Ko Phi Phi Island. இது கிராபி (Krabi) பகுதியில் உள்ள ஒரு தீவு. கோ (KO) என்றால் தாய் மொழியில் தீவு என்று அர்த்தம். அகவே எல்லா தீவுகளின் பெயர்களும் இங்கு கோ (KO) என்றே ஆரம்பமாகும். நிறைய தீவுக்கூட்டங்கள் இதன் அருகே இருப்பினும் இதை மட்டும் தான் மக்கள் வாழ்விடமாகக் கொண்டு வசிக்கிறார்கள். 2000வருடம் வெளிவந்த “தி பீச்” என்ற “லியனார்டோ டி காப்ரியோ”வின் ஆங்கிலப்படம் மூலம் இந்த தீவு பிரபலம். தற்போது வெளிவந்த “ஏழாம் அறிவு” படத்தில் வரும் “முன்னந்தி சாரல் நீ” பாடல் கூட இங்கு தான் படமாக்கப்பட்டது.
அன்று காலை சொன்ன நேரத்திற்கு வாகனம் ஹோட்டலுக்கு வந்தது. நேரமானால் கப்பல் புறப்பட்டுவிடும் பிறகு அவர்கள் பொறுப்பல்ல என்று தொலைபேசியில் அவர்கள் கூறியதால் நாங்கள் புறப்படுவதற்கு அவர்களை பத்தி நிமிடத்திற்கு மேல் காத்திருக்கசெய்யவில்லை. ஏற்கனவே சிலரை வேறு வேறு ஹோட்டல்களில் இருந்து அந்த வாகனத்தில் பிக் அப் செய்து வந்திருந்தனர். அரைமணி நேர பயணத்தில் புக்கெட் தீவின் தென் பகுதியில் உள்ள துறைமுகத்தை அடைந்தோம். ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்ததினால் நாங்கள் ஷார்ட்ஸ் அணிந்தே சென்றிருந்தோம். பல கம்பெனிகளின் சிறிய ரக உல்லாச கப்பல்களும், அதிவேக படகுகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கப்பல் கம்பெனியுடன் தொழில் தொடர்பில் உள்ள பல்வேறு டூர் ஏஜென்சிகள் தங்களுடைய வாடிக்கையாளைர்களை அங்கு குவித்துக்கொண்டு இருந்தனர்.
பயணிகளை சரிபார்த்து, அடையாளத்திற்கு ஒவ்வொருவரின் சட்டையிலும் அந்த கப்பல் கம்பனியின் லோகோ பதித்த ஸ்டிக்கரை ஒட்டிய பிறகே கப்பலில் ஏற்றினர். மிகவேகமாக தங்களுடைய ப்ரோபசனல் காமிரா மூலம் இரண்டு பேர் கப்பலுக்குள் நுழையும் ஒவ்வொருவரையும் புகைப்படமாக சுட்டுதள்ளிக்கொண்டிருந்தனர். கப்பலில் அன்று மாலை திரும்பும்போது அவரவர் புகைப்படங்கள் அச்சு செய்யப்பட்டு அந்த தீவின் பெயர் பொறித்த ஒரு பிளாஸ்டிக் தட்டு போன்ற ஒன்றை ஞாபக சின்னமாக வழங்குகின்றனர். ஒவ்வொன்றும் நூறு ரூபாய். அவரவர் புகைப்படம் அச்சு செய்யப்பட்டதை வேண்டியவர் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். வாங்கப்படாததை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
கப்பலில் மொத்தம் மூன்று தளங்கள் இருந்தது. மூன்றாவது தளமானது கப்பலின் மேலே திறந்தவெளி தளம். . மொட்டை மாடி போல. அடுத்த இரண்டு தளங்களிலும் வரிசையாக விமானத்தில் உள்ள இருக்கைகளை போல், தொலைக்காட்சி வசதியுடன் குளிரூட்டப்பட்ட பெரிய அறை கொண்டிருந்தது. அவ்விரண்டு அறைகளுக்கு வெளியேயும் கடலை ரசித்தபடி அமர்ந்துச்செல்ல இருக்கைகள். நாங்கள் ஏறியபோது அதில் கூட்டம் நிரம்பியிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த தேனீர், காபி, பிஸ்கட், கேக் போன்ற ஸ்நாக்ஸ் பண்டங்கள் அனைத்தும் இலவசம்.
