ரூபாய் 85இல் பாங்காக் – சமர் விமர்சனம்

Vishal-Trisha-Samar

“ஈவனிங் ப்ரீயா பிரவின்? உங்களை மீட் பண்ணனும்” நண்பர் ஒருவர் போன் செய்தார்.

“இல்ல பாஸ், நான் ஈவனிங் சமர் படத்துக்கு போறேன். நீங்க வர்றீங்களா?”

“அலெக்ஸ் பாண்டியன், சமர், கண்ணா லட்டு தின்ன ஆசையா. இப்போதான் இந்த மூணு படத்தையும் இன்டர்நெட்டுல சுடச்சுட டவுன்லோடு போட்டு வச்சி இருக்கேன். நானே நைட்டு தான் பாக்க போறேன். எதுக்குங்க தேட்டர்ல போய் பார்த்துட்டு நூறு ரூபாயை வேஸ்ட் பண்ணிட்டு. அந்த அளவுக்கு மூனும் வொர்த் இல்லைங்க. வீட்டுக்கு வாங்க மூனையும் பென் ட்ரைவில் போட்டு தரேன். அழகாய் வீட்ல போய் சாவகாசமாய் பாருங்க.”

“சமர்” முற்றிலும் பாங்காக் நகரத்தில் எடுக்கப்பட்டதால் வெள்ளித்திரையில் பார்க்கவேண்டும் என்று நண்பரின் சூடான ஆபரை ரிஜக்ட் செய்துவிட்டு திரையரங்கம் சென்றேன். நான் தற்சமயம் தான் பாங்காக் போய்விட்டு வந்ததால் மீண்டும் அதை திரையில் பார்க்க அவா.

படத்தின் கதை ஊட்டியில் சற்று பொறுமையை சோதித்தவாறு தொடங்கினாலும் பாங்காக் சென்ற சில நிமிடங்களிலேயே ஜெட் வேகத்தில் சீறிக்கிளம்புகிறது. தன் காதலியை தேடி பாங்காக் செல்லும் விஷால் அவருக்காக விரிக்கப்பட்ட ஒரு வலையில், சிக்கி தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒரு குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். அவரது அடையாளம் மாற்றப்படுகிறது. அங்கு அவரை கொன்றுவிட பலர் துடிக்கின்றனர், அவருக்கு உதவிட திரிஷா உட்பட பலர் வருகின்றனர். ஒரு கட்டத்தில் அனைத்தும் நாடகம், அனைவரும் நடிகர்கள் என்று தெரியவரும்போது எதற்காக இது நடக்கிறது? யார் இதை நடத்துகிறார்கள்? அதிலிருந்து விஷால் எப்படி தப்பிக்கிறார் தான் கதை.

சுவாரசியமான கான்செப்ட், விறுவிறுப்பான கதை என்றாலும் இடைவேளையின் போது வில்லன்கள் இருவரும் வந்தவுடன் ஹை பிச்சில் எகிற வேண்டிய திரைக்கதை அடிக்கடி எரிச்சல் ஊட்டஆரம்பிக்கிறது.  பல இடங்களில் சுத்தமாய் லாஜிக் இல்லாத காரணத்தினால் சோர்வடையவைக்கிறது. ஆர் ஆசியா விமானத்தில் உள்ள பணிப்பெண்கள் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத வேறொரு விமான சேவை கம்பனியின் உடுப்பு. ப்ரி க்ளைமாக்சில், இறந்துவிடுவோம் என்று தெரிந்தும் விஷாலிடம் உண்மையை சொல்லி தப்பிக்க நினைக்காத திரிஷா. சொதப்பலான க்ளிமாக்ஸ் என சொல்லிக்கொண்டே போகலாம்.

பத்து வருடமாய் தமிழ் சினிமாவில் பார்த்துக்கொண்டிருந்தாலும் இன்று புதிதாய் அவிழ்ந்த மலர் போல அரிதாரத்தின் உதவியுடன் பிரஷ்ஷாக இருக்கிறார் த்ரிஷா.  சுனைனா சிறிது நேரமே வந்தாலும் டபுள் ஓகே. பாடல்கள் யுவன் என்பது எனக்கு கடைசிவரை சந்தேகமே. இந்த படத்துக்கு இது போதும் என விட்டுவிட்டரோ என்னவோ. பின்னணி இசை கூட தமன் தான் செய்திருக்கிறார்.

எங்கடா இன்னும் பஞ்ச் பேசலையே என்று நினைத்தால் க்ளைமாக்சில் அந்த குறையை நிறைவேற்றுகிறார் விஷால். படம் முழுக்க நிறைய செலவு செய்து எடுத்து விட்டு அந்த க்ளைமாக்ஸ் மட்டும் லோ பட்ஜெட் பிலிம் போல் நம்ம ஊரில் கூட்டம் இல்லாத ஒரு வறண்ட பீச் பகுதியில் எடுத்து போல் சொதப்பி இருக்கிறார்கள். தென் தாய்லாந்து பகுதில் இருக்கும் ஏதேனும் தீவு பகுதிக்கு சென்றிருந்தால் ஒரு ரிச் லுக் கிடைத்து இருக்கும். திராத விளையாட்டு பிள்ளை எடுத்த டைரக்டர் திரு நிச்சயம் இந்த படத்தில் மூலம் ஒரு படி மேலே போயிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு புது களத்தில் எடுக்கப்பட்ட ஒரு புது த்ரில்லர் முயற்சி தான் இந்த சுமார்… சாரி சமர்.

