சிறப்பு விருந்தினராக சோனா கல்லூரியில்

 

IMG_2959

பிப்ரவரி 27 அன்று, சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ பிரிவில் தொடங்கப்பட இருந்த “மார்கடிங் க்ளப்” துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தேன். கூகிள் அட்வோர்ட்ஸ் (Google Adwords)துறையில் சேவை நிறுவனம் நடத்தி வருவதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட நிபுணன் என்பதாலும் அதை பற்றி எம்.பி.ஏ மாணவர்களிடம் சிறப்பு விரிவுரையாற்ற கேட்டிருந்தார்கள். தொழில்நுட்ப விஷயம் என்பதால் பிரசன்டேசன் இல்லாமல் பேசினால் மொக்கை போட்டுவிடும் என்பதால் கொஞ்சம் அதற்காக நேரம் ஒதுக்கி தயார் படுத்த வேண்டியிருந்தது.

ஆனால் நேரமினை காரணமாக ஒரு வாரம் கிடைத்தும் வழக்கம் போல் கடைசி நாள், கடைசி நிமிட பரபரப்பில் தான் அது தயாரானது. மாணவர்கள் என்பதால் கொஞ்சம் அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு எளிதாக புரியுமாறும், ஆவலை தூண்டுமாறும் கொஞ்சம் நகைச்சுவை  சிந்தனை அதில் புகுத்த வேண்டியிருந்தது. தவறினால் நாம் மட்டும் தனியாய் சுவரை பார்த்து பேசிக்கொண்டு இருக்க வேண்டி நேரிடும். மாணவனாய் இருக்கும்  கஷ்டம் மாணவனாய் இருந்தால் தான் தெரியும்.

ஆனால் எப்போதும் மாணவர்களிடம் கலந்துரையாடுவது மிகவும் எனர்ஜிடிக்காண அனுபவம். அதுமட்டும் இல்லமால் மிகவும் மனநிறைவானதும் கூட. நம்மால் ஒருவர் ஆர்வம் பெற்று அதை கற்றுணர்ந்து வாழ்க்கையில் பயனுற்றால் அந்த மனநிறைவு வேறு எதிலும் நிச்சயம் கிடைக்காது.

சுமார் ஆறு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆர்குட் பிரபலமாய் இருந்த நேரம். ஆத்தூரில் இருந்து ஒரு பள்ளி மாணவன் என்னை அதில் விடாமல் பலமுறை தொடர்பு கொண்டதாய் நினைவு. என்னை பற்றி இணையத்தில் அறிந்துக்கொண்டு ஏதோ ஒரு உந்துதலில் என்னை பார்க்க விரும்பினான். இணையத்தில் இப்படி எனக்கு அடிக்கடி பல புதுப்புது தொடர்புகள் வரும். அவ்வபோது தொலைப்பேசிகளும் கூட வரும்.

ஏதோ ஒரு காரணத்தால் அப்போது நான் முன் பின் தெரியாதவர்களை என்னை ஒரு போதும் சந்திக்க அனுமதித்ததில்லை. செய்துக்கொண்டு இருந்த முதல் வேலையை விட்டுவிட்டு அடுத்து பிழைக்க வழிதேடி இரவு பகலாய் வாழ்க்கை போராட்டம்  நிகழ்ந்துக்கொண்டு இருந்த காலக்கட்டம்.  அவர்களுக்கு என்னை பற்றி நிறைய தெரிந்திருந்தாலும் எனக்கு அவர்களை பற்றி எதுவும் தெரியாது என்பதால் அது போன்ற புதிய தொடர்புகளை நான் பெரிதாய் பொருட்படுத்தவில்லை. அப்போது நான் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்ததும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

சரியாக நியாபகமில்லை. என் நினைவுகளை மீண்டும் கிளறிப்பார்த்தே இதை எழுதுகிறேன். ஒரு நாள் அந்த மாணவனின் அப்பா என்னை போனில் தொடர்பு கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் சேலம் வந்திருப்பதாகவும், தன் மகன் என்னை பற்றி நிறைய அவரிடம் சொல்லி இருப்பதாகவும், என்னை இன்று பார்த்தே தீரவேண்டும் என்று விரும்புவதாகவும் தன்மையுடன் கூறினார். அதுமட்டும் இல்லாமல் சேலம் அண்ணா பூங்காவில் எனக்காக காத்திருப்பதாகவும் கூறினார். தவிர்க்கமுடியாத அன்பின் அழைப்பு.

