ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது

அது ஒரு அழகிய, அமைதியான ஞாயிற்றுக்கிழமை.. “நாடோடிகள்”ன்னு ஒரு தமிழ் படம் வந்துருக்கு .. சூப்பரா இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க.. நானும் ரெண்டு வாரமா அந்த படத்துக்கு போலாம் போலாம்னு பார்த்தேன் ஆனா நேரமே அதுவரை சிக்கவில்லை. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எப்படியும் பார்த்தடனும்னு ஒரு முடிவோட இருந்தேன். காலைல எழுந்ததும் வீட்ல இருக்கற எல்லாரையும் மதியம் படத்துக்கு போறோம் எல்லாரும் கிளம்பிடுங்கன்னு  சொன்னேன். யாரும் டக்குனு வரலைனு சொல்லிட்டாங்க.. என்ன பண்றது??? படம் சூப்பரா இருக்கு அப்படி இப்படின்னு பில்ட் அப்  கொடுத்து எல்லாரையும் சம்மதிக்க வச்சுட்டேன். எப்போதாவது தான் படத்துக்கு போகிறோம் நல்ல படமா போலாம்னு எடுத்த முடிவு தான் இது.

nadodigal

ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளெக்ஸ் இனையதளத்துக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்தேன். அது பல்திரைகள் கொண்ட ஒரு திரையரங்கம்.. மற்ற திரைகளில் ஓடும் எந்த படமும் நன்றாக இருப்பது போல் தோன்றவில்லை.. நாடோடிகளுக்கு படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என்று ஆவலுடன் பார்த்தேன். அப்பாட டிக்கெட் இருந்தது.. உடனே அவசர அவசரமாக நான்கு டிக்கெட் மதிய காட்சிக்கு முன்பதிவு செய்தேன்.

ஏற்கனவே வீட்டில் லேட்.   மதியம்  2:15 மணிக்கு திரைப்படம் என்று டிக்கெட்டில் போட்டு இருந்தது. மணி இப்போதோ 1:50.. டிக்கெட்டை அச்சிடுவதற்கு கூட நேரம்  இல்லை. என் செல்பேசியில் அந்த டிக்கெட்டின் மின்னஞ்சல் நகல் இருந்தது.   கவுண்டரில் அதை காண்பித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.அவசர அவசரமாக திரையரங்கிற்கு போய் சேர்ந்தால் அதற்குள் மணி 2:10PM

டிக்கெட் கவுண்டர்:
நான்: Excuse me, I’ve booked my tickets thru online for this show. Can I get the original tickets?

பணியாளர்: Yea sure. Can I please have the proof for online reservation?

நான்: Unfortunately, I did not print  the tickets that I received in my email but I’ve that email on my mobile. என் செல்பேசியின் அந்த மின்னஞ்சலை திறந்து காண்பித்தேன். (நேரம் வேறு ஆகிவிட்டது “நாடோடிகள்” இந்நேரம் ஆரம்பம் ஆகி இருக்குமே…)

பணியாளர்: என் செல்பேசியை வாங்கிக்கொண்டார். என்ன மாடல் சார் இந்த மொபைல்?

நான்: (ஆகா. படம் வேற ஆரமிச்சி இருப்பாங்களே.. எல்லாரும் எனக்கு வெயிட் பண்றாங்களே) அது விண்டோஸ் மொபைல் சார். படம் எத்தன மணிக்கு ஆரமிக்கும்?

பணியாளர்: படம் இப்போ போட்டுடுவாங்க. இந்த மொபைல் என்ன ரேட் வருது சார்?

நான்: (விடமாட்டார் போல இருக்கே) நான் வாங்கும் போது பதினைந்தாயிரம் இருந்ததுங்க.. எந்த ஸ்க்ரீன்ல சார் இந்த படம்? டிக்கெட் நம்பர் இந்த ஈமெயில்லில் இருக்கும் பாருங்க.
பணியாளர்: ஸ்க்ரீன் நம்பெர் ஒன்னுல இந்த படம் சார். இந்த மொபைல் என்ன கம்பனி சார், நான் இதுக்கு முன்னாடி பார்த்து இல்லையே. வெளிநாட்டுல வாங்குனீங்களா?

