புக்கெட் தீவு – தாய்லாந்து பயணக்கட்டுரையை வாசித்துவிட்டு நண்பர் திரு.சண்முகநாதன் பதிவு செய்த கருத்து இது.
///“இதயம் பேசுகிறது” திரு. மணியன் அவர்களின் பயணகட்டுரைகளுக்கு பிறகு சமீபத்தில் நான் மிகவும் ரசித்து படித்தது இந்த பயணகட்டுரைதான். சரளமான எழுத்து நடை, தகவல்கள் எல்லாமே சிறப்பாக உள்ளது. ஒரு சிறிய சந்தேகம்,,,இதற்க்கு முன்பு வெளிநாடு சென்றபோது (ஸ்ரீலங்கா) நிகழ்வுகளையும் இதுபோல் ஏன் எழுதவில்லை.. பாங்காக் – சிங்கபூருக்கு இது இன்றண்டவது பயணமா?
– SK Shanmuganathan ////
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் ரசித்து படித்ததாய் கூறியிருப்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கான பதிலும் அதனூடே தோன்றிய சில எண்ணங்களையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். உண்மையில் இலங்கை பயணத்தை விரைவில் எழுதவேண்டும் என்று யோசித்து யோசித்தே மாதங்கள் பல ஓடிவிட்டது. தாஜ்மஹால் பயணத்தை பற்றி கூட எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். பயணக்கட்டுரை மட்டுமல்லாமல் இப்படி நான் எழுத நினைத்த மற்ற பல சுவாரசியமான விஷயங்கள், சம்பவங்கள் கடைசிவரை என்னுடைய நேரமின்மையால் எழுத முடியாமலே போய்விட்டது. (அதாவது எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல்.).
அதன் பிறகு தாய்லாந்தும் போய் வந்தாயிற்று. என் விகடனில் சில வாரங்கள் தொடர்ந்து எழுதக்கேட்டு இருந்தார்கள். தாய்லாந்து பயணக்கட்டுரையை அதில் எழுதும் யோசனை வந்தது. கமிட்செய்தால் நிச்சயம் எழுதிவிடலாம் என்று அந்த வாய்பிற்கு ஒத்துக்கொண்டேன். ஆனால் எதிர்பாராவிதமாக முதல் வாரத்திலேயே நான் எழுதிய “என் விகடன்” பதிப்பே நிறுத்தப்பட்டது. இது அநேகம் பேருக்கு தெரியும். சரி அதன் தொடர்ச்சியை என்னுடைய வலைப்பூவில் எழுதலாம் என்று இருந்தேன். இரண்டாம் பாகம் எழுதிய பிறகு சில கால இடைவேளை ஆனது. நடுவில் சில போன் கால்களும், ஈமெயில்களிலும் அதன் தொடர்ச்சிக்காக காத்திருப்பதாய் சிலர் சொன்னார்கள். அந்த உத்வேகத்தில் இப்போது மூன்றாம் பாகத்தை எழுதினேன்.
ஆரம்பத்தில் இருந்ததை போலில்லாமல் இப்போதுதான் எழுதுவதற்கு அதிக நேரம் செலவிட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கேட்டபடி நான் இரண்டாவது முறை எல்லாம் தாய்லாந்து செல்லவில்லை. (சிங்கப்பூர் சென்றதே இல்லை) நான் தாய்லாந்து சென்ற ஏழு நாட்களில் முதல் நான் வரையான அனுபவங்களை தான் இதுவரை எழுதி இருக்கிறேன். இன்னும் ஆறு நாட்கள் பாக்கி இருக்கிறது. ஆக எழுத எனக்கு நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கு சாதரணமாகவே எழுதுவதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. எழுதுவதற்கான சூழ்நிலையும் சரிவர அமைய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதாமல் நான் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்வேன்.
இந்த புக்கெட் தீவு கட்டுரை எழுதுவதற்கே எனக்கு பல மணி நேரம் பிடித்தது. புகைப்படங்களை, விடியோக்களை ஒருங்கிணைத்து, அந்த பயண அனுபவத்தை வாசிப்பவர்களுக்கு கிடைக்கப்பெறச் செய்வதில் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. .இந்த பயணக்கட்டுரை தொடர்ச்சியாக பத்திரிக்கையில் வந்திருந்தால் நிறைய பேருக்கு பிரயோஜனமாய் இருந்திருக்கும். நடை முறையில், முகப்புதகத்தில், இதை என்ன என்று கூட படித்துப்பார்ப்பதில் யாருக்கும் ஆர்வம் இருப்பதாய் தெரியவில்லை. “தமிழில் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது. கட்டுரை ரொம்ப நீளமாக இருக்கிறது, படிப்பதற்கு பொறுமை இல்லை” என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவர்களுக்கு அதன் பின்னால் இருப்பதற்கான மெனக்கெடல்கள் புரிவதில்லை.
என்னுடைய வலைப்பூவில் சில நூறுகளிலும், ஆயிரத்து சொச்சங்களிலும் வழக்கமாக என் பதிவுகள் படிக்கபட்டாலும் இலவசமாக கிடைப்பதலோ என்னவோ யாவரும் அவர்களுடைய கருத்துக்களை கூட பதிவு செய்ய முன்வருவதில்லை. மெனக்கெடல்களை சில சமயம் அர்த்தமற்றதாக்கி விடுகிறார்கள். தாய்லாந்து கட்டுரையை முடித்தபிறகு என்னுடய சுவடுகள் வலைப்பூவில் எழுதுவதை குறைக்க யோசித்துக்கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் அதிகம் மெனக்கெடப்போவதில்லை. அதற்காக நான் எழுதுவதையும் கைவிடப்போவதில்லை. அதனால் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் கூட நிச்சயம் என் எழுத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி, பல பேரை சென்றடையச் செய்யும் தளத்தினை அது நோக்கி இருக்கும்.