Dinner in the Sky of Bangkok

நான் பாங்காக் சென்ற போது பான்யன் ட்ரீ ஹோட்டலின் அறுபத்தி ரெண்டாவது மாடியில் ரூப் டாப் ரெஸ்டாரன்ட்டிற்கு சென்றிறுந்தேன். மாலை மாங்கும் நேரத்தில் அந்த வானளாவிய உயரத்தில் இருந்து பாங்காக் அழகை காண்பது உண்மையிலேயே மிகச்சிறந்த அனுபவம். அதே இடத்தில் , படத்தின் முக்கியமான ஒரு பகுதியில். அதாவது வில்லனும், திரிஷாவும் அமர்ந்து கதைக்கான ட்விஸ்ட்டை ஓபன் செய்யும் காட்சி படமாகப்பட்டு இருக்கிறது. சுவர்ணபூமி விமான நிலையத்தில் டெர்மினல். “சுவாதிகாப்” என வரவேற்கும் தாய் மொழி. அந்த சப்பை மூக்கு மனிதர்கள். பாங்காக் வீதிகள் என அந்த பயணத்தை நியாபகப்படுத்தியதால், வெறும் 85 ரூபாயில் மீண்டும் பாங்காக் சென்ற வந்த அனுபவமாக இந்ததிரைப்படம் இருந்தது.

சுவர்ணபூமி விமான நிலையம் – தாய்லாந்து பயணம் 2

suvarnabhumi-airport

விடியற்காலை மூன்று முப்பது மணிக்கு பாங்காக் “சுவர்ண பூமி” விமான நிலையத்தை வந்தடைந்தோம். என்னது… “சுவர்ண பூமியா”?!!!  தமிழ் பெயர் மாதிரி இருக்கே. உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது.   “ஸ்வர்ண பூமி”  என்றால் “தாய்” மொழியில் தங்க நிலம், தங்க நாடு  என்று அர்த்தமாம்.  அது சம்ஸ்கிருத வார்த்தை எனினும், அந்த கணத்திலேயே  அந்த “தாய் மொழி”க்கும்,  நம் “தாய்” மொழிக்கும்  உள்ள ஒற்றுமைகள்  ஒவ்வொன்றாக புலப்பட ஆரமித்தது. அந்த விமான நிலையத்தில்  கீழே இறங்கி கால் வைத்ததுமே ஏதோ ஒரு புது உலகத்தில் நுழையவிருக்கிறோம் என்று அதன் பிரமாண்டம் பறைசாற்றியது.

உலகின் மிகவும் பிசியான விமான நிலையத்தில் ஒன்றான இது உண்மையிலேயே மிகவும் பிரமிக்கவைக்கும் உட்கட்டமைப்பை கொண்டிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் அங்கு விமானம் வந்து இறங்கிக்கொண்டு இருந்தது. அடுத்து இமிக்ரேஷன் பிரிவுக்கு நுழைந்தோம். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அங்கு சென்று இறங்கியதும் விசா வாங்கிக்கொள்ளும் “ஆன் அரைவல்” விசா வசதி இருந்தது. அது முன்னமே தெரிந்திருந்தும் நாங்கள் ஏற்கனவே இந்தியாவில் விசா ஸ்டாம்ப் செய்துவிட்டே புறப்பட்டு இருந்தோம். இதற்கே ஒவ்வொருவருக்கும்  ஐநூறு ரூபாய்க்கு மேல் அதிகம் செலவாகி இருந்தது.  இதை ஒரு முன்னெச்சரிக்கைக்காக செய்திருந்தோம்..

suvarnabumi airport immigration check

புறப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், நாங்கள் விமான டிக்கெட் பதிவு செய்ய முடிவெடுத்த ஒரு நாளில் திடிரென அந்த செய்தியை படிக்க நேர்ந்தது. அதாவது தாய்லாந்தில் உள்ள கிளர்ச்சியாளர்கள், பாங்காக் நகரத்தில் அன்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தி பெருத்த சேதத்தை, உயிர் இழப்பை ஏற்படுத்தி இருந்தனர். இன்றும் கூட தாய்லாந்து முழுவதும், அதுவும் குறிப்பாக பாங்காக் நகரம் கிளர்சியார்களின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கலாம், அபாயமணி அடிக்கப்படலாம் என்ற சூழ்நிலை. ஒருமுறை சுவர்ணபூமி விமான நிலையத்தின் இயக்கத்தை கூட ஸ்தம்பிக்க வைத்ததாக அப்போது படித்ததாய்  நியாபகம்.

