பிள்ளைக்கு பெயர் சூட்டுகிறோம்

naming

கருவை பேணிப்பாதுகாத்து ஈன்றெடுப்பதைவிட சிரமமானது ஒன்று உண்டென்றால்,
அது அக்குழந்தைக்கு பெயரிடுவதுதான் என்பேன் நான்.
இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று ஜோசியம் சொல்கிறது.
அதே எழுத்தில் பிடித்த பெயர் எதுவும் அகப்படவில்லை.
“எண்கணிதன் அருமையாக பெயர் வைத்து தருவான்” என்றார் மாமா.
“என் பிள்ளைக்கு அவன் யார் பெயர் வைக்க?” என்றேன் நான்.
இணையம் எங்கு தேடினாலும் மனதிற்கு உகந்த பெயரில்லை.
அப்படியே கிட்டினாலும் அது உச்சரிக்க இனிமையில்லை.

சிவபக்தனான காரணத்தினால் ஆருத்ரா என்று பெயர் வைக்க ஆசை.
ஆக்ரோஷமாக இருக்கிறதென்று அது தட்டிக்கழிக்கப்பட்டது.
‘பிரதோசத்தன்று பிறந்ததால் ப்ரதோஷினி?”… “நோ”.
“ஆராதனா?”… ” அறவே வேண்டாம்”
தூய தமிழிப்பெயர்?…. “பழைய பேரை ஏன்பா எனக்கு வச்ச?” என்று எதிர்காலத்தில் குழந்தை கேட்க்குமாமே!

சரி. முன்னாளின் பெயர்வைக்கலாம் என்றால், பட்டியல் பெரிதாக இருக்கிறது. ஒரே குழப்பம்.
இந்நாளிடம் ஆலோசனை கேட்டால், “கஷ்டப்பட்டு பெத்தது நான், அவளுங்க பெயரா?” என்று அடிக்கவருகிறார்.
அப்புறம் என்ன பெயர்தான் வைப்பது? குழப்பம் தீர்ந்தபாடில்லை.
“மாதங்கள் ஓடுகிறது, இன்னும் பெயர் வைக்கவில்லையா?” என்று ஆச்சர்யமாய் உறவினர்கள்.
“பள்ளி செல்வதற்குள் பெயர் வைத்து விடுவாயா?” என்று நக்கலாய் நண்பர்கள்.
என்ன செய்வதென்று யோசித்து யோசித்து,
ஒருவழியாய் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

மனதிற்கு பிடித்த பெயர் அது.
உச்சரிக்க இனிமையான பெயர் அது.
தூய தமிழ்ப்பெயர் அது.
கருவாய் அவள் உருவானபோதே,
என் மனதில் உருவான பெயர் அது.
எவ்வளவு சிந்தித்தும்; எவ்வளவு தேடியும்;
அதைவிட ஆகச்சிறந்த பெயரை என்னால் சத்தியமாய் கண்டுபிடிக்க முடியவில்லை.

என்னுடைய செல்லகுட்டி,
என்னுடய அம்முக்குட்டி,
என்னுடய புஜ்ஜிக்குட்டி,
என்னுடைய தங்கக்குட்டி,
இனி அனைவராலும் “யாழினி” என்று அழைக்கப்படுவாள்!