சேலம் 28 – ஆனந்த விகடனில் வெளியான என் பேட்டி

“சேலம் 28 – சேலங்களைத் தேடி ஓர் உலக உலா!” – உலகம் முழுக்கப் பரவி இருக்கும் சேலங்களைக் கண்டுபிடிக்க கிளம்பி இருக்கும் பிரவீன்குமாரின் முயற்சிக்குச் சூட்டியிருக்கும் பெயர் இது! உலகம் முழுக்க சேலம் என்கிற பெயரில் இருக்கும் ஊர்களைத் தேடிப் பிடித்து அங்கு உள்ளவர்களுடன் ஒரு வலைப் பின்னல் ஏற்படுத்தும் முனைப்போடு செயல்படுகிறார் பிரவீன்குமார்.

”ஊர்ப் பாசம் அதிகம் எனக்கு. சொந்த மண்ணை விட்டுப் போக மனசு இல்லாமல் வெளியூரில் கிடைச்ச நல்ல வேலையை ஏத்துக்கவே இல்லை. ஏற்கெனவே பாலசுந்தரம்னு ஒருத்தர் 1960-ல் சேலத்தைப் பத்தி ஆராய்ச்சிப் பண்ணி இருக்கார்னு கேள்விப்பட்டு அவரைச் சந்திச்சேன். ‘உலகம் முழுக்க பல நாடுகள்ல சேலம்ங்கிற பேர்ல ஊர்கள் இருக்குது. அந்த ஊர்களில் வசிக்கும் முக்கிய நபர்களை எல்லாம் ஒருங்கிணைச்சு ஒரு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்த முயற்சி செஞ்சேன். என்னால் முடியலை. வயசாயிடுச்சு. நீயாவது செய்’னு சொன்னாரு.

அவரை மானசீக குருவா ஏத்துக்கிட்டு உலகத்துல சேலங்களைத் தேட ஆரம்பிச்சேன். அமெரிக்காவில் மட்டும் சேலம் என்கிற பேரில் 24 ஊர்கள் இருக்குது. தென் ஆப்பிரிக்கா, சுவீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒரு ஊர் இருக்கு. கணக்குப் போட்டுப் பார்த்தா, நம்ம ஊரோடு சேர்த்து உலகத்துல 28 சேலம் இருக்கு. இந்த 28 சேலத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருக்கேன்.

praveen salem 28 vikatan interview

அமெரிக்காவின் ஓரிஸான் மாகாணத்தைச் சேர்ந்த சேலத்தில் இருக்கும் ஜர்னலிஸ்ட் டிம்கிங் என்பவர் அறிமுகம் ஆனார். அவருக்கும் என் ஐடியா பிடிச்சுப் போயி என்னோடு கைகோத்துக்கிட்டார். சீக்கிரமே நம்ம சேலத்துக்கு அவர் வரப் போறார். நம்ம சேலத்து மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் போன்றவற்றை ஒரு குறும்படமாக இயக்கி  அவங்க ‘சேலத்தில்’ ஒளிபரப்பும் திட்டத்தோடு வர்றார்.

இதனால் என்ன லாபம்னு நீங்க கேட்கலாம். எல்லா சேலத்திலும் இருக்கும் சமூக சேவகர்கள், வர்த்தகர்கள்,  அதிகாரிகள் போன்ற பிரபலங்களை ஒருங்கிணைச்சா எவ்வளவு நல்லா இருக்கும். அந்நகர மக்களுக்குள்ள நட்பு உணர்வு ஏற்படும். வர்த்தகரீதியிலான தொடர்பில் துவங்கி கலாசாரப்  பகிர்தல் வரை ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும். இந்த அமைப்புக்கு ‘மை சேலம்’னு பேருவெச்சிருக்கோம்.  இந்த அமைப்பில் சேர ஒரே தகுதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

www.salemjilla.com என்ற தளத்தில் சேலம் பற்றிய செய்திகள், புகைப்படங்களை தினமும் அப்டேட் பண்ணிட்டே இருப்போம். இப்போ உலகம் முழுக்க இருக்கும் சேலங்களை பத்தின செய்திகளையும் கொண்டுவரப் போறோம். எங்கேயும் சேலம்… எப்போதும் சேலம்… இதுதான் எங்க தாரக மந்திரம்!” சிலாகிக்கிறார் பிரவீன்.

