ஒரு வாட்டி மலை மேலே ஏறுனதுக்கே இப்படி கஷ்டப்படுறீங்களே, இந்த ரெண்டு நாளில் இதுவரை 32வாட்டி நாங்க ஏறி எறங்கி இருக்கோம்பா” என்று பீடி புகையை ஊதியவாறு பீடிகை போட்டார் அவர்.
“அடேங்கப்பா, எதுக்குங்க 32 வாட்டி மேலே ஏறுனீங்க” அனைவரும் ஆச்சர்யத்தில் கோரசாய் கேட்டோம். ( முதல் பாகத்தின் தொடர்ச்சி )
“இன்னைக்கு காலைல இருந்து மலை மேலேயே அன்னதானம் கொடுத்துட்டு இருக்காங்க. வருஷத்துல ஒரு நாள் இந்த கோவில் விசேஷம். காலையில் சாப்பிட உப்புமா சட்னி. இப்போ போனா கூட சூடா டீ கிடைக்கும். மதியத்துக்கு சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், பொறியல் பாயாசம் எல்லாம் ரெடி ஆயிட்டு இருக்கு. அதுக்கு அடுப்பு, காய்கறி. அரிசி எல்லாம் ரெண்டு நாளாக எடுத்துட்டு வந்து கொடுத்து இருக்கோம். அதுதான் எங்க வேலை. இதோட முப்பத்தி ரெண்டு நடை வந்தாச்சு. இதுக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் கூலி” என்று கூறும்போது பீடி அவர் உதட்டை சுடும் அளவுக்கு குறைந்து இருந்தது.
அதை தூக்கிப்போட்டு விட்டு மீண்டும் தொடர்ந்தார், “சிலிண்டர், அரிசி மூட்டை எல்லாம் ஐம்பது கிலோங்க… அதை தூக்கிட்டு மேலே வரதுக்கு தான் கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு. அதுக்கூட பரவாயில்லைங்க. நேத்து ராத்திரி எல்லாம் எடுத்துட்டு மேல வந்த பிறகு டீ தூள் மறந்துட்டோம். பால் சக்கரை கூட இருந்துச்சு.. நிறைய பேரு ராத்திரி மலை மேலயே தங்குனதால டீ தூளுக்காக மட்டும் மறுபடியும் கீழே போயிட்டு வந்தேன்”
இதை அவர் சொல்லும்போது நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை முகத்தை பார்த்துக்கொண்டோம். வெறும் காமிரா, பாட்டரி, வாட்டர் பாட்டில், இத்தியாதி கொண்ட ஒரு பையை முதுகில் மாட்டி மேலே தூக்கிகொண்டு வருவதற்கே எங்களுக்குள் நடந்த போட்டி எங்களுக்கு தான் தெரியும். ஒரு வாட்டி மேலே ஏறுவதற்கே எவ்வளவு சிரமம். இதுல இவுங்க முப்பத்தி ரெண்டு வாட்டி ஏறி இறங்கி இருக்காங்க.
“சரிங்க.. இன்னும் எவ்வளவு தூரம் மேல போகணும்” என்று கேட்டேன்
“இப்போ மேல தாங்க இருக்கீங்க.. அவ்வளோ தான் வந்தாச்சு. அதோ அது தான் கோவில்.. அதை தாண்டி போனீங்கனா சமையல் மண்டபம். எல்லாரும் நல்லா கலைச்சு போயிருப்பீங்க. சீக்கிரம் போய் சூடா டீ சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு அந்த நிழல் மண்டபத்திலேயே சாய்ந்து படுத்தார். ஒரு வழியா வந்தாச்சு. இப்போ தான் ஒரு பெரிய நிம்மதி கிடைத்தது போல் இருந்தது. அங்கிருந்து நகர தயாராக இருந்தபோது அவர் அருகில் ஒரு அனுமார் சிற்பம் இருப்பதை பார்த்தேன். மிகவும் வித்தியாசமாக இதுவரை பார்த்திராத வகையில் நான்கு உருவம் கொண்ட சிற்பம் அது. உடனே ஒரு கிளிக்.
