செல்வராகவனுடன் சில நிமிடங்கள், பல நினைவுகள்…

sevaraghavan

“மயக்கம் என்ன” திரைப்படம் வெளியான மறுநாள் நாள் அதன் ப்ரீமியர் ஷோவிற்கு சென்னை போர் பிரேம்ஸ் திரையரங்கம் சென்றிருந்தேன். வெளியான அன்றே சேலத்தில் அந்த திரைப்படத்தை பார்த்திருந்தாலும் இப்போது நான் செல்வதற்கான ஒரே காரணம் அதன் இயக்குனர் செல்வராகவன். என் வாழ்வில் நான் மிகவும் பிரம்மித்து ரசித்த நபர் அவர். ஒரு காலத்தில் இவரை சந்திப்பதற்கு தவம் இருந்திருக்கிறேன்.

திரைப்படத்தின் முடிவில் பார்வையாளர்கள் அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்தவாறு அந்த திரைப்பட குழுவினருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இயக்குனர் செல்வராகவன், அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன், தனுஷ், ரிச்சா, மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி அனைவரும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தனர். எனக்கு செல்வராகவனிடம் கேட்பதற்கு  பல கேள்விகள் இருந்தது. ஆனால் மைக்கை வாங்கி அவரிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டேன். பொறுமையாக, தெளிவாக பதில் அளித்தார்.

அதன் பிறகு அடுத்த கேள்விக்காக மறு திசையில் திரும்பிய செல்வராகவன், திடீரென என்ன நினைத்தாரோ மீண்டும் என்னிடம் திரும்பி  “உங்க பேர் பிரவீனா? சேலத்தில் இருந்து வரீங்களா?” என்றார். எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.  சில நுண்ணிய நொடிகளில் சுதாரித்துக்கொண்டு “ஆம்” என்றேன்.. “சரி, இந்த கலந்துரையாடல் முடிந்த பிறகு வெளிய வாருங்கள் நாம் பேசலாம்” என்றார்.

நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது. 2002ஆம் வருடம் மே மாதம். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து அதன் தேர்வு முடிவுகளுக்கு வீட்டில் காத்திருந்த நேரம். இலவச கோட்டாவில் சீட் வாங்கும் அளவுக்கு அப்போது மார்க் வந்து கிழிக்கப்போவதில்லை என்று எனக்கு தெரியும். நண்பர்கள் அனைவரும் இஞ்சினியரிங் சீட்டுக்களை விலை பேசிக்கொண்டு இருந்தனர். குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக எனக்கு அப்போது அதுவும் சாத்தியப்படவில்லை. ஆனால் இருந்தும் வீட்டில் என்னை பெரிதும் நம்பிக்கொண்டு இருந்தனர். ஒரு பக்கம் பள்ளி வாழ்க்கை முடிவுற்று தனிமைபடுத்தபட்ட ஒரு உணர்வு. இன்னொரு பக்கம் அடுத்து என்ன என்ற ஒரு கேள்வி, பதட்டம், பயம். வீட்டிலே தனியாக முடங்கிப்போயிருந்தேன்.

இந்த நேரத்தில் தான் துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியானது.  பல மாதங்களுக்கு முன்பே, பள்ளி நாட்களிலேயே அதன் பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறேன். அந்த திரைப்படத்தின் ட்ரைலர் வேறு பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுடைய வாழ்க்கையை சித்தரிப்பது போலிருந்ததால் எனக்குள் கூடுதல் எதிர்பார்ப்பு வேறு. நான் மட்டும் தனியாக அந்த படத்திற்கு சென்றேன்.படம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் ஏதோ புதிதாய் ஒரு உணர்வு எனக்குள்.

ஒரு வித உளவியல் ரீதியான ஒரு தாக்கத்தை அந்த திரைப்படம் எனக்குள் ஏற்படுத்தி இருந்ததை இன்னும் என்னால் உணர முடிகிறது.  ஒரு வேகம்? ஆறுதல்? தன்நம்பிக்கை? சுய பிரதிபலிப்பு?  பள்ளிபருவ நினைவுகள்? மகிழ்ச்சி? தவிப்பு? என்னவென்று சரியாக சொல்லத்தெரியவில்லை. ஆனால் முதன் முதலாய் ஒரு திரைப்படம் என்னை ஏதோ செய்து தொலைத்தது. அது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது. இருந்தும் செல்வராகவனை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்தது. இந்த உலகம் ஒரு இன்ஜினியரை இழப்பது அன்று உறுதியானது. நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் என் தாய் மாமாவின் வீட்டில் இருந்தபடி சேர்ந்தேன். “இன்றிலிருந்து தினமும் நன்றாக படிக்க வேண்டும்” என்று நினைத்து நினைத்தே முதல் வருடம் முடிந்து போனது.   கல்லூரி இரண்டாம் வருடம், 2003 ஜூன் மாதம் என்று நினைக்கிறன். ஒரு நாள் டிவியில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தின் ட்ரைலர் பார்த்தேன். “From the makers for Thulluvatho Ilamai” என்று அது ஆரம்பித்தது. அதே தனுஷ். ஆனால் இப்போது என்னை போல் தனுசும் அதில் பள்ளி முடித்து கல்லூரி செல்கிறார்!

படம் வெளியான முதல்நாள், முதல் காட்சி. முதன்  முதலாய் கல்லூரி கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் படத்திற்கு சென்றேன். அனைவரும் “துள்ளுவதோ இளமை”யால் வந்த கூட்டம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு. படம் ஆரம்பம் ஆகி சில நோடிகளிலேயே தெரிந்து விட்டது இது வேறு ஒரு மாதிரியான ஒரு படம் என்று. இடைவேளையின் போது அனைவரும் முற்றிலும் அதை உணர்ந்து இருந்தோம். கிளைமாக்ஸில் தனுஷ் நடனமாடிக்கொண்டே சண்டை போடும்போது எழுந்து நின்று ஆர்ப்பரித்த கூட்டம், தனுஷ் மலையிலிருந்து கீழே விழுந்து, “A Film By Selvaraghavan” என்று முடியும் போது அப்படியே அமைதியாக உறைந்து போனது..

வீட்டிக்கு வந்தும் கூட எனக்குள் மிகபெரிய தாக்கத்தை அந்த திரைப்படம் ஏற்படுத்தி இருந்தது. என் சிந்தனை முழவதும் ஒவ்வொரு காட்சியும், வசனமும், பின்னணி இசையும், பாடல் வரிகளும் ஆக்ரமித்து இருந்தது.  பின்னர் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள்  ஆகியும் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. படத்தின் முதல் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சி வரை பின்னணி இசையுடன் என்னால் என் மனதில் ஓட்டிபார்க்க முடிந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது உண்மை. படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளிய வந்ததும் எனக்குள் எழுந்த கேள்வி இது தான். எப்படி இது போல் ஒரு கதையை, கதாபாத்திரத்தை ஒருவரால் கற்பனை பண்ண முடிந்தது? எப்படி இது போல் உணர்வுகளை ஒருவர் திரைப்படமாக பதிவு செய்ய முடிந்தது? அதற்கான பதிலும் ஒரு கேள்விதான்.  யார் இந்த செல்வராகவன்?

தேடித் தேடி அலைந்தேன். முதன் முதலாய் ஒரு நபரின் உருவம் தேடி அலைகிறேன். என்னை பிரமிக்க வைத்த அந்த மனிதர் எப்படி இருப்பார் என ஆர்வம். இப்பொழுது இருப்பது போல், ஒரு படம் வெளிவந்தவுடனேயே அதன் இயக்குனரை ஏதேனும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பார்த்துவிடும் வாய்ப்பு அப்போது இல்லை. நூலகம் செல்லும் பழக்கம் இருந்ததால் தினமும் அனைத்து பத்திரிக்கைகளையும் புரட்டிப்பார்தேன். சில நாட்களின், ஒரு பத்திரிக்கையில், கருப்புக்கண்ணாடி அணிந்த ஒரு நபரின் புகைப்படம் வெளியானது. அவர்தான் செல்வராகவன். அதன் பிறகு நான் பார்த்த புகைப்படங்கள், தொலைக்காட்சி பேட்டி என அனைத்திலும் சன் கிளாஸ் அணித்து அவர் காணப்பட்டது எனக்கு வியப்பளித்தது. அது ஏனென்ற கேள்விக்கு பின்னர் விடை கிடைத்த போது மனம் கனத்தது. அவர் மேல் மேலும் மரியாதை கூடியது.

இந்த நேரத்தில் தான் எனக்கு என்னை அறியாமல் எழுதும் பழக்கமும் அதிகமானது. அப்போது எனக்கு இருந்த நல்ல பழக்கம் எழுதுவது மட்டும்தான். அதற்கு ஒரே காரணம் கவிஞர் நா.முத்துக்குமார்.  அந்த சமயத்தில் தான் நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இல்லை கிறுக்க ஆரம்பித்தேன் என்று சொல்லலாம். அதில் பலது குப்பைகள். சிலது நானே படித்து வியந்திருக்கிறேன். உனக்கும் எழுத வருகிறது என்று எனக்கு அவை உணர்த்தியது. எழுத விளையும் ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் அது மிகவும் அவசியம். மேலும் நான் எழுதியதில் ஒன்று அப்போது ஒரு கவிதை தொகுப்பில் புத்தகமாக வெளியாகியது. அது எனக்கே என்மேல் முதன் முறை நம்பிக்கையை ஏற்படுத்திய தருணம்.

கல்லூரி மூன்றாம் வருடம். அதுதான் கடைசி வருடம். நண்பர் அனைவரின் கவனமும் படிப்பில் அதிகமானது. எனக்கோ கவனம்  கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகிக்கொண்டு இருந்தது. அது எதை நோக்கி என்று அப்போது எனக்கு புரியவில்லை.  2004 அக்டோபர் மாதம் ஒரு நாள் செய்தித்தாள் பார்த்துக்கொண்டு இருந்தேன். 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் அந்த வார வெள்ளிக்கிழமை வெளிவருவதாக விளம்பரம் வந்தது. அதன் வெளியீட்டிற்கு நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நேரம் அது. செல்வராகவனின் மேல் இப்போது இருந்த ஈர்ப்பு தான் அதற்கு காரணம். ரிலீஸ்ஆகும் முதல் நாள், முதல் காட்சி கல்லூரி கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் சென்று விடுவதாக முடிவு செய்தாயிற்று. ஆனால் அந்த முடிவு என்னை பின்னர் பாடாய் படுத்தப்போகிறது என்று நான் அப்போது சுத்தமாய் உணரவில்லை.

முதல் நாள் வரை நெய்வேலியில் எந்த தியேட்டரில் படம் ரிலீஸ் என்று தெரியவில்லை. செய்தித்தாளில் வந்த விளம்பரங்களிலும்  வெளியாகும் தியேட்டர் பெயரில்லை. பொறுக்க முடியாமல் படம் வெளியாகும் முதல் நாள் மாலை அருகிலிருக்கும் நிதி ரத்னா தியேட்டரில் கூட சென்று விசாரித்து விட்டேன். அவர்களுக்கும் அங்கு வெளியாகுமா என்று அதுவரை உறுதியாக தெரியவில்லை! அனைவருக்கும் ஒரே குழப்பம்.

எப்படியும் முதல் காட்சி பார்த்து விட வேண்டும். இரவு தூக்கம் வரவில்லை. ரிலீஸ் நாளன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து சைக்கிளில் கல்லூரி புறப்பட்டேன். அப்போது சைக்கிள் தான் என் வாகனம். எப்போதாவது என் மாமாவின் யமாஹா 135 சிசி. கல்லூரி போகும் வழியில் தான் நெய்வேலி நிதி ரத்னா தியேட்டர் இருந்தது. அங்கு எப்படியும் படம் ரிலீஸ் ஆகும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் போனேன். ஆனால் பழைய படமே அன்று தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தது. மிகவும் எதிர்பார்த்த ஒரு படத்தை முதல் காட்சி பார்க்க முடியவில்லை என்றால் அதை விட அந்த வயதில் வேறு என்ன கொடுமை இருக்க முடியும்?