அதுவரை அமைதி நிலவரம் தெரிந்த அந்த நாட்டில், நாங்கள் செல்ல முடிவெடுத்த தருவாயில் தோன்றிய அந்த அச்சுறுத்தல் காரணமாக எங்களுடன் வரவிருந்த ஒரு நண்பன் திடீரென பின்வாங்கினான். மரணம் தான் விதியெனில் அது நம்மூரில் கூட நிகழ்ந்துவிடும், அங்கு சென்று தான் இறக்கவேண்டும் என்பதில்லை என்ற என் தத்துவம் அவன் உயிர் பயத்தின் முன் எடுபடவில்லை. கடைசியில் அவனை விட்டு விட்டே டிக்கெட் பதிவு செய்தோம். அந்த சமயம் முதல்  தாய்லாந்தில் நடைபெறும் முக்கிய விஷயங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தேன். .

praveen in suvarnabumi airport

அங்கு சென்று விசா எடுக்கும் சட்டதிட்டங்கள் மாற்றப்படுவதாக ஆலோசனை நடைபெறுகிறதென  ஒரு நாள் செய்தி வந்தது. அதுமட்டும் இல்லாமல் அங்கு சென்று விசா எடுக்கும் போது குறைந்த பட்சம் இருபதினாயிரம் தாய் பாத் (தாய்லாந்து கரன்சி) கையில் இருக்க வேண்டும் அல்லது ஐநூறு அமெரிக்க டாலர் இருப்பதாய் பாஸ்போர்ட்டில் பதிவித்திருக்க வேண்டும். அங்கு சென்று இறங்கியதும், நாங்கள் எடுத்து செல்லும் டாக்குமென்ட்டிலோ, மற்ற விஷயங்கலிலோ  ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் விசா ஸ்டாம்ப் ஆகாது. உடனடியாக அடுத்த ப்ளைட்டில் திரும்ப வேண்டியது தான். அது மட்டுமல்லாமல் பிசியான நேரங்களில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை விசாவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். எதற்கு வம்பென்று புறப்படும் முன் இந்தியாவிலே விசா குத்தியாயிற்று!

இமிக்ரேஷன் பகுதியில் வரிசையில் நின்று செல்கிறேன். என்னுடைய பாஸ்போர்ட்டை ஆராய்ந்த ஒரு ஆபிசர் என்னையும் என் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தையும் மாற்றி மாற்றி சில முறை பார்த்தார்.  அவர் கண்களில் ஒரு டெரர் தெரிந்தது. அடிக்கடி நான் கெட்டப் மாற்றுவதில் உள்ள சிக்கல் தான் அது என்று நினைக்கிறேன். மறுபடியும் என்னையும் அவர் கணினியையும் மாற்றி மாற்றி பார்த்தார். சரி அடுத்த ப்ளைட்டில் சென்னை கிளம்ப சொல்ல போகிறாரா,  இல்லை அவர் பார்வையே அப்படி தானா என்று நான் யோசித்துகொண்டிருக்கும் போதே அங்கிருந்த காமிரா என்னை பார்த்து கண்ணடித்தது. தாய்லாந்தில் நுழையும் ஒவ்வொருவரின் முகமும் பதிவு செய்யப்பட்ட பிறகே அங்கே அனுமதிக்கப்படுகின்றனர்.

praveen in suvarnabumi airport

ஒரு வழியாய் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு  போகலாம் என்று சொன்னார்.  இமிக்ரேஷன் பார்மாலிட்டி முடித்து, லக்கேஜை கலெக்ட் செய்துக்கொண்டோம். கிலோ மீட்டர் கணக்கில் நீண்டு இருப்பது போல் நடக்க நடக்க முடிவில்லாமல் போய் கொண்டிருந்தது அந்த அரைவல் டெர்மினல். அந்த விடியற்காலையில் கூட  நிறைய ஐரோப்பியர்கள் வந்து இறங்கிக்கொண்டு  இருந்தனர். எங்கு நோக்கிலும் வெள்ளைத்தோல் மனிதர்கள். சீலை, சுடிதார், தாவணிகள் முற்றிலும்  மறைந்து இப்போது வெறும் அரைக்கால் சட்டையும், அரைகுறை ஜீன்ஸ், டீ-சர்ட்டு மட்டுமே தென்பட அரமித்தது.  அதை மீறி கருப்பாய் ஏதேனும் மனிதஉருவம் தென்பட்டால் அது அவர்களுடைய நிழலாக இருக்கும் அல்லது ஏதேனும் முகம் பார்க்கும் கண்ணாடியாக இருந்திருக்கும். அந்நிய தேசத்தில் நுழைந்ததற்கான முதல் அறிகுறி அது.