இரண்டரை மணி நேர மலை ஏற்றத்தில் இப்போது மலைக்கோட்டையின் உச்சியில் இருக்கிறோம். சங்ககிரி கோட்டை பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தால் கட்டப்பட்டு பின்னர் ராணுவ துருப்பாக திப்பு சூல்தானுக்கும், அதன் பிறகு ஆங்கில அரசுக்கும் பயன்படுத்தப்பட்டது. கடைசியில் கொங்கு நாடு என்று அழைக்கப்பட்ட பகுதிகளுக்கு இது வரி வசூல் மையம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஆனது. ஜூலை 31, 1805 அன்று மாவீரன் தீரன் சின்னமலை இங்குதான் தூக்கிலிடப்பட்டார். அதைத்தவிர அந்த கோட்டையின் முக்கிய வரலாறு, அதன் பின்னால் இருக்கும் பல சுவாரசியாமான தகவல்கள் சரிவர தெரியவில்லை.
மலை உச்சியில் பாதி இடம் வெறும் பாறை தான். மொத்தம் தோராயமாக ஒரு ஐந்து ஏக்கர் பரப்பளவு மேலே இருக்கும். அந்த கடைசி நிழல் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் ஒரு பெரிய பாறையும் அதன் மேல் ஒரு சிறிய அனுமார் கோவிலும் இருக்கிறது. இதை தாண்டிதான் அடுத்து செல்ல முடியும். இந்த பாறையை ஒட்டி கீழே ஒரு தண்ணீர் பாலி இருக்கிறது. அதாவது அந்த பாறையின் சரிவில், கீழே ஒரு சுவர் எழுப்பி, அங்கு தேங்கும் மலை நீரை அப்போது சேகரித்து வைத்து வந்துள்ளனர். அதாவது அந்த காலத்து மலை நீர் சேகரிப்பு திட்டம். இது குடிப்பதற்கும், புலங்குவதற்க்கும் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம். இதை விட்டால் அப்போது அந்த மலை உச்சியில் தண்ணீர் கிடைக்க வேறு வழி இல்லை. ஏன் இப்போதும் கூட அங்கு வாழ்ந்துக்கொண்டு இருக்கும் குரங்குகளுக்கு அது பயன்பட்டு கொண்டு இருக்கிறது.
அடுத்து அதன் அருகிலேயே இருக்கிறது வரதராஜ பெருமாள் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தான் இன்று சிறப்பு பூஜை. அதாவது புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்படும். அன்று தான் முதல் சனிக்கிழமை. வருடத்தின் மற்ற நாட்களில் இந்த கோவில் பூட்டியே தான் இருக்கும். யாரேனும் பூஜைக்கு கொடுத்தால் மட்டுமே மற்ற நாட்களில் மேலே வந்து திறப்பார்கள் என்று கேள்விப்பட்டேன்.
அது ஒரு சிறிய கோவில் தான். ஒரு பெரிய பாறை மேல் சற்று உயரத்தில் கட்டப்பட்டு இருக்கிறது. கோவிலின் சில பேருக்கு மேல் நிற்க முடியாது. முகப்பின் கீழே பள்ளம் தான். ஆக அந்த பாறை மேல் ஏறுவதற்கு கற்களால் அடுக்கப்பட்ட படி தான். நாங்கள் சென்ற போது கோவிலின் உள்ளே நுழைய முடியவில்லை. பூஜைக்கு நிறைய பேர் ஏற்கனவே வரிசையில் காத்திருந்தனர். கோவிலின் கீழே ஒரு லிங்கம் போன்ற ஒரு உருவம் பாறையில் செதுக்கப்பட்டு அதன் அருகில் உருது மொழில் ஏதோ எழுதி இருந்தது.
அடுத்து இன்னொரு பாலி என்று சொல்லப்படக்கூடிய நீர்தேக்கமும் இருந்தது. கொஞ்சம் தூரம் அந்த நீண்ட வழுக்கு பாறையில் நடந்தால் ஒரு பழமையான சிறிய தர்கா. அதுவும் அந்த மலை உச்சியில், செங்குத்தான பகுதியில் மிகவும் ஓரத்தில் அமைந்து இருக்கிறது. அதன் வாசலே பல நூறு அடி பள்ளம் தான். மலையின் கீழிருந்து பார்த்தாலே இந்த தர்கா தெளிவாக தெரிகிறது. இப்போது இந்த இடத்தில் இருந்து சங்ககிரி ஊர் முழுவதும் அருமையாக தெரிந்தது. அனைத்தும் வெறும் புள்ளியாய். அங்கே இருந்து கீழே அடிவாரத்தை படம் பிடித்தேன். இன்னும் ஜூம் பண்ணி என்னுடைய காரை கூட அங்கிருது தெளிவாக படம் பிடிக்க முடிந்தது.
