என் பார்வையில் பையா திரைப்படம் – விமர்சனம்

நேற்று இரவு பையா திரைப்படம் இரவு காட்சிக்கு கே.எஸ். பிக் சினிமாஸ் தியேட்டருக்கு சென்றிருந்தோம். கவுண்டர் அருகே டிக்கெட் வாங்க சென்ற போது செக்யூரிட்டி “சார், தியேட்டர்ல ஏ.சி. வேலை செய்யாது. பேன் மட்டும் தான். காத்து சரியா வராது. ஓகேனா டிக்கெட் வாங்குங்க. இப்பவே சொல்லிட்டேன்”..(பார்க்க – http://twitter.com/praveenc85/status/11547200473).. ஸ்ஸ்ஸ்ஸ்… “அடடா, நான் ஏற்கனவே வெப் சைட்ல டிக்கெட் புக் பண்ணிட்டேங்க. கவுண்டர்ல அத காட்டி டிக்கெட் வாங்க வந்தேன். ஏ.சி என்ன ஆச்சு?”, நான். அதற்க்கு அவர் “அது என்னவோ தெரியல சார், புது படம் வந்தா ஏ.சி வேலை செய்ய மாட்டேங்குது!!! சொல்லாம டிக்கெட் கொடுத்துட்டா, உள்ள வந்து சத்தம் போடுவாங்க. அதான் என்ன கவுண்டர்ட நிக்க வச்சிட்டாங்க.” என்று சொல்லிவிட்டு எனக்கு பின்னாடி நின்ற ஒரு பெண்மணியிடம் “மேடம், தியேட்டர்ல ஏ.சி. வேலை செய்யாது. பேன் மட்டும் தான். காத்து சரியா வராது. ஓகேனா டிக்கெட் வாங்குங்க. இப்பவே சொல்லிட்டேன்” என்று தன் பணியை செய்துக்கொண்டு இருந்தார். சரி என்ன பண்றது? வாங்கி கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே நுழையவும், திரையில் எழுத்து போடவும் சரியாக இருந்தது.

சரி.. படத்துக்கு வருவோம். பையா எப்படி? உலக சினிமாவா? தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் படமா? ஒரு சிறந்த இலக்கிய படைப்பா? என்று நீங்கள் கேள்வி கேட்டால்.  சத்தியமாக கிடையாது. பக்கா மசாலா படம். பீமா தந்த தோல்வியை சரி கட்ட, லிங்கு மிகவும் கஷ்டப்பட்டு கலக்கிய ஒரு மசாலா கலவை. அவ்வளவே. தினமும் தயிர் சாதம், புளி சாதம், சாம்பார்  சாப்பிடும் போது காரமா ஹைதராபாத் பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிடற மாதிரியான ஒரு படம். நல்லா தான இருக்கும்? சரி கதை என்னன்னு கேடீங்கனா… “…………”… “………..”.. “….” அதெல்லாம் கேட்க கூடாது. தயாரிப்பாளரே டைரக்டர் லிங்குசாமியிடம் கேட்காத கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கலாமா? நோ.. நோ. கேட்டாலும் யாருக்கும் தெரியாது. படத்த பார்த்து என்ஜாய் பண்ணிட்டு அவங்க அவங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருக்கனும். என்ஜோய்மென்ட் காரண்டீட். படத்தில் அந்த அளவிற்கு செலவு இல்லை. அனால் ஒவ்வொரு காட்சியிலும் லிங்குசாமியின் சிரத்தை தெரிகிறது. வெற்றி ஒன்றே அவரின் குறிக்கோள்.

