கதிரவன் பூமிக்கு கரம் தந்த நேரம்.
இயந்திர வாழ்க்கை தொடங்குகிறது என்று
அலாரம் அடிக்க தொடங்கியது.
எழுந்ததும் படிக்கும் நாளிதழ் பழக்கம்
இப்போது உருமாறி விட்டது என்பதினால்
செய்தி காண கணினித்திரை விரிந்தது!
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ந்து முடித்து
பூமி திரும்புகிறான் இந்தியன் என்றும்,
வேலை தேடி இந்தியாவிற்கு
படையெடுக்கும் அமெரிக்கர் என்றும்
விரிந்து சென்றது இணையவலை.
லஞ்சம் இல்லா அரசியலால்
எதுவும் சாத்தியம் என்றேதான்
நெஞ்சம் சொல்லியது என்னோடு
அது உண்மையானது இன்றோடு.
இந்த சந்தோஷ அலையில்
மனம் பயணித்த வேளையில்
ஏதோ ஞாபகம் வந்தது போல்
இணையதளத்தை மாற்றினேன்.
இந்தியாவின் தலைசிறந்த பள்ளியொன்றின்
இணயதளம் தான் அது.
என் மகனை அதில் சேர்க்க
விண்ணப்ப படிவத்தை திறந்து பார்த்தேன்.
பெயர்
முகவரி
புகைப்படமென்று
நீண்டு சென்ற அதன் நடுவே,
ஜா….தி நின்றது வெறியோடு
அது இன்னும் அழியவில்லை மனிதச்சதையோடு!
இரும்பாக இந்தியா மாறினாலும்
துருவொன்று இருக்கத்தானே செய்யுமென்று
மனதை தேற்றிய நேரத்தில்
வெளியே யாரோ அழைப்பது கேட்டது.
கதவை திறந்து நான் பார்த்தேன்
ஒரு முறை தேற்றிய என்மனதை
மறுமுறை தேற்ற முடியவில்லை.
வெளியே
திருவோட்டோடு பிச்சைக்காரன்!
– பிரவீன் குமார் செ
பி.கு: இது 2003ம் வருடம் நான் எழுதியது.. அதற்குள்ளே இதோ 2011 வந்துவிட்டது. நல்லவேளை 2020 வருவதற்குள் இதை பதிவித்துவிட்டேன்.