மேலே மலையின் அடுத்த பகுதிக்கு அங்கிருந்து செல்லும்போது ஒரு சிறிய மண்டபம் அங்கு தான் அனைவருக்கும் மதிய சாப்பாடு தயார் ஆகிக்கொண்டு இருந்தது. மேலே மின்சாரம் கிடையாது. இரவு அந்த மண்டபத்தில் தான் பல பேர் தங்கி இருந்தனர் என்று கேள்விப்பட்டேன். அந்த மண்டபம் இருந்த பாறை அருகே இன்னொரு பாலி இருந்தது. அங்கே இருந்து தான் சமைக்கவும், குடிக்கவும் குடத்தில் எடுத்து வருகின்றனர். பின்னர் அதை துணியில் வடிகட்டிஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டனர். நாங்கள் எடுத்து சென்ற தண்ணீர் கூட இப்போது தீர்ந்து விட்டது. அதை தான் நாங்கள் எடுத்து சென்ற பாட்டிலில் நிரப்பி குடித்தோம். எனக்கு வெளியில் தண்ணீர் குடித்தாலே நிறைய முறை அடுத்த நாள் உடல் நிலை சரியில்லாமல்போய்விடும். எங்கு சென்றாலும் சுத்திகரிப்பட்ட தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பாட்டில் தான் குடிப்பேன். இங்கே சற்று பயத்துடன் தான் அதை குடித்தேன் ஆனால் அடுத்த நாட்களில் அது ஒன்றும் செய்யவில்லை.
பூஜை முடிந்த பின்பு தான் உணவு என்பதால் மேலிருக்கும் அடுத்து அடுத்த பகுதிக்கு செல்லலாம் என்று நடந்தோம். ஆள் ஆரவாரமற்ற தனிமைபடுத்தப்பட்ட பகுதி போல் இருந்தது அடுத்த பகுதி கல்லூரி மாணவர்கள் போல் தோற்றமளிக்கும் ஒரு ஐந்து பேர் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தனர். பார்சல் வாங்கி வந்த உணவு பொட்டலம் அவர்கள் மத்தில் பிரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் மூவர் தங்கள் வாழ்க்கையில் முதன் முறை உண்பது போல் அசைவ வஸ்துக்களை விரலில் பிடித்து எலும்பை கடித்து மென்று துப்பி ஏதேதோ செய்துக்கொண்டு இருந்தனர். அருகில் கசங்கிய நிலையில் பிளாஸ்டிக் டம்ளர்கள் காற்றில் உருண்டு போய்க்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.
மலை உச்சியின் அடுத்த பக்கத்தின் விளிம்பிற்கு சென்றால், தூரத்தில் ஒரு பெரிய பாறையில் வீற்றிருக்கிறது வரலாற்று சிறப்புமிக்க அந்த இடம். ஆம். மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட அந்த மேடை. பாதி சிதைந்த நிலையில். அருகில் இரண்டு கண்காணிப்பு கோபுரம். ஏற்கனவே சொன்னது போல் செங்குத்தான மலை உச்சி என்பதால் வேறு எந்த திசையில் இருந்தும் யாரும் மேலே வரமுடியாது. அடுத்து சில பாழடைந்த மண்டபங்கள் இருந்தது. அந்த மண்டபங்களை சுற்றி புதர் மண்டிக்கிடந்தது. உள்ளே சென்றோம். ஒரு வித்யாசமான உணர்வு.