படம் இப்படி தான் ஆரமிக்கிறது. பெருசா ஏதும் பில்டப் கொடுக்காமல், மிக சாதாரணமாக இன்ட்ரோ கொடுக்கிறார்கள் கார்த்திக்கிற்கு. நண்பர்கள் அனைவரும் பஸ்ஸில் வெயிட் பண்ண, பஸ்சு கிளம்பும்போது தான் வருவேன்னு வெயிட் பண்ணி ஓடி வந்து ஏறுகிறார் கார்த்திக். கார்திக்கை பார்த்தவுடன் தியட்டரில் ஒரே விசில் கைதட்டல். பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த பெயர். மூன்றாவது படத்திலேயே நிறைய ரசிகர்களை சம்பாதித்து விட்டார். நல்ல வேலை அதுக்காக பெருசா பில்ட் அப் ஏதும் கொடுத்து ஒரு இமேஜ் உருவாக்க முயற்சி பண்ணல. பஸ்சில் இருந்து இறங்கும் போது தமன்னாவை பார்க்கிறார் கார்த்திக். பார்த்தவுடன் காதல் தீ பற்றிக்கொள்கிறது!!! ஒரு மாதிரி முழிக்கிறார் தமன்னாவை பார்த்து. கார்த்திக் ரியாக்சன் சூப்பர். அதன் பின் வரும் காட்சிகளில் அவர் உள்ளே நுழையும் இடம் எல்லாம் தமன்னா அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். படம் மிக பொறுமையாக தொடக்கத்தில் நகர்கிறது. கார்த்திக்கின் காரில் தமன்னா ஏறியவுடன் தான் படம் டாப் கியரில் சீறுகிறது. அனல் பறக்கிறது.

படத்தில் முக்கியமாக மூன்றே கதாபாத்திரம் தான். ஒன்று கார்த்திக், மற்றொன்று தமன்னா அப்புறம் மூன்றாவதாக முக்கிய பாத்திரத்தில் அந்த கருப்பு கார். சும்மா பூந்து விளையாடி இருக்கு படத்துல. படம் பார்த்தா தான் உங்களுக்கு தெரியும். கார் நடிச்சி இருக்குன்னு நான் சொன்னா நம்பவா போறீங்க? படம் முழுக்க வரும். பெங்களூர் டு மும்பை தமன்னாவும் கார்த்திக்கும் காரிலேயே போவாங்க. அது தான் முழு படமும். (சாரி கஷ்டப்பட்டு வருச கணக்குல லிங்கு அண்ட் டீம் யோசிச்சு உருவாக்கின கதைய நான் தெரியாம சொல்லிட்டேன்!).

கார்த்திக்கை பத்தி சொல்லியே ஆகணும். எப்ப பார்த்தாலும் சூவிங்கம் மென்று கொண்டிருக்கிறார் மனுஷன்.  இந்த படத்துல அவர் பேர் சிவா. ரன் ஞாபகம் இருக்கா? அதுல மாதவன் பெரும் சிவா தான். லிங்குசாமியின் செண்டிமெண்ட் போலும். சரி இருந்துட்டு போவுது.. நல்ல தான் இருக்கு. கார்த்திக் பயங்கர மான்லியா இருக்கார். இத நான் சொல்லியே ஆகணும். பருத்தி வீரனில் வெறும் அர டிராயர், ஏத்தி கட்டின லுங்கி. ஆயிரத்தில் ஒருவனில் ஒரே ஒரு லங்கோடு. ஆனா இதுல நல்ல முன்னேற்றம். கலர் கலரா டீ-ஷர்ட், ஜீன்ஸ். தப்பிச்சிட்டார். அனாயசமா சிரிக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். சண்டை போடுகிறார். நிறைய இடத்தில சூர்யா மாதிரியே இருக்கார். கண்டிப்பா குரல் ஒற்றுமை. அதுவும் முக்கியமா தமன்னாவை பாம்பேல அவங்க சொந்தகாரங்க வீட்ல விட்டுட்டு கார்ல போகும் போது அவர் நண்பரிடம் போனில் சோகத்தின் உச்சத்தில் குரலை கரகரவென பேசுவார். சான்சே இல்ல. சூர்யா தான் டப்பிங் கொடுதிருக்கார்னு தோணும். இது தவிக்க இயலாது. சொந்த தம்பி. அதனால் உயமான சூர்யானு வேணா இவற சொல்லலாம்.