– நன்றி “ஆனந்த விகடன் (10/08/2011) – என் விகடன்”

 

பெரிது படுத்தி பார்க்க கிளிக் செய்யவும்.

Praveen salem 28 vikatan interview coverPraveen salem 28 vikatan interviewPraveen salem 28 vikatan interview 1

சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!

சேலம்  டூ சேலம்: உலகில் உள்ள அனைத்து சேலம் நகரத்தையும் இணைக்க நட்பு பாலம் அமைப்போம் வாரீர்.

நம் நகரம் போலவே, சேலம், அமெரிக்காவில் 24 பிற மாகாணங்களிலும் உள்ளது. அது மட்டுமில்லாமல், சேலம் என்று பெயரிடப்பட்ட நகரங்கள்  ஸ்வீடன், ஜெர்மனி, மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் கூட உள்ளது. மற்றுமொரு சுவாரசியமான  தகவல் என்னவென்றால், அமெரிக்காவில் ஒரிஜான் மாகாணத்தில், நம் தமிழகத்தின் மதராஸ்( தற்போது சென்னை) போலே மற்றொரு நகரும் பெயர் கொண்டுள்ளது.

1960இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகாணத்தின் நூலகரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான திரு ஹக் மாரோ, மற்றும் தமிழக சேலத்தில் நன்கு அறியப்பட்ட நூலகரான டாக்டர் புஸ்நாகி ராஜண்ணன் இருவரும் சேர்ந்து இரு நகரங்களை இணைக்க “சகோதர நகரம்” திட்டத்தை நடைமுறை படுத்த முற்பட்டனர்.

1962இல் டாக்டர் ராஜண்ணன்  அமெரிக்காவின் ஒரேஜான் மாகாணத்தில் உள்ள சேலத்திற்கு சென்ற போது அங்குள்ள ரோட்டரி உறுப்பினர்களும், நகர முக்கியஸ்தர்களும், செனட்டர்கள், மற்றும் ஓரிகான் மாநில கவர்னரரும்அவரை வரவேற்று உபசரித்தனர். தனது விஜயத்தின் போது, டாக்டர் ராஜண்ணன் அமெரிக்க சேலத்தில் ஆற்றிய தனது உரையில் இரு நகரங்களையும் இணைக்கும் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.

salem sister cities
இந்த கூட்டத்தில் இரண்டு நகரங்களும்  சகோதர நகரங்கள் என முறையாக அறிவிக்கப்பட்டது. 1964இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தின் சேலம் மேயாரான திரு வில்லராட் சி மார்ஷல் தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள சேலத்திற்கு வருகை புரிந்தார். அப்போது இங்குள்ள ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பொது மக்கள், கலெக்டர், நகராட்சி தலைவர் மற்றும் நகர கவுன்சிலர்களின் உட்பட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவரை வரவேற்றனர்.

அவர் அமெரிக்க திரும்பிய பிறகு “சகோதர நகரங்கள் ஒருங்கிணைப்பு குழு” ஒன்றை அங்கு தொடங்கிவைத்தார். அதன் பிறகு, நம்முடைய சேலத்தின் தொழிலதிபரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான ஜே.ஆர்.மெஹதா நம் சகோதர நகரமான ஒரிஜான் மாகணத்தின் சேலத்திற்கு சென்று அவர்களின் விருந்தோம்பலை ஏற்று அவர்களிடம் நம் நல்லெண்ணங்களை தெரிவித்துவிட்டு வந்தார்.

எதிர்பாராவிதமாக இந்த பயணங்களுக்கு பிறகு சகோதர நகர திட்டத்தை  தொடர முடியாமல் போயிற்று. ஆதலால் டாக்டர் பி.ராஜண்ணன் அவர்கள் தமிழக சேலத்தையும் மற்ற சேலத்தையும் இணைக்க ஏற்படுத்தப்பட்ட முயற்சி ஒரு முன்னோடியாக இருக்கிறது.

