சேலம் டூ தேவகோட்டை – ஒரு த்ரில்லர் பயணம் (2)

street traffic

மறுநாள் காலை திருமண மண்டபத்தில் முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கும்போது ஒரு திடீர் அழைப்பு. தோழியின் தம்பி. அருகில் ஒரு பெண்மணி.

“அண்ணே கொஞ்சம் வீடு வரைக்கும் இவங்க கூட காரில் போயிட்டு வர முடியுமான்னே?”

“எதுக்குப்பா”

“வீட்டில் இருந்து கொஞ்சம் ஜாமணம் எடுத்து வரணும். அவசரம்”.

“இன்னும் கொஞ்சம் நேரத்தில் முகூர்த்த ஆரம்பம் ஆயிடும்பா. அப்புறம் தாலி கட்டும் போது நான் இங்க இல்லாமல் போயிடுவேன். அது மட்டும் இல்லாமல் நான் எல்லாத்தையும் போட்டோ எடுத்துட்டு இருக்கறேன்”

“அண்ணே. முகூர்த்தம் முடியறதுக்குள்ள அதை இங்குட்டு எடுத்துட்டு வரணும்னே. கொஞ்சம் அவசரம்”

வேறு வழியில்லாமல் அந்த பெண்மணியை காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். மெயின் ரோட்டில் ஒரு ஐந்து நிமிடம் போய் ஒரு தெருவுக்குள் உள்ளே நுழைந்தால் முன்னாடியே தான் அவர்கள் வீடு. எப்படியும் பத்து பதினைந்து நிமிடத்தில் போய் வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் காரை விரட்டினேன். தாலி கட்டும் போது இங்கே இருக்க வேண்டும் என்ற பரபரப்பு.

வீட்டிற்கு சென்று அனைத்து பொருள்களையும் அவசர அவசரமாக காரில் எடுத்து போட்டுக்கொண்டு மீண்டும் மெயின் ரோடு வந்து சேர்ந்தேன். ஐந்து நிமிடத்திற்குள் மண்டபம் போய்விடலாம் என்று மனம் கணக்குபோட்டுக்கொண்டது.. முந்நூறு கிலோ மீட்டர் தாண்டி வந்தது பிரயோஜனம் இல்லாமல் போய் விடக்கூடாதல்லவா? கொஞ்ச தூரம் தான் அந்த மெயின் ரோட்டில் போய் இருப்பேன்.

“வந்த வழியா போக வேணாம் தம்பி. போற வழியில் பஸ் ஸ்டாண்ட் இருக்கு. ஒரே நெரிசலா இருக்கும். அக்கா உன்ன வேற வழியில சீக்கிரம் கூட்டிட்டு போறேன். ரைட்டுல வண்டியவிடு!”

எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது “என்னக்கா சொல்றீங்க? இதுதானே மெயின் ரோடு? அது மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் தூரம் போய் லெப்ட் சைடில் திரும்பினால் மண்டபம் வாரப்போகுது. வந்தவழியிலேயே போனால் கூட ஒரு ஐந்து நிமிடத்தில் போயிடலாமே?”

“எல்லாத்துக்கும் காரணம் இருக்கு தம்பி. அக்கா சொன்னா கேப்பியா கேக்க மாட்டியா?”

அந்த வார்த்தையில் தான் ஏமாந்தேன். சமீபத்தில் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படம் பார்த்து இருப்பாங்க போல. வேறு வழியில்லாமல் காரை அவர்கள் சொன்ன பாதையில் விட்டேன். உண்மையில் நான் பில்டிங் மேல் இருந்து தான் பிறகு குதிக்கபோகிறேன் என்று அப்போது தெரியவில்லை. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு குறுகலான சாலையில் உள்ளே வண்டியை விடச்சொன்னார். உள்ளே போனால் காரை திருப்பக்கூட முடியாத அளவு இருந்தது. எனக்கு விருப்பம் இல்லை. ஆனால்  நான் மறுப்பு சொல்வதற்குள் “சீக்கிரம் போப்பா. முகூர்த்த நேரமாச்சு. தாலி கட்டுறதுக்கு முன்னாடி போகணும்” என என்னை நிர்பந்தித்தார். நம்பி உள்ளே காரை விட்டேன்.

