ஆட்டோக்ராப் – கவிதை

Slam Book

ஒவ்வொருவருக்கும் கல்லூரி வாழ்கையின் கடைசி நாள் என்பது மறக்க முடியாதது. எங்கள் வகுப்பில் மொத்தம் முப்பது மாணவர்களும், இருபத்தியிரண்டு மாணவிகளும் இருந்தோம். 2005ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அனைவரும் பிரியத்தயார் ஆனோம். மாணவிகளில் அநேகம் பேருக்கு அடுத்து திருமணம் தான் என்பது உறுதியாக தெரிந்தது. பிரச்சனை எங்களை போன்ற மாணவர்களுக்கு தான். அது அடுத்து என்ன என்ற கேள்வி?

அதுவும் குறிப்பாக எனக்கோ எதிர்காலம் பற்றிய பயம் வாட்டி வதைத்தது. அப்போது ஆட்டோக்ராப் என்று ஒவ்வொருவரும் தங்கள் டைரியை மற்றவரிடம் கொடுத்து, கல்லூரி வாழ்க்கையின் போது தங்களுக்குள் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பதிவு செய்துக்கொண்டோம். எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து  ஆட்டோக்ராப் டைரியிலும் கடைசியில் ஒரு கவிதையையும் சேர்த்தே எழுதிக்கொடுத்தேன். இப்போது இந்த கவிதையை மீண்டும் படிக்கும் போது கூட எதோ ஒரு இனம்புரியாத வலி மனதில் மின்னி மறைகிறது.

இதோ!
எதிர்காலம் எனும் வானத்தில்
முப்பது நிலவுகளும்,
இருபத்தியிரண்டு நட்சத்திரங்களும்,
தற்காலிகமாய் பதிக்கப்படுகிறது

நட்சத்திரங்கள்
நிரந்தரமாகிவிடும்.
தேய்வதும்,
வளர்வதும்,
நிலவின் கையில்தான்.

கடவுளிடம் வேண்டிக்கொள்.
நிலவுகள் அனைத்தும்
பவுர்ணமியாகட்டுமென்று.

நம் பயணங்கள்
வெவ்வேறு பாதையில்.
சந்திப்பு என்பது
சுலபத்தில் சாத்தியமில்லை.

அதனால்
இந்த எழுத்துக்களை
உன்னருகில் விட்டுச்செல்கிறேன்.

இதை
நீ மீண்டும் படிக்கும்போது
தேய்ந்திருக்கிறேனோ?
வளர்ந்திருக்கிறேனோ?
காலம் பதில் சொல்லும்!

வெறும்
முயற்சியையும்
தன்னம்பிக்கையும்
கைபிடித்துக்கொண்டு.
இதோ
பாதையே இல்லாத
என் இலக்கை நோக்கி
பயணாமாக போகிறேன்
என் எதிர்காலத்தை தேடி.

முகவரியோடு இருந்தால்
நினைக்க மறக்காதே!
முகவரியிழந்து இருந்தால்
மறக்க நினைக்காதே!

– பிரவீன் குமார் செ