சோகத்தில் உச்சத்தில் சைக்கிளை கல்லூரி நோக்கி மிதித்தேன். கல்லூரி வாசலில் நண்பர்கள் இருவர் பைக்கில் எனக்காக காத்திருந்தனர்.

“மச்சி, ரெயின்போ காலனி போகலையா? இன்னிக்கி ரிலீஸ் போல? உன் பேவரைட் டைரக்டர் செல்வராகவன் படம்!” என்றான் ஒருவன்.

“ஓடி போயிடு. நானே கடுப்புல இருக்கறேன். கிளாசுக்கு வேற டைம் ஆயிடிடுச்சு” என்று கூறிவிட்டு கல்லூரிக்குள் நுழைய முயன்றேன்.

“பண்ருட்டி தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகுதாம். நம்ம தினகரன் காலைல போன் பண்ணி சொன்னான். எப்புடியும் இந்த பைக்கில் போனால் முக்கால் மணி நேரத்தில் போயிடலாம். இப்போ போனால் படம் ஆரம்பம் ஆவதற்கும் சரியாக இருக்கும். நாங்க ரெண்டு பேரும் போறோம்”

காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது அதைக்கேட்டதும்.  என்ன ஒரு நம்பிக்கையான வார்த்தைகள் அவை.. திரும்பி பார்த்தால் இருவரும் கடவுள் போல் காட்சி அளித்தனர். “அட பாவிகளா… முன்னாடியே சொல்ல வேண்டியது தானே? ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு சைக்கிளை உள்ளே ஸ்டாண்டில் போட்டுட்டு, நோட்டு புத்தகத்தை வகுப்பில் வைத்து விட்டு வறேன்”

“இல்ல மச்சி… நேரம் பத்தாது. அது மட்டும் இல்லாமல் ஒரு பைக் தான் இருக்கு. அப்பா ட்ரிப்பில்ஸ் போகக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி இருக்காரு.  அதனால நீ….”

“ர்.ர்.ர்…. அடீங்க……………”

பைக் இப்போது மூன்று பேரையும் ஏற்றிக்கொண்டு பண்ருட்டியை நோக்கி வேகமெடுத்தது. சரியாக காலை பத்துமணி இருக்கும் அந்த தியேட்டரை நாங்கள் அடைந்தபோது. ரெயின்போ காலனி போஸ்டர் தியேட்டர் முகப்பில் ஒட்டி இருப்பதை பார்த்ததும் தான் நிம்மதி வந்தது. ஆனால் பெயரளவிற்கு கூட கூட்டம் எங்கும் தென்படவில்லை என்பது சற்று உறுத்தல்.

“மச்சி, கூட்டமே இல்ல படம் போட்டுட்டான் போல…” என அவசரம் அவசரமாக டிக்கட் கவுண்டரை நோக்கி பைக்கில் இருந்து இறங்கி ஓடினான் நண்பன். ஆனால் சில நொடிகளில் சுவரில் வீசிய பந்து போல போன வேகத்தில் திரும்ப வந்தான்.

“படப்பெட்டி வரலையாம்! ஏற்கனவே ஓடிட்டு இருக்கும் “கிரி” படம் தான் இப்ப போடுவாங்கலாம்”.

“அடக்கடவுளே! இப்ப என்னாடா பண்றது? மதியமாவது வருமா?” என்று கேட்ட என் குரலில் ஸ்ருதி சுத்தமாய் இல்லை.

“இங்க பொட்டி வரலைன்னா என்னா? கவலைப்படாத மச்சி. இங்க இருந்து ஒன்னரை மணி நேரம் தான் கடலூர். அங்க கிருஷ்ணா தியேட்டர்ல போய் எப்படியும் மதிய ஷோ பாத்துடலாம். இங்க மத்தியானம் பொட்டி வந்தால் என்ன? வரலைனா என்ன?” என்று யோசிக்காமல் ஐடியா சொன்னான் இன்னொரு நண்பன்.  பட் அந்த நம்பிக்கை எங்களுக்கு புடிச்சு இருந்திச்சு.

எப்படியும் மேட்னி ஷோ என்பதால் கொஞ்சம் மெதுவாகவே பைக் கடலூரை நோக்கி சென்றது. டிக்கெட் எடுக்கும் போது மதியம் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இப்பவே நாம சாப்பிட்டுட்டு போனால் தெம்பாக அடிச்சு புடுச்சி டிக்கெட் வாங்கலாம் என்ற கூறிய நண்பனின் யோசனை போகும் வழியில் நிறைவேறியது.

ஒருவழியாக கடலூர் கிருஷ்ணா தியேட்டர் போய் சேர்ந்தோம். மதிய காட்சிக்கு நேரம் அதிகம் இருந்தது. ஆனால் கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை ஆடிட்டு இருந்துச்சுனு சொல்லுவாங்களே, அது போல பண்ருட்டியில் படப்போட்டி வரலன்னு கடலூர் போனால் அங்கேயும் அதே கதை தான். பெட்டி வரலை என்பதால் அங்கே காலை காட்சியில் ஏற்கனவே வேறு படம் ஓடிக்கொண்டு இருந்தது. மதியம் தான் பெட்டி வரும் என்று டிக்கெட் கவுண்டரில் கூறினார்கள். “அப்போ இங்கயும் இன்னும் வரலையா?” திருவிழாவில் காணமல் போன கோழி போல் திருத்திருவென மூவரும் செய்வதறியாது விழித்தோம்.

அப்படியே அங்கு மதியம் படப்பெட்டி வந்தாலும் அதை பார்த்துவிட்டு கடலூரில் இருந்து மீண்டும் பண்ருட்டி வழியாக நெய்வேலி செல்வதற்கு எப்படியும் ரெண்டரை மணி நேரம் ஆகும். மதியம் இரண்டு மணிக்கு முடியும் கல்லூரியில் இருந்து இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கு சென்றால்? உண்மை மெல்ல மெல்ல உரைக்க, மூவருக்கும் வேர்த்துக் கொட்டியது. மூன்று பேர் கொண்ட அந்த குழுவில் சுமார் பத்து நிமிடம் யோசித்து எடுத்த முடிவு இது தான். மதியக்காட்சி முடிந்து மாலை வீட்டிற்கு செல்ல பண்ருட்டி தான் பக்கம் என்பதால், மீண்டும் பண்ருட்டி செல்ல தயாரானோம். பட் மறுபடியும் அந்த நம்பிக்கை எங்களுக்கு பிடித்து இருந்தது.

நேரம் வேறு இப்போது மிகக்குறைவு. திரும்பி போகிற வழியில் கடலூரில் ஒரு ட்ராபிக் போலீசிடம் மாட்டி, மூன்று பேர் சென்றதற்காக  தண்டம் அழுது விட்டு, சரியாக மதிய ஷோவிற்கு அந்த பண்ருட்டி தியேட்டருக்கு சென்றடைந்தோம். ஆனால் எங்களை விதி துரத்தி துரத்தி அடித்தது அங்கு போன போது தான் தெரிந்தது. மதியம் கூட அங்கு படப்பெட்டி வரவில்லை.

செல்வராகவன் மேல் இப்போது கோபம் கோபமாய் வந்தது. “இங்க மூணு பேரும் படம் பார்ப்பதற்கு ஊரு ஊராய் அலைந்துக்கொண்டு இருக்கிறோம் இப்படி பொட்டிய குடுக்காம இருக்காரே. இந்த ஏரியாவுக்கு ஒரே ஒரு பெட்டிய கொடுத்து இருந்தால் என்ன?” என எங்களுக்குள்ளே திட்டிக் கொண்டோம். “இல்ல டா,  இது ப்ரோடியூசர் பண்ற வேலையாய் இருக்கும். தேவையான அளவு கடைசி நாள் வரை பிரிண்ட் போடலாயோ என்னவோ” என்று எங்களுக்குள் யாரோ சொல்ல கோபம் இப்போது தயாரிப்பாளர் மேல் போனது.

“அண்ணே, நெய்வேலியில் இருந்து காலேஜ் கட் அடிச்சிட்டு வந்து இருக்கோம்னே. கடலூர் கூட போய் பார்த்துட்டோம். பொட்டி வரலை. எப்போ தான் வரும்னு சொல்லுங்கண்ணே” டிக்கெட் கவுண்டரில் மூன்று பெரும் அப்பாவியாய் கேட்கிறோம்.

“முதலாளி மெட்ராஸ்ல தான் தம்பி இருக்கார். பொட்டிக்கு தான் வெயிட்டிங். இப்போ தான் பேசினோம். இன்னம் கொஞ்ச நேரத்துல கிடைச்சிடுமாம். எப்படியும் ஈவ்னிங் ஷோக்கு வந்துடும்.”

“காலைல இருந்து சுத்தியாச்சு. எப்படியும் வீட்டுக்கு போனால் கண்டிப்பாக திட்டு உண்டு. அதை ஏன் ஈவ்னிங் ஷோ படம் பார்த்து விட்டு நைட்டு போய் மொத்தமாக திட்டு வாங்கிக்க கூடாது?” என்றேன் நான்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகத்தான் எல்லாருக்கும் பிடித்திருந்தது. இருந்தும் மாலை வரை என்ன செய்ய? அப்படியே கவுண்டரில் டிக்கெட் எடுத்து விட்டு மதிய காட்சி “கிரி” படத்திற்கு உட்கார்ந்தோம். படம் ஆரம்பம் ஆனது.

“இன்னக்கி ரெயின்போ காலனி பார்க்காமல் வீட்டுக்கு போகக்கூடாது மாப்ள”

“ஆமாம் மச்சி. கரெக்ட்”

எங்களுக்குள்ளே பேசிக்கொண்டோம். அதான் நம்பிக்கை. படத்தின் க்ளைமாக்ஸ் ஓடிய நேரம். எப்படியும் பெட்டி இந்நேரம் வந்து இருக்கும். விஷயம் அதுக்குள்ள தெரிஞ்சி வெளியே கூட்டம் கூடி போச்சுனா அப்பறம் டிக்கெட் கிடைக்காது என்று மிகச்சிறந்த வகையில் புத்தி அப்போது வேலை செய்தது. க்ளைமாக்ஸ் முடியும் முன்னர் அவசர அவசரமாக வெளிய வந்தோம். வெளியே கூட்டம் இல்லை. நல்லவேளை அட் தீ எண்ட் ஆப் த டே வீ ஆர் லக்கி பெல்லோஸ் என்று ஆனந்தமாகி கவுண்டரில் போய் டிக்கெட் கேட்டோம்.

“தம்பி… அது…”

“என்னாணே இழுக்கறீங்க”

“பெட்டி லேட்டா தான் கிடைச்சுது. முதலாளி இப்போ தான் கார்ல எடுத்துட்டு மெட்ராஸ்ல இருந்து வந்துட்டி இருக்காரு. இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவாரு. நைட் ஷோ தான் படம் ஓடும். இப்போ மறுபடியும் ஈவ்னிங் ஷோ “கிரி” தான் போட சொல்லி போனின் பேசினாரு.”