கொஞ்ச தூரத்தில் ஒரு டீக்கடை இருந்தது. அதன் அருகே, நடு ரோட்டில் பைக்கை குறுக்காக நிப்பாட்டி சாலையோரத்தில் நின்று ஒருவர் சிகரெட் குடித்துக்கொண்டு இருந்தார். ஒரு கார் மட்டும் தான் போகும். அதையும் தடுத்து நிறுத்திவிட்டார் அந்த மண்ணின் மைந்தன்.  எங்கள் காரை பார்த்தும்கூட எங்களை கண்டுகொள்ளாமல் விறைப்பாக சிகரெட்டை இழுத்துக்கொண்டிருந்தார் அவர். எனக்கு கோபம் வந்தது. பலமாய் ஹாரன் அடித்தேன்.

கடைசி பஃப் சிகரட்டை பொறுமையாக இழுத்து கீழே போட்டுவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிகரெட் தீர்ந்துவிட்டது என்று தான் அவர் கிளம்பினாரே தவிர, கார் நிற்கிறதே, பைக்கை நடுரோட்டில் குறுக்கே நிப்பாட்டி இருக்கிறோமே என்ற சுரனையின் உந்துதலால் அல்ல.

“என்னக்கா இது, கொஞ்சம் கூட யோசிக்காம நடு ரோட்டில் பைக்கை நிப்பாட்டி இருக்காங்க.”

“யவன் கேட்பான் அப்படீன்னு கொழுப்பு இவனுங்களுக்கு” என்று கூலாக சொன்னார். எனக்கு இருந்த கோபம் கூட அவருக்கு அப்போது சுத்தமாய் இல்லை. பழகிடிச்சு போல.

“ரைட்ல விடு..” “லெப்டில் விடு”.. “நேரா விடு..” இப்படியே தேவக்கோட்டை தெருக்களை ஒரு பத்து நிமிடமாக காரில் எனக்கு சுற்றிக்காட்டிக்கொண்டு இருந்தார். சில சமயம் செல்போன் பேசியபடி ரூட் சொல்ல மறந்துவிடுவார். போனில் மும்முரமாய் இருக்கும் போது அவரிடம் வழி கேட்டாலும் பதில் வாராது. எந்த பக்கம் போவது என்ற குழப்பத்தில் வண்டியை மெதுவாக்கினாலோ நிறுத்தினாலோ வாகன நெரிசல் அதிகமாகி பின்னாடி ஹாரன் சப்தங்கள் கேட்கத்துவங்கும்.

“யக்கா. மெயின் ரோட்டிலேயே போய் இருந்த இந்நேரத்துக்கு மண்டபத்துக்கு போய் இருக்கலாமே. மூகூர்தத்துக்கு வேற நேரமாச்சுக்கா.”

“தம்பி.. உன்கிட்ட சொல்றதுக்கு என்ன…. ஒரு சின்ன வேலை இருக்கு. ஒரு அஞ்சு நிமிஷம் தான். ஒருத்தரை பார்த்தவுடனே நாம் போய்டலாம். மண்டபத்தில் யார்கிட்டயும் சொல்லிடாத. யாருனா போன் பண்ணுணாய்ங்கன்னா வழி பூரா ட்ராபிக்னு சொல்லி சமாளிச்சிடு. சரியா?”

“ !!!!??? ” என்னால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கோபத்தில் கூட அமைதியாய் இருக்கும் வித்தையை முதன் முறையாய் பயன்படுத்தினேன்.

