செப்டம்பர் 18, சனிக்கிழமை மாலையன்று “முதன் முறையாக” கோவை சென்று இறங்குகிறேன். காந்திபுரம் பஸ் நிலையம் அருகிலிருக்கும் ஹோட்டல் அலங்கார் என்ற ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில், கோயமுத்தூரில் “முதன் முறையாக” நடைபெறவிருந்த அந்த பதிவர்கள் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டதாலே இந்த பயணம். கடைசி தருணத்தில் முடிவு செய்யப்பட்டு, புறப்படும் அன்று காலை அவசர அவசாரமாக ஒரு ப்ரசன்டேஷன் தாயார் செய்து ஒரு பென் டிரைவில் ஏற்றிக்கொண்டு, சேலத்தில் இருந்து புறப்பட்டேன்.. அதுவும் ஒரு ஒத்திகைகூட இல்லமால் “முதன் முறையாக” என் உரையை நிகழ்த்துவதற்கு. இப்படி பல “முதன் முறையாக” அரங்கேறிய நாளது என்றே சொல்லலாம்….
சரியாக ஏழு மணிக்கு அனைவரும் சுயஅறிமுகம் செய்து கொள்ளப்பட்டு நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அந்த சந்திப்பிற்கு தொழில் / பணிகள் புரியும் பதிவர்கள் சிலர் வந்திருந்தாலும் மாணவர்களே நிறைந்து இருந்தனர். அனைவருக்கும் பதிவுலகில் வெற்றிகரமாக கால்பதிக்கும் ஆர்வம். தங்கள் வலைப்பூவின் மூலம் பணம் சம்பாதிக்கவும், தொழில் முனையவும், தாங்கள் கட்டமைக்கும் மென்பொருள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும், இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள். அனைவரும் பதிவுலகிற்கு புதியது என்பதால் அதில் வெற்றிபெற ஒரு தெளிவான பார்வையை அவர்களுக்கு வகுத்திட நான் தேர்ந்தடுத்த அந்த தலைப்பு “உங்கள் வலைப்பூவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வது எப்படி?”. ப்ரோஜெக்டரில் அவசரத்தில் பிறந்த அந்த ப்ரசன்டேஷன் காண்பிக்கப்பட்டு சுமார் இருபது அல்லது இருபத்தைத்து நிமிடங்கள் என்னுடைய எண்ணங்களை என் அனுபவத்தினூடே பகிர்ந்து கொள்ள முயற்சித்தேன்.
அங்கு வருகை புரியாதவர்களுக்கு இதோ அந்த சந்திப்பிற்காக நான் தாயார் செய்த அந்த ப்ரசன்டேஷன்.
அதற்கடுத்து மீண்டும் அங்கு வந்திருந்த அனுபவமுள்ள பதிவர்களும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். பிறகு அங்கேயே சுவையான அசைவ பப்பெட் உணவு வழங்கப்பட்டு உணவருந்தியவாறே மீண்டும் கலந்துரையாடல் தொடர்ந்தது. சந்திப்பு முடிவு பெறும் முன்னர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த “பிளாக்கர்” லோகோ பதித்த டீ-ஷர்ட் அனைவருக்கும் கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அங்கேயே அந்த டீ-ஷர்ட் உடுத்திக்கொண்டு அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைவரும் அதை உடுத்திக்கொண்டு புகைப்படத்திற்கு தயாராக நின்றபோது நான் மட்டும் அதே உடையுடன் நின்றேன். காரணம்…. அங்குள்ள அனைவரும் “பிளாக்கர்” பயனர்கள், நான் மட்டும் “வோர்ட்பிரஸ்” பயனர் என்பதால் மட்டும் அல்ல. பிளாக்கர் உபயோக படுத்தவேண்டாம் என்று என்னுடைய உரையில் ஆணித்தரமாக நான் கூறியதாலும் அல்ல. டீ-ஷர்ட் அளவு எனக்கு பத்தாது என்று அந்த சயமத்தில் என் சமயோசித புத்தி சிந்தித்ததன் காரணமாகவும் இருந்திருக்கலாம். 🙂
வரவேற்கத்தகுந்த இந்த முதன் “கோவை பதிவர் சந்திப்பு” முழுக்க முழுக்க பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்களின் முயற்சியாலே நடத்தப்பட்டது என்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. இந்த சந்திப்பை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்காக அதனை ஒருங்கிணைத்த மாணவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் வரை பதட்டமாக இருந்தாலும் அவர்களின் முகத்தில் அது தென்படவில்லை. முதன் முதலாய் இதை நடத்துவதால் ஆரம்பம் முதலே பல சிக்கல்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் இருந்தும் கடைசியில் அதை வெற்றிகரமாக நடத்தி முடித்த அந்த மாணவர்களை வாழ்த்தாமல் வர மனம்வரவில்லை. அவர்களின் முயற்சியில் என்னால் இயன்ற பங்கேற்பை செய்ய முடிந்தது என்ற மகிழ்ச்சியோடு அங்கிருந்து விடைபெற்றேன்.