மூழ்கி மூச்சுமுட்டிய “கடல்” – விமர்சனம்

kadal vimarsanam review

விஸ்வரூபம் வெளியாகாத சூழ்நிலையில் இப்போது இருந்த ஒரே ஆப்சன் “கடல்” திரைப்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு “அரவிந்த் சாமி”, வில்லன் வேடத்தில் “அர்ஜுன்”, அலைகள் ஓய்வதில்லை ஜோடி கார்த்திக், ராதாவின் வாரிசு “கவுதம்” மற்றும் “துளசி” அறிமுகம். எல்லாவற்றிக்கும் மேலாகா “ஏ.ஆர்.ரஹ்மான்” மற்றும் “மணிரத்னம்” காம்பினேசன். கதை, திரைக்கதை, வசனம் என்று மூன்று பொறுப்பையும் கவனித்துக்கொண்ட நட்சத்திர எழுத்தாளாராக கருதப்படும் “ஜெயமோகன்” இந்த படத்திற்கு ஒரு கூடுதல் எதிர்பார்ப்பு. இப்படிப்பட்ட கடல் படத்தில் ஆழம் என்ன?

அன்பை போதிக்கும், தூயஉள்ளம் கொண்ட பாதர் சாம் “அரவிந்த்” சாமி. தீய குணம் கொண்டு தன்னை தானே சாத்தானாக கருதிக்கொள்ளும் கேரக்டரில் “அர்ஜுன்”. வேசிக்கு பிறந்து, ஊரில் அனைவராலும் ஒதுக்கப்பட்டு கரடு முரடாக வளரும் இளைஞன் டாம் என்கிற தாமஸ் (கவுதம்). கிறித்துவ கான்வெட்டில் பயிலும் ஜீனியசான லூசுப்பெண் துளசி. படத்தின் முதல் காட்சியிலேயே அர்விந்த் சாமிக்கும், அர்ஜூனுக்கும் பிரச்சனை. உன்னை எப்படி பழி தீர்க்கிறேன் பார் என்று சவால் விட்டு விடை பெறுகிறார் அர்ஜுன். சிறு வயதில் அம்மா இறந்துவிட கஷ்டப்படும் குழந்தையாக வளர்கிறார் “கவுதம்”. படத்தில் டைட்டிலே இங்கே இருந்துதான் ஆரம்பிக்கிறது.

சர்ச்சில் இருக்கும் பாதர்,  கவுதமை தன்னுடன் வைத்து நல்லபடியாய் வளர்க்க முயல்கிறார். எதிர்பாராவிதாமாய் அர்ஜுனின் சூழ்ச்சியால் அவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். தீயவேலைகளில் பெரிய ஆளாக வளம் வரும் அர்ஜுனுடன் கைப்புள்ளயாக சேர்த்து தொழில் கற்று முன்னேற துடிக்கிறார் கவுதம். சிறையில் இருந்து வெளிவரும் அரவிந்த்சாமி, கவுதமை திருத்த முயல, பையன் திருந்த மாட்டேன் என அடம் புடிக்கிறான். அழுதுகொண்டே பயத்துடன், தன் காதலி துளசியிடம் சென்று தான் பாவச்செயல் புரிபவன், கொலை, கொள்ளையில் ஈடுபடுபவன் என்று சொல்ல. அவளோ சிரித்துக்கொண்டே இனிமேல் செய்யாதே என்று அவன் உள்ளங்கையை பிடித்து துடைத்து விட்டு இனிமேல் நீ பரிசுத்தமானவன் என்று சொல்லி பல்லை இளிக்கிறாள். படமும் இளிக்கிறது.

ஒருவேளை இது பழிதீர்க்கும் கதையா என்றால், அது இல்லை. துளசி, கவுதமின் காதல் கதையா என்றால் அதுவும் இல்லை. அப்படி என்ன தான் அந்த படத்தில் கதை என்றால், சர்ப் எக்ஸ்செல் விளம்பரம் தான் நியாபகம் வருகிறது…. “தேடினாலும் கிடைக்காது”. ஆம் படத்தின் என்ன நடக்கிறது, என்ன செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்று ஒன்னும் தெரியமாட்டேன்கிறது. அவ்வப்போது கரையை கடக்க கவுதமின் தோனியில் லிப்ட் கேட்க வரும் துளசியை பார்க்கும் போது தான் “அட படத்தின் கதாநாயகி இவர்தானே” என்று நியாபகம் வருகிறது. பாடல்கள் அனைத்தும் துருத்திக்கொண்டு இருக்கிறது. ஐயோ இதற்கு மேல் நான் படத்தை பற்றி எழுத விரும்பவில்லை. கர்த்தர் என்னை மன்னிக்கவே மாட்டார்.

ஆனால் இதை மாட்டும் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் மக்களே. க்ளைமாக்ஸ் காட்சியில் பாலா படத்தை போன்ற ஒரு மாயை எட்டி பார்க்கையில் நான் கொஞ்சம் பயந்து விட்டேன். துளசியை பைத்தியமாக காட்ட முயன்றார்கள்.  நல்ல வேலை கடைசியில் அந்த மனஅழுத்தத்தை எல்லாம் மக்களுக்கு அவர்கள் தரவில்லை. படம் முடிந்ததும் “உயிரே உயிரே” பாடலில் உருகி உருகி பாடிய அரவிந்த் சாமியை உயிரை கொடுத்து கத்த வைத்திருக்கிறார்கள். அவர் பின்னால் பல குழந்தைகள், மனிதர்கள் மெழுகுவர்த்தியை பிடித்தபடி வருகிறார்கள். இதெல்லாம் எதற்கு என்று சத்தியமாய் புரியவில்லை இயேசப்பா. சத்தியமாய் புரியவில்லை!

இது உண்மையிலேயே “நாயகன்”, “அலைபாயுதே”, “மௌனராகம்” கொடுத்த மணிரத்னம் படம் தானா? “கடலும் கடல் சார்ந்த படமும்” என்று எண்ணிப்பார்க்கையில் சுறாவிற்கு பிறகு நம் கோட்டானு கோட்டி மக்களின் பொறுமையை சோதித்துப்பார்க்கும் படம் யாதெனில் அது இந்த “கடல்” தான். இந்த கடலில் மூழ்கி முத்தெடுக்க முயல்பவர்கள் அநேகம் பேர் கடைசியில் மூச்சு முட்டியே இறக்க வேண்டியிருக்கிறது. ஸ்தோத்திரம்!