சுவற்றில் ஒரு இடத்தில் மீன் சின்னம் பதித்து இருந்தது. பாண்டியர்களின் சின்னம் அது. அதன் மேற்கூரையை கல்தூண்கள் தாங்கி இருத்தது. அவற்றை பார்க்கும் போது அக்காலத்தில் யாரும் இங்கே வாழவில்லை ஆனால் தங்குவதற்காக மட்டும் இது பயன்பட்டது என்று புரிந்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வருவது போல் அப்போது அங்கு வாழ்ந்தவர்கள் பேசிக்கொள்வது போல் ஒரு அசரீரி காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
அருகில் இன்னொரு செங்கல்லால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று பார்த்தோம். உள்ளே செல்ல வழியே இல்லை. சுற்றிலும் சுவர் தான். ஒரே இடத்தில் மட்டும் சற்று உயரத்தில் ஜன்னல் மாதிரி சந்து இருந்தது அவ்வளவுதான். அது எதற்கு பயன்பட்டது என்று விளங்கவில்லை. இதை தவிர ஒரு தேவாலயமும், சாவுக்கிணறும் இருப்பதாய் சொன்னார்கள். அதாவது உயிருடன் ஒருவரை ஒரு குழியில் போட்டு மூடி அவரை கொல்லும் இடமாக அந்த சாவுக்கிணறு அக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் நாங்கள் அதை கவனிக்க தவறிவிட்டோம்.
இந்த பயணத்திற்கு புறப்படும் முன்னர் மிகவும் வயதான என் உறவினர் பாட்டி ஒருவர் ஒரு தகவல் சொல்லி அனுப்பி இருந்தார். அவர் சிறுவயதில் சென்ற போது கோவிலின் பின்புறத்தில் “பொழுது தெரியாத பாலி” என்று ஒன்று இருந்தது என்றும். அது காலையும் மாலையும் எப்போதும் சூரிய வெளிச்சம் படாத வகையில் அமைத்திருக்கும் என்றும். அதன் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், ருசியாக இருக்கும் என்றும் சொல்லி அனுப்பினார். நாங்களும் அந்த தண்ணீரை சுவைத்து பார்த்துவிடலாம் என்று அங்கே சென்றோம்.
ஆனால் புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தின் அருகே செல்லச்செல்ல நாற்றம் குடைலைப் புடுங்கியது. அந்த இடத்தில் இருந்து ஒரு மூன்று பேர் வெளியே வந்தனர்.
“சார்.. இப்போ தான் சுத்தம் பண்ணி இருக்கோம், அதனால் அங்க போகாதீங்க”
“ஏன்.. எதுக்கு சுத்தம் செஞ்சீங்க”
“சார்.. வாரவாரம் வெள்ளிகிழமை முஸ்லிம்கள் இங்க இருக்கிற தர்காவுக்கு தொழுகை பண்ண வருவாங்க. கல்யாணம் ஆகாதவங்க, குழந்தை பிறக்காதவங்க பூஜை பண்ணிட்டு அந்த பூஜை சாமானை இந்த பாலியில் போட்டுவிட்டு வேண்டிக்கொண்டு செல்வது வழக்கம். நாங்கள் வாரம் ஒருமுறை வந்து சுத்தம் செய்துவிட்டு போய்விடுவோம். வெள்ளிக்கிழமை அந்த பாய் அடிவாரத்துல அதுக்கு காசு கொடுத்துடுவாறு. ஒருத்தருக்கு இருநூறு ரூபாய்” என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள். நாங்கள் மூக்கை பிடித்தக்கொண்டு அந்த பாலியை ஒரு நோட்டமிட்டு விட்டு வந்தோம்.
அடுத்து பூஜை முடிந்ததும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. சுமார் ஐநூறில் இருந்து எழுநூறு பேர் மொத்தம் இருந்திருப்பர். ஆச்சரியத்தக்க வகையில் அனைவரும் வரிசையில் நின்று எந்த இடைஞ்சலும் இன்றி உணவு வாங்கி உண்டனர். சாதம், சாம்பார், ரசம், தயிர், பொறியல், பாயசம் என்று சுடச்சுட அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அடுத்து மலை உச்சியில் இருந்து கீழிறங்கும் போதுதான் தெரிந்தது ஏறுவதை விட இறங்குவது மிகவும் சிரமம் என்று. இதை அப்போது அனைவரும் உணர்ந்தனர். மிகவும் செங்குத்தான, பிடிப்பில்லாத பாதை. கால்கள் கடுக்க ஆரம்பித்து. வேகமாய் இறங்கிக்கொண்டே இருக்கையில் கால்கள் மருத்து போவது போலானது. நிற்காமல் இறங்கிக்கொண்டு இருக்கும் போது கூட ஒன்றும் தெரியவில்லை. முன்னே செல்பவர் தாமதிக்கும்போது, நாமும் அதற்காக நிற்கும்போது கால்கள் நடுங்க ஆரம்பித்தது. சிலர் கால்கள் உணர்விழந்த நிலையில் கீழே விழுந்த சம்பவும் நடந்தது. என் பின்னால் வந்து கொண்டு இருந்த அந்த சிறுமி தன் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு அனைவரின் வேகத்துக்கு ஈடாக கீழிறங்கினாள்.