பொதுவாக எனக்கு சண்டை காட்சிகள் பிடிக்காது. அதுவும் முக்கியமா விஜய் படத்துல வர மாதிரி. பறந்து பறந்து.. பாய்ஞ்சு பாய்ஞ்சு பத்து பேர ஒரே அடில அடிக்கிறது எரிச்சலா இருக்கும். ஆனா இந்த படத்துல சண்டை காட்சிகள் உண்மையாலுமே பிரமிக்க வைக்கிறது. ஒரே அடி. ஆனா பவர்புல் அடி. எதிரி காலி. அப்படியே சுருண்டு விழுந்துடறாங்க. ஜஸ்ட சாம்பிள். ஒருத்தர தூக்கி, மடில வச்சி, அப்படியே மடக்கி விசுருகிறார் கார்த்திக். பயங்கரமா இருக்கு திரையில் பார்பதற்கு. (நான் இன்னொரு முறை இந்த படத்திற்கு போனாலும் ஆச்சர்யமில்லை)  இந்த படத்திற்கு பிறகு கண்டிப்பா அவருக்குனு தனி இடம் முன்னணி நடிகர்கள் வரிசையில் தமிழ் சினிமாவில் இருக்கு. சூர்யா ஜாக்கிரதை!.

நயன்தாராவுக்கு படமில்லை. திரிசாவிக்கு மார்கெட் இல்லை. அசின் மும்பைக்கு போய்விட்டு விளம்பர படத்திலாவது பிசியாக இருக்கிறார். அதானாலேயே இப்போது தமன்னாவை தவிர தமிழிற்கு வேறு ஆள் இல்லை. அவங்க காட்டுல “அடடா மழைடா அட மழைடா”. சூர்யா, கார்த்திக், விஜய்ன்னு அவங்க மார்கெட் சர்ருன்னு எரிகிட்டு இருக்கு. இந்த படத்தில் கார்த்திக்கிற்கு சரியான ஜோடி. முதல் படத்தில் முத்தழகு கிடைக்கவில்லை. இரண்டாம் படத்தில் ஜோடியே இல்லை. அந்த குறையை இந்த படத்தில் நீக்கி விட்டார். தமன்னா இந்த படத்துல பிரிட்ஜ்ல இருந்த எடுத்த ஆப்ளில் பலம் போல ப்ரெஷா இருக்காங்க.(உவமை எப்புடி?). ஒரு பக்கம் கார்த்திக் சண்டைக்காட்சிகளில் வில்லன்களை தோலுரித்துக் கொண்டிருக்கையில். லிங்குசாமி பாடல் காட்சிகளில் தமன்னாவை துகிலுரித்து விட்டு இருக்கிறார். அதனால தானோ என்னோவோ தியேட்டர்ல ஏ.சி வேலை செய்யாட்டி கூட யாருக்கும் வியர்க்கவில்லை போலும். ஹி ஹீ.

அப்புறம் அயன் படத்துல தமன்னாவுக்கு அண்ணனாக ஒருத்தர் வருவாரே – ஜெகன். அவர் இதிலேயும் கார்த்திக்கிற்கு நண்பனாக வருகிறார். அதுல சூர்யாவிற்கு நண்பர். தமன்னா ஹீரோயின். இதுலேயும் தமன்னாதான் ஹீரோயின், கார்த்திக்கிற்கு நண்பர். நல்ல செண்டிமெண்ட். வெற்றி சூத்திரமோ? ஆனா இதுல பட்டாசு கேளப்பிட்டார். அவர் வர சீன்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது. அதுவும் மாறு வேஷத்துல பைக்கில போகும் போது கார்த்திக் கண்ணுல மாட்டிக்குவாரே.. நல்ல காமடி. வடிவேல் நடிச்சி இருந்தா இன்னும் சூப்பரா இருந்து இருக்கும்னு நெனைக்கிறேன். ஆனால் இவரும் அருமையான நடிப்பு.

