சென்னை புத்தகக்கண்காட்சி இவ்வளவு பெரிய கடல் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதன் முறை இப்போது தான் அங்கு செல்கிறேன். நெய்வேலி புத்தகக்கண்காட்சி தான் இதுவரை நான் அதிகம் சென்றது. ஆனால் இப்போது தான் தெரிந்தது நான் பார்த்தது வெறும் குட்டை தான். இது உண்மையிலேயே கடல். கிட்ட தட்ட ஆறநூறு கடைகள் அங்கே இருக்கிறது. கடைக்குள் நுழையாமல் வெறும் கடை பெயரை மட்டுமே படித்துக்கொண்டு நடந்தால் அதற்க்கே ஒரு மணி நேரத்திற்கு மேல் பிடிக்கும். இரண்டு நாள் முழுக்க புத்தகக்கண்காட்சியிலேயே இருந்தேன். அஜயன் பாலா அவர்களின் நாதன் பதிப்பகத்தில் (#559) அதிக நேரம் இருந்தேன். நிறைய நண்பர்களை சந்தித்தேன். நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.
வட்டிப்பணம் வசூலிக்க வந்தவர்கள் போல் விகடன் கடையில் நுழைபவர்கள் அநேகம் பேர் ராஜு முருகனின் “வட்டியும் முதலும்” புத்தகத்தை கேட்டு வாங்கிக்கொண்டு இருந்ததை காண முடிந்தது. கிட்ட தட்ட ஒரு நூறு கடை சுத்தி இருப்பேன் அதற்க்கே அரை நாளிற்கு மேல் ஆனது. இது சரிபட்டு வராது என்று அஜயன் பாலா மற்றும் அவரின் கடையில் இருந்த இன்னொரு நண்பர் சரவணன் உதவியுடன் சில முக்கிய புத்தகங்கள் மட்டும் வாங்கிக்கொண்டு நேரத்தையும், காசையும் மிச்சப்படுத்தினேன். இலக்கியம், சினிமா, கவிதை என பல வகையாறாக்களை உள்ளடக்கிய நான் வாங்கிய அந்த புத்தகத்தின் லிஸ்ட் கீழே. இன்னும் சில புத்தகங்கள் மற்றவர்களுக்கு அன்பளிப்பு வழங்க வாங்கினேன். அவை இந்த லிஸ்டில் இடம் பெறாது. கல்லூரி காலத்தில் புத்தகப்புழுவாய் நெய்வேலி நூலகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நூலகம் மூடும் வரை அங்கேயே இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது தினமும் புத்தகம் வாசிப்பதற்கு சொற்ப நேரமே செலவிட முடிகிறது என்பது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.
பி.கு.: புத்தகக்கண்காட்சிக்கு வந்த பெண்கள் அனைவரும் ஏனோ பேரழகிகளாகவே இருந்தனர். புத்தகம் வாசிப்பதால் அழகு கூடுகிறதா? அழகு கூடியவர்கள் புத்தகம் வாசிக்கிறார்களா? பட்டி மன்றமே வைக்கலாம்!
சுப்ரமணியபுரம் (திரைக்கதை) – எம். சசிகுமார்
குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த்
வட்டியும் முதலும் – ராஜு முருகன்
அறம் – ஜெயமோகன்
உலக சினிமா வரலாறு – பாகம் இரண்டு
துணையெழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
கொல்லிமலை சித்தர்கள் – ராஜா திருவேங்கடம்
Best Of Ghost Stories
Best Of Horror Stories
The Steve Jobs Way
விகடன் சுஜாதா மலர்
குரல்வளையில் இறங்கும் ஆறு. – ஐயப்பன் மாதவன்
முப்பது நாட்களில் நீங்களும் இந்தி பேசலாம் (ஹி ஹீ)
புன்னகை உலகம் – இதழ்
மந்திரச்சிமிழ் – இதழ்
தேடல் – ஆர்.பாண்டியராஜன்
ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
எப்படி ஜெயித்தேன் – எம்.ஜீ.ஆர்
தியான யாத்திரை – அஜயன் பாலா
அஜயன் பாலா சிறுகதைகள்
அமரர் சுஜாதா – தமிழ் மகன்
தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்
ஒன்று – ரா.கண்ணன் ராஜு முருகன்
மயக்கம் என்ன – டி.எல்.சஞ்சீவிகுமார்