களையும், விசில்களையும் அள்ளுகிறார். கார்பரேட் கம்பனிகள் எப்படி நம் நாட்டின் வளத்தை சுரண்டுகிறது, அதனால் விவசாயிகளும், ஏழை மக்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று மிகத்துணிச்சலாய் பதிவு செய்திருக்கிறார் முருகதாஸ்.
விஜய் மல்லையாவின் கடன் பாக்கிகளும், 2 ஜி அலைக்கற்றை மோசடிகள் போன்றவைகள் அனைவரும் ஏற்கனவே அறிந்திருந்தாலும், விஜய் பேசுவதை கேட்க்கும் போது அவர் ரசிகர்களின் உடல் சிலிர்ப்பதை யாராலும் தவிர்க்க முடியாதுதான். இப்படி ஒரு கான்சப்ட்டை படமாக எடுக்க நினைத்த முருகதாஸ் அவர்களுக்கு ஹாட்ஸ் ஆப். அருமையான வசனம். யோசிக்கவைக்கும் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். பட் ரமணா மாதிரின்னு சொன்னாரே. இருப்பினும் அந்த வசனக்காட்சியோடு படம் முடிந்திருந்தால் ஒரு திருப்தியோடு வெளியே வந்திருக்கலாம் ஆனால் அதன் பிறகு வந்த க்ளைமாக்ஸ் தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
கடைசி காட்சியில் “யார் பெற்ற மகனோ” என்று அந்த கத்தி கதாபத்திரம் விடைபெருவதைக்கண்டு துளியும் பாதிப்பு இல்லை. ரமணாவில் அந்த க்ளைமாக்ஸ் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது? எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும் ரசிக்க வைத்தாலும், கடைசி சில நிமிடங்களும், க்ளைமாக்ஸும் பிடிக்கவில்லை என்றால் திருப்தி இல்லாத ஒரு மனநிலையிலேயே திரையரங்கை விட்டு வெளியேறும்படி அது ஏற்படுத்தும்.(உதாரணம்: புதுப்பேட்டை). அதே போல பாதிக்கக்கூடிய அல்லது மிகவும் ரசிக்கும்படியான கடைசி நிமிடங்களும், க்ளைமாக்ஸும் படத்தின் முந்தைய குறைகளை யோசிக்கவிடாமல் பரவசநிலையிலேயே நம்மை வீட்டிற்கு அனுப்பிவைக்கும். (உதாரணம்: சுசீந்தரனின் “ஆதலால் காதல் செய்வீர்”). ஆனால் இந்த படம் ரெண்டாவது கேட்டகிரியில் கூட வரவில்லை.
ரமணா கேரக்டரில் ஒரு நம்பகத்தன்மை இருந்தது. அதிலும் சினிமாத்தனம் இருப்பினும், லாஜிக் குறைகள் இருப்பினும் அதை யோசிக்கவிடாமல் அந்த நம்பகத்தன்மை காப்பற்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியம் குறையாமல் அதன் திரைக்கதை பார்த்துகொண்டது. ஆனால் கத்தியில் இரண்டு சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகளும், சமூகத்துக்கான ஒரு நல்ல கருத்தும் கிடைத்ததால் அந்த எக்சைட்மென்டில் விஜயை மட்டும் நம்பி திரைக்கதையை கோட்டைவிட்டுவிட்டார்.
முருகதாசிடம் எனக்கு மிகவும் பிடித்ததே அவருடைய கூர்மையான வசனங்களும், மேக்கிங் ஸ்டைலும். திரைக்கதையில் சொதப்பி இருந்தாலும் இந்த திரைப்படத்தில் அவருடைய வசனமும், மேக்கிங்கும் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது. துப்பாக்கியில் ராணுவ வீரர்களின் துயரத்தை மிகவும் நுணுக்கமாக ஓரிடத்தில் வசனத்தில் சொன்ன அவர் இதில் விவசாயிகளின் துயரத்தை அதே பாணியின் இன்னும் நுணுக்காமாய் சொல்லி இருக்கிறார். மிகவும் பிசியாக உள்ள சென்னை விமானநிலையத்தில் அனுமதி வாங்கி ஒரு முழு பாடலும், சில காட்சிகளும் படமாக்கிஇருப்பது ப்ராக்டிகலாக சாதாரணவிஷயம் இல்லை. “ஆத்தி” பாடல் மேக்கிங்கும் அதற்க்கு சான்றாகும்.
ஆனால் தன்னுடைய அரசியல் கருத்துகளை முன்வைக்க விஜயகாந்தை ரமணாவில் பயன்படுத்திக்கொண்ட முருகதாஸ், கத்தியில் திரைப்படத்தில் விஜயின் அரசியல் ஆசைக்கு தானே பயன்பட்டு போனார். அது தான் மிகபெரிய வித்தயாசத்தை இதில் ஏற்படுத்தி இருக்கிறது. . இவ்வளவு ஆழமான ஒரு விஷயத்தை. அதுவும் விவசாயிளுக்கு ஆதரவான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை விஜய் ரசிகர்களுக்காக சினிமாத்தனம் செய்ததால் ஒரு நல்ல படைப்பை கொடுத்திருக்க வேண்டிய வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார். இதனால் இந்த “கத்தி” இன்னொரு “ரமணா”வாக வராமல் போய்விட்டது.
“ரமணா மாதிரி”யாக வேண்டுமானால் இது இருந்து விட்டு போகட்டும். ஆனால் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கைக்கு ரமணா செய்ததை நிச்சயம் விஜய்க்கு இந்த கத்தி செய்யப்போவதில்லை.