சிரித்தே தொலைக்க வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் – விமர்சனம்

Boss-Engira-Baskaran

நீண்ட நாள் கழித்து ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படத்தை பார்த்த திருப்தி. “இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்தில்” எதிர்பார்த்து, “தில்லாலங்கடியை” நம்பி சென்று கிடைக்காத திருப்தி இந்த படத்தில் கிடைத்தது என்றே சொல்லலாம். சண்டை இல்லை, அழுகாச்சி இல்லை, செண்டிமெண்ட் இல்லை. அட சோக சீன் வரும் இடத்தில கூட ரசிகர்களை சிரிக்க வைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்ட இந்த திரைப்பட இயக்குனர் ராஜேஷை என்னவென்று சொல்ல! கடைசி சீன் வரை சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் வேறு வழி இல்லை.

ஆர்யா பல வருடங்களாக அரியர் எழுதிக்கொண்டு வீட்டுக்கு பாரமாய் வாழும் ஒரு உதவாக்கரை ஹீரோ. சந்தானம் முடி திருத்தும் நிலையத்தை நடத்தி ஆர்யாவின் இதர செலவுகளையும் கவனித்துக்கொள்ளும்  “நண்பேன்டா”. ஆர்யாவின் அண்ணியின் தங்கை தான் இந்த நயன்தாரா. அண்ணியிடம் தான் காதலிக்கும் நயன்தாராவை பெண் கேட்க அவரோ உன்னை போன்ற உதாவாக்கரைக்கு எதை நம்பி என் தங்கையை கொடுப்பது என்று மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா வீட்டை விட்டு வெளியேறி ஒரு டுடோரியல் சென்டர் தொடங்கி நயன்தாராவை கைபிடிப்பதே கதை.

இதை கேட்டவுடன் ஏதோ சீரியசான கதை என்று பயந்து விடாதீர்கள். பெயருக்கு கூட சீரியசான சீன் படத்தில் இல்லை. அதே மாதிரி வழக்கம் போல தமிழ் படத்தை போல் ஒரே பாடலில் ஹீரோ வளர்ந்து விடவுமில்லை. நான் முதலில் சொன்ன மாதிரி சோக சீன் என்று நீங்கள் நினைத்தால் கூட சிரித்தே தொலைய வேண்டும். எடுத்துக்காட்டாக, வீட்டை விட்டு  வெளியேறும் ஆர்யா மழையில் நனைந்தபடி தெருவில் நடக்கும் போது ஆர்யாவின் அண்ணன் வீட்டிலிருந்து அவரிடம் ஓடி வருகிறார். ஆர்யா அவரிடம் “நீ இப்படி எல்லாம் ஓடி வந்து கூப்ட்டாலும் நான் வருவதாய் இல்லை” என்று சொல்ல. அதற்கு அவர் அண்ணனோ “சீ.. உன்னை யாரு கூப்பிட வந்தா. மழை பேஞ்சிட்டு இருக்கு இதை சாக்கா வச்சி திரும்ப வீட்டுக்கு கீது வந்துடாத இந்தா குடை” என்று கொடுத்துவிட்டு செல்வார். இப்படியே படம் முழுவதும் சீரியசான காமடிகள்.

Boss-Engira-Baskaran-review

இந்த படத்தில் கதை கிடையாது, திரைக்கதை கிடையாது வெறும் டயலாக்கை நம்பியே எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு டயலாகிற்கும் ஒரு காமடி என்ற பார்முலாவில் எழுதியுள்ளார் இதன் இயக்குனர்.  ஆர்யா எது சொன்னாலும் அதற்கு டைமிங் காமடி கொடுத்துக்கொண்டே இருப்பார் சந்தானம். சந்தானம் தான் இந்த படத்தின் பிளஸ். ஆர்யா அவரிடம் “உனக்கு அந்த இங்கிலீஷ் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டப்போ ஒன்னு தெரியும்னு சொல்லி இருக்கணும் இல்லேன்னா தெரியலன்னு சொல்லி இருக்கணும்.  ஏன்டா தப்பான அர்த்தத்தை சொன்னே”னு கேட்க்க. அதற்கு சந்தானமோ “ஒரு வேலை பிரிட்டிஷ் இங்கிலிஸ்ல அவ பேசியிருப்பா” னு சொன்னப்ப சிரிப்ப அடக்க முடியல.  இந்த மாதிரி ஒவ்வொரு டயலாக்கும் படத்துல நகைச்சுவை தான்.

நயன்தாரா இந்த படத்துடன் தன் கலை உலக சேவையை நிறுத்திக்கொள்ளலாம். அவருடைய முகமும் ஹேர் ஸ்டைலும் பார்க்க சகிக்கவில்லை. யுவனின் இரண்டு பாடல்கள் மட்டுமே இதில் ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசையில் அவருக்கு சரியான வேலை இல்லை படத்தில். பழைய திரைப்படத்தின் பாடல்களையே நிறைய இடத்தில நகைச்சுவைக்காக பின்னணியில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் இயக்குனரான ராஜேஷின் முதல் படமான சிவா மனசுல சக்தியை விட இதில் காமடி நிரம்பி வழிகிறது. அந்த படத்தில் நடித்த ஜீவா கூட இதில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து மனசை அள்ளுகிறார். அதுவும் சிவா மனசுல சக்தி படத்தில் வருவது போன்ற அதே வாய்ஸ் மொடுலேசனில் நயன்தாராவின் அப்பாவை பார்த்து “மாமா அப்டியே ஒரு கோட்டர் சொல்லேன்”னு சொல்லி ஸ்கோர் பண்ணிவிடுகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் கண்டிப்பாக நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களால் மட்டுமே ரசிக்க முடியும்.