நிலாப்பெண் – கவிதை

the-girl-and-the-moon-girl-moon_big

நிலவும் அழகுதான்
அண்ணாந்து பார்த்து
ரசிக்குமளவிற்கு.

பார்த்தால் பக்கம்தான்
நிஜமோ,
தொடக்கைகள் நீண்டும்
தொட்டுவிடா தொலைவிற்கு.

தனிமையான இரவுப்பொழுதில்,
நிலவே
துணையாகிறது.

கண்கள் காணக்கிடைத்தும்,
சொந்தமில்லை என்பதே
நிஜமாகிறது.

உன்னை நிலவென்று ஒருமுறை
கவிதை எழுதினேனே,
இப்போது புரிகிறது
நீ நிலவுதான்!

பெண் சிசுக்கொலை

பசித்தழுகிறது பச்சிளங்குழந்தை.
அறுந்து விழாத தொப்புள் கொடியை
பார்க்கும் கண்கள் சொல்லிவிடும்
புதியதாய் பிறந்த குழந்தையென்று.

அழுகுரல் கேட்டுணர்ந்து வந்த தாய்
குழந்தையை மடியினில் வைத்து
ஊட்டினாள் புட்டிப்பாலை.

பசியடங்கி படுத்துறங்கிய குழந்தையைக்கண்டு
கண்ணீரோடு கீழே ஊற்றினாள்
மீதமிருந்த கள்ளிப்பாலை.

உடையில்லா உடலைக்கண்டு
உடைந்த நெஞ்சம் சொல்லிவிடும்
கொல்லப்பட்டது பெண்பாலை!

பெண்ணும் ஐம்பூதமும்

fire-girl

  • நிலமும்
    நீயும்
    ஒன்றேயடி.
    என் ஜீவனை சுமப்பதால்!
  • நீரும்
    நீயும்
    ஒன்றேயடி.
    ஆழம் தெரியவில்லை!
  • காற்றும்
    நீயும்
    ஒன்றேயடி.
    உரசும் போது சிலிர்த்து விடுகிறேன்!
  • வானும்
    நீயும்
    ஒன்றேயடி.
    முதலும் முடிவும் தெரிவதில்லை !
  • நெருப்பும்
    நீயும்
    ஒன்றேயடி.
    கண்களால் தொடமுடிந்தும் …..
    கைகளால் முடியவில்லை!!!

– பிரவீன் குமார் செ