“விஸ்வரூபம்” சொல்லும் தத்துவம் – விமர்சனம்

vishwaroopam-vimarsanam

“பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா” என்று கடந்த சனிக்கிழமை இரவு விஸ்வரூபம் படம் பார்க்க சேலத்திலிருந்து பெங்களூர் பொங்கிப் புறப்பட்டேன். அந்த காலத்தில் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு, மக்களை ஏற்றிக்கொண்டு, அருகில் இருக்கும் நகரத்தின் டெண்டு கொட்டகைக்கு படம் பார்க்க செல்வர். இப்போது கார், அவ்வளவு தான் வித்யாசம்.

யோசனை தோன்றிய போது மாலை 4 மணி. இணையத்தின் மூலம் பெங்களூர் ஜெயாநகரில் உள்ள கருடா ஸ்வாகத் மாலில், ஐனாக்ஸ் திரையரங்கில் ஐந்து டிக்கெட் முன்பதிவு செய்தபோது மாலை 4:30 மணி. படம் துவங்கும் நேரம் இரவு 9:15 மணி.  அனைவரும் ஒன்று கூடி அவசரம் அவசரமாக இங்கிருந்து புறப்படும் போது 5:15 மணி. படம் ஆரம்பம் ஆவதற்குள் எப்படியும் சென்று விட வேண்டும் அடித்து பிடித்து காரை ஒட்டிச்சென்றேன்.  சரியாக 200 கிலோமீட்டர். நேரம் மிகக்குறைவு. திட்டமிட்டபடி 8:30 மணிக்குள் பெங்களூர் நகரம் வந்தடைந்தேன். அதற்கு மேல் சிட்டிக்குள் பயங்கர ட்ராபிக். அது மட்டும் இல்லாமல் அந்த ஏரியாவிற்கும் எனக்கு வழி தெரியாது. அந்த மாலும் எங்கிருக்கிறது என்று தெரியாது. படம் துவங்கும் நேரத்திற்குள் சென்று விடுவோம் என்று அப்போது நம்பிக்கையில்லை. ஆனால் மாலில் கார் பார்க் செய்யப்பட்ட போது 8:45 மணி.

நண்பர் ஜகதீஷ் அதிரடியாக தன் ஐ,பி.எஸ் மூளையையும், ஜி.பி,எஸ் கருவியையும் பயன்படுத்தி டராபிக்கில் மாட்டாமல் வழிநடத்தியதால் அது சாத்தியமாயிற்று.  260 ரூபாய் டிக்கெட் + கண்விஸ் சார்ஜ் + டாக்ஸ் என்று ஒருவருக்கு 300 ரூபாய் டிக்கெட் செலவு செய்து அங்கு போனால், எங்கள் இருக்கை இருந்ததோ முதல் வரிசையில். அது ஏனோ தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு கருத்தரங்கில் கலந்துக்கொண்ட போதும் அதே முன்னிருக்கை, எதிரே கமல்ஹாசன். இப்போதும் முன்னிருக்கை. எதிரே அதே கமல் ஹாசன் என்று (மனசை தேத்திக்கிட்டு)  படம் பார்க்க ஆரம்பித்தேன்.

நியுயார்க் சிட்டியில் கதக் நடனம் பயிற்றுவித்துக்கொண்டிருக்கும் பிராமணன் விஸ்வநாத் (கமல்). பெண்களைபோலவே உடல்மொழி கொண்ட ஒரு அம்மாஞ்சி கலைஞன்.  இதனால்  அவருடைய மனைவி டாக்டர் நிருபமா (பூஜா குமார்), தான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியை கள்ளக்காதல் செய்கிறார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யும் சூழ்நிலையில் தன் அப்பாவி கணவனுக்கு துரோகம் செய்வதாக அவருக்கு மனம் உறுத்துகிறது. அதற்கு பிராயச்சித்தமாய் தன் கணவனை கண்கானித்து அவர்மேல் ஏதேனும் தவற்றை கண்டுபிடிக்க ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட்டை பணியமர்த்துகிறார். அவர் நிஜாமாவே ஒரு அப்பாவிதான் என்பதாகவே தினமும் கண்கானித்து ரிப்போர்ட் செய்துக்கொண்டிருத்த அந்த துப்பறியும் நிபுணருக்கு ஒரு நாள் அதிர்ச்சி.