முதல் வேலையாய் கையில் இருக்கும் டாலரை, தாய்லாந்து கரன்சியாக மாற்ற வேண்டும். நாங்கள் புறப்படும் போது, நம் இந்திய பணத்தை அமெரிக்க டாலராய் தான் மாற்றி எடுத்துப்போய் இருந்தோம். அங்கு இறங்கியவுடன் செலவு செய்வதற்கு போதிய அளவில் தாய்லாந்து பணம் கையில் இல்லை. தாய்லாந்து கரன்சி இந்தியாவில் சரியான ரேட்டில் கிடைப்பது போல் தெரியவில்லை. அதாவது நம் இந்திய ரூபாய்க்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் தான் ஒரு தாய்லாந்து ரூபாய் இங்கே கொடுக்கிறார்கள். ஆனால் 1.75 ரூபாய்க்கே (Approx) ஒரு தாய்லாந்து பாத் நமக்கு வர வேண்டும். அப்போ பல ஆயிரம் ரூபாய் இங்கேயே மாற்றினால் நமக்கு எவ்வளோ இழப்பு ஏற்படும்?

ஏர்போர்ட்டிலேயே பல வங்கிகள் கரன்சியை மாற்றும் சேவை செய்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொரு முக்கிய கரன்சிக்கான விலையும் அவர்களது கவுண்டரில் டிஜிட்டல் போர்டில் காட்டிக்கொண்டு இருந்தது. ஆனால் டாலருக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட  சுமார் மூன்று தாய் பாத் வரை குறைவாகவே காணப்பட்டது. நீண்ட தூரம் நடந்தோம். அனைத்து கரன்ஸி எக்ஸ்சேஞ் கவுண்டரையும் பார்வையிட்டோம். அதே விலை தான். ஒரு சிறிய தொகையை, அன்றைய ஒரு நாள் செலவிற்கு ஆகும் அளவுக்கு மட்டும் அப்போது மாற்றுவதாய் முடிவு செய்யப்பட்டது. அது உண்மையிலே அருமையான முடிவு என்று பிறகு உணர்தோம். விமான நிலையத்தில் பணம் மாற்றினால் நமக்கு பெருத்த நட்டமே. அதை பற்றி பிறகு பேசுகிறேன்.

praveen in suvarnabumi airport

அடுத்து மொபைல் கனக்சென். எனக்கு கால் கட்டணத்தை விட, 3G கவரேஜ் மற்றும் டேட்டா தான் முக்கியம். இணையத்தில் மிகக்குறைந்த கட்டணத்தில் பேச யுக்திகள் இருக்க, எதற்கு ஐ.எஸ்.டி போட்டு அதிக கட்டணத்தில் இந்தியாவிற்கு அழைக்க வேண்டும்? எந்த மொபைல் நிறுவனம் அங்கே சிறந்த சேவை வழங்குகிறது, அதுவும் குறிப்பாக நாங்கள் செல்லும் அனைத்து பகுதிகளுக்கு கவரேஜ் இருக்கிறதா, 3G இருக்கிறதா என ஏற்கனவே இணையத்தில் ஆராயப்பட்டு முடிவு செய்தாயிற்று. சிம் கார்ட் வாங்குவது மட்டும் தான் பாக்கி. நண்பர் ஒருவர் கரன்ஸி மாற்றும் வேலையை கவனிக்க, நான் A.I.S மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் கவுண்டரை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். இரண்டு அழகிய இளம்பெண்கள் என்னை வரவேற்க புன்னகையுடன் தயாரானார்கள்.

அருகே சென்றதும், “சுவாதி காம்” என்று என்று நீட்டி முழக்கி அவர்கள் என்னை நோக்கி கூறியது ஏதோ ராகத்தில் பாடுவது போல் இருந்தது. அவர்கள் மொழியில் அதற்கு அர்த்தம்  “காலை வணக்கம்”. தாய் மொழியின் முக்கிய வார்த்தைகளை உச்சரித்துக்காட்டி, கூடவே  அதன் ஆங்கில அர்த்தத்தை விளக்கும் சில ஆன்டிராயிட் மென்பொருள்களை என் மொபைல் போனில் தரவிறக்கி வைத்திருந்தேன். சிலது ஞாபகமும் இருந்தது. இசையை கேட்பது போல் மிகவும் லயமான மொழி அது. அவர்கள் பேசக்கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. ஒரு பாஸ்போர்ட் நகல், கொஞ்சம் பணம், நிறைய மொழி பரிவர்த்தனைகள்  – ப்ரீ ஆக்டிவேட்டட்  சிம் கார்ட் ரெடி.