“அப்பா. சீக்கிரம் வாங்கப்பா.. பழைய வேண்டி மாதிரி மெதுவாவே வரீங்க..”
“நீ.. உன் அப்பா துணைக்கு இருக்கும் தைரியத்தில் பயப்படாமல் வேகமாக இறங்குகிறாய். ஆனால் உன் அப்பாவுக்கு துணைக்கு யாருமில்லை.. அதனால் நிதானமாகத்தான் வருவார்.” என்று நான் சொன்னவுடன் தான் அவள் பொறுமையானாள்.
ஒரு வழியாக ஒரு மணி நேரத்தில் அடி வாரம் வந்து சேர்ந்தோம். கீழிறங்கி அந்த மலையை திரும்பிப்பார்த்தவுடன் இப்போது தான் அந்த மலையின் உண்மையான பிரமாண்டம் புரிந்தது. அதன் வரலாற்று சிறப்புக்கள் முழுதாய் உரைத்தது. அந்த நிலையில் எங்களுக்கு தோன்றியது இதுதான்.
சங்ககிரி மலைக்கோட்டை ஒரு சுற்றுலா தளமாக்கப்பட வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் தீரன் சின்ன மலை தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தை நினைவிடம் ஆக்க வேண்டும். இந்த மலைக்கோட்டையின் வரலாற்றை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். காரில் வந்து இறங்கியவுடன் எந்த இடத்தையும் பார்த்துடவிடவேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்ட மக்களை சுலபமாக மலை உச்சி செல்ல “விஞ்ச்” சேவை கொண்டு கவர வேண்டும். குறைந்த பட்சம் இந்த இடம் மேலும் சிதைவதிலிருந்தாவது பாதுகாக்கப்பட வேண்டும்.
இவை அனைத்தையும் சாத்தியப்படுத்த இந்த மலைகோட்டையை தற்போது கையகப்படுத்தி வைத்திருக்கும் தொல்பொருள்துறையால் மட்டுமே முடியும். ஆனால் இந்த மலையின் அடிவாரத்தில் தொல்பொருள் துறையால் வைக்கப்பட்டு இருக்கும் ஒரு எச்சரிக்கை போர்டின் நிலையை பார்த்தாலே அந்த கோட்டையும், அங்குள்ள புராதான இடங்களையும் எந்த லட்சணத்தில் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று புரியும்.
பின்குறிப்பு:
சங்ககிரி மலைப் பயனத்தில் நான் எடுத்த அனைத்து புகைப்படம் மற்றும் வீடியோவின் தொகுப்பு விளக்கத்துடன் அடுத்த இடுக்கையில் தொடரும்.
கடைசி மண்டபத்தை கடந்தவுடன் தெரியும் ஆஞ்சநேயர் கோவிலும். அதன் பிறகு தூரத்தில் தெரியும் வரதராஜ பெருமாள் கோவில்.
சங்ககிரி ஊரும்…புள்ளியாய் எங்களது கார் நிறுத்திய இடம்.
அப்படியே கொஞ்சம் ஜூம் பண்ணினால்.
தர்கா
குடிக்க தண்ணீர்
மதிய உணவு தயாராகிறது.
நீர் சுத்திகரிப்பு
வரதராஜ பெருமாள் கோவில்.
தீரன் சின்ன மலை தூக்கிலிடப்பட்ட இடம்.
தூக்கு மேடை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
“பொழுது தெரியாத பாலி” – இப்போது நாற்றத்துடன்
மதிய உணவருந்த வரிசை
வரதராஜ பெருமாள். அரிய புகைப்படம்.
Mission Accomplished