vishwaroopam-andrea-kamal

யாருக்கும் தெரியாமல் தலையில் குல்லா அணிந்து ஒரு மசூதியில் கமல் தொழுகை செய்வதைப்பார்க்கிறார். கிணறு வெட்டப்போய் பூதம் வந்தது போல், அவர் பிராமணன் அல்ல ஒரு முஸ்லிம் என்று தெரியவர இங்கே தான் கதை சூடுபிடிக்கிறது. இதற்கிடையில் ஒரு கும்பலும் அவரை கொல்லத்துடிக்கிறது.   அப்போ கமல் உண்மையில் யார்? ஒரு திருப்பம்.

ஆப்கனிஸ்தானில்  தாலிபான், அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கும் ஒரு தமிழ் ஜிகாத் தீவிரவாதிபோல்.நுழைந்து, அங்கிருக்கும் அமெரிக்க பிணைக்கைதிகளை காப்பாற்றும் ஒரு ரா ஏஜென்ட். அதாவது ஒரு இந்திய உளவாளி.  அப்போது அந்த தீவிரவாதிகள் அணுக்கதிரியக்கம் மூலம் புறாவை வைத்து நியூ யார்க் நகரத்தை  அழிக்க ஒரு பயங்கர சதித்திட்டம் தீட்டுவதை அவர் அறிந்துக்கொள்கிறார். அதை முறியடிக்கவே நியூ யார்க்கில் கதக் கலைஞன் வேஷம். அந்த வேஷமும் கலைந்துவிட, ஒரு பக்கம் துரோகம் விளைவித்ததற்காக அவரை கொல்லத்துடிக்கிறது அந்த தீவிரவாத கும்பல். மற்றொரு பக்கம் அமெரிக்காவின் ஏப்.பி.ஐ. அவரை கைது செய்யத்துடிக்கிறது. இறுதியில் அத்தனை தடைகளையும் மீறி  நியூயார்க்கை நகரத்தை அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்.

“ஹாலிவுட் படம் மாதிரி ஒரு தமிழ் படம்” என்று நிறைய படங்களுக்கு தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிக்கையிலோ சொல்லி இதுநாள் வரை நம் காதில் பூ சுத்தி இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது தான் உலகத்தரத்தில் வந்துள்ள முதல் தமிழ் படம் இதுதானோ என்று தோன்றுகிறது. சங்கர் மகாதேவனுடன் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து இந்த படத்திற்கு இசை. பாடல்களை முதல் முறை வெளியான அன்று கேட்டதோடு சரி. பிடிக்கவில்லை. படம் பார்த்த பிறகு ஏனோ தினமும் அடிக்கடி கேட்கிறேன். அனைத்தும் அருமை. அதுவும் குறிப்பாக அணுவிதைத்த பூமியிலே பாடல். இதை எழுதும் இன்று மட்டும் ஒரு முப்பது தடவை கேட்டிருப்பேன். போர்களத்தில் மகனைதேடும் தாயின் உணர்வைபோன்ற ஒரு மெல்லிய வலியை நம் நெஞ்சில் பாய்ச்சி மனிதத்தை வலியுறுத்துகிறது. ஒரு கவிஞனாய் கமல் மேல் இங்கு எனக்கு மிகப்பெரிய மரியாதை. பின்னணி இசையும் அபாரம். ஒருமுறையேனும் சென்னையில் சத்தியம் அல்லது மாயாஜாலில் ஆரோ 3Dயில் படத்தை மீண்டும் காண ஒரு திட்டம் இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவும் பட்டையை கிளப்புகிறது. அதுவும் அந்த ஆப்கானிஸ்தானில் காட்டப்படும் இடங்கள் எல்லாம் ஆச்சர்யமூட்டுகின்றன. அப்கானிஸ்தான் வீடுகளும், குகைகளும் அப்படியே தத்ரூபமாய் செட் போட்டு எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்கானிஸ்தானில் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் தான் சேட் என்று நமக்கு தெரிகிறது. இல்லையேல் அதற்கு வாய்ப்பே இல்லை. நிறைய காட்சிகளை கிராபிக்ஸ் தான் காப்பாற்றி இருக்கிறது. இருப்பினும் அமெரிக்க “ப்ளாக் ஹாக்” ராணுவ ஹெலிகாப்டர், குதித்து, தாவி சாகசம் செய்து தீவிரவாதப் பயிற்சி தரும் கமலின் உருவம் போன்றவைகள் காட்டிக்கொடுத்து விடுகின்றன.

