பாலு மகேந்திரா – முதலும், கடைசியும்.

 

Balu Mahendra

“நல்ல கவிதை என்பது ஒரு காகிதத்தில் எழுதப்பட்டாலும், டாய்லெட் திஸ்யூ பேப்பரில் எழுதப்பட்டாலும் அது நல்ல கவிதை தான். எதில் அது எழுதப்பட்டு உள்ளது என்பது முக்கியம் அல்ல.”

“விலையுயர்ந்த காமிரா என்பதால் அது தானாகவே ஒரு சிறந்த படத்தை எடுத்துவிட முடியாது. அதை கையாளும் படைப்பாளிதான் தான் முக்கியம்.”

பாலுமகேந்திராவின் இந்த வார்த்தைகள் நிச்சயம் படைப்புலகத்தில் பொன்னேட்டில் பதிக்கப்படவேண்டியவைகள். இதைவிட ஒரு படைப்பாளிக்கு ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளை யாரேனும் கூறிவிட முடியுமா என தெரியவில்லை. என் வாழ்நாளில் நான் படித்த முக்கிய வரிகளில் இதுவும் அடங்கும்.

அஜயன் பாலா அவர்களின் திருமணத்தின் போது தான் நான் முதன் முறை பாலுமகேந்திராவை பார்க்கிறேன். கடைசியும் அதுவே. தி-நகரில் ஒரு ஹோட்டலில் நடந்த அந்த திருமணதிற்கு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். பாலுமகேந்திரா தான் தலைமை ஏற்றி நடத்தி வைப்பதாக இருந்தது. ஏழு மணிக்கு துவங்கவேண்டிய திருமணத்திற்கு நானும் நண்பரும் ஆறரை மணிக்கே அங்கு சென்றிருந்தோம்.  ஆனால் அப்போது அங்கு புகைப்படக்காரர்கள் தவிர வேறு யாருமில்லை. ஒரு சிலர் திருமணம் நிகழும் அறையை தயார் செய்துக்கொண்டு இருந்தனர். அவ்வளவே.

சரியாக  ஐந்து நிமிடம் கழிந்து இருக்கும், கட்டம் போட்ட சட்டை, ஜீன்ஸ், கண்ணாடி மற்றும் தனது ட்ரேட்மார்க் தொப்பியுடன் உள்ளே நுழைந்தார் பாலுமகேந்திரா. மாப்பிள்ளை, மணமகள்  கூட அப்போது அங்கு வந்து சேரவில்லை. அவசர அவசரமாக அவரை வரவேற்று உள்ளே அழைத்துசென்று இருக்கையில் அமரவைத்தோம். இந்த வயதிலும் அதிகாலை எழுந்து, அனைவருக்கும் முன்னே கிளம்பி வந்து சேர்ந்த அந்த மனிதரின் நேரம் தவறாமை ஆச்சர்யம் அளித்தது. படைப்பாளி என்பதை தாண்டி அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். படித்திருக்கிறேன். ஆனால் அதை நேரில் பார்க்கும்போது பன்மடங்கு அவர் மேல் மதிப்பு கூடியது.

யாரும் அப்போது வந்து சேரவில்லை என்பதால் அவர் தனியாகவே நீண்ட நேரம் முன்வரிசையில் அமர்ந்து இருந்தார். பாலுமகேந்திராவை நேரில் சந்தித்து ஒரு முறையாவது பேசமுடியாதா என்று நிறைய பேர் இருக்கும் சூழ்நிலையில்  இப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது எவ்வளவு பெரிய பாக்கியம்? ஆனால் அவரிடம் நான் எதுவும் பேசவில்லை. பேச நிறைய இருந்தும் அவர் மேல் இருந்த பிரமிப்பில், அவர் எளிமையின் ஆச்சர்யத்தில் நான் அப்போது மூழ்கிப்போய்இருந்தேன்.  அவரை தொந்தரவு செய்யவேண்டாமென சற்று தள்ளி நின்று என் காமிராவில் அவரை புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டேன். காமிரா கவிஞரை நான் என்னுடைய காமிராவில் பதிவு செய்வதை விட வேறு என்ன பெரிய பாக்கியம் அந்த சூழ்நிலையில் எனக்கு கிட்டிவிடப்போகிறது?. அவர் கண்களை மூடியபடியே நீண்ட நேரம் அமைதியாய் அமர்ந்து இருந்தார்.