ஒரு குறுகலான சாலையில் கார் போய்க்கொண்டு இருந்தபோது அந்த தெருவின் மத்தியில் இரு சக்கர வாகனம் மட்டுமே போகக்கொடிய அளவு ஒரு சந்து இருந்தது. காரை விட்டு இறங்கினாலே அந்த சந்துக்குள் தான் காலை வைக்க முடியும். அவ்வளவு குறுகலான சந்து. காரில் அதை நாங்கள் கடக்கும் போது,

“தம்பி இங்க தான்.. இங்தான். கார நிப்பாட்டு கார நிப்பாட்டு.” திடிரென டெர்ரராக கத்தினார் அவர்.

“இங்கயா? இங்க நிறுத்தினா வேற எந்த வண்டியும் போகவர முடியாது. கொஞ்சம் முன்னாடி போய் ஒராமா நிப்பாட்டறேன். நீங்க இங்க நடந்து வாங்க” என்றேன்

“ஐயோ. அதுங்காட்டியும் நேரமாகிடுமப்பு. எந்த பயலும் இங்க வரமாட்டான். தைரியமா நிப்பாட்டு அப்பு. அக்கா சொல்றேன் இல்ல.”

“அது இல்லக்கா.. அதோ அங்க ஒரு இருபது அடி தள்ளி காரை ஓரங்கட்ட இடம் இருக்கு…” என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கார் கதவை திறந்து அந்த தெருவுக்குள் குதித்தார் அவர்.

“அக்கா.. அக்கா…” என்று கத்தினேன்..

“ரெண்டே நிமிஷம்ப்பு.. தோ வந்துடறேன்” என்று சொல்லி திரும்பிக்கூட பார்க்காமல் அந்த சந்துக்குள் ஓடி மறைந்தார். கார் கதவு சாத்தப்படாமல் அப்படியே திறந்து வேறு விட்டுப்போயிருந்தார். முகூர்த்த நேரமாச்சு என்று டென்ஷன் ஒரு புறம். இப்படி நம்மை சிக்கலில் விட்டு  போகிறார் என்று கோபம் இன்னொருபுறம்.  திடீரென செல்போன் வேறு அலறத்துடங்கியது. மண்டபத்தில் இருந்து அம்மா அழைத்ததால் உடனே எடுத்தேன்.

“எங்கடா இருக்க, முகூர்த்த நேரமாச்சு. தாலி கட்ட போறாங்க. இங்க இல்லாம இந்த நேரத்துல எங்க போன நீ?”

“காருல இருக்கேன். ஒரு வேலையா வந்தேன்” என்றேன் அவசர அவரமாக.

“என்ன வேலைடா?”

“தெரியல”

“எங்க இருக்க?”

“தெரியலம்மா”

“யார் கூடதாண்டா இருக்க?”

“அதுவும் தெரியலம்மா”

“எதுவுமே தெரியாம அப்படி என்ன தாண்டா பண்ணிட்டு இருக்க?”

“கார் கதவை சாத்திட்டு இருக்கேன். அப்பறம் கூப்பிடறேன்”

போனை உடனே கட் செய்துவிட்டு டிரைவர் சீட்டில் இருந்த படியே எட்டி மறுபக்கம் இருந்த கதவை சாத்த முயற்சித்துக்கொண்டு இருந்தேன்.. சொல்லிவைத்தார் போல் இரு சக்கர வாகனம் ஒன்று அந்த கார் கதவு வழியாக உள்ளே நுழைந்துவிடுவது போல் அந்த சந்துக்குள் இருந்து வந்து அருகே நின்றது.

“தம்பி காரை எடுப்பா. இப்படி வந்து வண்டிய போட்டா நாங்க எப்புடி போறது?