எங்களுக்கு தூக்கி வாரி போட்டது. கோபம் கோபமாய் வந்தது. இருந்தும் உடனே வீட்டிற்கு திரும்ப மனசு வரவில்லை. ஒரு வேலை நாம போன கொஞ்ச நேரத்துல பெட்டி வந்துடுச்சினா?  ஈவ்னிங் ஷோ ஆரம்பிக்கும் வரை வெளியே காத்திருந்தோம். அவர்கள் சொன்னது போல் கிரி தான் மறுபடியும் ஓடியது. நண்பன் விரக்தியில் பைக்கை எடுத்து வந்து ஸ்டார்ட் செய்து எங்களை ஏறச்சொன்னான்.

நான் இத்தனை நடந்தும் கொஞ்சமும் அசரவில்லை. “டேய் உனக்கு தான் ரீமா சென் ரொம்ப பிடிக்குமே. அது மட்டும் இல்லாமல் வடிவேலு காமெடி வேற சூப்பரா இருக்குடா.” என்றேன்.

“அதுக்கு!!!!????” இருவரும் கோரசாய்.

“இன்னொரு வாட்டி ஈவினிங் ஷோ கிரி போலாம். எப்படியும் நைட் ஷோவிற்கு பெட்டி வந்துடும்னு சொல்றாங்களே. அதனால….”

பட் இந்த முறை அந்த நம்பிக்கை யாருக்கும் சுத்தமாய் பிடிக்கவில்லை. இருவருமே என்னை முறைத்தனர்.

தெரு முனையில் நான் இறங்கி மெல்ல வீட்டிற்குள் நுழைந்தேன். ஏற்கனவே வானம் இருட்டி வெகு நேரம் ஆகி இருந்தது. அனைவரும் வீட்டில் அப்போது இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

“காலேஜ் முடிஞ்சி மதியம் சாப்பாட்டுக்கு கூட வரலை. சார் எங்க போனீங்க?” என்று ஆரம்பத்தில் பொறுமையுடன் கேட்டார் மாமா.

“ம்ம்… அது வந்து… அது.. ஸ்பெஷல் கிளாஸ் இருந்துச்சு…”

“சரி, நோட்டு புத்தகம் எங்க?. ஜாலியா வெறும் கையை வீசிட்டு வந்து இருக்க?”

“….!”

“அது இருக்கட்டும்……. காலைல காலேஜுக்கு எடுத்துட்டு போன சைக்கிள் எங்கடா?”

“….!!!!!”

கோபத்தில் வீடு பிரளயம் ஆனது. இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை. வீட்டிலே சனி, ஞாயிறு இரு நாளும் யாரிடமும் பேசாமல் முடங்கிக்கிடந்தேன். அப்போது கூட எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான். இத்தனை நடந்ததுக்கு காரணம் ரெயின்போ காலணி. அட்லீஸ்ட் இரவு காட்சி பார்த்துட்டு வந்து இதெல்லாம் அனுபவிச்சி இருக்கலாம்.

ஞாயிறு மாலை வீட்டின் அமைதியை குலைத்து லாண்ட் லைன் போன் கத்தியது.

“உனக்கு தான் போன்” என்று உள்ளிருந்து குரல்.

போனை எடுத்தேன்

“என்னா மச்சி ரெண்டு நாளா ஆளை காணோம்? வீட்டில் அன்னைக்கு லேட்டா போனதால் பிரச்சனையா?” என்றான் நண்பன்.

“சொல்லு”

“இன்னைக்கு இவனிங் ஷோவிற்கு பைக்கில் பண்ருட்டி போறேன் மச்சி. 7ஜி ரெயின்போ காலனி சூப்பரா இருக்காம். வரியா”

“…… சொல்லு”

“சரி புரியுது. நான் சொல்லுறதை மட்டும் கவனி.. சரியாய் அஞ்சு மணிக்கு தெரு முனையில் போன் பூத் அருகே நிற்பேன். உன் லேன்ட் லைனிற்கு இரண்டு ரிங் வரும். பத்து நிமிஷம் வரைக்கும் வெயிட் பண்றேன். முடிஞ்சா வா.

“…..”

“மச்சி மறுபடியும் சொல்றேன்.. உன் பேவரைட் செல்வராகவன் படம்.. அதனால”

“டேய்…”.

போன் கட் ஆனது.

சரியாக ஐந்து மணி. சொன்ன மாதிரி  லேன்ட் லைன் போனிற்கு இரண்டு ரிங் வந்து கட் ஆனது. அதுவரை சமத்தாக வீட்டில் உட்கார்ந்து இருந்தேன். ஆனால் இப்போது முடியவில்லை. அவசரம் அவசரமாக கிளம்பி வீட்டை விட்டு வெளியே செல்ல ஆயத்தம் ஆனேன்.

“எங்கடா போற?” என்றார் மாமா

“வெளியே போறேன்”

அதற்க்கு அவரிடம் பதில் வருவதற்குள் விருட்டென்று அந்த இடத்தை காலி செய்தேன். தெரு முனையில் வந்து பார்த்தால் என் நண்பனையும் காணோம் அவன் பைக்கையும் காணோம். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே வந்தானா? இல்லை வெயிட் பண்ணி பார்த்துட்டு போய்ட்டானா? இப்போ திரும்ப வீட்டுக்கு போனால் என்ன நடக்கும்? என்று அனைத்தையும் யோசித்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தேன்.

சிறிது தூரத்தில் ஒரு பைக் சென்றுக்கொண்டு இருந்தது. அவன் தான் ஒட்டிசென்றான். கடவுள் இருக்கான் குமாரு. சந்தோசத்தில் சத்தமாய் அவன் பெயர் சொல்லி கத்தினேன். திரும்ப வந்து என்னை ஏற்றிக்கொண்டான். நான் 7ஜி ரெயின்போ காலனி படம் பார்த்த கதை இது தான். இதை போல் யாருக்கும் படம் பார்த்த அனுபவம் நிச்சயம் இருக்காது. அதற்கு ஒரே காரணம் செல்வராகவன்.

அதன் பிறகு எட்டு முறை தியேட்டரிலேயே அந்த படத்தை பார்த்து இருப்பேன். என்ன ஒரு கவித்துவமான முடிவு. காதல் கொண்டேன் படத்தை போல் இந்த படமும் முதல் காட்சி ஆரம்பித்து கடைசி காட்சி வரை மனதில் பதிந்து இருந்தது.  துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் மற்றும் ரெயின்போ காலனி. என் வாழ்நாளில் மறக்க முடியா படங்கள் அவை. என் சினிமா ரசனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருந்தது.

இப்போது கல்லூரி முடிய இன்னும் நான்கு, ஐந்து மாதங்களே இருந்தது.  படிப்பில் ஆர்வம் சுத்தமாய் குறைந்து விட்டது. எப்படியும் அரியரோடு தான் கல்லூரி படிப்பு முடியும் என்று தெரியும். மேற்படிப்பு என்பதை அப்போதைக்கு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நண்பர்கள் அனைவரும் அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். உடன் சுத்திக்கொண்டு இருந்த பல பேர் திடீர் ஞானோதயம் வந்து விடிய விடிய குரூப் செய்துக்கொண்டு இருந்தனர். அது தானே நியாயம்!

தீடீரென தனிமை படுத்தப்பட்ட உணர்வு. கல்லூரி முடிந்ததும் சேலத்தில் உள்ள என் வீட்டிற்கு சென்று விடுவேன். அதன் பிறகு? எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு பயம் தொற்ற ஆரம்பித்தது. படித்து விட்டு ஏதாவது வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று அம்மா நம்பிக்கொண்டு இருக்கிறார். ஆனால் எனக்கு வேலைக்கு செல்லும் எந்த தகுதியும் இல்லை. எனக்கு யார் வேலை கொடுப்பார்கள். அடுத்து என்ன செய்வது? இனிமேலும் வீட்டுக்கு பாரமாய் இருப்பது அபத்தம்.

அது எப்படி ஆரம்பம் ஆனது என்று தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அறியாமலேயே முடிவெடுத்து விட்டேன். என்னுடைய இலக்கு திரைப்பட இயக்குனர் ஆவது என்பது தான். எனக்கும் எழுத வரும் என்று நம்பினேன். அதை தவிர எனக்கென்று வேறு எதுவும் அப்போது தெரியாது. ஒரு நாள் முதன் முறையாக நண்பன் ஒருவனிடம் இதை சொன்னேன். கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்தான்.  எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றான். எனக்கு கோபமாய் வந்தது.

ஆனால் நான் அடுத்து சினிமா தான் என் உலகம் என்று முழுதாய் நம்பினேன். என்னை அதற்கு தயார் படுத்தித்கொள்வதை தவிர வேறு வழி இல்லை. ஒரு கட்டத்தில் இவன் சொன்னால் திருந்த மாட்டன் என்று நிறைய பேர் ஒதுங்கிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினர். அவர்களை சொல்லி தப்பு இல்லை.  பிரச்சனை என்னவென்றால்.அவர்களுக்கு படிக்க வரும் என்று நம்பினார்கள், அதை செய்தார்கள்.  ஆனால் எனக்கு எழுத மட்டுமே வரும் என நம்பினேன்.

என்னை போல் சினிமா ஆசையுடன் இரண்டு நண்பர்கள் அப்போது இருந்தனர். ஒருவனுக்கு நடிகராக வேண்டும் ஆசை. இன்னொருவனுக்கு கிராபிக்ஸ் வேலை சேர. அவர்களுக்கும் கல்லூரி முடிந்ததும் சென்னை செல்வது தான் திட்டம். பார்ட்னர்ஸ் ஆப் கிரைம் என்பது போல் நாங்கள் மூவரும் ஒன்று சேரவேண்டி இருந்தது.  பகலில் கல்லூரி. மாலை முதல் இரவு வரை ஒரு மைதானத்தில் அமர்த்து அவரவர் கனவை விவாதிப்போம். என்னுடைய கனவுகளும் அங்கு தான் பிறக்க ஆரம்பித்தது. சினிமா பற்றி நிறைய பேசுவோம். கதை விவாதம் செய்வோம்.

அந்த சூழ்நிலையில் நிறைய இயக்குனர்களின் நம்பர்களை பிடித்து போனில் பேச முயற்சி செய்தேன். உதவி இயக்குனர் வாய்ப்பு தேடும் படலம் தொடங்கியது. அநேகம் பேர் வாய்ப்பு கேட்டால் உடனே போனை வைத்து விடுவார்கள். கொஞ்சம் பேர் இப்போது வாய்ப்பு இல்லை பின்னர் தொடர்பு கொள் என்பார்கள். சிலரோ இந்த நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது என்று திட்ட ஆரம்பித்து விடுவார்கள். எங்கேயும் எனக்கு கதவு திறக்கப்படவில்லை. போனில் வாய்ப்பு தேடுவதை போல் முட்டாள் தணம் வேறு இல்லை என்று அப்போது அந்த வயதில் எனக்கு புரியவில்லை.

ஆனால் ஒரு விசயத்தில் தெளிவாக இருந்தேன். பைத்தியக்காரத்தனமான யோசனை அது. கல்லூரி முடிந்த பிறகு சென்னை சென்ற பிறகு யாரிடமாவது அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை தேடி அலைவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கல்லூரி முடிய இரண்டு மூன்று மாதங்கள் இருந்த நிலையில் இப்போதே யாரிடமாவது அசிஸ்டன்ட் டைரக்டர் சான்ஸ் பெற்று விட வேண்டும். கல்லூரி முடிந்தவுடனேயே பாதுகாப்பாக அவரிடம் சேர்ந்து விட வேண்டும். அதற்க்கு காரணமும் இருந்தது. வீட்டிற்கு சென்றவுடம் சினிமா செல்கிறேன் என்றால் நிச்சயம் அனுமதி கிடைக்காது. இந்த டைரக்டரிடம் உதவியாளராக சேருகிறேன் என்று கூறினால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் என்று நினைத்தேன். அப்போதைக்கு அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது எனக்கு மிகவும் அவசியமாக பட்டது.