இப்போது, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, முன்னால் சேலம்வாசி, தர்மபுரி திரு கே.பால சுந்தரம் அவர்கள், உலகில் உள்ள அனைத்து சேலம் நகரங்களை இணைப்பதை தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு அதற்காக முழு ஈடுபாட்டோடு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்.  1963 முதல், அவர் சர்வதேச-சகோதர-நகர அமைப்பு (www.sister-cities.org) மற்றும் மக்களுடன்-மக்கள் தொடர்பு (www.ptpi.org) அமைப்புடன் இணைந்து இந்தியா மற்றும் அமெரிக்கா சேலத்தின் உள்ளூர் பத்திரிகைகளில் அவரது எழுத்துக்களின் மூலம் இந்த பணியை செய்து கொண்டு இருக்கிறார்.

tim king

அவரது இந்த முயற்சியின் பலனாக, அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தில் உள்ள சேலத்தின் பிரபல தொலைக்காட்சி நிருபரும், பத்திரிக்கையாளருமான திரு. டிம் கிங் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் www.Salem-News.com  எனும் பிரபல இணையதளத்தின் நிறுவனரும் ஆவார்.

அனைத்து சேலம் நகரங்கள் இணைக்க ஒருவருக்கொருவர் இடையிலான பரஸ்பர ஆர்வம் காரணமாக, திரு. டிம் கிங் அவர்களை தமிழக சேலத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் செய்யவும், நம் நகரத்தை பற்றிய ஆவண படமொன்றை எடுக்கவும் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த ஆவணப்படம் ஒரிஜான் மாகணத்தின் சேலம் நகரம் உட்பட பிற மாநிலங்களான அலபாமா, ஆர்கன்சாஸ், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இண்டியானா, அயோவா, கென்டக்கி, மாஸ், மிசவுரி, நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூயார்க், ஓகியோ, தென் கரோலினா, உட்டா, விர்ஜினியா, மேற்கு வர்ஜீனியா, விஸ்கான்சின், மிச்சிகன், மினசோட்டா, பென்சில்வேனியா, வட கரோலினா, ஒன்டாரியோவில் உள்ள அனைத்து சேலம் நகரங்களிலும் திரையிட திட்டமிடபட்டுள்ளது.

praveen bala arasu

இந்த முயற்சியை ஆதரித்து, அவருக்கு உறுதுணையாக www.Salemjilla.com இணையதள நிறுவனரும், இணைய தொழில்முனைவருமான திரு.பிரவீன் குமார் அவர்களும் மற்றும் சேலம் லீ பஜாரில், விதை ஏற்றுமதி இருக்குமதி செய்துவரும் ஆறுமுக பண்டாரம் நிறுவனத்தின் தொழிலதிபருமான திரு. திருநாவுக்கரசு அவர்களும் திரு.கே.பால சுந்தரம் அவர்களோடு இணைத்து உள்ளனர். இதில் முதல் கட்டமாக அமெரிக்க ஒரிஜான் மாகணத்தின் பிரதிநிதியாக திரு.டிம் கிங் அவர்களை அழைக்க ஒரு குழுவை அமைக்கும் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த முயற்சி மூலம் அமெரிக்க மற்றும் இந்திய சேலம் மக்களின் நட்புறவும், ஒத்துழைப்பு ஊக்கபடுவது மட்டுமல்லாது அனைவருக்கும் இடையே தொழில் முறை தொடர்பு கொள்ளவும், திறமையை உருவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் நோக்கமே சேலம் நகரம் உள்ள அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள இதே எண்ணங்கள் உடைய மக்களையும், நிறுவனங்களையும் தொடர்பு ஏற்படுத்தி இணைப்பதேயாகும்.