காஸ்மீர் தீவிரவாதி போல் எப்படி ஒருவனால் அவ்வளவு சுலபமாக தலிபான் கூட்டத்தில் நுழைய முடிகிறது? இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் கமலுக்கு எப்படி ஒரு பெண்ணை “டம்மி” திருமணம் செய்துக்கொள்ள சூழ்நிலை வந்தது? ஆப்கானிஸ்தானில் கமலின் கூட்டாளி செய்யும் தவறினால் தீவிரவாத கும்பலில் ஒருவன் கொல்லப்படும்போது “அநியாயமாய்” ஒரு  உயிர் போகிறது என வருத்தப்படுகிறார். ஆனால் அதுவரை/அதற்குபின் அவர் செய்துக்கொண்டு இருந்ததன் பெயர் என்ன என்று மறந்துவிட்டாரா? இப்படி பல கேள்விகள் எழாமல் இல்லை குறைகள் பல இருப்பின் அதை யோசிக்க விடாமல் படத்தை நகர்த்தியது தான் கதாசிரியரும், இயக்குனருமான கமலின் சாமர்த்தியம்.வசனங்கள் நிறைய இடங்களில் படு ஷார்ப். ஒரு இடத்தில் கெட்ட வார்த்தை என்று யோசிக்கவிடமால் கெட்ட வார்த்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த சாதுர்யத்தை வேறு எதிலேனும் செலுத்தி இருக்கலாம்.

vishwaroopam-kamal-review

இந்த படத்தின் கதை, திரைகதையை எழுத நினைத்தபோது இயக்குனரின் பார்வையில் கமல் யோசித்திருந்தால் நிச்சயம் இதை எழுதியிருக்க முடியாது. இதை இயக்க நினைத்தபோது தயாரிப்பாளரின் பார்வையில் அவர் யோசித்திருந்தால் நிச்சயம் இதனை படமாக்கியும் இருக்க முடியாது. யாருமே தொடத்துணியாத ஓரு கதைக்களத்தை தொட்டதற்காகவே நிச்சயம் கமலில் தைரியத்தை பாராட்ட வேண்டும். அதை தானே இயக்கியும், தயாரித்ததும் நிச்சயம் ஒரு சினிமா கிறுக்கனால் தான் முடியும். ஒரு காட்சியில் ஜார்ஜ் புஷ் படத்தை கண்ணா பின்னாவென்று சுட்டு தீவிரவாதிகள் பயிற்சி எடுப்பது போல் காட்டுகிறார்கள். நடுவில் ஒசாமா பின்லாடனும் வருகிறான். தலிபான்களின் பெண்கள் அடக்குமறை, ஜிகாத் உயிர்த்தியாகம் செய்ய அவர்கள் துணியும் விதம் என்று நீள்கிறது அந்த பட்டியல்.