அப்போது செல்வராகவன் ஆனந்த விகடனில் எழுதிய “கனா காணும் காலங்கள்” தொடர் எனக்கு மிகப்பெரிய எனர்ஜி டானிக். என்னுடய அப்போதைய கனவிற்கு அது தான் உயிர் பாய்ச்சியது. அதை படித்த பின்னர் அவர் மேல் அளப்பரியா மரியாதை கூடியது. எப்படியும் செல்வராகவனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்ந்து விட வேண்டும் என துடித்தேன். செல்வராகவனின் நெம்பரை தேடி அலைந்தேன். தேடினால் கிடைக்காதது என்ன இருக்கிறது. பல நாட்களில் தேடல் களுக்கு பிறகு, பல சிரமங்களுக்கு பிறகு, இணையத்தில் போன் நம்பரும், விலாசமும் கிடைத்து. ஆனால் அது டிநகரில் உள்ள அவரது அலுவலகத்தினுடயது.

பரவாயில்லை என்று அந்த எண்ணிற்கு  முயற்சி செய்தேன். பல முறை முயற்சி செய்தும் செல்வராகவனிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவரது அலுவலக ஊழியரே போனை எடுப்பார். உதவி இயக்குனாரக வாய்ப்பு தேடுகிறேன் என்றதும் சரியான பதில் இருக்காது. உடைந்து போனேன். இருந்தும் முயற்சியை கை விடவில்லை.  பல முறை போன் செய்துக்கொண்டு இருந்ததால் என் பெயர் அவரது அலுவலக ஊழியருக்கு தெரிந்திருந்தது. கடைசி முயற்சியாய் ஒரு சின்ன வேண்டுகோள் அவரிடம் வைத்தேன். ஒரு லட்டர் ஒன்னு அனுப்புகிறேன் அதை எப்படியாவது செல்வராகவனிடம் டேபிளில் வைக்க முடியுமா வேண்டுமா என்றேன். அவரும் சரி என்றார். புதிதாய் ஒரு நம்பிக்கை முளைத்தது.

அன்று இரவு உட்கார்ந்து விடிய விடிய கடிதம் எழுதினேன். என் உணர்வுகள், கனவுகள் அனைத்தையும் எழுத்துக்களாக்கினேன். விடிந்த பிறகு பார்த்தால் சுமார் முப்பத்தைந்து பக்கங்கள் எழுதி முடித்து இருந்தேன். இதை செல்வராகவன் முழுதாய் படித்து பார்த்தார் என்றால் நிச்சயம் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்வார் என நம்பினேன்.  கொரியர் அனுப்பி விட்டு அடுத்த நாள் மீண்டும் கால் செய்து கேட்டேன்.

“தம்பி லட்டர் வந்துச்சு” என்றார் ஆபிஸ் ஊழியர்.

மிகவும் சந்தோசமானேன் “செல்வராகவன் படித்தாரா?”

என் கடிதத்தை அந்த ஊழியர் பிரித்து படித்து இருப்பார் என நினைக்கிறேன். அவர் குரலில் என் மேல் பரிதாபம் தெரிந்தது.

“தம்பி, எதுக்கு இவ்வளவு பெரிய கடிதம் எழுதி அனுப்புன. அவர் ரொம்ப பிசி. அவர் படிப்பாரா என்று தெரியவில்லை  இப்படி போன் செய்து, லட்டர் எழுதி உன் நேரத்தை வீணாக்காதே” என அட்வைஸ் செய்தார்.

எனக்கு தூக்கி வாரி போட்டது. எனக்கு இப்போது இருந்த ஒரே நம்பிக்கை அந்த கடிதம் தான். பெரிதாய் நம்பிக்கொண்டு இருந்தேன்.

“அண்ணே எப்படியாவது அவரை படிக்க வச்சிடுங்க அண்ணே” என கெஞ்சினேன். போனை உடனே வைத்து விட்டார்.

வாழ்க்கையே இருண்டது போல் ஆனது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மிகவும் மனம் உடைத்து போனேன். எனக்கு சினிமாவில் வேறு யாரையும் தெரியாது. யாரிடம் போய் இனிமேல் வாய்ப்பு கேட்பது. இருந்த ஒரு கதவும் இப்போது மூடிவிட்டது. இனி செல்வராகவனிடம் பேச முடியும் என்ற நம்பிக்கை கூட சுத்தமாய் போய் விட்டது.

கடைசி வருட தேர்வு ஆரம்பம் ஆனது. இயக்குனர் கனவால் இப்போது படிப்பில் சுத்தமாய் நாட்டம் இல்லை. படிப்பு முடிந்து சேலத்திலுள்ள வீட்டிற்கு சென்றதும் எப்படி என் கனவை வீட்டில் புரிய வைப்பது என தவித்தேன். வேறு வழியில்லை எனக்கு அப்போது தெரிந்ததெல்லாம் செல்வராகவன் ஆபிஸ் நம்பர் மட்டுமே.

மீண்டும் ஒரு நாள் கால் செய்தேன். இந்த முறை வேறொருவர் போன் எடுத்தார். என்னுடைய கனவையும், நடந்தவைகளையும் சொன்னேன்.

“சரி என் மொபைல் நம்பரை குறித்துக்கொண்டு பிறகு கால் செய்” என்றார். அவர் குரலில் அவசரம் தெரிந்தது.

“ நீங்கள் யார் என்றேன்.”

அவர் பெயரை கூறிவிட்டு “நான் செல்வராகவனின் அசோசியேட். இப்போது “புதுபேட்டை” டிஸ்கசன் நடந்துட்டு இருக்கு. அப்புறம் கால் செய்” என்றார்.

என்னுடைய மகிழ்ச்சியை எழுத்துகளால் விவரிக்க முடியாது. என் முயற்சியின் முதல் கட்ட வெற்றி அது.  நான் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இப்போது மீண்டும் என் நம்பிக்கை மெல்ல உயிர் பெற்றது.

ஒரு வாரம் கழித்து அவர் மொபைல் எண்ணிற்கு கால் செய்தேன். இன்னும் ஒரு மாதத்தில் கல்லூரி முடிந்து விடும், அதன் பிறகு தான் சென்னை வர முடியும், எனக்கு யாரையும் தெரியாது என கூறினேன். அவரும் எனக்கு உதவுவதாக வாக்களித்தார். சென்னை வருவதற்கு முன்னர் நான் கற்றுக்கொள்ள வேண்டிய சிலவற்றை அறிவுறித்தினார். நீண்ட முயற்சிக்கு பின் ஒரு நல்வழி கிடைத்தது.

கல்லூரி முடிந்து நெய்வேலியில் இருந்து காலி செய்துவிட்டு சேலத்தில் என் வீட்டிற்கு வந்தேன். ஒரு நல்ல நாளில், சிறிது தயக்கத்துடன் என் கனவை பெற்றோரிடம் சொன்னேன். சினிமா என்றதும் அப்பாவுக்கும் கோபம். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.  பெரிய சண்டை. கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. கோபத்தில் நான் எழுதிக்கொண்டு இருந்த என்னுடைய, கதை, திரைக்கதை டைரியை கிழித்து எறிந்தேன்.

ஓரிரு நாட்கள் ஆகியும் என்னால் சமாதானம் சொல்லிக்கொள்ள முடியவில்லை. ஒரு நாள் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு சென்று விடுவதாக திட்டம். விஷயம் தெரிந்து அம்மா கதறி அழுதார். எந்த வேலையும் இல்லாமல், சம்பாத்தியத்திற்கு உறுதி இல்லாமல் சென்னைக்கு சென்றால் அதை விட பெரிய நரகம் வேறெதும் இல்லை என்றார் என் கையை பிடித்துகொண்டு. எனக்கு பண உதவி செய்திடும் சூழ்நிலையிலும் குடும்பம் அப்போது இல்லை.

இருந்தும் நான் அதை கேட்பதாய் இல்லை. “எனக்கு வயது இருக்கிறது. இப்போது எனக்கு  இருபது தான் ஆகிறது. நான் ரிஸ்க் எடுக்கிறேன். சினிமா தான் என் கனவு” என்றேன்.

எனக்கு சினிமாவில் யாரையும் தெரியாது என்று பயந்தார். இந்த கேள்வி வரும் என்று நான் கல்லூரி படிக்கும்போதே எதிர்பார்தேனே. செல்வராகவனின் அசோசியேட் பற்றி சொல்லி இவர் மூலமாக தான் நான் செல்வராகவனிடம் சேர போகிறேன் என்றேன்.

அம்மாவிற்கு இன்னமும் கவலை இருந்தது. அவரிடம் பேச வேண்டும் என்றார். அவருக்கு போன் செய்தேன். ஓரிரு நாளில் சென்னை வந்து விடுவேன், வந்ததும் உங்களை சந்திக்கிறேன் என்று சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு அம்மா உங்களிடம் பேச வேண்டும் என்கிறார்கள் என்றேன். இங்கு தான் என் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது.

நான் சினிமா மீது பிடிவாதாமாய் இருக்கிற விஷயத்தையும், எங்கள் சூழ்நிலையை முழுவதுமாய் அவரிடம் சொன்னார். அப்போது அம்மாவின் குரல் உடைந்து இருண்டது. என் அம்மாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் என்னிடம் அவர் பேசினார். அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

“நான் இஞ்சினியரிங் படித்துவிட்டு சினிமா ஆசையில் சென்னை வந்தேன். வரும் போது அம்மா என்னை அடித்தார்கள், திட்டினார்கள், எவ்வளவோ எடுத்து சொன்னார்கள்.  நான் கேட்கவில்லை.உன் அம்மாவிடம் பேசும் போது என் அம்மா ஞாபகம் வந்து விட்டது.   நானும் உன்னை போல் அப்போது சினிமா தான் என்று உறுதியாய் இருந்தேன். ஆனால் வந்தவுடன் தான் தெரிந்தது சினிமா நாம் எதிர்பார்ப்பது போலில்லை.

கஸ்தூரி ராஜாவிடம் ஆரம்பத்தில் வேலை செய்து விட்டு பிறகு செல்வராகவனிடம் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், ரெயின்போ காலனி முடித்து இப்போது புதுபேட்டை படம் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வருஷம் சொந்த படம் பண்ணிடலாம் என்ற நம்பிக்கையுடன் இதோட பத்து வருஷம் முடிஞ்சிடுச்சு. வீட்டிற்கு போக முடியல, முதல் சினிமாவும் இன்னும் பண்ண முடியவில்லை.

சினிமா பேக் கிரௌண்ட் இல்லாமல்இங்கு பிழைப்பது கஷ்டம். தினமும் ஆயிரக்கணக்கான பேர் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வராங்க. எவ்ளோ பெரிய டைரக்டர் ஆனாலும் ஒரு படம், ரெண்டு படம் ஓடலைனா காணாமல் போயிடுவாங்க. ஒன்னு உங்களுக்கு பினான்சியல் பேக் கிரௌண்ட் இருக்கணும், இல்லை சினிமா பேக் கிரௌண்ட் இருக்கணும். இது ரெண்டும் இல்லாமல் இங்க வந்தால் ரொம்ப கஷ்டம்.

