அவன் இவன் – என் பார்வையில் (விமர்சனம்)

avan ivan arya vishal

வழக்கத்துக்கு மாறான பாலா படம் இது. படம் முழுக்க சிரிக்க வைக்க வேண்டும் என எடுக்கப்பட்ட படம். முதல் முறையாக வருடகணக்கில் இழுக்காமல் குறுகிய காலத்தில் பாலா எடுத்த படம். வித்யாசமான கதாபாத்திரத்தில் விஷால் நடித்த படம். இவை தான் “அவன் இவன்” திரைப்படத்தை பற்றி  பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய விஷயம். ஆனால் படத்திலோ…

குறுகிய காலத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காக பாலா கதையை சுத்தமாக யோசிக்க மறந்துவிட்டார். கதையே இல்லாத போது எதை நோக்கியும் செல்லாத திரைக்கதையில் அவருக்கு பெரிதாய் மெனக்கெடல் தேவைப்படவில்லை. படம் முழுக்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கீழ் தரமான வசனங்களாலும், அவரின் முந்தைய திரைப்படத்தின் கதாபாத்திரங்களை ஒப்பேற்றியும் எடுத்திருப்பதை உணர முடிகிறது.

ஏற்றுக்கொள்ள முடியா  லாஜிக் மீறல்கள், குமட்டும் அளவிற்கு அருவருப்பு,  எரிச்சலூட்டும் காமெடிகள், தேவையற்ற காட்சி சொருகல்கள், நெளியச்செய்யும் வசனங்கள், அளவுக்கு மீறிய வன்முறை, மனதை பாதிக்கும் குரூரம்.. இவை அனைத்தும் தேசிய விருது பெற்ற பாலாவிடம் இருந்து!

பிதாமகன் சூர்யாவின் பிரதிபலிப்பே இதில் ஆர்யா. நந்தா லொடுக்கு பாண்டியின் வசனம் பேசும் அதே மாடுலேஷன் தான் இவருக்கு இதில். பிதாமகன் விக்ரமின் வாய்ஸ் மாடுலேசனையும் அவ்வப்போதும், பாடி லாங்குவேஜை ஆக்ரோஷமாகும் போதும்  நினைவுபடுத்துகிறார் விஷால்.. நந்தா ராஜ்கிரனை சற்று கோமாளித்தனாக மாற்றியமைத்ததுதான் தான் ஜமீனாக ஜீ.எம்.குமார் ஏற்று நடித்த “ஐனஸ்” பாத்திரம். பிதாமகன் லைலா போலீஸ்  கான்ஸ்டபிளாக ப்ரோமோஷன் வாங்கியிருக்கும் கதாபாத்திரம் இதில் ஒரு ஹீரோயின் நடித்தது.

பிதாமகன் சங்கீதா வாயில் வெற்றிலை பாக்கை பிடிங்கிவிட்டு, அதற்க்கு பதில் பீடியை சொருகி, கையில் குவாட்டரை திணித்து, கேட்பவர் காதில் ரத்தம் வரும் அளவிற்கு  கெட்டவார்த்தை பேசுபவர் விஷாலின் அம்மாவாக நடித்த அம்பிகா. அம்பிகாவிற்கு போட்டி போடும் அளவிற்கு கெட்ட வார்த்தை தெரிந்த அம்மாதான் ஆர்யாவின் அம்மா. இவர்கள் இருவருக்கும் கணவனாக சேவை செய்யும் கதாபாத்திரத்தில் விஷாலின், ஆர்யாவின் ஒரு தந்தை. (குழப்புதா? அவருக்கு ரெண்டு பொண்டாட்டி)

படத்தின் கதை இது தான். மேலே இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் உரையாடுகிறார்கள். கூடவே இன்னும் சில கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல்களில் கலந்து கொள்கிறார்கள். கடைசியில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஜமீன்தார் ஐனஸ் குரூரமாக கொல்லப்படுகிறார். அவரை கொன்றவரை விஷாலும், ஆர்யாவும் பிடித்து வந்து ஐனசின் பிணத்தோடு எரியூட்டுகிறார்கள். இவ்வளோ தான்.