பத்து வருடங்களுக்கு முன்னர் ஆப்கன் தீவிரவாதிகளின் வீடியோக்கள் சில பார்த்திருக்கிறேன். அதில் ஒன்றில் ஒரு அமெரிக்க பணயக்கைதியை அவர்கள் சொல்லிகொடுத்தவற்றை காமிராவை பார்த்து பேசச்சொல்கிறார்கள். பிறகு முகத்தை மூடியயவாறு அங்கிருந்த அனைத்து தீவிரவாதிகளும் “அல்லா ஹூ அக்பர்” என்று கோசமிட. ஒரு ஆட்டை அறுப்பது போல் அவன் கழுத்து அறுக்கபடுகிறது. அவன் கத்தும்போது அவன் தொண்டை ஓட்டை வழியே காற்று வெளிப்பட்டு வித்யாசமான சப்தத்தை எழுப்புகிறது. ரத்தம் பீறிட்டு அவன் கொஞ்சம் கொஞ்சமாக துடிதுடித்து இறக்கிறான். அந்த தீவிரவாதிகளில் கோசம் இன்னும் அதிகமாகி கடைசியில் அந்த நிகழ்வை கொண்டாடுகிறார்கள். அப்போதே இதை பார்த்து நொந்து இருக்கிறேன். கொஞ்சம் மனம் இளகியவர்கள் இதை பார்த்தாலும் அன்று தூங்க முடியாது. இப்படி பட்ட விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. ஆகவே நிச்சயம் குழந்தைகளை இந்த படத்திற்கு அழைத்து செல்வதை தவிர்க்கவேண்டும்.

படத்தில் நமக்கு தெரிந்த முகங்கள் யாரென்றால் கமல், நாசர் மற்றும் ஆண்ட்ரியா மட்டுமே. நாசர் தமிழ் பேசும் தீவிரவாதியாக வருகிறார். “காதல் ரோஜாவே” என்று சுமார் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னமே ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் இந்த பூஜா குமார். கமல் நடிப்பை பற்றி குறிப்பிடத்தேவை இல்லை. அரம்பக்காட்சியில் பெண் போன்ற முகபாவங்களும், நடையும், பேச்சும் என்று மொத்த மேனரிசத்தையும் வெளிபடுத்தியவிதமாகட்டும். மீசை இல்லாமல் தாடி வைத்து ஆச்சு அசலாக ஆப்கன் தீவிரவாதியாக வந்து மிரட்டியதாகட்டும்…  நிச்சயம் கமல் உலக நாயகன் தான்.. முல்லா உமராக வரும் ராகுல் போஸ் கச்சிதமான தேர்வு. கமலுக்கு அடுத்து அந்த படத்தில் அவர் நடிப்பு தான் பிரதானம். இதுவரை ஆண்ட்ரியா பற்றி நான் எழுத மறந்துவிட்டேன். ஒருவேளை கதையில் அவர் தேவை பாடாத கதாபாத்திரமாக துருத்திக்கொண்டு இருந்தது போல் எனக்கு தோன்றியாதலோ என்னவோ.

Pooja Kumar in Viswaroopam Latest Stills

கமல்ஹாசன் விஸ்வரூபம் எடுக்கும் அந்த காட்சி உண்மையிலேயே மரண மாஸ். எப்போதும் ஆர்ப்பரிப்பு இல்லாமால் விறைப்பாய் அமைதியுடனே  காணப்படும்  (அ)  காட்டிக்கொள்ளும் ஐனாக்ஸ் திரையரங்க கூட்டத்திலும் ஒரு கைதட்டல் சப்தம் கேட்டது. நம்ம ஊராக இருந்தால் அந்த சீனுக்கு “கலா அக்கா” சொல்ற மாதிரி எல்லாரும் சும்மா “கிழி கிழின்னு கிழிச்சி” இருப்பாங்க. இருந்தும் அங்கு ஒரே ஒரு கைதட்டல் தான் கேட்டது என்பதால் உடனே அந்த சப்தத்தை நிறுத்திக்கொண்டது என் கை. அதுவரை பெண் தன்மையுடன் அய்யர் பாஷையில் வலம் வந்துகொண்டு இருந்த கமல்ஹாசன் எதிரிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டு சாகடிக்கப்படுகிற ஒரு சூழ்நிலை.  தொழுகை செய்ய தன் கையை அவிழ்த்து விடச்சொல்லி அழுது, கெஞ்சி,  பிறகு தொழுகை செய்துவிட்டு எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார். மின்னல் வேகத்தில் நடந்து முடியும் அந்த காட்சி  உடனே ஸ்லோ மோஷனில் மறுபடியும் காட்டப்படும் போது ரசிகர்கள் உடல் சிலிர்ப்பதை தவிர்க்க இயலாது. அதுவும் அந்த விஸ்வரூபம் தீம் துவங்கும் அந்த புள்ளி அபாரம்.