நீ இங்கே வந்தால் உன் அம்மாவை அவர்களால் பார்த்துக்கொள்ள முடியும் என்று நினைத்தால் நீ வா. இல்லையென்றால் உன் சொந்தக்காலில் நிற்கும் தகுதியை வளர்த்துக்கொண்டு, சினிமா இல்லையென்றாலும் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையையுடன் வா.  யோசிச்சு எப்போது வேண்டுமானாலும் கால் பண்ணு. செல்வராகவனிடம் சேர நான் உதவி பண்றேன். இன்னும் கொஞ்ச நாளில் நான் தனியா படம் பண்ணுவேன் அப்போ உன்னை சேர்த்துக்கொள்கிறேன். இல்லையென்றால் யாரிடமாவது சேர்த்து விடுகிறேன். ஆனால் அம்மாவை கஷ்டப்டுத்திவிட்டு சினிமாவிற்கு வராதே.” என்றார்

உண்மை நெஞ்சை கிழித்தது. யார் கூறியும் கேட்க்காத என் மனம் முதன் முறை அந்த வார்த்தைகள் கொஞ்சம் யோசித்தது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபரானார் அவர். இப்படி ஒரு அறிவுரை யார் சொல்லுவார்கள்.

முதலில் ஒரு வேலையை கற்றுக்கொள்ளலாம் பிறகு சினிமா பற்றி யோசிக்கலாம் என்ற அம்மாவின் அறிவுரையை இப்போது ஏற்றுக்கொண்டேன். ஆனால் எனக்கு யாரு வேலை தருவா? நான் ஒன்றும் இன்ஜினியர் இல்லை.  இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை. எனக்குத்தான் ஒண்ணுமே தெரியாதே!

ஆனால் அம்மாவிற்கு என மேல் நம்பிக்கை இருந்தது. தெரிந்தவர் ஒருவர் மூலமாக ஒரு வேலைக்கு ஆள் எடுப்பதாக சொன்னார். அது என்ன வேலை என்று கூட தெரியவில்லை. சேலத்தில் ஒரு பெரிய ஐ.டி கம்பனி. அடுத்த நாள் இன்டர்வியு. எனக்கு சுத்தமாய் நம்பிக்கை இல்லை. அம்மாவிற்காக போனேன். அதுவும் இந்த வேலை கிடைக்கவில்லையென்றால் நிச்சயம் சினிமா வாய்ப்பு தேடி சென்னை சென்றுவிடுவேன் என்ற நிபந்தனையுடன் சென்றேன். ஆச்சர்யம். இண்டர்வியூவில் அனைத்து கேள்விகளும் இன்டர்நெட் பற்றி இருந்தது.

நான் அப்போது தான் உணர்தேன், எழுதுவதை தவிர, இன்டர்நெட்டை சரியா பயன்படுத்தும் திறனும் எனக்கு பள்ளி பருவத்தின் முதலே இருந்தது. அம்மாவின் வேண்டுதலோ என்னவோ மூன்று கட்ட இன்டர்வியு முடிந்து அந்த வேலைக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன்.

ஒரு சில மாதங்கள் கழித்து  ஒரு வீக் என்ட் சென்னை சென்றேன். நடிகராகும் கனவில் கல்லூரி முடிந்ததும் என்னுடன் சென்னை செல்வதாய் இருந்த நண்பன் இப்போது சென்னையில் தான் இருந்தான். இன்னும் அவனுக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இப்போது வந்த “எங்கேயும் எப்போதும்” படம் வரை சில படங்களில் தலை காட்டி விட்டான். அவன் சொன்னது மாதிரியே கல்லூரி முடிந்ததும் வாய்ப்பு தேடி சென்னை வந்துவிட்டான். என்னையும் சென்னைக்கு வந்து விடு என்று அப்போது கூப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

அன்று அவன் தங்கி இருந்த அறைக்கு சென்றேன். அவனிடம் பணம் இல்லை. நான் தான் உணவு வாங்கி கொடுத்தேன். அவனுடைய சின்ன ரூமில் பல பேர் தங்கி இருந்தனர். அங்கு அப்போது அழுக்கு லுங்கியுடன் சவரம் செய்யாத முகத்துடன் ஒருவன் அமர்ந்து இருந்தார். அவரை காட்டி இவர் அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் என்று அறிமுகம் செய்து வைத்தான். உதவி இயக்குனர் என்றதும் எனக்கு அவர் மேல் கொஞ்சம் மரியாதை வந்தது. நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களில் போட்டோ ஆல்பம் சிலது அவன் ரூமில் இருந்தது. நீண்ட நாட்கள் ஆனது என்பதால்  நானும் அவனும் நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்.

சிறிது நேரத்தில் அந்த உதவி இயக்குனர் அறையை விட்டு வெளியே சென்று என் நண்பனை கூப்பிட்டு அவனிடம் மெதுவாய் ஏதோ சொன்னார். அது என் காதிலும் விழுந்தது. “ஒரு கட்டு பீடி வாங்கணும். அப்படியே  உன் ப்ரண்டிடம் காசு ஏற்பாடு பண்ணு ப்ளீஸ்” என்பது தான் அது. எனக்கு தூக்கி வாரி போட்டது.

நல்ல குடும்ப பின்னணி இல்லாமல் சென்னையில் சினிமா தாகம் கொண்டு அலையும்  பலரது நிலைமை இன்றும் இதுதான். ஜெயித்தவர்களை மட்டுமே பார்த்து ஆசைப்பட்டு குடும்பத்தைவிட்டு சென்னை நோக்கி இன்னும் பலர் பயனித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். செல்வராகவன் அசோசியேட் எனக்கு அன்று கூறிய அறிவுரை எந்த அளவிற்கு உண்மை என அன்று உணர்ந்தேன். கனவுதான் நமக்கு உணவென்றால் நாம் மட்டும் பட்டினி கிடக்கலாம். ஆனால் அதற்க்கு நம் குடும்பத்தையும் சேர்த்து பட்டினி போடுவது பெரிய முட்டாள் தனம். அதை எனக்கு தக்க சமயத்தில் புரிய வைத்த அந்த முகம் தெரியாத மனிதரை நன்றி உணர்வோடு சந்திக்க துடித்தேன். அவர் மொபைல் என் இப்போது சேவையில் இல்லை. பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

“காற்றில் ஒரு நூல் கிடைத்தாலும் வாய்ப்பாக கருதி அதை பிடித்து முன்னேற வேண்டும்” என்று கனா காணும் காலங்கள் தொடரில் செல்வராகவன் குறிப்பிட்டது எனக்கு ஏற்கனவே மனதில் ஆழமாய் பதிந்து இருந்தது. சினிமா வெகு தூரம் இல்லை ஆனால் இப்போது கிடைத்த அந்த சின்ன வேலை எனக்கு ஒரு வாய்ப்பு. அதை காற்றில் பறந்து வந்த ஒரு நூல் என நம்பினேன். இப்போது அதை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.  கனவுகளை என் இதயத்தில் ஒரு ஓரத்தில் பூட்டி வைத்தேன். பல நாட்கள் ரனமான வலி. தேம்பித்தேம்பி இரவுகளில் யாருக்கும் தெரியாமல் அழுதேன்.

ஒரு கட்டத்தில் அதை மறப்பதற்கு இரவு பகலாய் இணையத்தில் நானாக புதிதாய் நிறைய கற்றேன். புதிய லட்சியங்கள், புதிய இலக்குகள்.  இருபத்து இரண்டு வயதில் கூகிள் சர்டிபிகேசன் வாங்கினேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் அப்போது அது மிகக்குறைவு. அதுவும் அந்த வயதில் யாரும் இல்லை. ஒரு கட்டத்தில் எனக்கு கூட வேலை கிடைக்குமா என்று நினைத்த அந்த முதல் வேலையை உதறினேன். என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு இது தெரியும்.

தனியாக சேலத்தில் தொழில் தொடங்கினேன். கையில் ஒரு ரூபாய் பணமில்லை. இரவு பகலாய் உழைத்தேன். டாலரில் வருமானம் வந்தது. முதல் லாப்டாப், முதல் பைக், முதல் கார், முதல் விமான பயணம், முதல் தொலைக்காட்சி இண்டர்வியு, முதல் பத்திரிக்கை பேட்டி, முதல் ஏப்.எம் இன்டர்வியு, முதல் வெளிநாட்டு பயணம்,  என்று இன்னும் பல முதல் அனுபவங்கள். என் கனவினை அடமானம் வைத்ததற்கு கடவுள் கொடுத்த கூலி அவை.

முழுதாய் ஏழு வருடம் உருண்டோடிவிட்டது. உலகம் ரொம்ப சிறியது என்று யாரும் சும்மா சொல்லவில்லை.  போர் பிரேம் திரையரங்கில் இப்போது நான் செல்வராகவனுடன் இருக்கிறேன். கலந்துரையாடல் முடிந்து  கூட்டத்தின் நடுவே அரங்கை விட்டுவேகமாய் வெளியேறிக்கொண்டு இருந்தார். அவரது அருகில் போய் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு “ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா” என்றேன். “ஓ. நிச்சயமா பிரவின். வாங்க அங்க போகலாம்” என்றார். காமிரா,  கூட்டம் இல்லாத அருகில் ஒரு இடம் சென்றோம்.

என்னை பற்றி கேட்டார். மயக்கம் என்ன படத்தை பற்றி கொஞ்சம் பேசினோம்.  சற்று நேரத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தார்கள். என்னிடம் பேசிக்கொண்டே அனைத்தையும் சமாளித்தார்.  அவரிடம் பேசுவதற்கு எனக்கு நிறைய இருந்தது. ஆனால் அதற்கான சூழ்நிலை தான் இல்லை. ஒரு பத்து நிமிடம் இருக்கும். சிறிது தூரத்தில் அவருக்காக காத்திருந்த அவரது மனைவி கீதாஞ்சலி நேரம் ஆகிறது என்று அவரை அழைத்தார். “ஒரு நிமிஷம் ஒரு போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்துறேன்” என்று சொல்லி விட்டு என் மொபைல் காமிராவை பார்த்து புன்னகைத்து விட்டு கை குலுக்கி விடைபெற்றார்.

ஒரு காலத்தில் தவமாய் நினைத்த இந்த தருணம் மிக எளிதில் இப்போது நடந்து முடிந்துவிட்டது. ஆனால்  கடைசி வரை இந்த சந்திப்பிற்கு பின்னால் இருந்த கதை அவருக்கு தெரிய வாய்ப்பில்லை..

selvaraghavan praveen

பின்குறிப்பு: (07/08 2012 அன்று அப்டேட் செய்யப்பட்டது)

இந்த பதிவை படித்துவிட்டு செல்வராகவனிடம் இருந்து 20 ஜூலை அன்று ஒரு நெகிழ்ச்சியான மின்னஞ்சல் எனக்கு வந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாமஸ் அண்ணா என்கிற அஜயன் பாலா

2006ஆம் வருடம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஆரம்ப காலம். எப்படியும் அப்போது வாரம் ஒருமுறை  ஏதேனும் புதிதாய் வெளிவந்த படத்திற்கு உடன் பணிபுரிந்த நண்பர்களுடன் சென்று விடுவோம். வெள்ளிக்கிழமை ஆகிவிட்டால் போதும், பர்ஸ்ட் ஷிப்ட் மதியம் இரண்டு முப்பது மணிக்கு முடியும் என்றால் எப்படியும் இரண்டே காலுக்கே தியேட்டரில் ஆஜராகிவிடுவோம். அவ்வளவு கடமை தவறாத ஈடுபாடு.

அதே போன்ற ஒரு வெள்ளிகிழமை நாளென்று நினைக்கிறேன். நண்பர்கள்  சிலபேர் அலுவலகத்தில் தேனிர் இடைவேளையின் போது ஒன்று கூடிய நேரம். போன வாரம் “சித்திரம் பேசுதடி”னு ஒரு படம் வந்து இருக்கு, அதற்கு இன்றைக்கு போலாமா என்று நான் கேட்டேன். ஆனா அது பெரிய மொக்கை படம்னு சொல்லி யாருக்கும் வர விருப்பம் இல்லை என்று நழுவிவிட்டனர். நானோ அந்த படத்திற்கு போயே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றேன். அதற்கு காரணம் “பாவனா”…… வெறும் புகைப்படம், மற்றும் ட்ரைலர் மட்டுமே அப்போது பார்த்ததாய் ஞாபகம். பாவனாவிற்காக அந்த படத்திற்கு கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று விட வேண்டும் என் முடிவெடுத்து இருந்தேன். ஆனால் யாரும் அந்த படத்திற்கு என்னுடன் வருவாதாய் தெரியவில்லை.

