மறுநாள் காலை திருமண மண்டபத்தில் முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கும்போது ஒரு திடீர் அழைப்பு. தோழியின் தம்பி. அருகில் ஒரு பெண்மணி.
“அண்ணே கொஞ்சம் வீடு வரைக்கும் இவங்க கூட காரில் போயிட்டு வர முடியுமான்னே?”
“எதுக்குப்பா”
“வீட்டில் இருந்து கொஞ்சம் ஜாமணம் எடுத்து வரணும். அவசரம்”.
“இன்னும் கொஞ்சம் நேரத்தில் முகூர்த்த ஆரம்பம் ஆயிடும்பா. அப்புறம் தாலி கட்டும் போது நான் இங்க இல்லாமல் போயிடுவேன். அது மட்டும் இல்லாமல் நான் எல்லாத்தையும் போட்டோ எடுத்துட்டு இருக்கறேன்”
“அண்ணே. முகூர்த்தம் முடியறதுக்குள்ள அதை இங்குட்டு எடுத்துட்டு வரணும்னே. கொஞ்சம் அவசரம்”
வேறு வழியில்லாமல் அந்த பெண்மணியை காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். மெயின் ரோட்டில் ஒரு ஐந்து நிமிடம் போய் ஒரு தெருவுக்குள் உள்ளே நுழைந்தால் முன்னாடியே தான் அவர்கள் வீடு. எப்படியும் பத்து பதினைந்து நிமிடத்தில் போய் வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் காரை விரட்டினேன். தாலி கட்டும் போது இங்கே இருக்க வேண்டும் என்ற பரபரப்பு.
வீட்டிற்கு சென்று அனைத்து பொருள்களையும் அவசர அவசரமாக காரில் எடுத்து போட்டுக்கொண்டு மீண்டும் மெயின் ரோடு வந்து சேர்ந்தேன். ஐந்து நிமிடத்திற்குள் மண்டபம் போய்விடலாம் என்று மனம் கணக்குபோட்டுக்கொண்டது.. முந்நூறு கிலோ மீட்டர் தாண்டி வந்தது பிரயோஜனம் இல்லாமல் போய் விடக்கூடாதல்லவா? கொஞ்ச தூரம் தான் அந்த மெயின் ரோட்டில் போய் இருப்பேன்.
“வந்த வழியா போக வேணாம் தம்பி. போற வழியில் பஸ் ஸ்டாண்ட் இருக்கு. ஒரே நெரிசலா இருக்கும். அக்கா உன்ன வேற வழியில சீக்கிரம் கூட்டிட்டு போறேன். ரைட்டுல வண்டியவிடு!”
எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது “என்னக்கா சொல்றீங்க? இதுதானே மெயின் ரோடு? அது மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் தூரம் போய் லெப்ட் சைடில் திரும்பினால் மண்டபம் வாரப்போகுது. வந்தவழியிலேயே போனால் கூட ஒரு ஐந்து நிமிடத்தில் போயிடலாமே?”
“எல்லாத்துக்கும் காரணம் இருக்கு தம்பி. அக்கா சொன்னா கேப்பியா கேக்க மாட்டியா?”
அந்த வார்த்தையில் தான் ஏமாந்தேன். சமீபத்தில் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படம் பார்த்து இருப்பாங்க போல. வேறு வழியில்லாமல் காரை அவர்கள் சொன்ன பாதையில் விட்டேன். உண்மையில் நான் பில்டிங் மேல் இருந்து தான் பிறகு குதிக்கபோகிறேன் என்று அப்போது தெரியவில்லை. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு குறுகலான சாலையில் உள்ளே வண்டியை விடச்சொன்னார். உள்ளே போனால் காரை திருப்பக்கூட முடியாத அளவு இருந்தது. எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் மறுப்பு சொல்வதற்குள் “சீக்கிரம் போப்பா. முகூர்த்த நேரமாச்சு. தாலி கட்டுறதுக்கு முன்னாடி போகணும்” என என்னை நிர்பந்தித்தார். நம்பி உள்ளே காரை விட்டேன்.
