மற்றவர்களுக்கு உதவும் முன்னர் முதலில் இதை படிங்க

Salem-central-bus-stand

இன்று மாலை ஐந்து மணி இருக்கும். சேலம் மத்திய பேருந்து நிலையம் நுழைவாயிலை சிறிது தூரம்தாண்டி காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன். சாலையை கடந்து எதிர்புறம் ஒரு கடைக்கு நான் செல்லவேண்டும். இரண்டு அடி முன்னே எடுத்து வைக்கும்போது ஒருவர்  என்னை அழைக்கும் குரல் கேட்டது.. மீண்டும் பின்னோக்கி நடந்து அவர் அருகில் சென்றேன். அந்த நபரை பார்க்க முப்பது சொச்சம் வயது இருக்கும். என்னவென்று கேட்டேன்?… இந்தி தெரியுமா என்று இந்தியிலேயே கேட்டார் அந்த நபர்.. கேட்ட மாத்திரத்திலேயே அவர் ஏதோ விலாசம் தெரியாமல் தடுமாறுவது போல் நான் உணர்ந்ததால், கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்று உடைந்த இந்தியில் பதிலளித்தேன்.

அதை கேட்டதும் இரண்டு நிமிடம் தொடர்ந்து இந்தியிலேயே ஏதேதோ பேசினார்.. ஆனால் அது எனக்கு முழுதாக புரியவில்லை. ஆங்கிலம் தெரியுமா என்றேன்? தெரியவில்லை… இருப்பினும் அவர் பேசியதின் நடுவில் உதிர்த்த சில சொற்களை வைத்து நான் புரிந்து கொண்டது இதுவே… “தான் மும்பையில் இருந்து வருவதாகவும், கன்னியாகுமரி சென்று கொண்டிருக்கும்போது ரயிலில் தான் கொண்டுவந்த நான்காயிரம் ரூபாய் பணத்தை யாரோ களவாடிவிட்டதாகவும் கூறினார்”. பின்பு தனக்கு பசிப்பதாகவும் காலையில் இருந்து உணவருந்தவில்லை என்பது போல் தன் வயிற்றை தொட்டு பார்த்து காட்டினார். இரண்டு, மூன்று தடவை அவர் திரும்ப திரும்ப இதை கூறியதால் தான் என்னால் இவ்வளவும் புரிந்து கொள்ள முடிந்தது.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னிடம் என்ன உதவி எதிர்பார்கிறார்கள் என்றும் புரியவில்லை. நான் பேசியதும் அவருக்கும் புரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன், அருகில் ஒரு பெண்மனியும், ஒரு சிறுவனும் மற்றும் ஒரு சிறுமியும் நின்று கொண்டிருந்தனர். சிறுவனின் முதுகில் பேக் மாட்டி இருந்தான். அந்த சிறுமி அந்த பெண்மணியின் கையை பிடித்தவாறு நின்றிருந்தாள். அந்த பெண்மணி என்னிடம் தன்னை என் சகோதரி போல் நினைத்துக்கொள்ள சொல்லி ஏதோ இந்தியில் பேசியது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த சிறுமியை பார்த்தேன். அதன் கண்ணில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதை நான் கண்டதும் எனக்கு என்னவோ போல் ஆயிற்று.

உங்களுக்கு நூறு ருபாய் தருகிறேன் முதலில் போய் டிபன் சாப்பிடுங்கள் என்று அருகில் இருந்த ஹோட்டலை நோக்கி காண்பித்து அவர்களுக்கு புரிவித்தேன். என்ன நினைத்தேனோ தெரியவில்லை உடனே இருநூறு ருபாய் அவர் கையில் கொடுத்து அந்த சிறுமிக்கு உணவளிக்குமாறு மீண்டும் கூறினேன். ஆனால் அந்த நபரோ மகாராஷ்டிரா போக டிக்கெட் வேண்டும் என்றும், ஒரு டிக்கெட் இருநூற்றி இருபது ருபாய் என்றும் மேலும் இருநூறு ருபாய் கொடுத்து உதவுமாறு கேட்டார்.  இங்கே எனக்கு மொழி பிரச்சனை யாரும் உதவமுன்வரவில்லை என்று என் கையை பிடித்து கெஞ்சினார். உங்களுடைய விலாசத்தை தாருங்கள் ஊருக்கு போய் பணம் அனுப்புகிறேன் என்றும் கூறினார்.