தியேட்டர் காத்து வாங்குது என்று ஒருவர் சொல்ல . வாள மீனுக்கு பாட்டு மட்டும் தான் படத்துல நல்லா இருக்கு அதை தொலைகாட்சியிலேயே பார்த்துவிடலாம் என்று இன்னொருவர் சொல்ல.  அனைவருக்கும் அந்த படத்தை ஒதுக்க கண்டிப்பாக ஒரு காரணம் கிடைத்து இருந்தது ஆனால் நண்பர் ஒரே ஒருவர் மட்டுமே அப்போது என்னுடன் வர ரெடியாக இருந்தார்.  அதுவும் நான் பாவனாவின் அருமை பெருமைகளை மீண்டும் மீண்டும் அவரிடம் சொல்லி இருந்ததால் அவரும் பாவனாவை பார்த்தே தீர வேண்டும் என்ற முடிவோடு இருந்தார். இப்படி முழுக்க முழுக்க பாவனாவிற்காக மட்டுமே அந்த படத்திற்கு நானும் அந்த நண்பரும் அன்று மதிய காட்சிக்கு சென்றோம்.

படம் முடிந்து வரும்போது தான் உணர்ந்தோம் கண்டிப்பாக இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் அதுவாகத்தான் இருக்கும். இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை மிஸ் பண்ணி இருப்போமே என்று இரண்டு பெரும் கூறிக்கொண்டோம். நீண்ட நேரம் இருவரும் விடை பெறும்வரை அந்த திரைப்படத்தை மட்டுமே பேசியிருப்போம் என நினைக்கிறன். பாவனாவிற்காக மட்டுமே அந்த படத்திற்கு சென்ற போதும் அவரை தவிர இரண்டு விஷயம் அந்த படத்தில் என்னை கவர்ந்து இருந்தது. ஒன்று அந்த  படத்தின் இசை மற்றொன்று அதில் தாமஸ் என்று  வரும் ஒரு கதாபாத்திரம். மிக இயல்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் அவர். எப்போதும் பேன்ட் பாக்கட்டில் சோம பானம் வைத்துக்கொண்டு படம் முழுதும் ஸ்ருதியோடுதான் வலம் வருவார். ஏனோ தெரியவில்லை திரையில் பாவனா தோன்றாத நேரத்தில் நான் அவரை தான் கவனித்துக்கொண்டு இருந்தேன். முக்கியமாக மூன்று காட்சிகள் இருக்கிறது. அதில் ஒன்று கீழே.

[xr_video id=”2cd9d7dd4e5f44b0ab0dac8189ac6cd4″ size=”md”]

அவ்வளவு தான் அதன் பிறகு பல படங்கள் பார்த்தாயிற்று. வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளும் நடந்தாயிற்று. சித்திரம் பேசுதடி வழக்கமான படங்களில் ஒன்றாக மறந்தே போயிற்று…

சரியாக நான்கு வருடம் கழிந்தது. 2010 ஆரம்ப மாதங்களில் சேலத்தில் சொற்கப்பல் என்றொரு கருத்தரங்கம் நடைபெற்றது. நான் இயக்கி வரும் சேலம்ஜில்லா இணையத்தளத்தில் மூலம் செய்தி சேகரிக்க விளைந்த போது தான் முகப்புத்தகத்தில் “அஜயன் பாலா” அவர்களின் அறிமுகம் கிட்டியது. கருத்தரங்கில் அவரை நேரில் சந்தித்த  சிலநாட்கள் முன்புதான் சற்றும் எதிர் பாராவண்ணம் சித்திரம் பேசுதடி படத்தில் நான் ரசித்த அந்த தாமஸ் கதாபாத்திரத்தில் நடித்தது இவர் என தெரியவந்தது. மிகபெரிய ஆச்சர்யம் அது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அப்படி எனக்கு அறிமுகமான அவர்  பின்பு என் வலைப்பூவை வாசித்து கருத்து கூறும் அளவிற்கு நண்பரானார்.  அதுவரை போனிலும், சாட்டிலும், இமெயில் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்த அவர், நேற்று வெள்ளிக்கிழமை என் வீட்டிற்கு வந்து என்னுடன் எங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டு மீண்டும் ஒரு ஆச்சர்யத்தையும், அளவில்லா மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிட்டு சென்றார். பழக மிக மிக எளிமையான மனிதர் என்று அப்போது தான் தெரிந்தது. சித்திரம் பேசுதடி உருவானதை பற்றியும், எழுத்துலகை பற்றியும், வலைப்பூ, டெக்னாலஜி என்று என்று பல விஷயங்கள் பேசி இரவு உணவு வரை கிட்டதட்ட ஐந்து மணிநேரம் ஒன்றாக ஒன்றாக செலவிட்டது அனைத்தும் இனிமையான தருனங்களே.

DSCF1022

நாங்கள் இருவருமே அக்டோபர் 19ஐ பிறந்த நாளாக கொண்டாடுவது இதில் இன்னொரு ஆச்சர்யம். அவரை ஒரு எழுத்தாளராக, இயக்குனராக, பேச்சாளராக, பண்முக பண்பாளராக அறிவதற்கு முன்னர் தாமஸ் அண்ணனாக அவரை  தெரியுமென்பதால் இன்னமும் தாமஸ் அண்ணே என்று தான் கூப்பிடுகிறேன். அவர் தற்போது நடித்து வரும் இரண்டு திரைப்படங்களுக்கும் எதிர்வரும் திரைப்பணிகளுக்கும், எழுத்துப்பணிகளுக்கும் அவரை வாழ்த்துவோமாக!

ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு

chennai-egmoreபோட்டோ கிரெடிட் – பாண்டியன்

முந்தைய பாகங்கள்:
ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று (கிளிக்க)
ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு (கீழே)

மொபைலில் காலை நான்கு முப்பதிற்கு அலாரம் அடிக்கவும், ரயில் சரியாக அதே நேரத்தில் எக்மோர் ரயில் நிலையத்தை அடைந்து இருந்தது எனக்கு சிறிது ஆச்சர்யம்தான். கீழே இறங்கிய அந்த தூக்க கலக்கத்திலும் போர் ஸ்கொயரில் செக் இன் செய்ய மறக்கவில்லை. வெளியே வந்ததும் வராததுமாக காக்கிச்சட்டை மனிதர்கள் என்னுடைய லக்கேஜை பிடுங்குவதிலேயே ஆர்வம் காட்டினர். “புரசைவாக்கம் சங்கம் தியேட்டர் போகணும் எவ்வளோ” என்றேன். நூறு ரூபாய்க்கு குறைவாக யாரும் வருவதாக தெரியவில்லை. வெறும் ஐந்து நிமிட பயணத்தில் நூறு ரூபாய் சென்னையில் சம்பாதிக்க முடியுமென்றால் எங்க ஊர் பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் கூட சென்னையில் எப்போதோ ஆட்டோ வாங்கி விட்டு இருப்பார்கள்.

ஆட்டோ இப்போது வந்து சேர்த்த இடம் புரசைவாக்கத்தின் பிளவர்ஸ் ரோடு.. விடியாத அந்த காலைப்பொழுதில் நண்பர் முன்பதிவு செய்து கொடுத்திருந்த அந்த ஹோட்டலை சென்றடைந்த போது இன்னொரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. முன்னொரு காலத்தில் நான் சென்னையில் அதிகாமாக சுற்றி திரிந்த பகுதியின் ஒரு தெரு தான் அது. ஆனால் இங்கே இப்படி ஒரு ஹோட்டல் இருந்திருக்கிறது என்று எனக்கு அது நாள் வரை தெரிந்திருக்கவில்லை. அமைதியான, அழகான அதற்கும் மேலே மிகவும் சுத்தமான அந்த அறைக்குள் நுழைத்தும், குளிசாதனப்பெட்டியை முடுக்கி விட்டு மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்.

காலை ஒன்பது மணிக்கு நானும் இரு நண்பர்களும் டைடல் பார்க்கை சென்றடைந்த போது மீண்டும் போர் ஸ்கொயரில் ஒரு செக் இன். அங்கு தான் இந்தியா சர்ச் சம்மிட் 2010 நடை பெற இருந்தது. நாங்கள் சென்றதன் நோக்கமே அதில் கலந்துக்கொள்ளதான். சர்ச் சம்மிட் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து இன்டர்நெட் மார்கெட்டிங் நிபுணர்களும் ஒன்று கூடி கலந்துரையாடும் இந்தியாவின் ஒரே கருத்தரங்கம். அதாவது இது யாருக்கு பயன்படுமென்றால் இணையத்தில் வர்த்தகம் புரிபவர்களுக்கும், தங்களுடைய பிராண்டை இன்டர்நெட்டில் வலுப்படுத்த நினைப்பவர்களுக்கும், சோசியல் நெட்வொர்க்கிங் இணைய தளங்களில், கூகிள் போன்ற தேடுபொறிகளில் எப்படி வர்தகங்களுக்காக கையாளுவது, இணையத்தில் வாடிக்கையாளர்களை பெறுவது போன்ற தேவை இருப்பவர்களுக்கும், அதில் ஏற்கனவே அனுபவமுள்ள நிபுணர்களுக்கும், புதிதாக இத்துறையில் நுழைய விரும்புவர்களுக்குமாகும்.

டைடல் பார்க்கின் முதல் தளத்திலேயே அமைந்து இருந்த குளிரூட்டப்பட்ட ஆடிட்டோரியமும், இலவச வை-பை இன்டர்நெட்டும் இந்த கருத்தரங்கிற்காக ஸ்பான்சர் செய்திருந்தது சிப்பி (SIFY). சுமார் நூற்றி சொச்சம் நபர்களின் வருகையால் அரங்கம் நிறைந்து போயிருந்தது. பல வடஇந்திய வாசனைகளும் ஆங்காங்கே அரங்கத்தில் கலந்திருந்தது. வந்திருந்த அனைவரும் அமர்ந்து இருந்த இடத்திலேயே மைக் வழங்கப்பட்டு சுயஅறிமுகம் செய்துகொள்ளப்பட்டது. அனைவரும் அவர்களது ட்விட்டர் அக்கவுன்ட்டை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது தான் இந்த கருத்தரங்கின் மிக முக்கியமாக ஒன்று. இக்கருத்தரங்கு நடைபெறும் இரு நாட்களும் அனைவரும் நேரடி ட்வீட் பதிப்பாளர்களாக செயல்படவேண்டும் என்பதே நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களின் வேண்டுகோளாக வைக்கப்பட்டது.

