இணையில்லா இணையம் – கோடை பண்பலையின் என் நேர்காணல்

21 டிசம்பர் 2011, அன்று காலை 10 முதல் 11 மணிவரை கொடைக்கானல் பண்பலையில் (Kodaikaanal FM) “இணையில்லா இணையம்” என்ற தலைப்பியில் நான் பேசிய வானவில் நேரலை நிகழ்ச்சியின் பதிவு இது.

இருபத்தி இரண்டு மாவட்டங்களில்,  இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள் கேட்கும் மிகபெரிய பண்பலை. இந்தியாவிலே அதிக வருமானம் ஈட்டும் பண்பலையும் இதுதான்.  சாதாரண மக்களுக்கு இணையத்தின் பயனை, அதிலுள்ள பிரச்சனைகளை, அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழி முறைகளை  மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருந்தது.

அது ஒரு ப்ரைம் டைம் நிகழ்ச்சி என்பதாலும், அந்த பண்பலையின் மிகப்பிரபலமான நிகழ்ச்சி என்பதாலும் அதிகபட்ச நேயர்கள் இதை கேட்பதற்கு காத்துக்கொண்டு இருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நேரலை முடியும் வரை, அந்த நிகழ்ச்சி பொது மக்களிடம் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தையும் நான் சிறிதும் உணரவில்லை.

2011-12-21 10.57.27

நிகழ்ச்சி முடிந்ததும் அந்த அறையை விட்டு வெளியே வந்து என் கைபேசியை எடுத்து பார்த்தேன். ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது, சுமார் ஐம்பது பேர் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களுக்குள், தொடர்பு கிடைக்காத அனைவரின் எண்களும் மிஸ்ட் கால் அலர்ட் மூலமாக குறுஞ்செய்திகளில் நூற்றுக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டு இருந்தது.  என்னால் என் அலைபேசியை என் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. தொடர்ந்து நூற்றுகணக்கான அழைப்புகள் வந்துக்கொண்டே இருந்தது. என்னால் சில அழைப்புகள் மட்டுமே பேச முடிந்தது.

ஒவ்வொருவரும் அவ்வளவு சந்தோசத்துடன் என்னிடம் பேசியதும், உற்சாகப்படுத்தியதும், என்னை பற்றி மேலும் அறிந்துகொள்ள அவர்கள் காட்டிய நேசமும், நான் நிகழ்ச்சியில் பேசிய வார்த்தைகளை ஞாபகம் வைத்து என்னிடம் கூறியதும், என்னை குடும்பத்தில் ஒருவனாக நினைத்து அவர்கள் வீட்டிற்கு அழைத்ததும், இன்னும் பல விஷயங்கள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. என்னிடம் பேசிய அனைத்து மனிதர்களையும், அவர்களின் உணர்வுகளையும் இங்கே நிச்சயம் எழுத்துக்களால் பதிவிட முடியாது.

எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு அம்மா என்னை அவர்களின் மகனை போல நினைப்பதாக கூறி பூரிப்பு அடைந்தது வாழ்த்தியது இன்னும் என் காதில் கேட்கிறது. இத்தனைக்கும் நான் பொது மக்களுக்கு பரிச்சயமான ஒரு முகம் இல்லை. அனைவரும் அறிந்திருக்கும் பிரபலாமான நபரும் இல்லை. ஆனால் அதற்கு ஈடாக என்னை முகம் தெரியாத மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறது இந்த கோடை பண்பலை. ஒருவாரம் ஆகியும் இன்னும்  ஆனந்தத்தொல்லைகள் அலைபேசியில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி மக்களிடம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எனக்கு தெரிந்திருந்தால் இன்னும் சற்று பொறுப்புடன், பல நல்ல விஷயங்களை பகிர்ந்து இருக்கலாமே என்று அதன் பிறகு தோன்றியது. உண்மையில் சொல்ல போனால், பல விஷயங்கள் பேசுவதற்காக திட்டம் என்னிடம் இருந்தது.   ஆனால் அதில் இருபத்தி ஐந்து சதவிகிதம் பேசியதற்கே ஒரு மணி நேரம் போதவில்லை. அது மட்டும் இல்லாமல், நேரலை நிகழ்ச்சி என்பதாலும், நேயர்களிடம் தொலைபேசி உரையாடல்கள் இருந்ததாலும், திட்டமிட்ட கோணங்களில் பல விஷயங்களை பேச முடியாமல் போய்விட்டது. சில மாதங்கள் கழித்து மீண்டும் பேச அழைப்பாதாக கூறி இருக்கிறார்கள்.

இதில் இரண்டு பேருக்கு நான் மிகபெரிய நன்றியை சொல்ல வேண்டும். ஒருவர் சேலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், என் நல விரும்பியும்,  சகோதரருமான ஈசன் இளங்கோ அவர்கள்.