“தோ.. ஒரு நிமிஷம்னே”

வாகன நெரிசல் ஆவதற்குள் உடனடியாக கார் கதவை சாத்திவிட்டு அங்கிருந்து நகர வேண்டும். அது மட்டும் இல்லாமல் தாலி கட்டுவதற்க்குள் சீக்கிரம் திருமண மண்டபம் போய் சேர வேண்டும் என்று உள்ளுக்குள் வேகமாக எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

கஷ்டப்பட்டு கதவை சாத்திவிட்டு, பர்ஸ்ட் கியர் போட்டு நிமிர்ந்து பார்த்தால், காரின் முன்னாடி வாகனங்கள் வரிசையாக நின்றுக்கொண்டு இருந்தது. பின்னாடி நகர்த்தலாம் அவசர அவசரமாக ரிவர்ஸ் கியர் போட்டு காரின் பின்பக்கம் திரும்பி பார்த்தால் அந்த பக்கமும் வாகனங்கள் தேங்கி நின்றுக்கொண்டு இருக்கிறது. நினைத்தது போலவே சரியாய் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். முன்னாடியும் நகர முடியாமல், பின்னாடியும் நகர முடியாமல் தடுமாற்ற சூழ்நிலையில் நான் நிற்கிறேன்.  என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு சில நொடிகளில் இரண்டு பக்கம் இருந்தும் காது கிழியும் அளவுக்கு தொடர்ந்து ஹாரன் அடிக்க ஆரம்பித்தனர்.  ஒரு சிலர் தங்கள் இருசக்கர வாகனத்தை அப்படியே நடு ரோட்டில் நிறுத்திவிட்டு கண்களில் கொலை வெறியோடு என் காரை நோக்கி கோபமாய் நடந்து வரஆரம்பித்தனர். நிலவரம் கலவரம் ஆவது உறுதியானது. பதட்டம் அதிகமானது.

அப்போது தான் அந்த வார்த்தைகள் ஏனோ மீண்டும் அசரீரி போல்  என் காதில் ஒலிக்க ஆரம்பித்தது.

“அப்பு…. அக்கா சொன்னா கேப்பியா? மாட்டியா?…”

சேலம் டூ தேவகோட்டை – ஒரு த்ரில்லர் பயணம் (1)

Do-not-use-mobile-phone-while-driving

என் நெருங்கிய தோழி ஒருவரின் திருமணத்திற்காக சென்ற வாரம் (10/09/2013) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தாண்டி தேவக்கோட்டை என்னும் ஊருக்கு செல்லவேண்டியிருந்தது. சேலத்தில் இருந்து கிட்டதட்ட 300 கிலோமீட்டர் தூரம். என்னுடைய தாயாருடன் நான் காரில் செல்ல முடிவெடுத்திருந்தாலும் எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதில் கடைசிவரை சிறு குழப்பம் இருந்தது. சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சி சென்று தேவக்கோட்டையை அடைவதா அல்லது திண்டுக்கல் சென்று நத்தம், திருப்பத்தூர் வழியாக சென்றடைவதா என்பதே அந்த குழப்பம்.

முதலாவதாக சொன்ன வழியில் தான் நேரடி பேருந்து போக்குவரத்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இரண்டாவது வழியை விட அது கிட்ட தட்ட 40 கிலோ மீட்டர் தூரம் குறைவு. இன்னும் சொல்லப்போனால் முதலாம் வழியில் திருச்சியில் இருந்து தேவக்கோட்டையை சென்றடைய நான்கு வழிச்சாலை வசதியும் உள்ளது. இத்தனையும் மீறி என்னை இரண்டாவது வழிக்கு யோசிக்க வைக்க காரணம், நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் பாதைதான். கிட்ட தட்ட 90 கிலோ மீட்டர் தூரம் காவிரிக்கரை ஓரம் செல்ல வேண்டும். மோசமான சாலை மட்டும் இல்லாமால் வரிசையாக செல்லும் மணல் லாரிகளோடு போட்டி போட்டு முந்திச்செல்லமுடியாமல் என் பொறுமையை சோதிக்கும் சூழ்நிலைகள் நிறைய இருக்கும். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் அவ்வழியே காரில் ஸ்ரீ ரங்கம் செல்லும் போது அதை அனுபவித்து உள்ளேன்.