அது சரி நேரடி ட்வீட் பதிவாளர்கள் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளால் நடந்த  துப்பாக்கி சூடு ஞாபகம் இருக்கிறதா? அங்கு நடந்த செய்திகளை தொலைக்காட்சி, வானொலியை விடவும் மக்களிடம் நேரிடையாக உடனுக்குடன் கொண்டு சேர்த்த ஊடகமாக செயல்பட்டது இந்த ட்விட்டர் தான். அது போல் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ள இந்த கருத்தரங்கின் நிகழ்வுகளை நேரிடையாக கொண்டு செல்லவே ட்விட்டர் இங்கும் பயன்படுத்தப்பட்டது. அதற்காக பயன்படுத்தப்பட்ட ஹாஸ் டாக் #iss2010

பேச்சாளர்கள் உரையாற்றிக்கொண்டு இருக்க அங்கே இருந்த அனைவரும் அதை நேரிடையாக தாங்கள் கொண்டு வந்திருந்த மடி கணினி மூலம் ட்விட்டரில் பதிவித்துக்கொண்டு இருந்தனர். நான் முதல் நாள் என்னுடைய மடி கணினியை எடுத்துசெல்லவில்லை இருப்பினும் என்னுடைய ப்ளாக்பெர்ரியில் வந்து விழுந்தது ஒரு ட்வீட்டு. “ஹாய், நிறைய பிரவீன்கள் இந்த அரங்கில் இருக்கிறார்கள் போலும்., நானும் பிரவீன் தான். தேநீர் இடைவேளையின் போது சந்திப்போம்” என்று இருந்தது. அந்த அளவுக்கு அந்த அரங்கில் வெவ்வேறு மூலையில் இருந்தவர்களையும் நேரடி தொடர்பில் வைத்திருந்தது இந்த ட்விட்டர். உலகின் வெவ்வேறு மூலையில் இருப்பவர்களையே தொடர்பில் வைத்து இருக்கும் போது இது என்ன…

அது சரி விளையாட்டு குணமுள்ளவர்கள் இங்கும் இல்லாமல் போய் விடுவார்களா? அவர்கள் கையில் ட்விட்டர் அங்கே என்ன பாடு பட்டது தெரியுமா? அந்த அரங்கில் யாரோ தெனாலி ராமன் என்கிற பெயரில் பொய்யான ட்விட்டர் கணக்கை தொடங்கி ஒரு நகைச்சுவை தர்பாரே நடத்திவிட்டார். அங்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் டைமிங் காமடியும், நக்கலும் அடித்து கலகலப்பை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தார் அவர். நல்ல வேலை கைகலப்பு அளவுக்கு போகவில்லை! கடைசி வரை அரங்கில் இருந்த மற்ற ட்விட்டர் பயனாளர்கள் அவரை பார்க்கும் ஆர்வத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுகோள் ட்வீட் விடுக்க, அவரோ சட்டென்று காணமால் போய்விட்டார். கடைசி வரை அவர் யாரென அவரை தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது கூட பரவாயில்லை, மதிய உணவு உண்ட களைப்பில் ஒரு நபர் கருத்தரங்கு நடந்துக்கொண்டு இருக்கும்போதே கண் அயர்ந்து விட, அருகில் இருந்த மற்றொரு நபர் தன் கேமரா போனில் கிளிக்கி ட்விட்டரில் போட, ஐந்தே நிமிடத்தில் அனைவாராலும் மறு ட்வீட் செய்யப்பட்டு அவர் பேமஸ் ஆகி விட்டார். அதற்கடுத்து நடந்த தேநீர் இடைவேளையின் போது அனைவரும் இவரை “அவரா இவர்” என்ற தோணியில் நோட்டம் விட, இவரும் என்னவென்று புரியாமல் அம்மாஞ்சியாக முழித்துக்கொண்டு இருந்தார். (கிளிக்க)

நேற்று (08-09-2010) ஜெயா பிளஸ் சானலில் கூட  இந்த நிகழ்ச்சியின் பதிவை தொகுத்து வெளியிட்டனர். இந்த கருத்தரங்கின் முக்கியத்துவத்தையும், அதில் நடந்த பயனுள்ள சம்பவங்களையும் இங்கே தமிழில் போட்டால் அது சென்றடையும் மக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இது வெறும் பயனக்கட்டுரையாக இருக்கட்டும் என எண்ணுகிறேன். அதனால் அதை இன்னும் டீடெயில்டாக  என்னுடைய ஆங்கில வலைப்பூவில் இடுவாதாக உள்ளேன்.  இருந்தாலும் அந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வை இங்கே நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரே விஷயம் என்னவென்றால் அது “ரிமோட் வீடியோ கான்பரன்சிங்”.

ஆம் இரண்டாம் நாள் காலையில் கலிபோர்னியாவிலிருந்து ஒரு பெண்மணி வீடியோ கான்பரன்சிங் மூலம் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இங்கே அனைவரும் பெரிய ப்ரொஜெக்டர் திரையில் அவரை பார்த்தவாறே ஒவ்வொருவராய் கேள்விகள் கேட்க, அவர் அங்கே அறையிலிருந்துக்கொண்டு தன் கணினியின் மூலம் அரங்கில் இருப்பவர்களை பார்த்தவாறே கலந்துரையாடினார். “வீடியோ கான்பரன்சிங்” என்பது என்னை போன்ற இணையத்தில் பிழைப்பை நடந்துவர்களுக்கு பெரிதாக தெரியாவிடிலும், இங்கே அதை பயன்படுத்தி இருந்த விதம் பாராட்டத்தக்கது. இந்தியாவிற்கே வராமல் தன்னுடைய கருத்துக்களை அந்த பெண்மணி பகிர்ந்து கொள்ள இந்த டெக்னாலஜி வாய்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் மதிய உணவின் போது அருகில் இரண்டு வட இந்தியர்கள் “Sify has sponsored the auditorium and  free wi-fi internet right? so I dont think 1000 bucks for each ticket is going towards the expenses on organising this event” என்று பேசிக்கொண்டது காதில் வந்து விழுந்தது. குறைகள் பல இருந்தாலும் அனைத்து இன்டர்நெட் மார்க்கட்டிங் ஸ்பெஷலிஸ்டுகளையும் ஒன்று திரட்டிய முயற்சிக்காக பாராட்டலாம் என எங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

salemjilla team

அதன் பிறகு இரண்டாம் நாள் நிறைய முக்கிய பேச்சாளர்கள் மிஸ்ஸிங் போல தெரிந்தது. அதிலிருந்து கொஞ்சம் மந்தமாகத்தான் சென்றது கருத்தரங்கம். அதன் பிறகு பேசிய பேச்சார்கள் கவனத்தை ஈர்க்க தவறிக்கொண்டு இருந்தனர்.  ட்விட்டரிலும் அது எதிரொலித்தது. சூடான விவாதங்கள் ட்வீட்டாக அரங்கேரிக்கொண்டிருந்த நேரம் அது.   மீதமிருந்த ட்விட்டர் பயன்படுத்தாதோர் அநேகமாக குளிரூட்டப்பட்ட அறையின் சொகுசால் மெல்ல மெல்ல கண்ணயர்ந்துக்கொண்டு இருந்தனர். நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தை நெருங்க பொறுமையிழந்த நண்பர் மெல்லமாய் எங்களிடம்  “ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்… போலாமா” என்றார். சூழ்நிலையை புரிந்தவர்களாய் மடிகணினியை மடித்துக்கொண்டு டைடல் பார்க்கிலிருந்து விடைபெற்றோம் மூவரும். (அது என்ன ““ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்” என்று கேள்வி உங்களுக்கு எழும்பினால் இந்த வீடியோவை பார்க்கவும் http://youtu.be/sBidvDcweEk )

இப்படியே இருநாள்களும் கருந்தரங்கிலேயே முடிந்துபோனதா என்றால் கண்டிப்பாக இல்லை. அந்த இரண்டு இரண்டு நாட்களையும் நாங்கள் மறக்க முடியாத நாட்களாக்கிஇருந்தோம். முதல் நாள் இரவு எக்ஸ்பிரஸ் அவன்யூவில் புதிதாக ஆரம்பம் செய்து இருந்த சத்யம் எஸ்கேப் தியேட்டரில் ஒரு வாரம் முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து சென்றோம். இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மால் அது.  எவ்வளவு பெருசு என்றால்  கீழே பேஸ் மென்ட் கார்பார்கிங்கில் காரை நிறுத்துமிடத்தை மறந்து போனால் அதை கண்டு பிடிப்பதற்கே ஒரு நாள் வேனுமுங்கோ… அப்போ மால் எவ்வளவு பெருசு என்று கற்பனை செய்து பாருங்கள்.

மேலே மேலே எஸ்கலேட்டரில் போய் கொண்டே இருக்கிறோம். முழுதாக சுத்திப்பார்க்க இது சரியான நாளில்லை. ஏற்கனவே சரியாக தூங்காமல் பயண அலைச்சலால் உடல் சோர்வு. திரைப்படம் தொடங்க நேரம் வேறு சிறிது தான் இருந்தது.  அங்குள்ள கே.ஏப்.சீ யில் சீஸ் பர்கரும், சிக்கனையும் அவசரம் அவசரமாக மென்று முழுங்கி பெப்சி குடித்து தியேட்டருக்குள் நுழைந்தோம்.

அந்த திரையரங்கில் கவுண்டரே கிடையாது. (ரெட்டி இருக்காரானுலாம் கேட்கக்கூடாது!). எல்லாரும் முழுக்க முழுக்க ஆன்லைனில் அவர்களது இணையதளத்தின் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். வேண்டுமானால் அவர்கள் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி தொடு உணர் மிஷினில் தங்களுடய கடன் அட்டையை தேய்த்து டிக்கட் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுடைய டார்கெட் முழுவதுமாக மேல்தட்டு மக்களையே குறிவைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது. அப்போ உள்ளே திரையரங்கம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஸ்டார் ஹோட்டலையே மிஞ்சிவிடும். அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் திரையரங்கில் சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை இங்கயே கிடைக்கச்செய்கிறார்கள் இவர்கள்.

உதரணமாக மெல்லிய ஒளி பரவிய ரெஸ்ட் ரூமில் ஒவ்வொரு யூரினல்சின் மேலேயும் ஒரு சின்ன ஸ்க்ரீன் வைக்கப்பட்டு திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் படங்களை காண்பித்துக்கொண்டு இருந்தனர். கூழாங்கற்களால் தரை அலங்கரிக்கப்பட்ட அந்த அறையில் கையை அலம்பிவிட்டு இந்த பக்கம் உள்ள ட்ரையரில் நீட்டினால் மென்சூடான காற்று வீசப்பட்டு மூன்று நொடிகளில் கையை உலர்த்தி விடுகிறது. இது எல்லாம் பாமரனுக்கான சாத்தியமேயில்லை என்று தோன்றுவதால் தானோ என்னவோ அவனால் சாத்தியமில்லாத இணையத்திலும், கடன் அட்டையின் மூலம் மட்டுமே டிக்கெட் வழங்குகிறார்கள் என்பது தெளிவாகிறது.

அந்த சிறிய அரங்கில், சிறிய ஸ்க்ரீனில் படம் பார்த்தது வீட்டில் ஒரு ஹோம் தியேட்டர் அமைப்பை ஏற்படுத்தி பார்த்த ஒரு அனுபவம். திரையரங்கில் இருக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை. ஆபரேட்டர் ரூமே கிடையாது. டிஜிட்டல் ஆர்.டீ.எக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் அந்த ஆபரேட்டர் ரூம் சிறிய பெட்டியில் அடைபட்டு அரங்கில் வெளியே மாட்டப்பட்டு இருந்தது. ஒரு பெரிய எல்.சீ.டீ ஸ்க்ரீனில் பார்ப்பது போன்ற மிகத்துல்லியமான சினிமா. ஆனால் என்ன செய்வது, ஏற்கனவே சொன்னது போல் மிகவும் பயணக்களைப்பில் நானும் மற்றோரும் நண்பரும் அப்போது அமர்ந்திருந்தோம். அந்த தூக்கக்கலக்கத்தில் கனவில் கூட படம் பார்க்க முடியாத போது இப்படி ஒரு கனவு படத்தை எப்படி பார்ப்பது என்று, படம் ஆரமித்து சில நொடிகளிலேயே சீட்டில் சரிந்து விட்ட என் வலப்பக்க நண்பரை, இடைவேளையின் போது  தட்டி எழுப்பி கிளிக்கிய படமே இது.

