2004ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரியில் பயின்று கொண்டு இருக்கும் தருணம். ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்போது அந்த தகவல் வருகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்த ஒரு வகுப்பறை நண்பனின் தாயார் இறந்துவிட்டார் என்று. அனைவரும் அவன் வீட்டிற்கு துக்கம் அனுஷ்டிக்க சென்றோம். ஆனால் அதுவரை எனக்கு அந்த இழப்பின் ஆழம் முழுதாக புரிந்திருக்கவில்லை. ஒரு வேலை மிக நெருக்கமானவர்கள் யாரையும் நான் அந்த தருணத்தில் இழந்திருக்கவில்லை என்பதால் என கருதுகிறேன்.
இத்தனையும் அங்கு சென்றடையும் வரை மட்டுமே. அவன் வீட்டின் அருகே சென்ற போது… என் நண்பனின் ஓலம்… அதை கேட்டுக்கொண்டே அவன் வீட்டிற்குள் நாங்கள் நுழையும்போது என் உடல் சிலிர்த்து போனது. உள்ளே சென்ற உடன் அவன் என்னை கட்டித்தழுவி கதறி புலம்பியபோது ஒரு நிமிடம் என்னை ஏதோ செய்துவிட்டது. அம்மாவென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பத்து மாதம் சுமந்து பெற்று தன் குழந்தைகாகவே வாழ்ந்து மடியும் ஒரே உறவு அம்மா தான். அதன் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று.
இரவு பதினோரு மணிவரை இடுகாட்டில் அவனுடன் இருந்து உடல் தகனம் செய்துவிட்டு வந்தோம். வீட்டிற்கும் வந்தும் கூட அந்த பாதிப்பு என்னை விட்டு அகலவில்லை. அவன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நல்ல வேலை கிடைத்து சந்தோசமாக இருந்தால் கூட அவன் அம்மாவிற்கு கடைசி வரை தெரியாதே? இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டு இருந்தது. அவன் மனநிலையை நானும் உணர்த்து கொண்டிருத்த அந்த நடுநிசியில் அவனுக்காக வெளிப்பட்ட பாதிப்பே இந்த கவிதை.
அம்மா!
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..
குழந்தையாய் நான்
சாப்பிட அடம்பிடித்த போது,
நீ பாசத்துடன் ஊட்டிய
அந்த நிலாச்சோறு.
முழுக்கால் சட்டை வயதில்
பள்ளிக்கு செல்லும் முன்
அப்பாவுக்கு தெரியாமல் நீ கொடுக்கும்
அந்த பத்து ரூபாய் நோட்டு.
எனக்கு காய்ச்சல் வரும்போதெல்லாம்
உன் கண்களில் வரும்
அந்த கண்ணீர் துளி.
சரியாக படிப்பதில்லையென
அப்பா என்னை அடிக்கும் போது
நீ மட்டுமே என் மேல் வைத்த
அந்த நம்பிக்கை.
அனைத்தையும்
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..
நீ உடல் நிலை பாதிக்கப்பட்டு
உன் கடைசி தருணத்தில்
எல்லோரும் உனக்காக வேண்டிக்கொண்டு இருக்க,
நீயோ
என்னை பற்றியும்
என் எதிர்காலம் பற்றியும் பேசியவாறு
என் மடியில் உயிர் பிரிந்த
அந்த தருணம்.
இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அனைத்தையும்
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
அம்மா!
இப்போது
நீ எதிர்பார்த்த நிலையில்
நானிருக்கிறேன்.என்றாலும்
என்னுடன்
எனக்கு துணையாய் இருப்பதோ
உன் குரலும்
உன் உருவமும் தான்.