இப்போது பாங்காக் வானம் விடிந்துக்கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் வெளியே செல்லப்போவதில்லை. அடுத்த ஒரு மணிநேரத்தில், சுமார் ஏழு மணிக்கு அங்கிருந்து இன்னொரு விமானத்தின் மூலம் புக்கெட் தீவு செல்லவிருக்கிறோம். நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த கணங்கள். இயற்கை அன்னையின் மடியில் தவழக்கூடிய அந்த நொடிகள். அங்குதான் நிகழப்போகிறது. புக்கட் தீவே.. இதோ வருகிறேன்… உன்னை தேடி ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்து வருகிறேன். இப்படி கண்களை மூடி கனவு கண்டுகொண்டிருக்கையில், திடிரென நான் படித்த அந்த எச்சரிக்கை செய்தி என் மனதில் பளிச்சென்று வந்து போனது.  உள்ளுக்குள் மெல்ல பயம் படர ஆரம்பித்தது. கிளர்சியார்களின் பிரச்சனை போல்  எங்களுக்கு இன்னொரு பிரச்சனைக்கான அறிகுறி அங்கு காத்திருந்தது. அது ஏற்கனவே இதற்கு முன்னர் பல உயிர்களை அந்த தீவுகளில்  காவு வாங்கியுள்ளது .அதுதான் சுனாமி.

– பயணம் தொடரும்

பாங்காக்கில் இருந்து புக்கட் தீவு பயணத்திற்காக விமானம் மேலெழும்புகையில் எடுக்கப்பட்ட வீடியோ இது

 

சுவர்ணபூமி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு:

சேலம் டூ பாங்காக் – தாய்லாந்து பயணம் 1

கடந்த பிப்ரவரி மாதம், ஒரு பின்னிரவில், இணையத்தில் உலா வந்துக்கொண்டிருந்த போது அந்த விளம்பரத்தை எதேச்சையாக பார்த்தேன். “ஏர் ஆசியா” விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து தாய்லாந்தின் தலைநகரான “பாங்காக்”கிற்கு முதன்முறையாக நேரிடையாக விமான சேவையை துவங்கி இருக்கிறது என்றும். குறிப்பிட்ட தேதிக்குள் டிக்கெட் முன்பதிவு செய்தால் “சென்று-வர” கட்டணம் வெறும் பத்தாயிரம் மட்டுமே என இருந்தது. எனக்கு ஆச்சர்யம்!

Air-Asia-online-booking-for-free-tickets

அதற்கு முந்தைய மாதம் தான் கோவையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்று வந்தேன். அதற்கான விமான டிக்கெட் கட்டணம் மட்டுமே பதிமூன்றாயிரத்து சொச்சம். ஆனால் வெறும் பத்தாயிரத்திற்கு “பாங்காக்”  சென்று வர முடியுமா? (கிட்டத்தட்ட சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தூரம் தான் “பாங்காக்”. அது வடக்கே இது கிழக்கே. அவ்வளவுதான். )

பொதுவாக மூன்று மாதத்திற்கு முன்பே விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் அநேகமாக அனைத்து விமான நிறுவனங்களும் கட்டண சலுகை கிடைக்கும். ஆனால் பாங்காக் சென்று வர மிகக்குறைந்த கட்டணம் இது. இந்த வெளிநாட்டு பயண வாய்ப்பை தவறவிட எனக்கு மனமில்லை. சரியாக நேரத்தில் சரியான திட்டம் தீட்டி செயல்பட்டால் சாமானியர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு பயணம் சாத்தியம் என்பது என் கடந்த ஆண்டு இலங்கை பயணத்தில் நான் உணர்ந்த விஷயம்.

இரண்டு நாள் பயணம் அது. கொலம்போ, கண்டி, நிகம்போ, நுவரயிலியா போன்ற இடங்களுக்கு சென்றிந்தோம். மொத்தமாக அதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும் என யூகியுங்கள் பார்க்கலாம்?  வெறும் எட்டாயிரம் சொச்சம். நம்ப முடியிவில்லையா? இது சென்னையில் இருந்து கொலோம்போ சென்று வர விமான டிக்கெட் கட்டணத்தையும் சேர்த்து தான். தலைசுற்றினால் நீங்களே அதை பிடித்து நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில்  அதுதான் உண்மை.

ஆனால் இப்போது இன்னும் இரண்டு நாட்களே இருந்தது  பாங்காக் பயண சலுகை முடிய. ஆகவே அவசரமாக இந்த பயணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் அழைப்பு விடுத்தேன்.இரண்டு நாட்கள் என்பது மிகக்குறைந்த நேரம் என்பதால் விருப்பம் இருந்தும் முடிவெடுக்க முடியா சூழலில் பலர் இருந்தனர்.

“பாஸ்போர்ட் இல்ல மச்சான். ரெண்டு நாளில் எடுக்க முடியுமா?”….

“டிக்கெட் பதிவு பண்ணினதுக்கு அப்புறம் பொறுமையா பாஸ்போர்ட் எடுக்கலாமா?” என்று ஆர்வத்தில் கடுப்படித்தனர் சிலர் .

அது கூட பரவாயில்லை “ அந்த நாட்டிற்க்கு செல்ல பாஸ்போர்ட் தேவையா?” என்று ஒருவன் கேட்டபோது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இப்போதிருக்கும் நிலைமையை பார்த்தால் எப்படியும் நான் தனியாகத்தான் பாங்காக் செல்வதுபோல் இருந்தது. ஆனால் அதற்கும் நான் தயாராகத்தான் இருந்தேன். காரணம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ் என்னுடைய  பிஸினஸ் கிளைன்ட் ஒருவர் என்னை அங்கு வேலை நிமித்தமாக சில வாரங்கள் அழைத்திருந்தார். முழுக்க அவர்களின் செலவில் வந்த பயணஅழைப்பு அது.