இத்தனை எரிச்சல்களையும் மீறி படத்தில் எனக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்கிறது. அது விஷாலின் நடிப்பு.. நடிப்பு என்பதை விட அவரின் கடின உழைப்பு, மெனக்கெடல் என்றே சொல்லலாம். படத்தில் அவரின் அறிமுக காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. மாறுக்கண் கொண்ட அரவாணியாக நடிக்க நிச்சயம் தைரியம் வேண்டும். அவருக்கு நிச்சயம் இதில் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. படத்தின் சில பாடல்கள் பயன்படுத்தப்படவில்லை. ஏனோ தெரியவில்லை யுவனின் பின்னணி இசையை இதில் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை. படத்தின் இன்னொரு சிறப்பம்சமே காமிரா தான். படம் முழுக்க பச்சை பசேல்.

g m kumar

என்னை கேட்டால் இந்த படத்தின் கதாநாயகன் நிச்சயம் ஜீ.எம் குமார் அவர்கள் தான். “நான் ஐனஸ் சொல்றேன்”… எனும் வசனம்… நான் மிகவும் ரசித்தது.   படம் முழுக்க தன் ஆளுமையை செலுத்தி, அனைவரையும் சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து, அழ வைத்து, மனதை பதைபதைக்க வைத்து கடைச்யில் அவரை கொண்டாடச்செய்துவிட்டார். அதுவும் தைரியாமாக, முழு நிர்வாணமாக நடித்த காட்சியில்…. சத்தியமாக வார்த்தை இல்லை. ஹாட்ஸ் ஆப் டூ ஹிம்.

எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த ஒரு நகைச்சுவை… ஒரு கறிவிருந்திற்கு சென்ற விஷால் அவர் விரும்பும் போலீஸ் கான்ஸ்டபிள் பெண்ணின் எதிரில் தன் புல்லட்டை நிறுத்தி அதில் அமர்ந்து தண்ணி அடித்துக்கொண்டே அவரை லுக் விட்டுக்கொண்டு இருப்பார். வருவோர் அனைவரையும் வரவேற்பதில் பிசியாக இருக்கும் அந்த பெண் தன்னை விஷால் உற்று பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து அவரை பார்த்து கோபத்துடன் “என்ன வேண்டும்” என முறைப்பார். பதிலுக்கு விஷாலோ அதே ரொமாண்டிக் லுக்குடன் “சோறு எப்போ” என சைகையில் கேட்டவுடன் தியேட்டரே குலுங்கும் அளவிற்கு சிரித்து அடங்கியும், என் சப்தம் மட்டும் தனியே.. இதை பார்க்கும்போது டைமிங்கில் தான் உணர முடியும். இப்படி என்னால் சிரிப்பை நிறுத்த முடியா பல காமடி காட்சிகள் படத்தில் இருக்கிறது.

எல்லாம் படம் முடிய அரைமணி நேரம் வரை மட்டுமே. பிறகு படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திணிக்கப்பட வில்லனாக வரும் நடிகர் ஆர்.கே.கதாபாத்திரமும். அவர் ஜி.எம்.குமார் அவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து, கொன்று ஒரு பெரிய மரத்தில் கட்டி தூக்கில் தொங்கவிடும் காட்சி வரை பார்வையாளர் அனைவரின் மனமும் பதைபதைத்துவிடும். இந்த வில்லன் நடிகர் ஆர்.கே என்று பிறகு தெரிந்தவுடன் மிகவும் ஆச்சர்யபட்டு போனேன். அருமையான நடிப்பு. மிரட்டி இருக்கிறார். ஆனால் அத்தனை குரூரம் தேவையா என்று தெரியவில்லை. படத்தை கண்ட குழந்தைகளின் மனது நிச்சயம் பாதிக்கப்பட்டு இருக்கும்.

மொத்தத்தில் வழக்கமாக கதை பின்னணியில்  காணப்படும் அதே மலை பிரதேசம்.  வழக்கம் போல் நந்தா லொடுக்கு பாண்டியை பின்பற்றி, பிதாமகன் சூர்யாவை தொடர்ந்து அதே திருடர்களின் கதைக்களம். நகைச்சுவை படம் என்பதால் படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க முயற்சித்து விட்டு கடைசி அரைமணி நேரத்தில் பாலாவின் வன்முறை, குரூரச்சிந்தனை, வழக்கம் போல் எட்டி பார்க்கிறது.

படம் முடியும் போது, சேதுவில் விக்ரம் நடந்து செல்வது போல், பிதாமகனிலும் விக்ரம் நடந்து செல்வது போல், நான் கடவுளில் ஆர்யா நடந்து செல்வது போல் இதில் ஆர்யாவும், விஷாலும் வழக்கம் போல் நடந்து செல்கிறார்கள். அப்படியே வழக்கம் போல் அவர்கள் நடந்தாவரே காட்சி திரையில் உறைகிறது. உடனே வழக்கம் போல் “A Film By Bala” என்று எழுத்து தோன்றுகிறது. உடனே வழக்கம் போல் திரையரங்கை விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். நீங்களும் வழக்கம் போல் இந்த விமர்சனத்தை படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவு செய்துவிடுங்கள்.