எனக்கு இந்த நொடியும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த பெண்மனியும் இந்தியில் தொடர்ந்து கெஞ்சினார். அந்த சிறுமியை பார்த்தேன். அதன் கண்ணில் கண்ணீர் ஈரம் இன்னும் காயவில்லை. என்னை பரிதாபத்தோடு அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். மனம் கனத்தது.  ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, மேலும் முந்நூறு ருபாய் கொடுத்துவிட்டு, இதில் மொத்தம் ஐநூறு இருக்கிறது, குழந்தைக்கு முதலில் சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு  பஸ்சில் ஊர் செல்லுங்கள் என்று கூறினேன். மிகவும் நெகிழ்ச்சியுடன் அவர்கள் என்னுடைய பணத்தை திரும்ப அனுப்புவதற்காக என் விலாசத்தை மீண்டும் கேட்டனர். நான் பரவாயில்லை பணம் வேண்டாம், பத்திரமாக  ஊருக்கு செல்லுங்கள் என்றேன். என் கையை பிடித்து இந்தியில் மீண்டும் ஏதோதோ கூறி. காட் ப்ளஸ் யூ என கடைசியாக ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றார்.  அவர்கள் நால்வரும் நிம்மதிபெருமூச்சுடன் புன்னகையை முகத்தில் சுமந்தவாறு பேருந்து நிலையத்தை நோக்கி நடப்பதை பார்த்த போது என் மனதில் அவ்வளவு சந்தோஷம். மற்றவர்களுக்கு எதிர்பாரமால் உதவி செய்து அவர்களின் முகத்தில் சந்தோசத்தை காணும் அந்த தருணம் எத்தகையது என்று அப்போது தான் எனக்கு தெரிந்து.

வீட்டிற்கு வந்தவுடன்  நடந்தவைகள் அனைத்தும் முதலில் அம்மாவிடம் கூறினேன். அவரும் இதை கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்படுவார் என எண்ணினேன். ஆனால் அவர் கூறியதோ எனக்கு அதிர்ச்சி அளித்தது.  “இதுபோல் நிறைய பேரை இப்படி நூதனமாக சேலம் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் ஏமாற்றிக்கொண்டு இருகிறார்கள்” என்றும், அதில் ஏமாந்த எனக்கு  நன்கு தெரிந்த சில நபர்களின் பெயர்களையும் கூறியவுடன்  நான் உறைந்து போனேன். எவ்வளவு கொடுத்தாய் என்றார்? “ஐநூறு” என்றேன். இடையில் புகுந்த அப்பாவும் இது போல் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள் என கூறினார். அப்போது தான் நானும் ஏமாந்ததை அறிந்தேன்.

அப்போது கண்களில் நீர் வழிந்தவாறு என்னையே ஏக்கத்துடன் பார்த்த அந்த சிறுமி ஒரு நிமிடம் என் நினைவில் வந்து போனாள். என்னை அவர்கள் ஏமாற்றியது பெரிதாக அந்த நொடி தெரியவில்லை.  அதற்கு பதில் என்னுடைய பர்ஸை களவாடி இருந்தால் கூட இன்னும் சில நூறு ருபாய் தாள்களும், ஐநூறு ருபாய் தாள்களும் அவர்களுக்கு கிடைத்திருக்குமே? நானும் தொலைத்துவிட்டோம் என்று எண்ணி ஒரு நாள் மட்டும் வருத்தத்துடன் அதை மறந்திருப்பேன்.  ஆனால் அவர்களுக்கு உதவ நினைத்தது குற்றமா? எதற்காக அவர்கள் என் உணர்வுகளில் அவர்கள் விளையாட வேண்டும்?  அது தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

என் மனதில் எழுந்த ஒரே கேள்வி இது தான். இன்னொரு நாளில், அதே இடத்தில், வேறொரு வட இந்திய குடும்பமோ, அல்லது தமிழ் குடும்பமோ உண்மையாகவே இதே பரிதாப நிலையில், உணவில்லாமல், பசியில் வாடிய சிறுமியை அருகில் வைத்துக்கொண்டு என்னிடம் உதவி கோரினால், அதை நான் எப்படி எதிர் கொள்வது?