ஜெயா டீவியில் ஒளிபரப்பான என் முதல் நேர் காணல்

 

Praveen Kumar C In Jaya T.V

ஜனவரி 26, 2011 அன்று சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டீ.வி அலுவலகத்தில் நுழைகிறேன். ஏதோ ஒரு ஐ.டி கம்பனியில் நுழைந்த ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது அங்கே இருந்த பாதுகாவலர்களின் அணுகுமுறையும், அதன் அலுவலகத்தின் நுழைவாயிலும். குடியரசு தினம் என்பதாலோ என்னவோ அன்று அவர்களின் வரவேற்பறையில் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்க வேண்டும். சிறிது உரையாடலுக்கும், சிறிது காத்திருத்தலுக்குப் பின்பு நான் உள்ளே ஸ்டுடியோவிற்குள் அழைத்துச்செல்லப்படுகிறேன்.

சேலம்ஜில்லா.காம் என்ற இணைய தளத்தின் நிறுவனர் என்பதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட  ஆட்வோர்ட்ஸ் நிபுணர் என்பதாலும் அதை பற்றி “தகவல்டெக்” என்ற நிகழ்ச்சிக்காக கலந்துரையாட வந்ததுதான் இந்த அழைப்பு. எதை பற்றி பேச போகிறோம், என்ன கேள்வி கேட்கப்படும் என்று எதுவுமே என்னிடம் கூறப்படவில்லை. குளிரூட்டப்பட்ட நிசப்தமான அறை. எனக்கான இடத்தில் அமர்த்து மைக் மாட்டப்பட்டு குரல் சரிபார்க்கப்படுகிறது. பளிச்சென்ற வெளிச்சம். மூன்று காமிராக்கள் என்னையே நோட்டமிடுகிறது. இது முகப்புதிது எனக்கு.

உள்ளே நுழையும் வரை என் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது இது தான். முதன் முறை காமிரா முன்பு அமர்கிறோம், சரியாக வருகிறதா என்று இரு நிமிடம் மானிடர் பார்ப்பார்கள் என எண்ணினேன். ஒவ்வொரு கேள்விக்கும் இடையே என்னை நான் தாயார் செய்துக்கொள்ள அவகாசம் கிடைக்கும் என நினைத்தேன். பதிலளிக்கும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் மீண்டும் அதை பதிவு செய்வார்கள் என கருதினேன். ஆனால் அவற்றிற்கு எதுவும் வாய்ப்பளிக்காமல் “ரெடி, ஸ்டார்ட்” என்று மட்டும் தான் வந்தது ஒரு குரல்.  காமிரா  ஓடத்துவங்குகிறது. நிசப்தம் உடைகிறது. நினைத்ததிற்கு முற்றிலும் நேர்மாறாக  ஒரே டேக்கில் பதிவு செய்யப்பட்டது முழு நேர்காணலும்.

அதில் பிப்ரவரி 09 அன்று ஒளிபரப்பான சேலம்ஜில்லா.காம் பற்றி நான் பேசியதன் முதல் பகுதி தான் உங்கள் பார்வைக்கு இங்கே. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: என் முதல் தொலைக்காட்சி நேர்காணலிற்கு வாய்ப்பளித்த நிகழ்ச்சியாளர் பழனி அவர்களுக்கும், ஜெயா தொலைக்காட்சிக்கும் என் நன்றிகள்.