படத்துல யுவன் ஷங்கர் ராஜாவை பற்றி நான் சொல்லாமல் விட்டுவிட்டால் நான் இந்த விமர்சனத்தை எழுதுவதில் அர்த்தமே இல்லை. பாடல்களிர்க்காக தான் இரண்டாம் நாளே படத்திற்கு சென்றேன். நீண்ட நாட்களிற்கு பிறகு தன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார் யூவன். ஒவ்வொரு பாடல்களும் தேன். முக்கியமாக. “என் காதல் சொல்ல நேரமில்லை”, “அடா மழைடா அட மழைடா”, “துளி துளி துளி மழையாய் வந்தாளே”. சூப்பர். என்னோட பேவரெட். நடு இரவில் இப்போது இந்த விமர்சனம் எழுதும் போதும் பின்னணியில் அந்த பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், “பூங்காற்றே பூங்காற்றே” பாடல் முதன் முதலாக கேட்டதில் இருந்து எனக்கு பஸ்சிலோ காரிலோ பயணம் செய்யும் போது பின்னணியில் கேட்க்கும் பாடல் போல தோன்றியது. படத்தில் தமன்னாவும் கார்த்திக்கும் காரில் போகும் போது பின்னணயில் அதன் பாடல் வரும். யூவன் இஸ் ஜீனியஸ். ஆனால் படம் வருவதற்கு முன்பு இந்த பாடல்கள் அனைத்தும் காரணமே இல்லாமல் எனக்கு சண்டைக்கோழியையும் விஷால் முகத்தையும் இத்தனை நாள் எனக்கு ஞாபகபடுத்திகொண்டு இருந்தன. இந்த படம் பார்த்த பிறகும் தான் எனக்கு விஷால் முகம் மறைத்து கார்த்திக் முகம் வந்தது!!!   நா.முத்துக்குமார் எழுத்துக்களை பாராட்ட வார்த்தை இல்லை. ஆனால் மனிதர் “தேவதை”, “ஏஞ்சல்” போன்ற வார்த்தைகளை மறக்கமால் தன் காதல் பாடல்களில் சேர்த்து விடுகிறார். பட் வீ லைக் இட்.

படம் நிறைய இடத்துல சண்டைகோழி, கில்லி, ரன் போன்ற படங்களை ஞாபக படுத்துகிறது. இரவில் கார் துரத்தும் காட்சி ஒன்று வரும். அது பகலில் இருட்டை போன்ற தோற்றத்தை உருவாக்கும் லென்ஸ் போட்டு எடுத்து இருப்பார்கள். அது இல்லை பிரச்சனை. அனால் அந்த கார்களில் ஒளிரும் ஹெட் லைட் கிராபிக்ஸ் வேலை என்று நன்றாக தெரிகிறது. ரோடு ராஷ் கம்ப்யூட்டர் கேமில் நைட் மோடில் விளையாடுவதை போல இருந்தது. இந்த மாதிரி படங்களில் படத்தில் லாஜிக் என்று ஒன்றை எக்காரணம் கொண்டு பார்க்க கூடாது என்று நமக்கு புரிகிறது. நிறைய இடத்தில பிரச்சனை  வரும். ஆனால் அதையும் மீறி படம் ஜெட் வேகத்தில் பயணம் செய்வதால் படம் முடிவதே தெரியவில்லை.காரில் இந்த படத்திற்கு காரில் போய்விட்டு வருபவர் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதை.  வரும் போது கண்டிப்பாக  உங்களை அறியாமல் கார் 150  கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். சர்ர் என்று U டர்ன் போட வைக்க தோணும்…

நீங்கள் இந்த படத்தை பார்த்து விட்டீர்களா? இல்லை பார்க்க போகிறீர்களா? சும்மா உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். அட நம்புங்க காசுலாம் இல்ல. ப்ரீ தான் 🙂

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது

அது ஒரு அழகிய, அமைதியான ஞாயிற்றுக்கிழமை.. “நாடோடிகள்”ன்னு ஒரு தமிழ் படம் வந்துருக்கு .. சூப்பரா இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க.. நானும் ரெண்டு வாரமா அந்த படத்துக்கு போலாம் போலாம்னு பார்த்தேன் ஆனா நேரமே அதுவரை சிக்கவில்லை. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எப்படியும் பார்த்தடனும்னு ஒரு முடிவோட இருந்தேன். காலைல எழுந்ததும் வீட்ல இருக்கற எல்லாரையும் மதியம் படத்துக்கு போறோம் எல்லாரும் கிளம்பிடுங்கன்னு  சொன்னேன். யாரும் டக்குனு வரலைனு சொல்லிட்டாங்க.. என்ன பண்றது??? படம் சூப்பரா இருக்கு அப்படி இப்படின்னு பில்ட் அப்  கொடுத்து எல்லாரையும் சம்மதிக்க வச்சுட்டேன். எப்போதாவது தான் படத்துக்கு போகிறோம் நல்ல படமா போலாம்னு எடுத்த முடிவு தான் இது.