இரண்டாவது வழியோ, சேலத்தில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை. சாவகாசமாய் ஓட்டிச்செல்லலாம். திண்டுக்கல்லில் இருந்து மீதிப்பயணதூரம் வரை இருவழி மாநில நெடுஞ்சாலைதான். கடைசியில் இணையத்தில் உதவியால் மற்ற கார் ஓட்டுனர்களின் அனுபவத்தின் தேடுதல் அடிப்படையில் இரண்டாவது வழியே சிறந்தது என ஓரளவு அறிந்துக்கொண்டேன். அவ்வழியே பயணித்தேன். கரூரை தாண்டி, அரவக்குறிச்சிக்கு முன்னர் “ஹோட்டல் வள்ளுவர்” என்னும் ஓர் தேசிய நெடுஞ்சாலை உணவு விடுதியில் எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம். திருக்குறளை போல் அளவு குறைவாக இருந்தாலும் உணவு சுவையாகத்தான் இருந்தது.

திண்டுக்கல் ஊரில் நுழைந்து செல்லும்போது, “ஹோட்டல் திண்டுக்கல் பொன்ராம்” இருக்கும் சாலையில் ஏகப்பட்ட நெரிசல். அநேகம் பேர் அந்த ஹோட்டலில் உணவருந்த வந்தவர்கள். காரை நிறுத்த/எடுக்க முயன்றுக்கொண்டு அவர்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திக்கொண்டு இருந்தனர். நானும் அங்கே தான் உண்ணச்செல்ல முதலில் யோசித்திருந்தேன். ஆனால் திருமணத்திற்கு செல்வதால் புலால் உண்ணுதல் வேண்டாம் என தாயாரின் அறிவுறுத்தலில்படி அந்த யோசனையை கைவிட்டிருந்தேன். (திருமணதிற்க்கே அந்த ஊரில் அவர்கள் அசைவ உணவு தான் விருந்தளித்தார்கள் என்பது வேறு கதை)

திண்டுக்கல் சென்று நத்தம் தாண்டியவுடன் அந்த சாலை அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது. மலைகள் சூழ்ந்த இயற்கை சூழ்நிலை. அவ்வப்போது தூறல். போகும் வழியெங்கும் பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. சரியான பாதையை தான் தேர்வு செய்து இருந்தேன் என்பதை அது உணர்த்தியது. திருப்பத்தூரை தாண்டியதும் சாலை ஓரங்களில் “செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டதீர்” என்ற குறியூட்டுடன் ஒரு சில பலகைகளை கண்டேன். இது சாதாரணம் தான் என்றாலும் கொஞ்ச தூரம் செல்ல செல்ல அடிக்கடி இதை போல நிறைய பலகைகள் காணநேரிட்டது. இது எனக்கும் வித்யாசமாக இருந்தது.எதற்காக இப்படி நிறைய வைத்து இருக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது தான் மெல்ல அதற்கு விடையும் கிடைத்தது.

Salem to Devakottai

Natham road

எனக்கு முன்னர் ஒரு இன்னோவா கார் ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. அந்த மாநில நெடுஞ்சாலையில் பெரிதாக போக்குவரத்து அவ்வளவாக இல்லை. எதிரே எந்த வாகனமும் அப்போது வரவில்லை. அந்த காரை நான் முந்திச்செல்ல முடிவெடுத்து அருகே சென்றபோது திடிரென அது வலதுபக்கம் நகர்ந்தது. உடனே ப்ரேக் அடித்து என் வேகத்தை குறைத்து ஹாரன் அடித்தேன். ஆனால் பலனில்லை. சிறிது நொடிகள் கழித்து தானாகவே அது மீண்டும் இடது புறம் நகர்ந்தது. மறுபடியும் அதை முந்திச்செல்ல முற்படுகையில் அது இடது பக்கம் நகர்ந்து வழிமறைத்தது. கிட்டதட்ட அப்போது நாங்கள் இருவரும்  80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறோம்.