கொஞ்ச தூரத்தில் ஒரு டீக்கடை இருந்தது. அதன் அருகே, நடு ரோட்டில் பைக்கை குறுக்காக நிப்பாட்டி சாலையோரத்தில் நின்று ஒருவர் சிகரெட் குடித்துக்கொண்டு இருந்தார். ஒரு கார் மட்டும் தான் போகும். அதையும் தடுத்து நிறுத்திவிட்டார் அந்த மண்ணின் மைந்தன். எங்கள் காரை பார்த்தும்கூட எங்களை கண்டுகொள்ளாமல் விறைப்பாக சிகரெட்டை இழுத்துக்கொண்டிருந்தார் அவர். எனக்கு கோபம் வந்தது. பலமாய் ஹாரன் அடித்தேன்.
கடைசி பஃப் சிகரட்டை பொறுமையாக இழுத்து கீழே போட்டுவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிகரெட் தீர்ந்துவிட்டது என்று தான் அவர் கிளம்பினாரே தவிர, கார் நிற்கிறதே, பைக்கை நடுரோட்டில் குறுக்கே நிப்பாட்டி இருக்கிறோமே என்ற சுரனையின் உந்துதலால் அல்ல.
“என்னக்கா இது, கொஞ்சம் கூட யோசிக்காம நடு ரோட்டில் பைக்கை நிப்பாட்டி இருக்காங்க.”
“யவன் கேட்பான் அப்படீன்னு கொழுப்பு இவனுங்களுக்கு” என்று கூலாக சொன்னார். எனக்கு இருந்த கோபம் கூட அவருக்கு அப்போது சுத்தமாய் இல்லை. பழகிடிச்சு போல.
“ரைட்ல விடு..” “லெப்டில் விடு”.. “நேரா விடு..” இப்படியே தேவக்கோட்டை தெருக்களை ஒரு பத்து நிமிடமாக காரில் எனக்கு சுற்றிக்காட்டிக்கொண்டு இருந்தார். சில சமயம் செல்போன் பேசியபடி ரூட் சொல்ல மறந்துவிடுவார். போனில் மும்முரமாய் இருக்கும் போது அவரிடம் வழி கேட்டாலும் பதில் வாராது. எந்த பக்கம் போவது என்ற குழப்பத்தில் வண்டியை மெதுவாக்கினாலோ நிறுத்தினாலோ வாகன நெரிசல் அதிகமாகி பின்னாடி ஹாரன் சப்தங்கள் கேட்கத்துவங்கும்.
“யக்கா. மெயின் ரோட்டிலேயே போய் இருந்த இந்நேரத்துக்கு மண்டபத்துக்கு போய் இருக்கலாமே. மூகூர்தத்துக்கு வேற நேரமாச்சுக்கா.”
“தம்பி.. உன்கிட்ட சொல்றதுக்கு என்ன…. ஒரு சின்ன வேலை இருக்கு. ஒரு அஞ்சு நிமிஷம் தான். ஒருத்தரை பார்த்தவுடனே நாம் போய்டலாம். மண்டபத்தில் யார்கிட்டயும் சொல்லிடாத. யாருனா போன் பண்ணுணாய்ங்கன்னா வழி பூரா ட்ராபிக்னு சொல்லி சமாளிச்சிடு. சரியா?”
“ !!!!??? ” என்னால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கோபத்தில் கூட அமைதியாய் இருக்கும் வித்தையை முதன் முறையாய் பயன்படுத்தினேன்.
ஒரு குறுகலான சாலையில் கார் போய்க்கொண்டு இருந்தபோது அந்த தெருவின் மத்தியில் இரு சக்கர வாகனம் மட்டுமே போகக்கொடிய அளவு ஒரு சந்து இருந்தது. காரை விட்டு இறங்கினாலே அந்த சந்துக்குள் தான் காலை வைக்க முடியும். அவ்வளவு குறுகலான சந்து. காரில் அதை நாங்கள் கடக்கும் போது,
“தம்பி இங்க தான்.. இங்தான். கார நிப்பாட்டு கார நிப்பாட்டு.” திடிரென டெர்ரராக கத்தினார் அவர்.
“இங்கயா? இங்க நிறுத்தினா வேற எந்த வண்டியும் போகவர முடியாது. கொஞ்சம் முன்னாடி போய் ஒராமா நிப்பாட்டறேன். நீங்க இங்க நடந்து வாங்க” என்றேன்
“ஐயோ. அதுங்காட்டியும் நேரமாகிடுமப்பு. எந்த பயலும் இங்க வரமாட்டான். தைரியமா நிப்பாட்டு அப்பு. அக்கா சொல்றேன் இல்ல.”
“அது இல்லக்கா.. அதோ அங்க ஒரு இருபது அடி தள்ளி காரை ஓரங்கட்ட இடம் இருக்கு…” என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கார் கதவை திறந்து அந்த தெருவுக்குள் குதித்தார் அவர்.