நேரலை நிகழ்ச்சி என்பதால், நான் அழைக்கப்பட்ட போது ஆரம்பத்தில் சிறிது தயக்கம் இருந்தது. ஒரு மணி நேர பேச வேண்டும். சுமார் இரண்டரை கோடி பேர் கேட்கப்போகிறார்கள். நேயர்கள் தொலைபேசியில் வந்து கேள்விகள் வேறு கேட்பார்கள். ப்ரைம் டைம் எனப்படும் முக்கிய நேரத்தில் ஒலிபரப்பப்படும் புகழ்பெற்ற நிகழ்ச்சி. இருந்தும், நேரலை என்பதால் சிறிய தவறு நேர்ந்தாலும் திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லை என்பதே அந்த தயக்கத்தின் காரணமாய் இருந்தது.

“நிறைய மக்கள் இப்போது பேஸ் புக் போன்ற தளங்களில் பல்வேறு வகைகளில் பாதிப்புக்குள்ளாகிறார்கள்,  மக்களுக்குக் நாம் முடிந்தவரையில் விழுப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்” என்று மிகப்பிடிவாதமாக இருந்து என்னை ஊக்குவித்தவர் ஈசன் இளங்கோ அவர்கள். பல மாதங்களுக்கு முன்பு இருந்தே இணையத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான் நிறைய எழுத வேண்டும் என்னை தூண்டிக்கொண்டு இருந்தார்.  அது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. ஏற்கனவே கோடை பண்பலையில் நேரலை நிகழ்ச்சியில் அவர் பேசி இருக்கிறார். மிகச்சிறந்த பேச்சாளர் அவர்.  அவருடைய அந்த பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி எனக்கு ரெபெரன்சுக்கு மிகவும் உதவியது.

மற்றொருவர் கோடை பண்பலையின் நிகழ்ச்சி மேலாளரும், ஒருங்கினைப்பாலருமான தாரா ரவீந்தர் அவர்கள்.  உரையாடால்களின் போது, சிறப்பு விருந்தினர்களிடம் தேவையான விஷயங்களை மட்டும் பெற்று, எளிமையான மக்களுக்கும் புரியும்படி,  சரியான கோணத்தில் நேரலை நிகழ்ச்சியை கொண்டு செல்வதில் அவருக்கு நிகர் யாருமில்லை. அவரில்லாமல் இந்த நிகழ்ச்சி நிச்சயம் இவ்வளவு சிறப்பு பெற்று இருக்காது. அழாகாக அந்த நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம், Behind the camera என்று சொல்லுவது போல், அங்கு ஸ்டுடியோவில் என்னுடன் அமர்த்து இருந்திருந்தால் மட்டுமே அதை முழுமையாக அறிய முடியும்.

சுமார் ஏழு வருடத்திற்கு பிறகு மீண்டும் இப்போது தான் கொடைக்கானல் சென்றேன். இதற்கு முன்னர் முதன்முறையாக கல்லூரி இறுதியாண்டில்  நண்பர்கள் அனைவரும் கல்லூரி சுற்றுலா சென்றிருந்தோம். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அமர்க்களமாய் இருந்த தருணங்கள் அவை. அப்பேர்ப்பட்ட பசுமையான நினைவுகளை, வாழ்வில்  திரும்ப கிடைக்காத  பல  நினைவுகளை  அங்கு சென்ற முறை விட்டு வந்திருந்தேன்.  ஆனால்  இப்போது எனக்கு அங்கு மிச்சமிருந்தது அந்த டிசம்பர் குளிர் மட்டும் தான்.

நிகழ்ச்சி முடிந்து மாலை பேருந்து புறப்பட சில மணி நேரங்கள் இருந்தது. மீண்டும் திரும்ப கிடைக்காத அந்த பழைய நினைவுகளை அசை போட கொடைக்கானல் ஏரியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆனால் இன்னமும் கைபேசியில் அழைப்புகள் நின்றபாடில்லை. பல மணி நேரம் கடந்து போனது.  நான் இன்னமும் அந்த எரிகரையை சுற்றி  நடந்துக்கொண்டு  தான் இருக்கிறேன். ஆனால் அதை அனுபவிக்க முடியவில்லை. அதன் அழகை ரசிக்க முடியவில்லை. பழைய நினைவுகளையும் அசைபோட முடியவில்லை. என நண்பர்களுக்கு அலைபேசியில் அழைக்க முடியவில்லை. முகம் தெரியாத குரல்கள் காட்டிய பாசத்திற்காக எனக்கான சிறிய நேரத்தை கூட அன்று ஒதிக்கிட முடியவில்லை.   வாழ்க்கை நம்மை அடுத்தகட்டத்திற்கு கூட்டிசெல்லும்போது, நாம் சில சுகங்களை சுமையிறக்கிச் செல்லத்தான் வேண்டி இருக்கிறது.

