ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு

“கெளதம் மேனன் சொன்னப்போ  சிக்ஸ் பேக் கொண்டுட்டு வர கடுமையா வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் தான் என்னோட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா பலவீனமடைவது  எனக்கே புரிஞ்சது. எல்லாருக்கும் என்னோட அட்வைஸ் ஒன்னே ஒன்னு தான். ஒரு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் இல்லாம யாரும் இதை முயற்சி பண்ண வேணாம்” – இது நடிகர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் சிக்ஸ் பேக் ஆப்ஸ் பார்த்து வாயை பிளக்காதவர்களே இருந்திருக்க முடியாது.

இந்தி கஜினி திரைப்படத்திற்காக நடிகர் ஆமிர் கான் மெனக்கெட்டது கொஞ்சம் நஞ்சமில்லன்னு சொல்லலாம். ஒரு வருடம் ஜிம்மே கதின்னு கிடந்தார் மனுஷன். அதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் வீடியோ எடுத்தும் வச்சி இருந்தாங்க. மேக்கிங் ஆப் கஜினி மாதிரி, அந்த மேக்கிங் ஆப் சிக்ஸ் பேக் வீடியோ இதுதான்.

அப்புறம் நம்ம புரட்சி தளபதி(அவருக்கே அவரே வச்சிகிட்ட பேரு!) கூட அந்த காக்க காக்க ரீமேக் படத்துல சிக்ஸ் பேக் முயற்சி பண்ணினாரு. ஆனா பாவம், படம் ஊத்திக்கிட்டதுனால அது வேஸ்டா பூடுச்சு.  அதுல உள்ள போன அவர் மார்க்கெட்டும், கன்னமும் இன்னமும் மேல வரவே இல்ல. இப்படி இந்திய சினிமா ஹீரோக்களால் சிக்ஸ் பேக் கடந்த சில வருடங்களாக கடை கோடி மக்கள் மத்தியில் கூட பிரபலமானது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜிம்மிலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக தினமும் மணிக்கணக்காக மனிதர்கள் வியர்வை சிந்தி போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.  சிலர் சிக்ஸ் பேக்கிற்கு, சிலர் எயிட்(!) பேக்கிற்கு ஆனால் பலரோ சிங்கிள்  பேக்கிற்கு(ஹி ஹீ நானும் தான்). அதை நாம லஞ்ச் பேக்குனு கூட சொல்லலாம்.

அப்பேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உடற்பயிற்சி மையத்தில்  டம்மி பீசுகளும், காமடி பீசுகளும் சிலர் வந்து போவதை காண்பது தவிர்க்க இயலாதது.. அவர்களுக்கு தேவை சிக்ஸ் பேக்கோ, இல்லை உடல் எடை குறைப்பதோ தெரியாது ஆனால் அவர்கள் அதற்காக ஜிம்மில் நடத்தும் அரங்கேற்றம் சொல்லி மாளாது. அந்த மாதிரி நபர்கள் சில சமயம் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் உற்று கவனிச்சா குபீர்னு சிரிப்பு வந்துடும்.. நானும் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது நான் கண்ட அது மாதிரி சில நபர்களையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.. ஓகே வாங்க ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு போலாம்.

சென்ற முதல் நாளே நான் நோட்டமிட்டது என்னவென்றால் அங்கே ஒவ்வொருத்தர் காதிலும் ஒரு ஹெட் செட் தொங்கிக்கொண்டு இருந்தது. உடற்பயிற்சி  செய்யும்போது ஹெட் செட் அணியக்கூடாது என்று ஏற்கனவே எங்கோ படித்த அந்த ஞாபகம் கொஞ்சம் நினைவில் வந்து போனது.. காதில் உஷ்ணம் அதிகரிக்குமாம். அதிலும் சிலர் உச்சக்கட்டம், ட்ரெட் மில்லில் ஓடும்போது செல்போனை காதில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் யாரிடமோ(!) வருத்துக்கொண்டு இருப்பார்கள்.. பக்கத்தில் நாம் ஓடும்போது அதை காதில் கேட்கவே சகிக்காது… அங்க கூடவா மிஸ்டர்?