நான் அங்கு சென்று அவர்களை அன்று சந்தித்தது அவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சி அளித்தது என்பது மட்டும் இன்னும் எனக்கு  நியாபகம் இருக்கிறது. ஆனால் அன்று அவர்களிடம் என்ன பேசினேன், என்ன நடந்தது என்று சுத்தமாய் நினைவில்லை.  அதன் பிறகு இணயத்தில் அந்த மாணவன் என்னை ஓரிருமுறை தொடர்பு கொண்டான். அவ்வளவே!

பல வருடங்கள் கடந்துவிட்டது. திடீரென மூன்று நாட்களுக்கு முன்னர். அதாவது சோனா கல்லூரியில் சிறப்புரை ஆற்றிய இரண்டொரு நாளில் முகபுத்தகத்தில் அந்த பையனிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்து இருந்தது.

Conversation started Sunday
Shafi Ahamed
02/03/2014 13:00

I don’t think you remember me.. Me and my Dad met you once in Salem. I am a Google Certified professional working as a Digital Marketing Manager in XXX, Chennai

Because of you, I did this certification and completed successfully.

Thanks for it Sir

 

காலம் சில நேரங்களில் நம் சாதாரண செயல்களை கூட மிகவும் அர்த்தமுள்ளதாக்கி விடுகிறது. பொறுப்புகளை உணரச்செய்து விடுகிறது. “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஏதேனும் உதவி தேவைபட்டால் கண்டிப்பாக என்னை தொடர்புகொள்ளவும். வாழ்த்துக்கள்!” என்று சுருக்கமாய் பதில் அளித்தேன். அந்த நாள் மிகுந்த மனநிறைவுடன் முடிந்தது!

 

20140227_170927

IMG_2960

IMG_2964

ஜெயா டீவியில் ஒளிபரப்பான என் முதல் நேர் காணல்

 

Praveen Kumar C In Jaya T.V

ஜனவரி 26, 2011 அன்று சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டீ.வி அலுவலகத்தில் நுழைகிறேன். ஏதோ ஒரு ஐ.டி கம்பனியில் நுழைந்த ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது அங்கே இருந்த பாதுகாவலர்களின் அணுகுமுறையும், அதன் அலுவலகத்தின் நுழைவாயிலும். குடியரசு தினம் என்பதாலோ என்னவோ அன்று அவர்களின் வரவேற்பறையில் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்க வேண்டும். சிறிது உரையாடலுக்கும், சிறிது காத்திருத்தலுக்குப் பின்பு நான் உள்ளே ஸ்டுடியோவிற்குள் அழைத்துச்செல்லப்படுகிறேன்.

சேலம்ஜில்லா.காம் என்ற இணைய தளத்தின் நிறுவனர் என்பதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட  ஆட்வோர்ட்ஸ் நிபுணர் என்பதாலும் அதை பற்றி “தகவல்டெக்” என்ற நிகழ்ச்சிக்காக கலந்துரையாட வந்ததுதான் இந்த அழைப்பு. எதை பற்றி பேச போகிறோம், என்ன கேள்வி கேட்கப்படும் என்று எதுவுமே என்னிடம் கூறப்படவில்லை. குளிரூட்டப்பட்ட நிசப்தமான அறை. எனக்கான இடத்தில் அமர்த்து மைக் மாட்டப்பட்டு குரல் சரிபார்க்கப்படுகிறது. பளிச்சென்ற வெளிச்சம். மூன்று காமிராக்கள் என்னையே நோட்டமிடுகிறது. இது முகப்புதிது எனக்கு.

உள்ளே நுழையும் வரை என் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது இது தான். முதன் முறை காமிரா முன்பு அமர்கிறோம், சரியாக வருகிறதா என்று இரு நிமிடம் மானிடர் பார்ப்பார்கள் என எண்ணினேன். ஒவ்வொரு கேள்விக்கும் இடையே என்னை நான் தாயார் செய்துக்கொள்ள அவகாசம் கிடைக்கும் என நினைத்தேன். பதிலளிக்கும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் மீண்டும் அதை பதிவு செய்வார்கள் என கருதினேன். ஆனால் அவற்றிற்கு எதுவும் வாய்ப்பளிக்காமல் “ரெடி, ஸ்டார்ட்” என்று மட்டும் தான் வந்தது ஒரு குரல்.  காமிரா  ஓடத்துவங்குகிறது. நிசப்தம் உடைகிறது. நினைத்ததிற்கு முற்றிலும் நேர்மாறாக  ஒரே டேக்கில் பதிவு செய்யப்பட்டது முழு நேர்காணலும்.

