27 பிப்ரவரி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் ஐந்து மணியளவில் கொழும்பு கடற்கரையில் நண்பர்களுடன் நடந்து சென்றுக்கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் திடீர் கூட்டம் இருப்பதை கண்டோம். அருகில் சென்று பார்த்தால், ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் ப்ரெட் லீயை சுற்றி ஒரு கூட்டம் மொய்த்துகொண்டு ஆட்டோக்ராப் வாங்கிக்கொண்டு இருந்தது. நான் பெரிதாக கிரிக்கெட் ரசிகனில்லை. கிரிக்கெட் மேல் பித்து பிடித்த கல்லூரி வாழ்விலிருந்து காரணமில்லாமல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். அதில் நாட்டமில்லாததால் என்னவோ பிரெட் லீயை பார்த்தும் பெரிதான ஒரு துள்ளல் என்னுள் எழவில்லை. நாங்கள் கூட்டத்தருகே செல்லவும் ப்ரெட் லீ கூட்டத்தை விட்டு விலகி எதிர் பக்கம் செல்லவும் சரியாக இருந்தது.
நண்பர் ஒருவர், ப்ரெட் லீயுடன் நாம் அருகில் நின்று புகைப்படம் எடுத்து இருந்தால் நன்றாக இருந்துக்குமே என்றார். இன்னொருவரோ, சிறிது நேரத்திற்கு முன்னால் வந்து இருந்தால் முயற்சித்திருக்கலாம் இப்போது அவர் ரசிகர்களிடம் இருந்து விடை பெற்று சென்றுக்கொண்டு இருப்பதால் அது சாத்தியமில்லை என கூறினார். சில வினாடிகளில் நடந்தது தான் மேலுள்ள அனைத்தும்.
சரி முயற்சித்துதான் பார்ப்போமே என்று நான் விரைவாக அவரை நெருங்கிச்சென்று சென்று அவசர அறிமுகத்தோடு இந்தியாவிலிருந்து வருவதாக கூறினேன். அவரோ நினைத்ததற்கு எதிர்மாறாக, சட்டென்று என்னிடத்தில் திரும்பி கை குளிக்கியவாறு இந்தியில் ஏதோ கூறினார். (“தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்று இந்தியில் அவர் கேட்டதாக பிறகு நண்பர் கூறினார்). எனக்கோ ஒன்றும் புரியாமல் எனக்கு இந்தி தெரியாது என்றேன். இந்தியாவில் இருந்துக்கொண்டு இந்தி தெரியாதா என அவர் ஆச்சர்யபட்டார். நான் தமிழ் நாடு என்றும் நாங்கள் தமிழ் பேசுவோம் என்றும் கூறியதும் வியப்பில் புன்னகைத்தார். அதுமட்டுமில்லாமல் கேட்டவுடன் புகைப்படத்திற்கு மறுப்பில்லாமல் சம்மதித்தார். அப்போது என் நண்பர் க்ளிக்கிய புகைப்படங்கள் தான் கீழே உங்கள் பார்வைக்கு.
போட்டோ கிரெடிட்: ஸ்ரீ நிதி ஹண்டே (www.enidhi.net)