விபத்தை தவிர்க்க உடனடியாக விசையை குறைத்து மீண்டும் ஹாரன் அடித்தேன். எதற்காக அந்த வாகன ஓட்டுனர் இப்படி செய்கிறான் என்று எனக்கு ஒரே குழப்பம். ஏற்கனவே சொன்னது போல் போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு கிராமத்து சாலை அது. ஒருவேளை என்னை முந்திச்செல்லவிடாமல் தடுக்கிறானா எனவும் புரியவில்லை. மீண்டும் பலமாக ஹாரன் அடித்தவாறே முந்த முயன்றேன். அந்த கார் மறுபடியும் இடது பக்கம் நகர்ந்து எனக்கு வழிவிட்டது. இந்த முறை வேகம் கூட்டி அதை முந்துவதற்கு முயன்று வலதுபுறம் அதன் அருகே சென்றேன். அப்படியே திரும்பி அந்த கார் ஓட்டுனரை பார்த்தேன். சார் ஜாலியாக யாருடனோ சிரித்து சிரித்து போனில் பேசியபடி காரை ஓட்டிச்சென்றுகொண்டிருந்தார்.

சிறிது தூரம் தான் சென்றிருப்பேன், எதிரில் ஒரு சுமோ வேகமாய் வந்துக்கொண்டு இருந்தது. நானும் அப்போது வேகமாய் தான் சென்றுக்கொண்டு இருந்தேன். அருகில் வர வர, கொஞ்சம் கொஞ்சமாய் அது இடதுபுறம் நகர்ந்து எனக்கு நேரெதிரே வர தயாரானது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முன்பின் வேறு எந்த வாகனமும் இல்லை. அதனால் யாரையும் அந்த சுமோ முந்தவும் முயற்சிக்க வாய்ப்பில்லை. பின் எதற்கு ட்ராக் மாறி எனக்கு நேரிதிரே வர வேண்டும்? யோசிக்கும்போதே கணப்பொழுதில் மிக அருகில் நெருங்கிவிட்டோம். இரு வாகனமும் மோதத் தயாரானது. எனக்கு தூக்கி வாரி போட்டது. வேகத்தை குறைத்து கூடுமானவரை பலமாய் ஹாரன் அடித்தேன். நிலைமையை உணர்ந்ததுபோல் சடாரென அந்த சுமோ மீண்டும் வலது புறம் நகர்ந்து எனக்கு வழிவிட்டது. ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது, சில உயிர்களின் இறப்பு தள்ளிப்போடப்பட்டது. அந்த சுமோ ஓட்டுனர் செல்போனில் பேசியபடி மெய்மறந்து வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார் என்று உயிர்தப்பிய அந்த கணத்தில் கண்கூடாக பார்த்தேன்.

அந்த பயணத்தின் போது நான் பார்த்தவரை இருசக்கர வாகனத்தில் சென்ற அநேகம் பேரும் செல்போன் பேசியபடி தான் ஒட்டிச்சென்றனர். ­எனக்கு சாதரணமாக செல்போன் பேசியபடி செல்பவர்களை பார்த்தாலே ஆகாது. குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை விடவும் மிகவும் கொடிய செயல் செல்போனில் பேசியபடி வண்டி ஒட்டிச்செல்வது. அந்த சுற்றுப்புற ஊர்களில் யாருமே சுத்தமாய் சாலை விதிகளை பின் பற்றுவதாய் தெரியவில்லை. சாலை விதிகளை விடுங்கள். அவர்களின் போக்கு மிகவும் அராஜகமாய் மற்ற வாகனங்களை கொஞ்சமும் பொருட்படுத்தாமலும் இருக்கிறது. நினைத்த இடத்தில் வண்டியை திருப்புவதும், திடீரென குறுக்கே நுழைந்து நம்மை நிலைக்குலையச்செய்வதும். அனைத்தும் அராஜகத்தின் உச்சம். அந்த சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு நொடியும் நம் ரத்த அழுத்தம் அதிகமாவதை உணரமுடியும்.