இன்னொரு வகையறாக்கள் இருக்கிறார்கள்… உடற்பயிற்சி செய்யும்போது போன் பேசக்கூடாது என்று அவர்கள் உணர்ந்து இருக்க வேண்டுமென நினைக்கிறன். அவ்வளவு நல்லவர்கள். அதனால் தானோ என்னவோ அவர்கள் ஜிம்மின் உள்ளேயே வருவதில்லை.. வெளியிலேயே போனும் கையும்மாக நிற்பார்கள். சில மணிநேரம் தொடர்ந்து பேசும் ஜாம்பவான்கள் நேரம் ஆகிவிடும் காரணத்தினால் உள்ளே வராமலேயே அப்படியே சென்று விடுவதையும் கண்டு இருக்கிறேன். தானும் ஜிம்முக்கு போகிறேன் என்பதற்காகவோ அவர்கள் வருகிறார்களோ என்னவோ. அப்படியே உள்ளே வருபவர்கள் விரல்களுக்கு வலிப்பு வந்தார் போல் எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். அந்த பக்கம் பதில் அனுப்புபவருக்கும் வேறு வேலை வெட்டி இருப்பதாக தெரியவில்லை.

இன்னும் கொஞ்சம் பேரு…….. எலும்பும் தோலுமா, வத்தலும் தொத்தலுமா, அப்படின்னு சொல்லுவாங்களே, அந்த வகை பசங்க.. எல்லாம் சின்ன பசங்க. அதுல ஒருவன்.. அனேகமா ஏழாவது, எட்டாவது படிக்கணும்னு நெனைக்கிறேன். பாத்தாலே பாவமா இருக்கும்.. சாப்பிட்டு பத்து நாள் இருக்குமோனு தோணுற மாதிரி இருக்ககூடியவன். வெயிட் தூக்க முடியாம தூக்கறதும், அதுக்காக கஷ்டப்படுறதும் பார்க்க முடியவில்லை. எல்லாம் சிக்ஸ் பேக் சினிமா உசுப்பேத்தி விட்ட விடலைகள்.

இது கூட பரவாயில்லைங்க… இன்னொரு நாள்.  ஜிம்மில் கண்ணாடி பிம்பத்தில் அதை காண நேர்ந்தது.. தூண் மறைத்துக்கொண்டு இருந்ததால் அவரை நான் முழுமையாக காண முடியவில்லை. பக்கவாட்டில் தெரிந்த அவர் முகத்தை பார்த்தால் நிச்சயம் அவருக்கு வயது ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து இருக்கலாம்.அவர் ஒரு உயரமான கம்பியை பிடித்து அசால்டாக மேலும் கீழும்  தொங்கிக்கொண்டு இருந்தார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த வயசுல என்ன ஒரு ஷ்டாமினா??? ஒவ்வொரு தொங்களுக்கும்.. ஒன்று.. இரண்டு.. மூன்று.. என்று  அவர் எண்ணுவது வேறு என் காதில் வந்து விழுந்தது. சர்வசாதரணமாக இப்படி தொங்குகிறாரே மனிதர். நாமும் இருக்கிறோமே.  அரைமணி நேரம் ட்ரெட் மில்லில் ஒடுவதற்கே….. ச்சே…

இவ்வாறு மனதில் புலம்பிக்கொண்டே கொஞ்சம் நகர்ந்து  அவரை எதேச்சையாக  பார்த்தேன்… அவர் இடுப்பை கையில் பிடித்தவாறு அவர் பின்னால் நின்று கொண்டு “டிரைனர்” அவரை மேலும் கீழும் தூக்கி விட்டுக்கொண்டு இருந்தார்…