nadodigal

ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளெக்ஸ் இனையதளத்துக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்தேன். அது பல்திரைகள் கொண்ட ஒரு திரையரங்கம்.. மற்ற திரைகளில் ஓடும் எந்த படமும் நன்றாக இருப்பது போல் தோன்றவில்லை.. நாடோடிகளுக்கு படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என்று ஆவலுடன் பார்த்தேன். அப்பாட டிக்கெட் இருந்தது.. உடனே அவசர அவசரமாக நான்கு டிக்கெட் மதிய காட்சிக்கு முன்பதிவு செய்தேன்.

ஏற்கனவே வீட்டில் லேட்.   மதியம்  2:15 மணிக்கு திரைப்படம் என்று டிக்கெட்டில் போட்டு இருந்தது. மணி இப்போதோ 1:50.. டிக்கெட்டை அச்சிடுவதற்கு கூட நேரம்  இல்லை. என் செல்பேசியில் அந்த டிக்கெட்டின் மின்னஞ்சல் நகல் இருந்தது.   கவுண்டரில் அதை காண்பித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.அவசர அவசரமாக திரையரங்கிற்கு போய் சேர்ந்தால் அதற்குள் மணி 2:10PM

டிக்கெட் கவுண்டர்:
நான்: Excuse me, I’ve booked my tickets thru online for this show. Can I get the original tickets?

பணியாளர்: Yea sure. Can I please have the proof for online reservation?

நான்: Unfortunately, I did not print  the tickets that I received in my email but I’ve that email on my mobile. என் செல்பேசியின் அந்த மின்னஞ்சலை திறந்து காண்பித்தேன். (நேரம் வேறு ஆகிவிட்டது “நாடோடிகள்” இந்நேரம் ஆரம்பம் ஆகி இருக்குமே…)

பணியாளர்: என் செல்பேசியை வாங்கிக்கொண்டார். என்ன மாடல் சார் இந்த மொபைல்?

நான்: (ஆகா. படம் வேற ஆரமிச்சி இருப்பாங்களே.. எல்லாரும் எனக்கு வெயிட் பண்றாங்களே) அது விண்டோஸ் மொபைல் சார். படம் எத்தன மணிக்கு ஆரமிக்கும்?

பணியாளர்: படம் இப்போ போட்டுடுவாங்க. இந்த மொபைல் என்ன ரேட் வருது சார்?

நான்: (விடமாட்டார் போல இருக்கே) நான் வாங்கும் போது பதினைந்தாயிரம் இருந்ததுங்க.. எந்த ஸ்க்ரீன்ல சார் இந்த படம்? டிக்கெட் நம்பர் இந்த ஈமெயில்லில் இருக்கும் பாருங்க.
பணியாளர்: ஸ்க்ரீன் நம்பெர் ஒன்னுல இந்த படம் சார். இந்த மொபைல் என்ன கம்பனி சார், நான் இதுக்கு முன்னாடி பார்த்து இல்லையே. வெளிநாட்டுல வாங்குனீங்களா?

நான்: (கடவுளே நம்ம அவசரம் நமக்கு தான் தெரியும்) இந்த மொபைல் கம்பெனி பேரு ஹச் டி சீ. இப்போ இந்தியாவிலேயே கிடைக்குது. சார்.. படம் போட்டாச்சுனு நினைக்கிறன்..

பணியாளர்: ஓ… அப்படியா. சரி சரி.. இதோ ஒரு நிமிஷம் சார். (அவசரம் புரிந்தவராக) உடனே டிக்கெட் பிரிண்ட் எடுத்து கொடுத்தார்.