அப்போது அங்கு இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடப்பதாக சொல்லப்பட்ட சூழல். “எனக்கு வயது மிகவும் குறைவு, இன்னும் திருமணம் ஆகவில்லை, இதற்கு முன்னர் வெளிநாடு பயணம் மேற்கொண்டதில்லை” என்ற சில அபத்தமான காரணங்களால் என்னுடைய பிசினஸ் விசா டெல்லியில் உள்ள ஆஸ்திரேலியா கான்சுலேட் நிராகரித்து விட்டது. அது பழைய கதை என்றாலும் எனக்கு இப்போது என்னுடைய பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்ப் தேவைப்பட்டது. அடுத்த முறை ஆஸ்திரேலியா பயணிக்க வாய்ப்பு வரும்போது அதற்கு ஏதுவாக இருக்கும்.

இப்படி இருந்த சூழலில் திடிரென என் கல்லூரி நண்பனிடம் இருந்து ஒரு போன்.

“உன் ஈமெயில் பார்த்தேன், நானும் என்னுடைய நண்பர்கள் இருவரும் தாய்லாந்து செல்லவேண்டும் என்று  சில வாரங்களாக  பிளான் செஞ்சிட்டு இருந்தோம். சாதரணமாக பாங்காக் செல்ல விமான கட்டணம் மட்டும் இருபதாயிரம் மேலாகும். இது நல்ல ஆப்பர் தான். நாங்களும் வருகிறோம்” என்றான்.

அனைவரும் பேசி முடிவெடுத்து எல்லோருக்கும் ஏற்ற வகையில் மே மாத நடுவில் “ஒரு வார” பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்தோம். அதே மாதத்தில் மற்ற தேதிகளில் வெறும் “எட்டாயிரத்திற்கு” கூட சென்று வர அப்போது டிக்கெட் இருந்ததது. ஆனால் அந்த தேதி எங்களுக்கு தோதாக இல்லை. ஒருவழியாக இப்போது டிக்கெட் முன்பதிவு செய்தாயிற்று.

பயணத்தின் ஒரு பகுதியாக எப்படியாவது “புக்கெட்” தீவு சென்றுவிட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். புக்கெட், இது தாய்லாந்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள அந்நாட்டின் மிகபெரிய தீவாகும். சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய பிறந்தநாளின்போது என்னுடைய குடும்பத்தினரை என் ஊரான சேலத்தில், ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு இரவு விருந்திற்காக அழைத்துச்சென்றேன்.

அப்போது  உணவுகளை ஆர்டர் செய்தபோது  மெனுவில் “புக்கட் பிஷ்” என்று போட்டிருந்த மீனை பரிந்துரை செய்தார் அங்கிருந்த சிப்பந்தி ஒருவர்.  ஒரே ஒரு உள்ளங்கை அளவு் ஸ்லைஸ் செய்த மீன் துண்டு வந்தது. நல்ல சுவை. ஆனால் விலை நானூறு சொச்சம் இருந்தது. அது என்ன புக்கெட் மீன் என வீட்டிற்கு வந்த பின் தேடியபோது தான் புக்கெட் என்ற தீவை பற்றி எனக்கு பரிச்சியம்  கிடைத்தது.

“பாங்காக்”கில் இருந்து புக்கெட் தீவு சுமார் எண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சாலை வழியாக பயணம் செய்தால் பதிமூன்று  மணி நேரம் ஆகும். விமானத்திலோ வெறும் ஒன்னரை மணி நேரம் தான். சாலை வழியே பாங்காங்கில் இருந்து புக்கெட் சென்று மீண்டும் திரும்பலாம் என்றால் அது பல பயணசிக்கல்களை ஏற்படுத்தும்.. விமானப்பிரயாணமே சிறந்த வழி என முடிவு செய்து அதற்கும் முன்பதிவு செய்தோம். அதே “ஏர் ஆசியா” நிறுவன விமானம்.  போய் வர மேலும் ஒருவருக்கு டிக்கெட் செலவு ஐயாயிரம் ரூபாய். மூன்று நாட்கள் புக்கெட். இரண்டு நாள் பட்டாயா. கடைசி இரண்டு நாள் பாங்காக். இது தான் ஆரம்பக்கட்ட யோசனை.

ஆனால் அங்கு சென்ற பின் எங்கு  தங்குவது? எங்கு சுற்றி பார்ப்பது? எல்லாவற்றிக்கும் மேலே எவ்வளவு செலவாகும்?  எங்களிடம் எந்த தெளிவான பயணதிட்டமும் அதுவரை இல்லை.   ஆனால் பயணத்திற்கு இடையில் இன்னும் மூன்று மாதம் முழுசாய்  இருந்தது.