இந்த நோக்கம் நிறைவேற உருவாக்கப்படும் குழுவில் இதில் ஈடுபாடு இருக்கும் தனி நபர்களும், தொழிலதிபர்களும், நிறுவனங்களும் யார் வேண்டுமாலும் இணையலாம். இந்த குழுவின் மூலம் திரு டிம் கிங் அவர்கள் வந்து செல்வதற்கான நிதியை திரட்டவும், அவருடைய சேவையை முடிந்தவரையில் பயன் படுத்தி நம்முடைய சேலத்தை பற்றிய ஆவணப்படங்களை மற்ற சேலத்தில் திரையிடப்படவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த ஆவணப்படத்தில் நம் சேலத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், பலதரப்பட்ட தொழில் சமூகங்களும், பல்வேறு தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், சுற்றுலா தளங்களும், அருங்காட்சியகம், கலை மற்றும் விளையாட்டுகளும் பதிவு செய்யப்படும். இந்த திட்டத்திற்கான முயற்சி லாப நோக்கமற்று, வியாபார நோக்கமற்று முற்றிலும் நம்முடைய சேலத்தை சர்வதேச அளவில் எடுத்துச்சென்று உலக மக்களிடைய நட்புக்கொள்ளச்செய்வதே ஆகும். இது நிச்சயம் வணிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வெளி உலகில் இருந்து ஒத்துழைப்பு பெற்று பயன்பெற உதவும்.

sister cities international

இதில் இணைத்து பணியாற்ற நம்முடைய சேலத்தில் ஆர்வம் உள்ள மக்கள், நிறுவனங்களை வரவேற்கிறோம். தொடர்பு கொள்ள திரு.அரசு மொபைல்: 9443247822 மின்னஞ்சல்: vaparasu@gmail.com, திரு பிரவீண்: 9894834151 மின்னஞ்சல்: praveen @ salemjilla.com
திரு.பால சுந்தரம். மொபைல்: 95 246 59 164 மின்னஞ்சல்: kbsundram@yahoo.co.in இதற்கு கிடைக்கப்பெறும் ஆதரவு மற்றும் பதிலை பொறுத்து, குழு அமைத்து இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூட்டம் ஏற்பாடு செய்யப்படும்.

ஊழலுக்கு எதிரான பாரதம் – சேலத்தின் குரல்

India Against Corruption Movement In Salem

அன்னா ஹசாரே அவர்களின் “ஊழலுக்கு எதிரான பாரதம்” என்ற போராட்டத்திற்கு ஆதரவாக சேலத்தின் பிரபல கல்வியாளர், சமூக ஆர்வலர் திரு.ஜெயப்ரகாஷ் காந்தி அவர்களின் தலைமையில் 17 ஏப்ரல் அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னூறுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தரப்பட்ட மக்களும், சங்க நிர்வாகிகளும், தியாகிகளும், சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு ஊக்குவித்தனர்.  இதில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னா ஹசாரே அவர்களின் கொள்கையை ஆதரித்து அனைவராலும் கையொப்பம் இடப்பட்டு “ஊழலுக்கு எதிரான பாரதம்” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கடுத்து அதனின் நகல், இந்தியாவின் பிரதம மந்திரிக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தியாகிகளும், பெரியோர்களும் பேசிய அந்த மேடையில் அவர்களுக்கினையான போதிய அனுபவம் இல்லாவிடினும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க ஆதரவாக நானும் என்னுடைய எண்ணங்களை பதிவு செய்தேன். நான் பேசியவற்றை அப்படியே இங்கு எழுத்துக்களாய் பதிவிக்கிறேன் .

praveen speaking at India Against corruption, Salem

அனைவருக்கும் என் காலை வணக்கம்,
இங்கு வந்திருப்பவர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுறேன். உங்கள் வாழ்நாளில் இதுவரை  உங்களிடம் லஞ்சமே கேட்கபட்டதில்லை என்று உங்களில் யாரவது இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் தயவு செஞ்சு கொஞ்சம் கையை உயர்திக்காட்ட முடியுமா? – மேடையில் இருப்பவர் கூட.

அடுத்த  தலைமுறையில் இந்த கேள்விக்கு எல்லாருமே கையை தூக்க வேண்டும். அந்த ஒரு முக்கிய நோக்கத்திற்கு தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம்.