யோசித்து பார்த்தால் வெறும் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் தான் நாங்கள் நபர் ஒன்றிற்கு இந்த தீவு பயணத்திற்கு கொடுத்திருப்போம். மூன்று மணி நேர கப்பல் பயணம். தீவில் ஒரு மணி நேரம். அசைவ மதிய உணவு. மீண்டும் கரைக்கு திரும்ப மூன்று மணிநேர கப்பல் பயணம். இதில் குளிரூட்டப்பட்ட அறையும், இலவச தேனீர், பண்டங்களும்.. நாங்கள் அளித்த பணத்தில் இந்தியாவில் உள்ள டூர் எஜெண்டிற்கும் ஒரு சிறு பகுதி செல்கிறது. தாய்லாந்தில் உள்ள டூர் எஜெண்டிற்கும் ஒரு சிறு பகுதி செல்கிறது. பிறகு எப்படி இந்த கப்பல் கம்பனியால் இது சாத்தியம்?
உண்மையில் தாய்லாந்து சுற்றுலா வியாபாரம் சற்று தந்திரமானது. . எங்களுடன் பயணித்த மக்களில் அநேகம் பேர் ஐரோப்பியர்கள். அவர்களிடம் வாங்கப்பட்ட டாலர் எங்களுடைய கட்டணத்தை விட பலமடங்கு அதிகம் என்று தெரிந்துக்கொண்டேன். இதில் விசேஷம் என்னவென்றால், ஐரோப்பியர்களை பொருத்தவரை அவர்கள் கட்டிய பணம் அவர்களுக்கு சிறிய தொகைதான். தாய்லாந்துகாரர்களுக்கு அது பெரிய தொகை. ஆளுக்கேற்றவாறு அவர்கள் பணம் வசூலிக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் பல நாட்களுக்கு முன்னே நாங்கள் முன்பதிவு செய்ததால் கட்டணமும் குறைவு.
கப்பலின் அருகிலேயே இருபுறங்களிலும் பெரிய பெரிய ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாய் மேலே தென்பட்டது. நான் கப்பலில் தேமேவென அமர்ந்துவர விருப்பமில்லாமல் அனைத்து தளங்களிலும் சுற்றிக்கொண்டும், புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் என் நேரத்தை செலவிட்டேன். கப்பலின் கீழ் தளத்தின் பின்புறத்தில் எஞ்சினின் விசையில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு இருப்பதை அருகில் பார்க்க த்ரில்லான அனுபவம். காமிரா லென்சும், என்னுடய கூலிங் கிளாசும் உப்புகாற்றில் அவ்வப்போது வெண்படிவம் அப்பிக்கொண்டது. அடிக்கடி அதை சுத்தம் செய்துக்கொண்டே இருக்கவேண்டியதாயிற்று.
பி பி தீவிற்கு செல்லும் முன்னர், மங்கி கேவ் என்ற தீவிற்கு அருகே கப்பல் நிறுத்தப்படுகிறது. தீவு என்றதும் இறங்கி சுற்றிப்பார்க்கும் இடம் அல்ல. அது ஒரு பிரம்மாண்டமான மலை. ஸ்நோர்க்லிங்க் செய்வதற்காக அந்த நிறுத்தம். அதாவது மிதவை உடை அணிந்துக்கொண்டு, மூச்சுக்குழல் பொருத்தப்பட்ட ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு தண்ணீருக்குள் நீந்திசெல்வது. மூச்சுக்குழலின் ஒரு முனை தண்ணீரில் மேல் மிதக்கும் என்பதால் மறுமுனையை வாயில் சொறுகி சுவாச இடையூறின்றி பவளப்பாறைகளையும், மீன்களையும் ரசித்தவாறு நீந்திச்செல்லலாம்.