அதில் பிப்ரவரி 09 அன்று ஒளிபரப்பான சேலம்ஜில்லா.காம் பற்றி நான் பேசியதன் முதல் பகுதி தான் உங்கள் பார்வைக்கு இங்கே. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: என் முதல் தொலைக்காட்சி நேர்காணலிற்கு வாய்ப்பளித்த நிகழ்ச்சியாளர் பழனி அவர்களுக்கும், ஜெயா தொலைக்காட்சிக்கும் என் நன்றிகள்.

நண்பா இதோ கூகிள் எனக்கு அனுப்பிய காசோலை

என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள்… முகம் தெரியாத பலர் கூட இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. “கூகிளின் மூலம் பணம் சம்பாதிப்பது உண்மையா?”.  “நிஜமாகவே கூகுளில் இருந்து காசோலை அனுப்புவார்களா?” அவர்கள் அநேகமாக அடுத்து கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். “அதற்கு முன்பணம் ஏதேனும் கட்டவேண்டுமா? தினமும் நாம் அவர்கள் தரும் விளம்பரங்களை  கிளிக் செய்துக்கொண்டு இருந்தால்  நமக்கு பணம் வருமாமே??”. இந்த கேள்வியிலேயே நான் உணர்ந்து கொள்வேன் அவர்கள் வழி தவறி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று.

இன்றைய இணைய பயனாளர்கள் அனைவரும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்து வைத்து உள்ளார்கள். ஆனால்  பலர் அதற்கான வழிமுறையை சரிவர அறிந்திருக்கவில்லை. இணையத்தை பொருத்தவரை 99% மோசடி வியாபாரம் தான் நடந்து கொண்டு இருக்கிறது. இணையத்தில் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கும் கும்பலே இங்கு ஏராளம்.

உதாரணமாக, கூகிள் கேஷ் கவ் (Google Cash Cow), கூகிள் மணி (Google Money), கூகிள் கேஷ் சிஸ்டம் (Google Cash System) என்று கூகிளின் பெயர் வருமாறு பல்வேறு இணையதளங்கள் இருக்கிறது. “வீட்டில் அமர்ந்தவாறு தினமும் நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர்களில் கூகிளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். நாங்கள் அளிக்கும் விளம்பரங்களை நீங்கள் வியர்வை சிந்தாமல் கிளிக் செய்து கொண்டு இருந்தால் போதுமானது. காசோலை உங்கள் வீடு தேடி வரும்” என்று அவர்கள் வலை விரித்து காத்துக்கிடப்பர்.

நோகாமல் நோம்பி கும்பிட நினைக்கும் நம் அப்பாவி மக்கள் இதை விடுவார்களா? அந்த இணையத்தளத்தில் சென்று அவர்களை தொடர்பு கொள்ளுகிறார்கள். முன்பணமாக சில ஆயிரங்கள் கொடுத்தால் விளம்பரங்களையும், பணம் சம்பாதிக்கும் வழி முறைகளையும் கூறுவதாக அவர்கள் சொல்ல,  நம்ம ஆள் அவர்கள் கேட்ட பணத்தை கட்டிவிட்டு ஏமாந்து போகிறான். இவ்வாறு தான் கூகிளின் மூலம் பணம் சம்பாதிக்க நினைத்து பலர் சிக்கிக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்கும் கூகிளிர்க்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. கூகுளின் பெயரை அவர்கள் சேர்த்துக்கொண்டதால் அனைவரும் நம்பிவிடுகின்றனர்.

பிறகு, கூகிளின் மூலம் பணம் சம்பாதிப்பது உண்மையில்லையா? வெறும் ஏமாற்று வேலையா? என்று நீங்கள் கேட்டால் அதுவும் தவறு.  கூகிளின் மூலம் பணம் ஈட்டுவது முற்றிலும் உண்மையே. அதற்கு கூகிள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் இருந்தால் மட்டும் போதுமானது. நானும் கூகுளிடம் இருந்த இதுவரை சில காசோலை பெற்று இருக்கிறேன். அதற்காக யாரும் யாருக்கும் முன்பணம் கட்டத்தேவை இல்லை.  இதோ இந்த வாரம் நான் பெற்ற மற்றுமொறு கூகிள் காசோலை.

பி.கு: இந்த இடுக்கையின் நோக்கம் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறையை விளக்கவோ, இணைய மோசடிகளை பற்றி தெளிவுபடுத்தவோ, கூகிள் ஆட்சென்ஸ்சை பயன்படுத்தும் முறைகளை பதிவிக்கவோ அல்ல. கூகிள் மூலம் பணம் சம்பாதிப்பது உண்மை என்பதை உறைக்கவும், மோசடிகளில் விழாதிருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான்.