நான் என் வாழ்வில் சந்தித்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வாழும் என்னுடைய Relative ஒருவருக்கு இரண்டு  பிள்ளைகள். எதிர்பாராதவிதமாக பிறக்கும்போதே  இரண்டு பேரும் ஊனமுற்றவர்களா பிறந்துவிட்டார்கள்..  மூளை வளர்ச்சி குன்றிய முதல் மகனையும், வாய்பேச இயலாத இளைய மகனையும் நல்லமுறையில் வளர்ப்பதற்கு அரசின் ஊனமுற்றோரின் உதவித்தொகை அவர்களுக்குதேவைப்பட்டது.

அதற்காக தன்னுடைய மகன்களுக்கு ஊனமுற்றோர் சான்றிதல் பெற அதற்கான அலுவலகத்திற்கு அவங்க தாயார் போனாங்க. அந்த அலுவலரோ, சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றது மட்டுமல்லாமல், அரசு வழங்கும் உதவித்தொகை மாத மாதம் சிறிது லஞ்சமாக பெற்றபிறகே வழங்கிஇருக்கிறார். இதில்  வருத்தமான விஷயம் என்னவென்றால் அந்த அலுவலரும் ஒரு ஊனமுற்றவரே. ஆயிரம், லட்சம், கோடினு தினமும் ஊழல் நடப்பதை நான் செய்தித்தாளிலேயும், தொலைகாட்சியிலும் பார்த்தாலும் இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இங்கு அந்த நபர் உடல் ஊனமுற்றிருந்தாலும், அவரை மனம் ஊனமுற்றவராகவே நான் பார்கிறேன்.

இந்த லஞ்சம், ஊழல் என்பது கீழ்நிலையில் இருந்து மேல்நிலை வரை ஒரு வைரஸ் மாதிரி நம் நாட்டில் பரவி இருக்கிறது. ஒருகுழந்தை பிறக்கும்போது “Birth Certificate” வாங்குவதில் தொடங்கி, வாழ்ந்து முடித்து  “Death Certificate” வாங்குவது வரைக்கும் லஞ்சம் தேவைப்படுது. ஒரு computerக்கு எப்படி virus அழித்துவிடாமல் பாதுகாக்க Anti-Virus Softwareதேவைப்படுதோ அதுபோல நாம் நாட்டை Corruption அழித்து விடாமல் பாதுகாக்க நிச்சயம் இந்த “Anti-Corruption Movement” தேவை.

அன்னா ஹசாரே எழுப்பிய அந்த நம்பிக்கை அலை இன்று சேலத்தில் ஜெய பிரகாஷ் காந்தி அவர்களின் மூலமாக வந்தடைந்து இருக்கிறது. லஞ்ச ஊழலை எதிர்த்து இன்று நாம் குரல் எழுப்புவதோடு மட்டும் நின்றுவிடாமல்  இதை ஒரு  போரமாக (Forum’) பதிவு செய்து தமிழக அளவில் ஒரு இயக்க சக்தியாக மாற்றவேண்டும். தமிழகம் முழுவதும் எங்களை போன்ற நிறைய இளைஞர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஒன்று திரட்டி ஒவ்வொரு ஊரிலும் இந்த போராட்டத்தை நடத்தவேண்டும்.  எல்லா ஊர்களையும் இணைத்து சேலத்தை மையமாக கொண்டு இந்த இயக்கம் இயங்க வேண்டும் என்று என் கருத்தை நான் இங்கு பதிவு செய்றேன்.

இதற்கு அனைத்து மாவட்டத்தில் இருந்தும் உதவ நண்பர்கள் முன்வரவேண்டும். அனைவரையும் இந்த நோக்கம் சென்றடைந்து ஒன்று திரட்ட மீடியா, பிரஸ் சாப்போர்ட் கண்டிப்பாக தேவை. சேலம்ஜில்லா.காம் (Salemjilla.com) என்ற இணைய தளம் மூலமாக நாங்களும் இந்த நோக்கம் நிறைவேற உறுதுணையாக இருக்கிறோம்.
எதிர்வரும் காலத்தில் என்னுடைய மகனோ மகளோ லஞ்சம் என்றால் என்ன அர்த்தம்னு டிக்சியனரியில் (Dictionary)  மட்டும் தான் பார்க்க முடியும்னு  ஒரு சூழல்  உருவாகும் என நான் நம்புகிறேன்.