குறித்த நேரத்தைவிட்டு சற்று தாமதமாகத்தான் திருமணம் தொடங்கியது.  திருமண நிகழ்வின் போது மணமேடைக்கு அழைத்து அவர் அமரவைப்பட்டார். மைக்கில் ஒவ்வொருவராய் வந்து மணமக்களை வாழ்த்தி பேசிக்கொண்டு இருந்ததை  பொறுமையாய் கடைசி வரை கேட்டுக்கொண்டு இருந்தார். அவரும் பேசினார். திருமணம் நிகழ்வு முடிந்ததும் அனைவரும் உணவு விருந்திற்கு அழைக்கப்பட்டனர். இருக்கையில் இருந்து எழுந்து மேடையில் இருந்து இறங்க ஆயத்தமானார் பாலுமகேந்திரா. மேடையில் இருந்து தனியாக இறங்குவதற்கு அவர்  சிரமப்படுவதை பார்த்ததும் ஓடிச்சென்று கை கொடுத்து கீழே இறக்கிவிட்டேன்.

“ரொம்ப நன்றி தம்பி” என்றார்.

“பரவாயில்லை சார். இந்தபக்கம் தான் பந்தி. உணவருந்தலாம் வாங்க.” என்று அவரை அழைத்துச்செல்ல முற்பட்டேன்.

“தம்பி.,,,,, தப்பா நெனச்சிக்காதீங்க.,,, நேரம் ஆச்சு. சேரன் படத்தோட ஆடியோ வெளியீட்டுக்கு பத்து மணிக்கு போகணும். மணி இப்பவே ஒன்பது. இப்போ போனா தான் சரியா இருக்கும். சாப்பிடாமா போறேன்னு எதுவும் நெனச்சிச்காதிங்க தம்பி..” என்று மெல்லிய குரலில் மிகப்பொறுமையாய் குழந்தைபோல பதிலளித்து விடைபெற்றார்.

இவ்வளவு விளக்கம் என்னிடம் அவர் சொல்லி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது மட்டும் இல்லாமல் சேரனின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவருடைய முனைப்பு, நேரம் தவறாமை, அதுவும் இந்த வயதில்!!!  பாலுமகேந்திரா ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்பதை தாண்டி ஒரு மிகச்சிறந்த மனிதராய் என் மனதில் அப்போது ஊடுருவினார். இவ்வளவு எளிமையான ஒரு லெஜன்ட்’ஐ உண்மையில் காண மூடியுமா என்று தெரியவில்லை. எனக்கு ஆச்சர்யம் விலக சில நிமிடங்கள் பிடித்தது.

திடீரென பாலுமகேந்திரா உடல்நல குறைவு காரணமாக இறந்துவிட்டார் என இணையத்தில் படித்த அடுத்த நொடியே அது வதந்தியாகத்தான் இருக்கும் என வேண்டிக்கொண்டு அஜயன் பாலாவிற்கு போன் செய்தேன். “அது உண்மை தான் பிரவீன். அவருடைய வீட்டில் தான் இருக்கிறேன்” என்று சொன்னபோது மனம் கனத்தது.

அன்று தான் நான் பாலுமகேந்திராவுடன் பேசப்போகும் கடைசி தருணம் என்று தெரிந்திருந்தால் சத்தியமாய் அந்த சந்தர்பத்தை தவறவிட்டிருக்க மாட்டேன். நிறைய உரையாடி, ஒரு புகைப்படமாவது அவருடன் எடுத்து இன்னும் கொஞ்சம் நியாபகங்களை திரட்டி என்னுள் பொக்கிஷமாய் சேர்த்து வைத்திருந்திருப்பேன்! அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்!