யோசித்து பார்த்தால் கடந்த சில வருடங்களாக என் பிறந்த நாளின் போது வீட்டில், அம்மாவுடன் தான் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் தம்பியும், அம்மாவும் அன்று எனக்கு ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள். நான் வேண்டாம் என்று சொல்லியும் கூட சென்
ற முறை கேக் வெட்டுவதற்கு வாங்கி வந்துவிட்டார்கள். அது ஏனோ தெரியவில்லை, இப்போதெல்லாம் பிறந்த நாளை கொண்டாடுவதில் எனக்கு ஈடுபாடு குறைந்து கொண்டே வருகிறது. சென்ற வருடம் பிறந்த நாளின் போது உடல் தானம் செய்தேன். அதற்கு முந்தைய வருடம் கண் தானம் செய்தேன். பிறந்த நாளை நான் பார்க்கும் விதம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுபடுவதை சென்ற வருடம் என் வலைப்பூவில் எழுதி இருந்தேன். அதை படித்து விட்டு, இந்த வயதிலேயே ஏன் இப்படி சிந்தித்து ஒரு கட்டுரை எழுதினாய் என்று நண்பர்கள் ஓரிருவர் கடிந்து கொண்டனர்.
இந்த வருடம் பிறந்த நாளின் போது சென்னையில் இருந்தேன். அம்மாவுக்கு அவர்களுடன் இல்லையே என்று சிறிது வருத்தம் இருந்தது. சென்னையில் இருப்பதால் நான் எந்த வேலையாக வெளியே சென்றாலும், யாரை சந்திக்க சென்றாலும் பிறந்தநாளன்று முந்திய இரவு தன்னுடைய வீட்டிற்கு தான் வர வேண்டும் என்பது தம்பி கிருபாகரன் அன்பு கட்டளை. பிறந்த நாளிற்கு மூன்று நாள் முன்பிருந்தே இதை அடிக்கடி கூறிக்கொண்டு இருந்தான்.. கிருபாகரன்… சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவன் இன்ஜினியரிங் முதல் வருடம் சோனா பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது இருந்து பழக்கம். இப்போது சென்னையில் தாம்பரத்தில் இருந்துகொண்டு காக்நிசன்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டும் எங்களுடைய சேலம்ஜில்லா டாட் காம் இணையதளத்திலும் பங்களித்து வருகிறான்.
விடிந்தால் பிறந்த நாள். சில சந்திப்புகளுக்காக அன்று வெளியே சென்றிருந்தேன். இரவு பத்து மணிவரை கிருபாவிடம் இருந்து பல முறை போன்.. “அண்ணா எப்போ வரீங்க.. ” வேலைகளை, சந்திப்புகளை முடித்து விட்டு நண்பர் ஒருவர் தாம்பரத்தில் காரில் டிராப் செய்தார். பதினோரு மணி இருக்கும். என்னால் அவனும் சாப்பிடாமல் இருந்தான். இருவரும் உணவு உண்டுவிட்டு அவன் வீட்டிற்கு சென்றோம். அவனுடன் அவனுடைய நண்பர்கள் மூவர் அந்த வீட்டில் தங்கி இருக்கின்றனர். நான் மிகவும் களைப்பாக இருந்தேன் இருப்பினும் என்னை உறங்கச்செல்ல விடாமல் அனைவரும் என்னிடம் நிறைய விவாதித்து கொண்டு இருந்தனர். திடிரென கிருபா அவன் அறைக்குள் சென்று கதவை சாத்திகொண்டான். ஒரு ஐந்து நிமிடத்தில் அனைத்து அறையின் விளக்கும் அணைக்கப்பட்டது.
இப்போது அவன் கதவை மெல்ல திறந்து வெளியே வந்த போது மெல்லிய வெளிச்சம் உள்ளே இருந்து வந்தது. அவன் கையில் மெழுகுவர்த்தி ஏற்றிய வைத்த கேக். “ஹாப்பி பர்த்டே அண்ணா” என்றான். கையில் இருந்த மொபைலை அமுக்கி மணி பார்த்தேன். சரியாக பன்னிரண்டு மணி. மறக்க முடியா தருணம் அது
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
சென்ற மாதம் ஒரு பெர்சனல் பிரச்சனையால் சில நாட்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தேன். அப்போது ஒருநாள் மாலை அஜயன் பாலா அவரிடம் இருந்து ஒரு போன். “ஏன் கொஞ்ச நாளாக பேசவே இல்லை பிரவீன்” என்றார். என் பிரச்சனையை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
“ஏன் என் ஞாபகம் வரவில்லையா உங்களுக்கு. ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்ல. அங்க இருக்க வேண்டாம். உடனே புறப்பட்டு சென்னை வாங்க. நம்ம வீட்டுக்கு வந்து ஒரு ரெண்டு மூணு நாள் இருங்க” என்று கோபப்பட்டு உடனே அறுதல் சொன்னார். இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் தோள் கொடுக்கும் நட்பை முழுதாய் உணர்ந்த தருணம். அப்போது அவர் வீட்டிற்கு செல்ல முடியாவிட்டாலும் கடந்த வாரம் சென்றிருந்தேன்.
எங்கள் இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்பதால் கடந்த இரண்டு வருடங்களாக ஒன்றாக கொண்டாட நினைத்தும் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஆனால் இம்முறை பிறந்த நாளின் போது இருவரும் ஒன்றாக இருந்தும் அதை முழுதாய் கொண்டாட வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்கள் இருவரும் பிறந்த தேதி, மாதம் தான் ஒன்றென்றாலும் பிறந்த வருடம் வேறு. ஆனால் உண்மையான நட்புக்கு தான் வயது வித்யாசம் கிடையாதே.
அப்படி என்ன பெரிய வித்யாசம் என்று கேட்கிறீர்களா? “இந்த பிறந்த நாளோடு எனக்கு பதினேழு முடிந்து பதினெட்டு. அவருக்கு பதினெட்டு முடிந்து பதினேழு” அவ்வளவுதான். 🙂
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
பிறந்த நாளன்று மாலை இயக்குனர் விஜயை சந்தித்தேன். ஏற்கனவே நண்பர் சொல்லக்கேட்டிருந்தும் தனிபட்ட முறையில் எவ்வளவு நல்ல மனிதர் என்று அவரை நேரில் சந்தித்தால் தான் ஒருவர் முழுதாய் உணரமுடியும். சந்தித்த சில நிமிடங்களிலேயே அவரை மிகவும் பிடித்து விட்டது. பக்கா ஜெண்டில் மென்.