நேரமானதும் ஊரு திரும்புவதற்காக பதிவு செய்த அந்த பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.  பேருந்து புறப்பட ஆரம்பித்த பிறகு என் கைப்பேசியில், இயர் போன் மாட்டி கோடை பண்பலையில் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல இருள் சூழ ஆரம்பித்தது. அந்த கோடைக்குளிரில், கண்களை மூடி,  இசையின் இன்பத்தில் மூழ்க ஆரம்பித்தேன். பேருந்து மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்த சில நிமிடங்கள் இருக்கும், பாடல்களுடன் இரைச்சல் வர ஆரமித்தது. திடிரென ஒரு ஞாபகம்.

அந்த கல்லூரி சுற்றுலாவின் கடைசி நாள் அது. மாலையில் அனைவரும் அவர்களுக்கு வேண்டும் பொருள்களை கொடைக்கானலில் வாங்கிக்கொண்டு இருந்தனர். என்னிடம் அப்போது நூறு ருபாய் சொச்சம் மட்டுமே இருந்ததாய் ஞாபகம். அமைதியாய் பேருந்தில் அமர்த்து இருத்தேன். ஒரு கடையில் உள்ளங்கையை விட சிறிய அளவிலான ரேடியோ நூறு ரூபாய்க்கு விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என நண்பன் ஒருவன் வந்து சொன்னான். என்னிடம் அவ்வளவு தான் பணம் இருந்தது என்று அவனுக்கு தெரியும். மிகவும் குஷியானேன். வந்ததற்கு இதையாவது வாங்கிவிடலாமே என்ற சந்தோசஷம்.

ஓடிப்போய் ஆசை ஆசையாய் அதை வாங்கி, பேருந்தில் என் சீட்டில் அமர்ந்து, இயர் போன் வயரை காதில் மாட்டினேன். கொடைக்கானல் பண்பலையில் பாடல்கள் ஓடிக்கொண்டு இருந்தது.  அப்போதுதான் கொடைக்கானல் பண்பலை எனக்கு பரிச்சயம் ஆனது.

ஊருக்கு போன பின் இனிமேல் எப்போது வேண்டுமானால் காதில் மாட்டி கோடை பண்பலை கேட்கலாம் என்று மகிழ்ந்தேன். பிடித்த பாடல்களாய் தொடர்ந்து வர, கையிலிருந்த பணத்தை கொடுத்து வாங்கிய பொருள் பயனுல்லாதாக அமைந்ததே என்று துள்ளி குதித்தேன்.

கொடைக்கானலை விட்டு பேருந்து வேகமாய் கீழே இறங்கிக்கொண்டு இருந்தது. சில நிமிடங்களில் தான் ஆனது, பாடல்களுடன் இரைச்சல் வர ஆரம்பித்தது. நண்பனிடம் ஏன் என கேட்டேன் அவனுக்கு தெரியவில்லை. இன்னொரு நண்பனிடம் கேட்டேன். கொடைக்கானலில் மட்டும் தான் டவர் இருக்கிறது.  இங்கே சிக்னல் எடுக்கவில்லை அதனால் தான் இரைச்சல் வருகிறது என்றான். அப்போ நம்ம ஊர் போனா கேட்கும் தானே என்று ஆர்வமாய் கேட்டேன். நம்ம ஊரில் பண்பலை எதுவுமே இல்லை, நீ வாங்கியது வேஸ்ட்  என்றான். தூக்கி வாரி போட்டது.

ஆசை ஆசையாய் வாங்கிய பொருள் வீணானதே என்ற ஏமாற்றம்.  சிறு தூரம் சென்றதும் இசை மெல்ல மெல்ல குறைந்து இரைச்சல் அதிகமானது.  உடனே அதை கழட்டி சட்டைப்பைக்குள் வைத்து விட்டு ஜன்னலில் இயற்கையை ரசித்தவாறு  பயணிக்க ஆரம்பித்தேன். அது தான் நான் கோடை பண்பலையை நான் கடைசியாய் கேட்டது.   அந்த தருணங்களில் நான் சத்தியமாக நினைத்ததில்லை, மீண்டும் கொடைக்கானலுக்கு அதே பண்பலையில் பேச வருவோம் என்று.

 

பின்குறிப்பு: அந்த நிகழ்ச்சியை கேட்டுவிட்டு பல நேயர்களிடம் இருந்து, நண்பர்களிடம் இருந்து அலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும், மின்னஞ்சலிலும், முகப்புத்தகத்திலும் பல வழிகளில் கருத்துக்கள் வந்தாலும் இதோ எனக்கு வந்த ஒரு கைப்பட எழுதிய கடிதம் அனைத்தையும் மிஞ்சிவிட்டது.

Ohm Kumar  Feedback