அவ்வளவு வித்யாசமான விறுவிறுப்பான கதையில் கிளைமாக்ஸ் சப்பென்று முடிந்தது போல் இருந்தது. மஞ்சள் அல்லது சிகப்பு வயரை கட் செய்து அந்த (விஜயகாந்த்) காலத்தில் பாம் டிப்யுஸ் செய்வது போன்ற ஒரு உணர்வு தான் இதில் மிஞ்சியது. இன்னும் கொஞ்சம் டென்ஷன் கிரியேட் செய்யப்பட்டு இருந்தால் ஒரு நல்ல நிறைவாக இருந்திருக்கும். இரண்டாம் பாகம் தொடரும் என்பதால் க்ளைமாக்ஸ் எதோ இண்டர்வெல் மாதிரி தான் முடிக்கப்பட்டு இருந்தது.

நிச்சயம் இந்த படம் தியேட்டரில் காணப்பட வேண்டியது. இந்த படம் தடை செய்யபட்டது சரியா, தவறா? ஏன், எதற்கு? போன்றவைகளை தினமும் அனைத்து ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும் ஏற்கனவே பலமாக அடித்து துவைத்து காயப்போடப்பட்டுள்ளதால் அதை விட்டுவிடுங்கள். விஸ்வரூபத்தை ஒரு முறையோ, இரு முறையோ, இல்லை அதற்கு மேலேயோ நீங்கள் வேண்டும் அளவிற்கு திரையரங்கில் கண்டு கழித்துவிட்டு பிறகு இணையத்தில் கட் செய்யபடாத படத்தை கூட ஒருமுறை பாருங்கள். இப்படம் என்ன கூற விழைகிறது, நீங்கள் என்ன புரிந்துக்கொண்டீர்கள் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். பிறகு இது தடை செய்யப்பட வேண்டிய படமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

இப்படம் உணர்த்தும் உண்மை யாதெனில்,  கமல் அங்கிள் நல்லவனாய் இருந்தபோது அவரை கண்டுக்கொள்ளாமல் மாற்றானோடு சுற்றித்திரியும்  பூஜா குமார் ஆண்ட்டி, கடைசியில் கமல் பெரிய அப்பாடக்கர் என்றறிந்ததும் காதல் ரசம் சொட்டச்சொட்ட  பல்லிளித்து அவரிடம் வந்து உருகுகிறார்.  வழக்கமான அப்பாவி ஆடவனும் அந்த பசப்பியை நம்பிவிடுகிறான். இந்த பொண்ணுங்களே இப்படி தான் எஜமான்… குத்துங்க எஜமான் குத்துங்க. படத்தை பார்த்த பிறகு “ஆன்ட்டி.-முஸ்லிம்” பற்றி என்றில்லாமல், அதில் இப்படி ஒரு “ஆண்ட்டி-அங்கிள்” தத்துவம் கூட உங்கள் கண்ணோட்டத்தில் எழலாம்.

ஒருவேளை அதற்கு மகளிர் சங்கம் தடை கோரி போர்க்கொடி கூட தூக்கி இருக்கலாம்…  படம் ஒன்றெனினும்.. அதை பார்க்கும் கண்கள் வேறு, அவர்தம் கண்ணோட்டம் வேறு.  அதை விட்டுவிட்டு, இப்படித்தான் படம் எல்லோராலும் பார்க்கப்படும். இப்படித்தான் மக்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று அனுமதி அளிக்கப்பட்ட ஒரு படத்தை சொந்த ஊரில் பார்க்க விடமால் என்னை போன்றோரை அலைக்கழித்தது அபத்தம். என் முஸ்லிம் நண்பர்களுடனும் இங்கயே சவுகரியமாய் பார்த்து ரசித்திருக்க விடாமல் என் தனிமனித சுதந்திரத்தை பறித்தது அதைவிட பெரிய அபத்தம். .

மதம் விதைக்கும் பூமியிலே…  அறுவடைக்கும்…….?