அந்த இடத்திற்கு வந்தடையும் முன்னரே அந்த கப்பலின் சிப்பந்திகள் அந்த இடத்தின் பெயரும், குறிப்புகளும் எழுதப்பட்ட பலகையை பிடித்துக்கொண்டு கப்பலில் உள்ள பயணிகள் அனைவருக்கும் தெரியுமாறு ஒவ்வொரு இடமாக போய் காட்டிவிட்டு சென்றனர். அவரிடம் ஏதேனும் கேள்விகேட்டால் அவர்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை. ரிசப்சன் பகுதிக்கு சென்றேன்.. ஏற்கனவே ஸ்நோர்க்லிங் செல்ல பணம் செலுத்தியவர்களுக்கு அங்கு மிதவை உடையும், முகமூடியும் விநியோகம் செய்யபட்டுக்கொண்டிருந்தது. புதிதாக அதற்கு கட்டணம் செலுத்த விரும்பிகிறவர்களுக்கு ஆயிரம் தாய் பாத் வசூல் செய்தனர். அதாவது நம்மூர் பண மதிப்பில் சுமார் ரெண்டாயிரம் ரூபாய். எங்கள் பயண கட்டணத்தில் இது ஏற்கனவே உள்ளடங்கியுள்ளது, எனவே எங்களை நீந்த தயாராகசொன்னார் அங்கிருந்த பெண்மணி.
எனக்கு நீச்சல் தெரியாததால் நான் எந்த சூழ்நிலையிலும் கடலில் இறங்குவதாக இல்லை. உடன் வந்த நண்பர்கள் ஏற்கனவே உள்ளாடையுடன் நின்றுக்கொண்டு மிதவை உடையை மாட்டியவாறு கடலில் குதிக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். திரும்பிப்பார்த்தால் திடீரென கப்பலில் இருந்த ஆண்கள், பெண்கள் அநேகம் பேர் இப்போது சுயமாக தங்களை துகிலுரித்துக்கொண்டிருந்தனர். இந்த சங்கடத்தை எதிர்நோக்க விருப்பம் இல்லாததாலோ என்னவோ, கப்பலில் ஏறியதில் இருந்தே சில பெண்கள் பிகினி உடையில் இதற்கு தயாராகவே வந்தனர். அனைவரும் அந்த மலை போன்ற தீவிற்கு கூட்டம் கூட்டமாய் நீந்திசென்றனர். அவர்களை பார்பதற்கு கூட்டமாய் மீன்கள் நீந்துவது போல் தான் இருந்தது. கப்பலில் மேல் தளத்தில் இருந்து நான் அனைத்தையும் தனியாக நின்று ரசித்துக்கொண்டு இருந்தேன். ஒரு அரைமணி நேரம் அங்கு செலவிடப்பட்டது.
அடுத்து அந்த பி.பி. தீவை நோக்கி புறப்பட்டோம். இது ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட தீவு. அப்போது இந்த தீவிற்கு உல்லாச சுற்றுலா வந்த குடும்பத்தினர், சுனாமி தாக்கியபோது எடுத்த வீடியோவை யூடியுபில் பார்த்திருக்கிறேன். பயங்கர கொடுராமான அழிவு அது. இப்போது நாங்கள் வருவதற்கு சில நாட்கள் முன்பு புக்கெட் தீவில் நிலநடுக்கம் இருந்தது. சுனாமி எச்சரிக்கையும் அப்போது இருந்தது. நடுக்கடலில் கப்பலில் இருக்கும்போது சுனாமியே வந்தாலும் அதன் சுவடு தெரியாது. ஆனால் ஒருவேளை அந்த தீவில் இருக்கும்போது வந்துவிட்டால்? உள்ளுக்குள் கொஞ்சம் பயம் ஊர்ந்துக்கொண்டு தான் இருந்தது.
