“ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” நானும் – விமர்சனம்

Onayum-Aatukuttiyum-movie-review

அதென்னவோ தெரியவில்லை, இது தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சியுகமோ என்று கூட தோன்றுகிறது. வரிசையாய் நல்ல படங்கள் வந்துக்கொண்டு இருக்கிறது நம் தமிழ் சினிமாவில். எதை முதலில் பார்ப்பது, எதை விடுவது எனக்கூட சில சமயம் குழப்பம் ஏற்படுகிறது. நீண்ட நாள் கழித்து சினிமாவை பற்றி எழுதுகிறேன். விமர்சனமே எழுத வேண்டாம் என்று தான் இது நாள் வரை இருந்தேன். ஆனால் சமீபத்தில் பார்த்த “மூடர் கூடம்” படத்தை பற்றி  எழுதவேண்டும் என மிகப்பெரிய உந்துதல் இருந்தும் இந்த “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” திரைப்படத்திற்கு எழுதியே தீரவேண்டும் என்று முடிவுசெய்தேன். ஆனாலும் இது விமர்சனம் அல்ல. இங்கு கதையை பற்றி நான் சொல்லப்போவதும் இல்லை.

ஆரம்பத்தில் சேலத்தில் இந்த படம் எங்குமே ரிலீஸ் ஆவதற்கான அறிகுறியே இல்லை. சேலத்தின் முக்கிய திரையரங்கமான ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ்’இல் படு மொக்கை சிரிப்பு படங்கள் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்திற்கு வழிவிடாமல் இன்னும் ஓடிக்கொண்டு இருந்தது. முந்தையநாள் ஒரு பாடாவதி திரையரங்கில் மட்டும் இந்த படம் வெளியாவதாக செய்தி வந்தது.  நண்பர் ஒருவர் அதை ஆன்லைனில் புக் செய்திட முற்பட்டபோது, இரண்டு டிக்கட்டிற்கு வெறும் முப்பது ரூபாய் என அந்த இணையத்தளம் காண்பித்திருக்கிறது. ஆச்சர்யமாகி தியேட்டருக்கு அவர் போன் செய்து கேட்டிருக்கிறார். “படம் வருமோ வராதோ தெரியலை சார். முப்பது ரூபாய் கட்டி நீங்கள் சீட்டை மட்டும் கன்பார்ம் செய்துகொள்ளுங்கள். படம் ஒரு வேலை ரிலீஸ் ஆச்சினா நேரா தியேட்டருக்கு வந்து டிக்கெட்டிற்காண பணம் செலுத்துங்கள்” என குண்டை தூக்கி போட்டார்.

இந்த படத்தை தாயாரிக்க ஆளில்லாமல் சொந்த படம் எடுக்கவேண்டிய சூழ்நிலை. படத்தை வாங்கி நிறைய திரையரங்கில், அட் லிஸ்ட் முதன்மையான திரையரங்கில் ரிலீஸ் செய்யமுடியாத சூழ்நிலை. தமிழ் சினிமாவில் சில முக்கிய படங்களை கொடுத்தும்,  தவிர்க்க முடியாத இயக்குனர் என பெயர் வாங்கியும், முந்தைய திரைப்படத்தில் ஹிட் அடிக்க தவறியதால் மிஸ்கினுக்கே இந்த நிலை.  அது தான் சினிமா! சித்திரம் பேசுதடி என்ற நான் மிகவும் ரசித்த திரைப்படம் கொடுத்த இயக்குனர் என்பதாலோ, அந்த படத்தின் மூலம் எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிமுகப்படுத்தியதாலோ என்னவோ அனைவரும் எதிர்பார்த்த ராஜாராணியை புறம்தள்ளிவிட்டு முதல் நாளே இந்த படத்தை பார்க்க போனேன். அவருக்கு வாழ்வா சாவா போராட்டம் அல்லவா இது?  ஆனால் உண்மையில் மிஸ்கின் இதில் மீண்டும் ஜனித்திருக்கிறார்.

ஓநாய் போன்ற குணம் படைத்த மனிதனும், ஆட்டுகுட்டி போன்று குணம்படைத்த மனிதனும் சேர்த்து பயணிக்கும் கதைபோல இது தோன்றினாலும் இது உண்மையில் ஓநாய்க்குள் ஒளிந்திருக்கும் இருக்கும் ஆட்டுக்குட்டியையும், ஆட்டுக்குட்டிக்குள் இருக்கும் ஒநாயையும் தோலுரித்துக்காட்டும் படம். சொல்லப்போனால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கலந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது எந்த சதவிகிதத்தில் என்பதில் தான் ஒவ்வொருவரின் முகம் மாறுபடுகிறது.

தமிழ் சினிமாவில் இன்றைய இயக்குனர்கள் கம் நடிகர்களில்  நிச்சயம் ஒருவர் கூட மிஸ்கின் அளவிற்கு ஜோலிக்கவில்லை. மனிதர் பின்னி இருக்கிறார். அதுவும் அந்த சுடுகாட்டில் ஒரே ஷாட்டில் கதையை சொல்லும் இடத்தில். வாய்ப்பே இல்லை! ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பு அபரீதமானது. வழக்கமான சினிமாவை விரும்புவர்கள் நிச்சயம் இந்த படத்தை விரும்பப்போவதில்லை என்பதை விரும்பியே தான் தயாரிப்பாளர் மிஸ்கின் இதை தயாரித்து இருக்கிறார்.  படம் முடிந்து வெளிய வரும்போது தான் நான் உணர்ந்தேன்.. அட படத்தில் அந்த மஞ்சள் புடவையும் இல்லை, பாடல்களும் இல்லை. ஹாட்ஸ் ஆப் டு யூ மிஸ்கின். வான்ட் டூ ஹக் யூ…