கடவுளே… டிக்கெட் வாங்கிட்டு ஊள்ளே போறதுக்குள்ள இவ்ளோ பிரச்சனையா? அவசர அவசரமாக அனைவரும் ஸ்க்ரீன் – 1 வழி நோக்கி வேகமாக நகர்ந்தோம். உள்ளே சென்றால் நல்ல வேலை படம் இன்னும் ஆரமிக்கப்படவில்லை. எங்களுக்காக காத்திருந்த மாதிரி நாங்கள் சென்றவுடன் தான் பெயர் ஆரமித்தது. படத்தின் பெயர் கூட போடவில்லை ஆனால் முதல் காட்சியில் நடிகை லட்சுமி ராய்.. அடடா என்ன இது குழப்பம்? நாடோடிகள் படத்தில் இந்த பொண்ணா நடிச்சிருக்கு? யோசித்து முடிப்பதற்குள் படத்தின் பெயர் வந்தது.. வா……”வாமனன்”. என்னது. இது நாடோடிகள் இல்லையா? வாமனனா? இது என்ன புது கூத்து? ஸ்க்ரீன் மாத்தி உட்காந்துட்டமா? டிக்கெட் எடுத்து பார்த்தேன்.  ஆ.. ஸ்க்ரீன் ஒன்னு.. இல்லையே கரெக்டா தான வந்து இருக்கோம்.!!! ஒரே குழப்பம். படம் கீது மாத்தி போட்டாங்களா? இல்ல.. இல்ல.. அதுக்கு ச்சான்சே எல்லா. பின்ன எப்புடி???

ஆங்.. செல்பேசியில் மின்னஞ்சலை திறந்தேன்.. டிக்கெட்: 4 , வகுப்பு: முதல் வகுப்பு  திரை: 1 திரைப்படம்.. வாமனன்.. ஆகா நான் தான் மாத்தி புக் பண்ணிட்டேனா.. நம்ம தப்பு தானா? பக்கத்துல எல்லாரும் என்னை முறைக்கராங்கன்னு தெரியது … ஆனா நான் டக்குனு திரும்பல..  ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் ஒரு சொதப்பல். வேற என்ன பண்றது? புக் பண்ணும் போது பார்த்து பண்ணி இருக்கணும். எல்லாரையும் சமாதனப்படுத்தி மறுபடியும் அடுத்த வாரம் நாடோடிகள் கூட்டிட்டு போறேன்னு வாக்குறுதி கொடுத்தேன். என்னுடைய ஒரே எண்ணம் இப்போ பாக்கப்போகிற இந்த படத்திற்கு “ஏன் வந்தோம்” னு இல்லாம இருந்தா போதும்.  கேமரா, காமெடி எல்லாமே பரவாயில்லை… நான் தற்சமயம் மிகவும் ரசித்த “ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது” பாடல் இந்த படம்  என்பது தான் என் ஒரே ஆறுதல். நல்ல வேலை படம் ஒன்னும் மோசமில்லை. வீட்டிற்கு வரும்வரை அந்த பாடல் மட்டும் தான் என் ஞாபகத்தில் இருந்தது..

நமக்கு பிடித்த பாடல்னா பாட தோணாதா? நானும் பாடினேன். வீட்டிற்கு வந்ததும் அதை பதிவு செய்து பார்த்தேன். ரொம்ப கஷ்டம்ப்பா. ரூப் குமார் ரதோட் பாடிய அந்த பாடல் சான்சே இல்ல. கொஞ்சம் புகைப்படங்களை சேர்த்து மேலும் அதை மெருகேற்ற முயற்சி செய்தேன். இதோ.. பார்த்து விட்டு எப்படி என்று சொல்லவும்..

[xr_video id=”c2257aad5e1d4e699e1e3ceb119b8b06″ size=”md”]

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரம் இது
இதயமே ஓ
இவளிடம் ஓ
உருகுதே ஓ…
இந்த காதல் நினைவுகள் வான்தானே…..
அது தூங்கும் போதிலும் தூங்காதே……….
பார்க்காதே…. ஓ………
என்றாலும்….. ஓ….
கேட்காதே….. ஓ….