நான்: (கடவுளே நம்ம அவசரம் நமக்கு தான் தெரியும்) இந்த மொபைல் கம்பெனி பேரு ஹச் டி சீ. இப்போ இந்தியாவிலேயே கிடைக்குது. சார்.. படம் போட்டாச்சுனு நினைக்கிறன்..

பணியாளர்: ஓ… அப்படியா. சரி சரி.. இதோ ஒரு நிமிஷம் சார். (அவசரம் புரிந்தவராக) உடனே டிக்கெட் பிரிண்ட் எடுத்து கொடுத்தார்.

கடவுளே… டிக்கெட் வாங்கிட்டு ஊள்ளே போறதுக்குள்ள இவ்ளோ பிரச்சனையா? அவசர அவசரமாக அனைவரும் ஸ்க்ரீன் – 1 வழி நோக்கி வேகமாக நகர்ந்தோம். உள்ளே சென்றால் நல்ல வேலை படம் இன்னும் ஆரமிக்கப்படவில்லை. எங்களுக்காக காத்திருந்த மாதிரி நாங்கள் சென்றவுடன் தான் பெயர் ஆரமித்தது. படத்தின் பெயர் கூட போடவில்லை ஆனால் முதல் காட்சியில் நடிகை லட்சுமி ராய்.. அடடா என்ன இது குழப்பம்? நாடோடிகள் படத்தில் இந்த பொண்ணா நடிச்சிருக்கு? யோசித்து முடிப்பதற்குள் படத்தின் பெயர் வந்தது.. வா……”வாமனன்”. என்னது. இது நாடோடிகள் இல்லையா? வாமனனா? இது என்ன புது கூத்து? ஸ்க்ரீன் மாத்தி உட்காந்துட்டமா? டிக்கெட் எடுத்து பார்த்தேன்.  ஆ.. ஸ்க்ரீன் ஒன்னு.. இல்லையே கரெக்டா தான வந்து இருக்கோம்.!!! ஒரே குழப்பம். படம் கீது மாத்தி போட்டாங்களா? இல்ல.. இல்ல.. அதுக்கு ச்சான்சே எல்லா. பின்ன எப்புடி???

ஆங்.. செல்பேசியில் மின்னஞ்சலை திறந்தேன்.. டிக்கெட்: 4 , வகுப்பு: முதல் வகுப்பு  திரை: 1 திரைப்படம்.. வாமனன்.. ஆகா நான் தான் மாத்தி புக் பண்ணிட்டேனா.. நம்ம தப்பு தானா? பக்கத்துல எல்லாரும் என்னை முறைக்கராங்கன்னு தெரியது … ஆனா நான் டக்குனு திரும்பல..  ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் ஒரு சொதப்பல். வேற என்ன பண்றது? புக் பண்ணும் போது பார்த்து பண்ணி இருக்கணும். எல்லாரையும் சமாதனப்படுத்தி மறுபடியும் அடுத்த வாரம் நாடோடிகள் கூட்டிட்டு போறேன்னு வாக்குறுதி கொடுத்தேன். என்னுடைய ஒரே எண்ணம் இப்போ பாக்கப்போகிற இந்த படத்திற்கு “ஏன் வந்தோம்” னு இல்லாம இருந்தா போதும்.  கேமரா, காமெடி எல்லாமே பரவாயில்லை… நான் தற்சமயம் மிகவும் ரசித்த “ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது” பாடல் இந்த படம்  என்பது தான் என் ஒரே ஆறுதல். நல்ல வேலை படம் ஒன்னும் மோசமில்லை. வீட்டிற்கு வரும்வரை அந்த பாடல் மட்டும் தான் என் ஞாபகத்தில் இருந்தது..

நமக்கு பிடித்த பாடல்னா பாட தோணாதா? நானும் பாடினேன். வீட்டிற்கு வந்ததும் அதை பதிவு செய்து பார்த்தேன். ரொம்ப கஷ்டம்ப்பா. ரூப் குமார் ரதோட் பாடிய அந்த பாடல் சான்சே இல்ல. கொஞ்சம் புகைப்படங்களை சேர்த்து மேலும் அதை மெருகேற்ற முயற்சி செய்தேன். இதோ.. பார்த்து விட்டு எப்படி என்று சொல்லவும்..