“மேக் மை ட்ரிப்”, “கிளியர் ட்ரிப்” போன்ற பயண சேவை நிறுவனங்களின் பேக்கேஜை தேடிப்பிடித்து பார்த்தோம். எதுவும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர்களிடம் எனக்கு என்ன பிரச்சனை என்றால் அவர்களாகவே சில இடங்களை தேர்வு செய்து ஒரு லிஸ்ட் வைத்து இருக்கிறார்கள்.. அவர்களிடம் புக் செய்த அனைவரையும் ஏதோ ஒரு வாகனத்தில் ஒன்றாக ஏற்றி ஒவ்வொரு சுற்றுலா தளங்களுக்காகாக அழைத்து சென்று கூட்டி வருவர். . அவர்கள் சொல்லும் நேரத்தில் நாம் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் கூட்டிப்போகும் இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும்.  அவர்கள் தங்க வைக்கும் இடங்களில் நாம் தங்க வேண்டும்.

எனக்கு முழுக்க முழுக்க Flexibility தேவைப்பட்டது.  மந்தையில் செல்லும் ஆடு போல் தினமும் காலை சென்று மாலை திரும்பி,  “நானும் தாய்லாந்து சென்றேன் “ என்று நம் மக்களுடன் கூறி பெருமைபடுவதில்  எனக்கு விருப்பமில்லை. . அதுமட்டுமல்லமால் அவர்கள் வாங்கும் மூன்று நாள் பட்டாயா பாங்காக் பாக்கேஜ் கட்டணத்தில் நாங்கள் அதற்கும் மேல் புக்கெட் தீவிற்கு சென்று மொத்தமாக ஒரு வாரம் செலவு செய்ய முடியும்.

இதற்காக அந்த ஒரு விஷயத்தில் தெளிவாய் இருந்தேன்.  நேரத்தை வீணாக்காமல் கூடுமான இடங்களுக்கு செல்ல வேண்டும்.  நாமே திட்டம் தீட்டினால் தான் இது முடியும். ஒரு ஊருக்கு சுற்றுலா சென்று திரும்பினால் “அடடே இதை பார்க்காமல் வந்து விட்டோமே “ என்று பின்னர் எண்ணி வருத்தப்படாத அளவு அந்த பயணம் இருந்தால் போதும். ஆனால் இதை எப்படி சாத்தியப்படுத்துவது .

“கூகிள் கடவுள்  இருக்க பயமேன்?”.  நாங்கள் பயணிக்கவிருக்கும்  அனைத்து இடங்களிலும் பார்த்தே தீரவேண்டிய விஷயங்களை  கூகிளில் ஆராய்ந்து பட்டியலிட்டேன். அந்த இடங்களை பற்றி மேலும் கூடுமானவரயிலான தகவல்களை தேடிபிடித்து படித்தேன் . மற்றவர்களின் பயனகட்டுரை, அனுபவங்கள் மூலம் முக்கிய தகவல்கள் அறியப்பெற்றேன்.  தேவையான இடங்களின் புகைப்படங்களையும்  ரெபரன்சிர்க்கு அந்த இடங்களின் காணொளிகளையும் கண்டேன். நாங்கள் அங்கு தங்கும் நாட்களில் எந்த இடங்களை/விஷயங்களை பார்க்கமுடியும் என்று அந்த பட்டியலை திருத்தி குறைத்தேன்.

தங்குவதற்கு சிறந்த நட்சத்திர ஹோட்டல்களை யூசர் ரேட்டிங் மூலம்  தேர்வு செய்தேன். மொத்தத்தில் பயணம் ஆரம்பம் ஆகாமலே அனைத்து இடங்களும் எனக்கு அத்துப்படியானது. நேரில் சென்று அதை அனுபவிப்பது தான் பாக்கி. பல நாட்களின் கடின உழைப்பில் இப்போது கச்சிதமான எங்களின் பிராயணத் திட்டம் தயாராகியிருந்தது. அதாவது முதல் நாள் ஆரம்மித்து கடைசி நாள் வரை நாங்கள் எத்தனை மணிக்கு, எங்கு செல்ல வேண்டும், எங்கு தங்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்ற தெளிவான பிரியாணதிட்டம் அது.

சென்னையில் உள்ள சிறந்த ட்ராவல் எஜென்சிக்களை நெட்டில் தேடி பிடித்து எங்கள் பிரயாண திட்டத்தை அனுப்பி கொட்டேஷன் கேட்டோம்.. அதில் நிறைய பேர் இவ்வளவு நுணுக்கமான பயணதிட்டத்தை தங்களால் செயல் படுத்த முடியாது என ஒதுங்கிகொண்டனர். மூன்று ஏஜென்சி மட்டுமே அதற்கு கொட்டேஷன் அளித்தனர். அதில் ஒரு ஏஜென்சியில் இருந்து ஒரு பெண் போன் செய்தார்.

“சார் உங்களுக்கு அந்த பிரியாணதிட்டம் எப்படி கிடைத்தது? யார் கொடுத்தார்கள்?”