அது சரி என்ன திரைப்படம் என்கிறீர்களா?…… ம்ம்ம்ம்….அ….அது..… ஆங்! ரைட்.. “இன்செப்சன்”.

இரண்டாம் நாள் மாலை திருவான்மியூர் கடற்கரையில் மூவரும் உலாவிக்கொண்டு இருக்கையில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து கடற்கரை ஒரமாக தாழ்வாக வந்தது. சரி ஞாற்றுக்கிழமை கடற்ப்படை ரோந்துக்கு வருவது சகஜமென்று நண்பர் கூறினார். ஆனால் அவர்கள் திருவான்மியூர் கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் கடற்கரைவரை தொடர்ந்து வட்டமடித்துக்கொண்டே இருந்ததும் ஏதோ விபரீதம் என்பது போலிருந்தது. அது என்ன என்று கடைசிவரை தெரியவில்லை. இருட்டும் வரை தென் சென்னையில் இருந்து வட சென்னை வரை பையா படத்தில் வருவது போல் பயணித்து களைத்து விட்டு. ஊருக்கு ஒதுக்கு புறம் என்பது போல், சிட்டியை விட்டு சிறிது ஒதுக்குப்புறமான தமிழ்நாடு ஹோட்டலில் தான் இரவு உணவு முடித்தோம். ஏனோ தெரியவில்லை, அந்த இடம் எனக்கும் நண்பருக்கும் மிகவும் பிடித்திருந்தது. சென்னையில் அமைதியான சூழ்நிலையில் இதை விட வேறு ஏதேனும் இடம் உண்டா என்று தெரியவில்லை.

இரவு சரியாக பத்து முப்பது மணிக்கு நண்பர் எக்மோரில் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு  “ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்…” என்று நகைச்சுவையாக கூறி அனைவரும் விடை பெற்ற தருணம் வரை அனைத்தும் நினைவில் நிற்கக்கூடிய தருனங்களே.  ரயில் சென்னை விட்டு விலகிச்சென்று கொண்டிருக்கையில் யோசித்துப்பார்கிறேன். ஏனோ தெரியவில்லை, நான் முதன்முறை சென்னை சென்ற போதிலிருந்து ஒவ்வொரு முறையும் சென்று வந்தபோதும் பல நினைவுகளை சுமந்து கொண்டே திரும்பியிருக்கிறேன். இம்முறையும் தான்… ஆனால் இது மிகவும் இனியமையான பயணமாக  அமைந்தது இருந்தது.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்…. “விருந்தினராக செல்லும் வரையில் தான் சென்னை சொர்க்க பூமி”. விடிந்த பிறகு சேலத்திற்கு ரயிலில் வந்து இருங்கிய மறுகனமே நான் ட்வீட்டியது இதுதான் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா”.

முந்தைய பாகங்கள்:
ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று (கிளிக்க)
ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க். சென்னை பயணம் பாகம் இரண்டு (கீழே)

நடிகர் முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்

actor murali இதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்த நடிகர் முரளியின் இதயம் இன்று துடிப்பதை நிறுத்திக்கொண்டது. இந்த செய்தியை இன்று கேள்விப்பட்ட உடனேயே சில நிமிடங்கள் உறைந்து போனேன். அது என்னை துயரத்தில் ஆழ்த்தியது.  ஏனென்று யோசித்து பார்க்கிறேன்.  முரளியை தீவிர ரசிகனாக இதுவரை நான் இருந்திருக்கவில்லை. அவரது காலங்களின் நான் சினிமாக்களை பார்த்து வளர்ந்திருக்கவில்லை.  ஆனாலும் அவரை நான் ரசித்திருக்கிறேன்.

புது வசந்தம், இதயம் போன்ற படங்களின் பாடல்கள் மூலமே அவரை சிறு வயதில் எனக்கு பரிட்சயம் ஆனதாக ஒரு ஞாபகம். சினிமா, டிவி என்பதை அறிந்துக்கொண்டு இருந்த மிகச்சிறிய வயதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சரியாக நியாபகம் இல்லை. ஆனால் படங்களை பார்க்க ஆரம்பம் செய்த என்னுடைய பள்ளி பருவத்திலே “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற திரைப்படத்தை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதுவே எனக்கு தெரிந்து நான் விரும்பிப்பார்த்த முரளியின் முதல் திரைப்படம். அத்திரைப்படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. ஆறாம் வகுப்பு நான் பயின்று கொண்டிருந்திருக்கலாம். அப்போதே அதை மனப்பாடமாக பாடிக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது கூட அந்த பாடல்களை கேட்க்கும்போது அந்த காலகட்டங்கள் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றன.

அதே நேரத்தில் அவர் சூர்யாவிடம் சேர்ந்து ஒரு படம் நடித்தார். சில வருடங்களில் வெற்றிக்கொடி கட்டு போன்ற வெற்றி படங்களின் படங்களில் நடித்தார். கடல் பூக்கள் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கினார். பிறகு நான் தீவிரமாக சினிமா பார்க்க ஆரம்பம் செய்த வயதில் அவரது படங்கள் காணமல் போயின. வெளிவந்த சில படங்களும் சரியாக போகவில்லை. சுந்தரா ட்ராவல்ஸ் படம் வந்த போது அந்த படத்தில் நடித்த பஸ்ஸையும், எலியையும் அருகில் இருந்த தியேட்டருக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதுவே நான் முரளி நடித்து பார்த்த கடைசி படம்.  முரளி அமைதியான, சாந்தமான, இளமையான தோற்றமுடையவர் என்பதால் கண்டிப்பாக யாருக்கும் அவரை பிடிக்காமல் இருக்காது. நன்றாக கவனித்து பாருங்கள் அவரது குரல் கூட மிகவும் மென்மையானது. அது மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களை போலில்லாமல் எந்த ஒரு கிசி கிசுவிலும் வராத நடிகராகவே கடைசி வரை இருந்தார்.

இக்கால சினிமா ரசிகர்கள் அவரை ரசித்திருக்க வாய்ப்பு குறைவு தான். ஏன் என் வயதையொத்தவர்கள் கூட சேர்த்துதான். அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் வர நேரம் சரியாக அமையா விடிலும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் இருந்த கல்லூரி மாணவர்கள் அவரை மறந்திருக்க வாய்ப்பு இல்லை. நடிகர் மோகன் எப்படி எல்லா திரைப்படங்களிலும் மைக்கோடு வந்து மைக் மோகன் ஆனாரோ. அது போல் எல்லா திரைப்படங்களிலும்  புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லூரி மாணவனாக வருவார் முரளி. மோகன் மைக் எடுத்து மேடை ஏறினால் படம் ஹிட் என்ற செண்டிமென்ட் அப்போது இருந்தது. அது போல் முரளி புத்தகம் எடுத்துக்கொண்டு கல்லூரி சென்றால் படம் கண்டிப்பாக ஹிட்.

நான் இப்போதும் உறுதியாக கூறுவேன், முரளி காலத்து நடிகர்கள் யாரேனும் இப்போது கல்லூரி மாணவனாக நடிக்க முடியுமா? கற்பனை செய்து பாருங்கள். பார்த்திபன்? பிரபு? பாண்டியராஜன்? சுரேஷ்?. ஏன் அதற்கடுத்த கட்ட நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் கூட  மீண்டும் கல்லூரி மாணவர்களாக நடித்தால் நம்மில் பலர் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இன்றும் முரளியின் தோற்றமும் குரலும்அதற்கு பொருந்துவதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும்.

நான் இப்போது கூறப்போவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காதல் கொண்டேன் திரைப்படம் வந்த தருணத்தில் டைரக்டர் செல்வராகவனின் பேட்டி ஒன்றை படித்தேன். அந்த திரைப்படத்தில் தனுஷிற்கு பதிலாக ஏற்கனவே இரண்டு நடிகர்கள் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது என்று கூறி இருந்தார். மாஸ்டர் டிகிரி படிக்க அதன் நாயகன் சென்னை வருவதாக அமைத்து இருந்த அந்த கதை பிறகு தனுஷிற்காக சிறிது கதை மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த இரண்டு நடிகர்களில் செல்வராகவன் தேர்வு செய்து இருந்த ஒரு நடிகர் தான் முரளி. அது மட்டும் உண்மையாக இருந்து படம் வெளிவந்து இருந்திருந்தால்? முரளி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு இருப்பார்.

முரளியின் இழப்பு கண்டிப்பாக சோகத்தின் உச்சம் தான். எங்கள் குடும்பத்தாருக்கும் தான் அதன் பாதிப்பு இருக்கிறது..  முரளியை நாங்கள் நேரில் கண்டிராவிட்டாலும், பழக வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவருடையமறைவு எங்களை உறையவைத்ததற்க்கு காரணம் இருக்கிறது. சுமார் தொன்னூறுகளில் இருந்த அவருடைய தோற்றம் அப்படியே அச்சு அசலாக என்னுடைய தாய் மாமாவை போலிருந்தது. முளியின் முகம் எனக்கு அப்போதுதான் பரிட்சயமான சமயம் என்பதால் முரளியை பார்த்தால் என்னுடைய மாமாவை பார்ப்பது போலவே இருக்கும். எதிர்பாராவிதாமாக அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போனார். இருவருக்கும் தோற்றத்தை தவிர மேலும் சிறு ஒற்றுமைகள் இருப்பதை இப்போது உணர்கிறேன்.

இருவரும் இளம் வயதிலேயே இறந்தனர். என் மாமா இறக்கும் போது அவருடைய வயது முப்பத்தி ஆறு, முரளிக்கோ நாற்பத்தி ஆறு. இருவருக்கும் மகனும் மகளும் உள்ளனர். தன்னுடைய மகனின் வளர்ச்சியையும், பெண்ணின் திருமணத்தை காணக்கிடைக்காமலும் மரணம் எய்திவிட்டார்கள் இருவரும். அவர்களுடைய இறப்புசெய்தியை அறிவித்தது சென்னையில் ஒரு மருத்துவமனையில் தான். முரளிக்கு திரையுலகமே திரண்டு வந்து இருந்தது, இவருக்கோ ஒட்டு மொத்த நெய்வேலி லிக்னயிட் கார்பரேசன் ஊழியர்களும், முக்கிய அதிகாரிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

என் மாமா இறந்த இந்த இடைப்பட்ட இரண்டு வருடத்தில் முரளியை காணும் போது எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மாமாவை நேரில் காண்பது போன்ற உணர்வு. அவர் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதை போன்ற ஒரு தற்காலிக தோற்றத்தை அது உருவாக்கியது. தான் மிகவும் நேசித்தவரும், ரத்த சம்பந்தமானவரும் இறந்து பிறகு அவர் உருவத்தை உடையவர்களை நேரில் பார்க்க வாய்ப்புக்கிட்டியவர்களை கேட்டுப்பாருங்கள் அது எவ்வளவு பெரிய விஷயமென்று.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கூட விஜய் டீவியில் வரும் காபி வித் அனு நிகழ்ச்சியில் தன் மகன் ஆதர்வாவுடன் வந்திருந்தார் முரளி. எங்கள் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தொலைப்பேசியின் மூலம் தகவல் பரிமாறப்பட்டு அனைவரின் இல்லத்தின் வரவேற்பறையிலும் அந்த நிகழ்ச்சியே ஓடியது. அனைவருக்கும் எங்கள் மாமாவை நீண்ட நாட்கள் கழித்து நேரில் கண்டதாக ஒரு உணர்வு அப்போது.  இனிமேல் இவர்களுக்கு அதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்.