[xr_video id=”c2257aad5e1d4e699e1e3ceb119b8b06″ size=”md”]

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரம் இது
இதயமே ஓ
இவளிடம் ஓ
உருகுதே ஓ…
இந்த காதல் நினைவுகள் வான்தானே…..
அது தூங்கும் போதிலும் தூங்காதே……….
பார்க்காதே…. ஓ………
என்றாலும்….. ஓ….
கேட்காதே….. ஓ….

இது அனைத்தும் நடந்து சரியாக ஒரு வாரம்.. சரி இந்த வாரமாவது நாடோடி படத்திற்கு சரியாக போகணும் நேற்று மறுபடியும் யோசனை.. ஐந்து திரைகள் கொண்ட திரையரங்கிற்கு சென்றால் தானே பிரச்சனை. கே .எஸ். பிக் சினிமாஸ்(ஒரே திரை தான் – So குழப்பமில்லை)  திரையங்கிற்கு நேற்று இரவு காட்சிக்கு ஆன்லைனில் புக் செய்தேன். பத்து முப்பதிற்கு திரைப்படம் , எதற்கு வம்பு..  சரியாக பத்து மணிக்கே போனோம். சீக்கிரம் வந்து விட்டோம்.. சரியான படம் தான். இன்னைக்கு எந்த பிரச்சனையும் வராது என்று ஒரு நம்பிக்கை… இருந்தும் பிரச்சனை வந்ததே.

டிக்கெட் கவுண்டர்.

நான்: ஹலோ. நான் ஆன்லைனில் புக் செய்தேன். இதோ எஸ்.எம் எஸ் கன்பிர்மேசன். (என் செல்பேசியை கொடுத்தேன்)

பணியாளர்: இது என்னாது சார் ஹெச்.டி.சி? மொபைல் போனா?

(ஆகா கேலம்பிடாங்கயா.. கேலம்பிடாங்க…)

நான்: ஆமாம். மொபைல் தாங்க.

பணியாளர்: எவ்ளோ சார் இது.. இந்தியாவுல கிடைக்குதா? கொஞ்சம் உள்ள வாங்க சார்.

நான்: (மறுபடியுமா…??? போனா வாரம் அங்க.. இந்த வாரம் இங்கயா? சரி  சரி இந்த வாரம் தான் நமக்கு இன்னும் நேரம் இருக்கே. உள்ள போய் தான் பாப்போம்…) இந்த மொபைல் நம்ம சேலம்லயே கிடைக்குதுங்க. இப்போ சுமார் பதினைத்தாயிரம் இருக்கும்னு நினைக்கிறன்.

பணியாளர்: ஓஹோ.. அப்படியா? அதெல்லாம் சரி. இந்த ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்றீங்களே, அது எப்படி சார்.

நான்: உங்களோட வெப் சைட்டுல போய் பண்ணலாம்க. ஜஸ்ட் தியேட்டர், ஷோ, தேதி செலக்ட் பண்ணி கார்டு மூலமா பணம் கட்டின போதும்.

பணியாளர்: சார் கொஞ்சம் உங்க மொபைல்ல புக் பண்ணி காட்ட முடியுமா…

நான்: இல்லைங்க. நான் லேப்டாப் ல பண்ணினேன்.

பணியாளர்: ஓ.. லேப்டாப் ல புக் பண்ணி மொபைல்க்கு அனுப்பிடீங்களா? இப்போ புரியுது சார். இந்தாங்க சார் உங்க டிக்கெட். .
(ஒரு வழியாக கடைசியில் ஓரளவு அவர் புரிந்து கொண்டதால் எனக்கு டிக்கெட் தரப்பட்டது)

நல்லவேளை இந்த வாரம் எப்படியோ நாடோடிகள் பார்த்து விட்டோம். படம் எப்படீன்னு கேட்கறீங்களா? அந்த திரைப்படத்தை பற்றி விமர்சனம் எழுதி இந்த இடுக்கையை மேலும் இழு……..க்க  விரும்பவில்லை. படம் சூப்பர். அவ்ளோ தான்.. நீங்களாவது என்னை மாதிரி ஆன்லைன்ல புக் பண்ணி மாட்டிக்காதிங்க. அதுதான் முக்கியம். அப்படி ஏற்கனவே மாட்டி, இல்ல வேறு ஏதேனும் சுவாரசியமான சம்பவம் ஏதாவது இருந்தா கீழே பகிர்ந்துக்கோங்க.