அது மட்டும் இல்லாமல், கூகில் வரைபடத்தில் என் நண்பர்கள் என்னுடைய இருப்பிடத்தை தொடரும் வசதியிருக்கிறது. நான் எங்கே இருக்கிறேன். எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்று உடனுக்குடன் அவர்கள் அறிந்துகொள்வார்கள். அப்போது எதேச்சையாக என் உறவினர் ஒருவர் தன்னுடைய மொபைலில் கூகில் வரைபடத்தில் என் இருப்பிடத்தை காண, அது ஏதோ ஒரு தேசத்தில் நடுக்கடலில் ஒரு புள்ளியில் பயணம் செய்வதை போல் காட்ட, கிலி அடைந்து என் வீட்டை தொடர்பு கொண்டுள்ளார். அப்படிப்பட்ட பகுதி அது.
அந்த தீவில் உள்ளே நுழைவதற்கு இருபது தாய் பணம் கட்டணமாக வசூலிக்கின்றனர். இதை வைத்து அந்த தீவின் தூய்மையை பாதுகாக்கின்றனர். தீவுக்குள் நுழையும் பொழுது வரிசையாக கடைகள் இருக்கிறது. அந்த தீவின் பெயர் பொறித்த உடைகள் , ஞாபக சின்னங்கள் என நிறைய பொருள்கள் அங்கு விற்கப்படுகிறது. ஆனால் அனைத்தும் விலை சற்று கூடுதல். ஒரு நாளைக்கு இத்தனை பேர் தான் தீவுக்குள் வரமுடியும், அங்கு தங்கவும் செய்ய முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு நம் நிம்மதியையும், அனுபவத்தையும் கெடுக்கும் அளவிற்கு கூட்டம் இல்லை. கூச்சல்கள் இல்லை.
அப்போது அந்த தீவில் ஏற்கனவே சில கப்பல் வந்திருந்தது. எங்கள் சட்டையில் ஒட்டப்பட்டு இருந்த அந்த கப்பல் கம்பனியின் ஸ்டிக்கரை வைத்து எங்களை அடையாளம் கண்டு வழி நடத்தினர். உள்ளே ஒரு இடத்தில் பலவகையான உணவுகள் பப்பெட் முறையில் வழங்கப்பட்டது. அக்டோபாஸ், சிக்கன் என்று அசைவதிற்கு பஞ்சமில்லை. உணவு உண்ட பிறகு கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான் பீச். அது தீவின் மறுபுறம். பச்சை பசலென்ற மிதக்கும் மலைகள், பட்டு போன்ற மென்மையான மணல். கிரிஸ்டல் கிளியர் கடல். மெரீனா பீச் மட்டுமே பார்த்த நமக்கு இது நிச்சயம் ஒரு சுவாரசியமான அனுபவம். உண்மையில் அது விவரிக்க முடியா அனுபவம். வாழ்க்கையில் ஒருமுறையேனும் அனுபவிக்கவேண்டிய அனுபவம்.
அங்கு இரவு தங்குவதற்கு நிறைய ஹோட்டல்கள் இருக்கிறது. ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கி, அருகில் இருக்கும் தீவுகளையும் சுற்றிப்பார்த்து அந்த இயற்கை அதிசயத்தை முழுமையாக அனுபவிக்க ஆசை. கற்பனை செய்து பாருங்கள். நடுக்கடலில் ஒரு சிறிய தீவு. ஆள் அரவமற்ற தனிமையான இரவுப்பொழுது. அமைதியான கடற்கரை. அதில் மோதும் மெல்லிய அலைகள். பவுர்ணமி நிலா வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் மின்னும் மணல். இப்படி ஒரு இரவு அமைந்தால்? பேச்சுலர் வாழ்க்கையில் இது தேவையற்ற கனவு என்பதால் இப்போதைக்கு… dot.
– பயணம் தொடரும்
Phi Phi Island பயண அனுபவத்தின் முழு வீடியோ தொகுப்பு
Phi Phi Island – புகைப்படங்கள்