நன்றி வணக்கம்.

அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இந்த கருத்தரங்கை பதிவு செய்து வெளியிட்டு ஆதரவளித்தது. இதில் பாலிமர் சானலின் செய்தி வெளியீட்டை கீழே காணலாம்.

ஜெயா டீவியில் ஒளிபரப்பான என் முதல் நேர் காணல்

 

Praveen Kumar C In Jaya T.V

ஜனவரி 26, 2011 அன்று சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டீ.வி அலுவலகத்தில் நுழைகிறேன். ஏதோ ஒரு ஐ.டி கம்பனியில் நுழைந்த ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது அங்கே இருந்த பாதுகாவலர்களின் அணுகுமுறையும், அதன் அலுவலகத்தின் நுழைவாயிலும். குடியரசு தினம் என்பதாலோ என்னவோ அன்று அவர்களின் வரவேற்பறையில் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்க வேண்டும். சிறிது உரையாடலுக்கும், சிறிது காத்திருத்தலுக்குப் பின்பு நான் உள்ளே ஸ்டுடியோவிற்குள் அழைத்துச்செல்லப்படுகிறேன்.

சேலம்ஜில்லா.காம் என்ற இணைய தளத்தின் நிறுவனர் என்பதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட  ஆட்வோர்ட்ஸ் நிபுணர் என்பதாலும் அதை பற்றி “தகவல்டெக்” என்ற நிகழ்ச்சிக்காக கலந்துரையாட வந்ததுதான் இந்த அழைப்பு. எதை பற்றி பேச போகிறோம், என்ன கேள்வி கேட்கப்படும் என்று எதுவுமே என்னிடம் கூறப்படவில்லை. குளிரூட்டப்பட்ட நிசப்தமான அறை. எனக்கான இடத்தில் அமர்த்து மைக் மாட்டப்பட்டு குரல் சரிபார்க்கப்படுகிறது. பளிச்சென்ற வெளிச்சம். மூன்று காமிராக்கள் என்னையே நோட்டமிடுகிறது. இது முகப்புதிது எனக்கு.

உள்ளே நுழையும் வரை என் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது இது தான். முதன் முறை காமிரா முன்பு அமர்கிறோம், சரியாக வருகிறதா என்று இரு நிமிடம் மானிடர் பார்ப்பார்கள் என எண்ணினேன். ஒவ்வொரு கேள்விக்கும் இடையே என்னை நான் தாயார் செய்துக்கொள்ள அவகாசம் கிடைக்கும் என நினைத்தேன். பதிலளிக்கும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் மீண்டும் அதை பதிவு செய்வார்கள் என கருதினேன். ஆனால் அவற்றிற்கு எதுவும் வாய்ப்பளிக்காமல் “ரெடி, ஸ்டார்ட்” என்று மட்டும் தான் வந்தது ஒரு குரல்.  காமிரா  ஓடத்துவங்குகிறது. நிசப்தம் உடைகிறது. நினைத்ததிற்கு முற்றிலும் நேர்மாறாக  ஒரே டேக்கில் பதிவு செய்யப்பட்டது முழு நேர்காணலும்.

அதில் பிப்ரவரி 09 அன்று ஒளிபரப்பான சேலம்ஜில்லா.காம் பற்றி நான் பேசியதன் முதல் பகுதி தான் உங்கள் பார்வைக்கு இங்கே. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: என் முதல் தொலைக்காட்சி நேர்காணலிற்கு வாய்ப்பளித்த நிகழ்ச்சியாளர் பழனி அவர்களுக்கும், ஜெயா தொலைக்காட்சிக்கும் என் நன்றிகள்.