“அக்கா.. அக்கா…” என்று கத்தினேன்..
“ரெண்டே நிமிஷம்ப்பு.. தோ வந்துடறேன்” என்று சொல்லி திரும்பிக்கூட பார்க்காமல் அந்த சந்துக்குள் ஓடி மறைந்தார். கார் கதவு சாத்தப்படாமல் அப்படியே திறந்து வேறு விட்டுப்போயிருந்தார். முகூர்த்த நேரமாச்சு என்று டென்ஷன் ஒரு புறம். இப்படி நம்மை சிக்கலில் விட்டு போகிறார் என்று கோபம் இன்னொருபுறம். திடீரென செல்போன் வேறு அலறத்துடங்கியது. மண்டபத்தில் இருந்து அம்மா அழைத்ததால் உடனே எடுத்தேன்.
“எங்கடா இருக்க, முகூர்த்த நேரமாச்சு. தாலி கட்ட போறாங்க. இங்க இல்லாம இந்த நேரத்துல எங்க போன நீ?”
“காருல இருக்கேன். ஒரு வேலையா வந்தேன்” என்றேன் அவசர அவரமாக.
“என்ன வேலைடா?”
“தெரியல”
“எங்க இருக்க?”
“தெரியலம்மா”
“யார் கூடதாண்டா இருக்க?”
“அதுவும் தெரியலம்மா”
“எதுவுமே தெரியாம அப்படி என்ன தாண்டா பண்ணிட்டு இருக்க?”
“கார் கதவை சாத்திட்டு இருக்கேன். அப்பறம் கூப்பிடறேன்”
போனை உடனே கட் செய்துவிட்டு டிரைவர் சீட்டில் இருந்த படியே எட்டி மறுபக்கம் இருந்த கதவை சாத்த முயற்சித்துக்கொண்டு இருந்தேன்.. சொல்லிவைத்தார் போல் இரு சக்கர வாகனம் ஒன்று அந்த கார் கதவு வழியாக உள்ளே நுழைந்துவிடுவது போல் அந்த சந்துக்குள் இருந்து வந்து அருகே நின்றது.
“தம்பி காரை எடுப்பா. இப்படி வந்து வண்டிய போட்டா நாங்க எப்புடி போறது?
“தோ.. ஒரு நிமிஷம்னே”
வாகன நெரிசல் ஆவதற்குள் உடனடியாக கார் கதவை சாத்திவிட்டு அங்கிருந்து நகர வேண்டும். அது மட்டும் இல்லாமல் தாலி கட்டுவதற்க்குள் சீக்கிரம் திருமண மண்டபம் போய் சேர வேண்டும் என்று உள்ளுக்குள் வேகமாக எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
கஷ்டப்பட்டு கதவை சாத்திவிட்டு, பர்ஸ்ட் கியர் போட்டு நிமிர்ந்து பார்த்தால், காரின் முன்னாடி வாகனங்கள் வரிசையாக நின்றுக்கொண்டு இருந்தது. பின்னாடி நகர்த்தலாம் அவசர அவசரமாக ரிவர்ஸ் கியர் போட்டு காரின் பின்பக்கம் திரும்பி பார்த்தால் அந்த பக்கமும் வாகனங்கள் தேங்கி நின்றுக்கொண்டு இருக்கிறது. நினைத்தது போலவே சரியாய் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். முன்னாடியும் நகர முடியாமல், பின்னாடியும் நகர முடியாமல் தடுமாற்ற சூழ்நிலையில் நான் நிற்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு சில நொடிகளில் இரண்டு பக்கம் இருந்தும் காது கிழியும் அளவுக்கு தொடர்ந்து ஹாரன் அடிக்க ஆரம்பித்தனர். ஒரு சிலர் தங்கள் இருசக்கர வாகனத்தை அப்படியே நடு ரோட்டில் நிறுத்திவிட்டு கண்களில் கொலை வெறியோடு என் காரை நோக்கி கோபமாய் நடந்து வரஆரம்பித்தனர். நிலவரம் கலவரம் ஆவது உறுதியானது. பதட்டம் அதிகமானது.
அப்போது தான் அந்த வார்த்தைகள் ஏனோ மீண்டும் அசரீரி போல் என் காதில் ஒலிக்க ஆரம்பித்தது.
“அப்பு…. அக்கா சொன்னா கேப்பியா? மாட்டியா?…”