தேவகோட்டை அடைந்தபோது நான் கேட்ட முதல் வார்த்தையே “அண்ணே, எங்க ஊருல பார்த்து வண்டிய ஒட்டுங்கன்னே. எல்லாரும் கண்டபடி வண்டி ஓட்டுவாய்ங்க. எவனாவது மோதிட்டான்னா அவன் மேல தப்புனாலும் நம்ம கிட்ட தான்னே சண்டைக்கு வருவாய்ங்க. அதுவும் வெளியூர் வண்டின்னா சொல்லவே வேனாம்ணே. எல்லாரும் ஒன்னு கூடிப்புடுவாய்ங்க”. இப்படி ஒரு டெர்ரர் அட்வைஸ் வந்து விழுந்தது.

ஒரு இடத்தில் வண்டியை வந்த பாதையில் திருப்ப வேண்டிய சூழ்நிலை. அங்கு மெயின் ரோடு கூட சற்று குறுகலான ரோடுதான். இன்டிகேட்டர் போட்டு, கையை காட்டி, நீண்ட நேரம் போராடி பார்த்தும் யாரும் அதை பொருட்படுத்தவில்லை. எல்லா வண்டியும் வேகம் குறையாமல் சர்ரென போய்க்கொண்டுதான் இருந்தது. யாரும் காரை திருப்பவிடவில்லை. காத்திருத்தலின் பயனாய் ஒரு சில நொடிகளில் வாகனங்கள் குறைந்தது. கொஞ்சதூரத்தில் ஒரு டீவிஎஸ் எக்ஸ்செல் மட்டும் வந்துக்கொண்டு இருந்தது. அந்த சில நொடிகளில் நான் காரை திருப்பினால் தான் உண்டு. அந்த சந்தர்ப்பத்தையும் விட்டால் தூரத்தில் வந்துக்கொண்டு இருந்த வாகனங்கள் மீண்டும் நெரிசலை ஏற்படுத்திவிடும்.

இன்டிகேட்டர் போட்டு விட்டு, அந்த டி.விஎஸ் காரனிடம் கையை காட்டி நிற்கச்சொல்லியவாறே காரை திருப்புகிறேன். ஆனால் அவனோ கொஞ்சம் கூட அதற்கு இடம் அளிக்காமல் சர்ரென அருகில் வந்தான். காரின் முன்பக்கம் உரசும் அளவிற்கு ஒரு திகிலை ஏற்படுத்திவிட்டு காரை தாண்டினான். நான் சடன் ப்ரேக் அடித்து காரை சாலையின் குறுக்குவாக்கில் நிறுத்தினேன். இல்லையேல் அவன் காரில் மோதி கீழே விழுந்திருப்பான். காரில் இடித்து கிழே விழுந்து இருப்போமே என்ற எண்ணம் இல்லாமல், காரை நடு ரோட்டில் குறுக்கு வாக்கில் நிப்பாட்ட வைத்துவிட்டோமே என்ற எண்ணம் இல்லாமல், தன் கால் சந்துக்குள் வைக்கப்பட்டு இருந்த ஒரு அட்டை பேட்டியை காண்பித்து “வண்டியில பெட்டி வச்சிட்டு வரேன் இல்ல” என்று சம்பந்தம் இல்லாமல் சப்தமாய் கத்திவிட்டு போனான். அவன் வண்டியின் வேகம் அப்போதும் குறைந்திருக்கவில்லை.

உண்மையில் சொல்லபோனால் நான் அந்த ஊரில் காரை வெறுமனே ஒட்டிசெல்லவில்லை. காருக்கு கீறல் எதுவும் விழாமல் பத்திரமாய் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அதை காப்பற்றி எடுத்துச்சென்றுகொண்டிருந்தேன். அப்படிதான் இருந்தது அந்த அனுபவம். இதனால் சேலம் திரும்பும் வரை எக்காரணம் கொண்டும் காரை எடுக்க வேண்டாம் என முடிவு செய்தேன். ஆனால் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்வார்களே. அது உண்மை தான். அதற்கடுத்து நடந்த சம்பவங்கள் என் வாழ்நாளில் அந்த பகுதிக்கு மீண்டும் செல்லகூடாது என்று முடிவெடுக்க வைத்தது… (தொடரும்)