மற்றவர்களுக்கு உதவும் முன்னர் முதலில் இதை படிங்க

Salem-central-bus-stand

இன்று மாலை ஐந்து மணி இருக்கும். சேலம் மத்திய பேருந்து நிலையம் நுழைவாயிலை சிறிது தூரம்தாண்டி காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன். சாலையை கடந்து எதிர்புறம் ஒரு கடைக்கு நான் செல்லவேண்டும். இரண்டு அடி முன்னே எடுத்து வைக்கும்போது ஒருவர்  என்னை அழைக்கும் குரல் கேட்டது.. மீண்டும் பின்னோக்கி நடந்து அவர் அருகில் சென்றேன். அந்த நபரை பார்க்க முப்பது சொச்சம் வயது இருக்கும். என்னவென்று கேட்டேன்?… இந்தி தெரியுமா என்று இந்தியிலேயே கேட்டார் அந்த நபர்.. கேட்ட மாத்திரத்திலேயே அவர் ஏதோ விலாசம் தெரியாமல் தடுமாறுவது போல் நான் உணர்ந்ததால், கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்று உடைந்த இந்தியில் பதிலளித்தேன்.

அதை கேட்டதும் இரண்டு நிமிடம் தொடர்ந்து இந்தியிலேயே ஏதேதோ பேசினார்.. ஆனால் அது எனக்கு முழுதாக புரியவில்லை. ஆங்கிலம் தெரியுமா என்றேன்? தெரியவில்லை… இருப்பினும் அவர் பேசியதின் நடுவில் உதிர்த்த சில சொற்களை வைத்து நான் புரிந்து கொண்டது இதுவே… “தான் மும்பையில் இருந்து வருவதாகவும், கன்னியாகுமரி சென்று கொண்டிருக்கும்போது ரயிலில் தான் கொண்டுவந்த நான்காயிரம் ரூபாய் பணத்தை யாரோ களவாடிவிட்டதாகவும் கூறினார்”. பின்பு தனக்கு பசிப்பதாகவும் காலையில் இருந்து உணவருந்தவில்லை என்பது போல் தன் வயிற்றை தொட்டு பார்த்து காட்டினார். இரண்டு, மூன்று தடவை அவர் திரும்ப திரும்ப இதை கூறியதால் தான் என்னால் இவ்வளவும் புரிந்து கொள்ள முடிந்தது.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னிடம் என்ன உதவி எதிர்பார்கிறார்கள் என்றும் புரியவில்லை. நான் பேசியதும் அவருக்கும் புரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன், அருகில் ஒரு பெண்மனியும், ஒரு சிறுவனும் மற்றும் ஒரு சிறுமியும் நின்று கொண்டிருந்தனர். சிறுவனின் முதுகில் பேக் மாட்டி இருந்தான். அந்த சிறுமி அந்த பெண்மணியின் கையை பிடித்தவாறு நின்றிருந்தாள். அந்த பெண்மணி என்னிடம் தன்னை என் சகோதரி போல் நினைத்துக்கொள்ள சொல்லி ஏதோ இந்தியில் பேசியது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த சிறுமியை பார்த்தேன். அதன் கண்ணில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதை நான் கண்டதும் எனக்கு என்னவோ போல் ஆயிற்று.

உங்களுக்கு நூறு ருபாய் தருகிறேன் முதலில் போய் டிபன் சாப்பிடுங்கள் என்று அருகில் இருந்த ஹோட்டலை நோக்கி காண்பித்து அவர்களுக்கு புரிவித்தேன். என்ன நினைத்தேனோ தெரியவில்லை உடனே இருநூறு ருபாய் அவர் கையில் கொடுத்து அந்த சிறுமிக்கு உணவளிக்குமாறு மீண்டும் கூறினேன். ஆனால் அந்த நபரோ மகாராஷ்டிரா போக டிக்கெட் வேண்டும் என்றும், ஒரு டிக்கெட் இருநூற்றி இருபது ருபாய் என்றும் மேலும் இருநூறு ருபாய் கொடுத்து உதவுமாறு கேட்டார்.  இங்கே எனக்கு மொழி பிரச்சனை யாரும் உதவமுன்வரவில்லை என்று என் கையை பிடித்து கெஞ்சினார். உங்களுடைய விலாசத்தை தாருங்கள் ஊருக்கு போய் பணம் அனுப்புகிறேன் என்றும் கூறினார்.