“இல்லை நான் தான் கொஞ்சம் ரிசர்ச் பண்ணி தயார் செய்தேன், ஏன் கேட்கறீங்க?”

“நாங்க கிட்ட தட்ட எட்டு வருஷாமா இந்த டூர் ஏஜென்சி நடத்தி வரோம். இதுவரைக்கும் இப்படி ஒரு துல்லியமான பிரயாணதிட்டத்தை யாரும் கொடுத்ததில்லை.  இந்த நாடு அல்லது ஊர் போகனும்னு சொல்லுவாங்க. நாங்க பிளான் தயார் செய்து கொட்டேஷன் கொடுப்போம். ஆனால் இது ரொம்ப அருமையான பயணதிட்டம். பொதுவாக டூர் ஏஜென்சி அழைத்துப்போகாத பகுதிகள் அதில் இருக்கிறது.  இதை நாங்கள் எங்கள் வாடிகயாளர்களுக்கும் பயன் படுத்திக்கொள்ளலாமா?” என்றார்.

“நிச்சயமாக. ஆனால் எங்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதற்கு கொட்டேஷன் கொடுங்கள்” என்று சிரித்துக்கொண்டே நிபந்தனை விடுத்தேன்.

இப்படி ஆரம்பமாகி இனிதே முடிந்த எங்கள் தாய்லாந்து பயணம் இன்றும் மறக்க முடியா அனுபவங்களை உள்ளடக்கியவை. . வாழ்க்கையில் ஒரு நாளாவது அனைவரும் செல்ல வேண்டிய அந்த இடங்கள், நான் அனுபவித்த அந்த சுவாரசியங்கள், சிலிர்ப்புகள், ஆச்சர்யங்கள், போன்றவைகளை வரும் வாரங்களில் ஒவ்வொன்றாக அசைப்போடப்போகிறேன். நீங்களும் என்னுடன் பயணிக்க தயாராகுங்கள்.

பயணம் தொடரும்.

பி.கு. சென்ற வாரம் “என் விகடன்” பத்திரிக்கைக்காக நான் எழுதிய கட்டுரை இது. அதை தொடராக இப்போது இங்கே எழுதுகிறேன்

“பத்தாயிரத்தில் பாங்காக்” என் விகடன் கட்டுரை

praveen bangkok article

விகடனுக்காக பிரத்தியேகமாக நான் எழுதிய கட்டுரை இந்த வாரம் “என் விகடனில்” வெளியாகியுள்ளது. சில வாரங்களுக்கு தொடர்ந்து அதில் கட்டுரை எழுதக்கேட்டு இருந்தார்கள். என்னுடய தாய்லாந்து பயணத்தை ஐந்து வாரங்கள் எழுதுவதாக உத்தேசித்து தொடரை ஆரம்பித்தேன். முன்னர் அச்சில் வந்துக்கொண்டு,  பிறகு இணையத்தில் மட்டும் காணக்கிடைத்த “என் விகடன்”, எதிர்பாராவிதமாக இந்த வாரத்தில் இருந்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

முதல் பாகம் கட்டுரை முடித்து அனுப்பப்பட்டு இருந்த சூழ்நிலையில் அதை அவசர அவசரமாக முடிவுருமாறு மீண்டும் திருத்தி  அனுப்பினேன். அதாவது கட்டுரையில் தாய்லாந்து பயணத்திற்குள் நுழைவதற்குள்ளாகவே அதை முடிக்க வேண்டியதாயிற்று. பயணத்தை பற்றிய எதிர்பார்போடு முடிக்கப்பட்ட அந்த கட்டுரை முற்றுபெறுமாறு மாற்றியதில் அந்த கட்டுரை ஆசிரியனாய் எனக்கு திருப்தி இல்லை. அடுத்த வாரம் முதல் அந்த கட்டுரையை என்னுடைய இந்த இணையதளத்தில் தொடருவதாக உள்ளேன்.  “என் விகடனில்” வந்த என் கட்டுரையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.

http://en.vikatan.com/article.php?aid=26671&sid=789&mid=32

இரு மாதங்களுக்கு முன்னர் என்னுடய வலைப்பூவும் அதில் எழுதிய கட்டுரையும் விகடனில் வந்த போது நான் எழுதிய அந்த வரிகளை இப்போது நினைவுக்கு வந்து போகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் என் விகடன் அட்டை படத்தில் என் புகைப்படத்துடன் என்னை பற்றி கட்டுரை வந்த போது இல்லாத ஒரு சிலிர்ப்பு இப்போது என் எழுத்தை விகடனில்  காணும்போது கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் “ஆனந்த விகடனிலும்”, “ஜூனியர் விகடனிலும்” அந்த கட்டுரைக்கு வாசகர்களை கவர அவர்கள் கொடுத்த விளம்பரம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.  நிச்சயம்  இதோடு முடியபோவதில்லை விகடனுக்கும் எனக்குமான பந்தம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.