இது அனைத்தும் நடந்து சரியாக ஒரு வாரம்.. சரி இந்த வாரமாவது நாடோடி படத்திற்கு சரியாக போகணும் நேற்று மறுபடியும் யோசனை.. ஐந்து திரைகள் கொண்ட திரையரங்கிற்கு சென்றால் தானே பிரச்சனை. கே .எஸ். பிக் சினிமாஸ்(ஒரே திரை தான் – So குழப்பமில்லை)  திரையங்கிற்கு நேற்று இரவு காட்சிக்கு ஆன்லைனில் புக் செய்தேன். பத்து முப்பதிற்கு திரைப்படம் , எதற்கு வம்பு..  சரியாக பத்து மணிக்கே போனோம். சீக்கிரம் வந்து விட்டோம்.. சரியான படம் தான். இன்னைக்கு எந்த பிரச்சனையும் வராது என்று ஒரு நம்பிக்கை… இருந்தும் பிரச்சனை வந்ததே.

டிக்கெட் கவுண்டர்.

நான்: ஹலோ. நான் ஆன்லைனில் புக் செய்தேன். இதோ எஸ்.எம் எஸ் கன்பிர்மேசன். (என் செல்பேசியை கொடுத்தேன்)

பணியாளர்: இது என்னாது சார் ஹெச்.டி.சி? மொபைல் போனா?

(ஆகா கேலம்பிடாங்கயா.. கேலம்பிடாங்க…)

நான்: ஆமாம். மொபைல் தாங்க.

பணியாளர்: எவ்ளோ சார் இது.. இந்தியாவுல கிடைக்குதா? கொஞ்சம் உள்ள வாங்க சார்.

நான்: (மறுபடியுமா…??? போனா வாரம் அங்க.. இந்த வாரம் இங்கயா? சரி  சரி இந்த வாரம் தான் நமக்கு இன்னும் நேரம் இருக்கே. உள்ள போய் தான் பாப்போம்…) இந்த மொபைல் நம்ம சேலம்லயே கிடைக்குதுங்க. இப்போ சுமார் பதினைத்தாயிரம் இருக்கும்னு நினைக்கிறன்.

பணியாளர்: ஓஹோ.. அப்படியா? அதெல்லாம் சரி. இந்த ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்றீங்களே, அது எப்படி சார்.

நான்: உங்களோட வெப் சைட்டுல போய் பண்ணலாம்க. ஜஸ்ட் தியேட்டர், ஷோ, தேதி செலக்ட் பண்ணி கார்டு மூலமா பணம் கட்டின போதும்.

பணியாளர்: சார் கொஞ்சம் உங்க மொபைல்ல புக் பண்ணி காட்ட முடியுமா…

நான்: இல்லைங்க. நான் லேப்டாப் ல பண்ணினேன்.

பணியாளர்: ஓ.. லேப்டாப் ல புக் பண்ணி மொபைல்க்கு அனுப்பிடீங்களா? இப்போ புரியுது சார். இந்தாங்க சார் உங்க டிக்கெட். .
(ஒரு வழியாக கடைசியில் ஓரளவு அவர் புரிந்து கொண்டதால் எனக்கு டிக்கெட் தரப்பட்டது)

நல்லவேளை இந்த வாரம் எப்படியோ நாடோடிகள் பார்த்து விட்டோம். படம் எப்படீன்னு கேட்கறீங்களா? அந்த திரைப்படத்தை பற்றி விமர்சனம் எழுதி இந்த இடுக்கையை மேலும் இழு……..க்க  விரும்பவில்லை. படம் சூப்பர். அவ்ளோ தான்.. நீங்களாவது என்னை மாதிரி ஆன்லைன்ல புக் பண்ணி மாட்டிக்காதிங்க. அதுதான் முக்கியம். அப்படி ஏற்கனவே மாட்டி, இல்ல வேறு ஏதேனும் சுவாரசியமான சம்பவம் ஏதாவது இருந்தா கீழே பகிர்ந்துக்கோங்க.