எனக்கு இந்த நொடியும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த பெண்மனியும் இந்தியில் தொடர்ந்து கெஞ்சினார். அந்த சிறுமியை பார்த்தேன். அதன் கண்ணில் கண்ணீர் ஈரம் இன்னும் காயவில்லை. என்னை பரிதாபத்தோடு அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். மனம் கனத்தது.  ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, மேலும் முந்நூறு ருபாய் கொடுத்துவிட்டு, இதில் மொத்தம் ஐநூறு இருக்கிறது, குழந்தைக்கு முதலில் சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு  பஸ்சில் ஊர் செல்லுங்கள் என்று கூறினேன். மிகவும் நெகிழ்ச்சியுடன் அவர்கள் என்னுடைய பணத்தை திரும்ப அனுப்புவதற்காக என் விலாசத்தை மீண்டும் கேட்டனர். நான் பரவாயில்லை பணம் வேண்டாம், பத்திரமாக  ஊருக்கு செல்லுங்கள் என்றேன். என் கையை பிடித்து இந்தியில் மீண்டும் ஏதோதோ கூறி. காட் ப்ளஸ் யூ என கடைசியாக ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றார்.  அவர்கள் நால்வரும் நிம்மதிபெருமூச்சுடன் புன்னகையை முகத்தில் சுமந்தவாறு பேருந்து நிலையத்தை நோக்கி நடப்பதை பார்த்த போது என் மனதில் அவ்வளவு சந்தோஷம். மற்றவர்களுக்கு எதிர்பாரமால் உதவி செய்து அவர்களின் முகத்தில் சந்தோசத்தை காணும் அந்த தருணம் எத்தகையது என்று அப்போது தான் எனக்கு தெரிந்து.

வீட்டிற்கு வந்தவுடன்  நடந்தவைகள் அனைத்தும் முதலில் அம்மாவிடம் கூறினேன். அவரும் இதை கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்படுவார் என எண்ணினேன். ஆனால் அவர் கூறியதோ எனக்கு அதிர்ச்சி அளித்தது.  “இதுபோல் நிறைய பேரை இப்படி நூதனமாக சேலம் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் ஏமாற்றிக்கொண்டு இருகிறார்கள்” என்றும், அதில் ஏமாந்த எனக்கு  நன்கு தெரிந்த சில நபர்களின் பெயர்களையும் கூறியவுடன்  நான் உறைந்து போனேன். எவ்வளவு கொடுத்தாய் என்றார்? “ஐநூறு” என்றேன். இடையில் புகுந்த அப்பாவும் இது போல் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள் என கூறினார். அப்போது தான் நானும் ஏமாந்ததை அறிந்தேன்.

அப்போது கண்களில் நீர் வழிந்தவாறு என்னையே ஏக்கத்துடன் பார்த்த அந்த சிறுமி ஒரு நிமிடம் என் நினைவில் வந்து போனாள். என்னை அவர்கள் ஏமாற்றியது பெரிதாக அந்த நொடி தெரியவில்லை.  அதற்கு பதில் என்னுடைய பர்ஸை களவாடி இருந்தால் கூட இன்னும் சில நூறு ருபாய் தாள்களும், ஐநூறு ருபாய் தாள்களும் அவர்களுக்கு கிடைத்திருக்குமே? நானும் தொலைத்துவிட்டோம் என்று எண்ணி ஒரு நாள் மட்டும் வருத்தத்துடன் அதை மறந்திருப்பேன்.  ஆனால் அவர்களுக்கு உதவ நினைத்தது குற்றமா? எதற்காக அவர்கள் என் உணர்வுகளில் அவர்கள் விளையாட வேண்டும்?  அது தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

என் மனதில் எழுந்த ஒரே கேள்வி இது தான். இன்னொரு நாளில், அதே இடத்தில், வேறொரு வட இந்திய குடும்பமோ, அல்லது தமிழ் குடும்பமோ உண்மையாகவே இதே பரிதாப நிலையில், உணவில்லாமல், பசியில் வாடிய சிறுமியை அருகில் வைத்துக்கொண்டு என்னிடம் உதவி கோரினால், அதை நான் எப்படி எதிர் கொள்வது?