கல்லூரியில் ஒரு முறை எனக்கும், என் நண்பன் ஒருவனுக்கும் விஷமமான ஒரு போட்டி. அப்போது நடைபெற்ற ஒரு வகுப்புத்தேர்வில் யார் மிகவும் குறைவான மதிப்பெண் எடுக்கிறார்கள் என்பதே அது. இப்போது கிறுக்குத்தனமாய் தோன்றினாலும் அப்போது அதில் ஒரு சுவாரசியம் இருந்தது. அந்த தேர்வின் கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் எழுதியும், மனதில் தோன்றிவைகளையும் எல்லாம் கிறுக்கியும் எப்படியும் அதில் ஜெயித்து விடவேண்டும் என்று மிகவும் கவனமாக எழுதி முடித்தேன். நண்பனும் எனக்கு போட்டியாக எழுதி முடித்தான். எப்படியும் நான் தான் ஜெயிப்பேன் என்று நம்பிக்கை நிறைய இருந்தது.
சில நாட்களில் பேப்பர் அனைத்தும் திருத்தப்பட்டு அந்த வகுப்பில் ஒவ்வொருவருக்கும் கூப்பிட்டு கொடுத்தார் எங்கள் மேடம். அவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியும் எனக்கு பத்து மார்க் வந்திருந்தது. அடுத்து நண்பனின் பேப்பரை கொடுத்தார். எங்கள் வகுப்பில் மிகவும் நன்றாக படிப்பவன் அவன். நல்ல ப்ரில்லியன்ட். எப்படியும் என்னைவிட அதிக மார்க் வாங்கி இருப்பான் என்று இந்த போட்டி தெரிந்த அனைவரும் சந்தோசப்பட்டுக்கொண்டோம். ஆனால் அப்போது அவன் பதில் தாளை வாங்கிபார்த்த எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியம். அவன் வாங்கிய மார்க் “பூஜ்யம்”. எதுவும் எழுதாமல் வெறும் வெற்றுப்பேப்பரை கொடுத்து வந்துள்ளான் அந்த dog. சொதப்புவதும் சாதாரண விஷயமில்லை. அதுக்கும் தனித்திறமை வேண்டும்.
அதுபோல் மணிரத்தினத்தின் கடல் படத்திற்கு போட்டியாக அமீர் தனது ஆதி-பகவன் படத்தை வெளியிட்டு இருக்கிறார். இருவருக்கும் முதல் காட்சியில் இருந்து படத்தை சொதப்புவதில் “நானா-நீயா” என்று கடும் போட்டி இருந்திருக்கிறது. மணிரத்னம் சீனியர். எப்படியும் அவர்தான் ஜெயிப்பார் என்று அனைவருக்கு நினைத்தனர். ஆனால் இறுதியில் அமீர் தனது அபாரத்திறமையை வெளிப்படுத்திவிட்டார். ஆனால் எனக்கு ஜெயம் ரவியும் நிலைமையை நினைத்து தான் பரிதாபம்.
பாய்ஸ் திரைப்படத்தில் வரும் இந்த காட்சியை போன்று நிஜத்தில் ஒரு சம்பவம் நடப்பது போல் கற்பனை செய்துபாருங்கள். அதே சித்தார்த் போன்ற ஒரு கல்லூரி பையன் ஹரிணி போன்ற ஒரு பெண்ணை பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கிறான். பல நாட்கள் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். அவளையே நினைத்து உருகிக்கொண்டிருக்கிறான். ஆனால் ஹரிணி அவனை கண்டுக்கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் இதில் வருத்தமடைந்த சித்தார்த், முன்னாவை தூதுக்கு அனுப்புகிறான். முன்னா ஹரிணி மற்றும் சித்தார்த் இருவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பன். அவனுடைய காதல் பொய் என்று ஹரிணி நினைக்கிறாள் என்று முன்னா அவனிடம் சொல்கிறான். ஒருவேளை அவன் காதல் உண்மையெனில் நாளை காலை எட்டு மணிக்கு ஸ்பென்சர் பிளாசா வாசலில் நிர்வாணமாய் வந்து நிற்கும் தைரியம் அவனுக்கு இருக்கிறதா என்றும் அவள் சொல்கிறாள் என்கிறான்.
முதலில் இதை கேட்டதும் அவன் திடுக்கிட்டாலும், அவன் வயதும், ஹார்மோனும், காதலும் அவன் கண்ணை மறைக்கிறது. எப்படியாவது தன் காதல் உண்மை தான் என நிரூபிக்கவேண்டும். அதற்கு இது தான் சந்தர்ப்பம் என்று நம்புகிறான். மறுநாள் சொன்ன நேரத்திற்கு ஸ்பென்சர் பிளாசா அருகே நிற்கிறான். ஹரிணியும், முன்னாவும் ஒன்றாக ஸ்பென்சர் வாசலில் வருவதை பார்க்கிறான். கண்களில் நீர் வழிய, மனதை கடினப்படுத்திக்கொண்டு தன் உடைகளை ஒவ்வொன்றாக களைகிறான். அங்கிருக்கும் பொதுஜனங்கள் பற்றி அவன் உள்ளுணர்வு எந்த சமிஞ்சையும் செய்யவில்லை. அனைவரும் வேடிக்கை பார்ப்பதை அவன் பொருட்படுத்தாமல் அவள் அருகே நிர்வாணமாய் சென்று “ஐ லவ் யூ ஹரிணி.” என்கிறான். எப்படியும் தன் காதலை புரிந்துக்கொண்டு தன்னை அணைத்துக்கொள்வாள் என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.
ஆனால் அவள் எதுவுமே புரியாத மாதிரி பார்த்துவிட்டு, “ஷிட், வாட் த ஹெல் ஆர் யூ டூயிங்” என்று கத்திவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள். செய்வதறியாது சித்தார்த் திரு திருவென முழிக்க, அவனை சுற்றி இப்போது பெரிய கூட்டம் கூடியிருந்தது. அதில் அநேகம் பேர் அவனுடைய கல்லூரி மாணவர்களும், மாணவிகளும். “சேம் சேம்… பப்பி சேம்”என்று அனைவரும் சப்தமாய் கத்த, மெல்ல அவன் அருகில் வந்து முன்னா சொன்னான் “ஏப்ரல் பூல்… ஏப்ரல் பூல்… நல்லா ஏமாந்தியா மச்சி? இன்னைக்கு ஏப்ரல் ஒன்னுடா!”.
அந்த கதையில் வந்த “சித்தார்த்தி”ன் நிலைமை தான் இந்த படத்தினால் “ஜெயம் ரவி”யின் நிலமை. அமீரை நம்பி அரவாணியாக பல கனவுகளுடன் நடித்திருந்த ரவி உண்மையில் கோமாளி ஆக்கப்பட்டிருக்கிறார். இந்த படத்தை தடை செய்ய கோர்ட்டில் முறையீடு செய்ததை கேள்விப்பட்டு கோபப்பட்ட சினிமா ரசிகர்கள், நிச்சயம் இப்போது அதற்காக வருத்தப்படுவார்கள். ஒருவேளை இப்படம் தடை செய்யப்பட்டு இருந்தால், அதை பார்த்திட வாய்ப்பு கிடைக்காமல் பொதுமக்கள் தப்பி இருப்பார்கள். மிகச்சிறந்த காவியம் ஒன்று தடைசெய்யப்பட்டது என்றும் நம்பப்பட்டு தமிழ் சினிமா வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டு இருக்கும்.