எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அம்மா

2004ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரியில் பயின்று கொண்டு இருக்கும்  தருணம். ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்போது அந்த தகவல் வருகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்த ஒரு வகுப்பறை நண்பனின் தாயார் இறந்துவிட்டார் என்று. அனைவரும் அவன் வீட்டிற்கு துக்கம் அனுஷ்டிக்க சென்றோம். ஆனால் அதுவரை எனக்கு அந்த இழப்பின் ஆழம் முழுதாக புரிந்திருக்கவில்லை. ஒரு வேலை மிக நெருக்கமானவர்கள் யாரையும் நான் அந்த தருணத்தில் இழந்திருக்கவில்லை என்பதால் என கருதுகிறேன்.

இத்தனையும் அங்கு சென்றடையும் வரை மட்டுமே. அவன் வீட்டின் அருகே சென்ற போது… என் நண்பனின்  ஓலம்… அதை கேட்டுக்கொண்டே அவன் வீட்டிற்குள் நாங்கள் நுழையும்போது என் உடல் சிலிர்த்து போனது. உள்ளே சென்ற உடன் அவன் என்னை கட்டித்தழுவி கதறி புலம்பியபோது ஒரு நிமிடம் என்னை ஏதோ செய்துவிட்டது. அம்மாவென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பத்து மாதம் சுமந்து பெற்று தன் குழந்தைகாகவே  வாழ்ந்து மடியும் ஒரே உறவு அம்மா தான். அதன் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று.

இரவு பதினோரு மணிவரை இடுகாட்டில் அவனுடன் இருந்து உடல் தகனம் செய்துவிட்டு வந்தோம். வீட்டிற்கும் வந்தும் கூட அந்த பாதிப்பு என்னை விட்டு அகலவில்லை. அவன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நல்ல வேலை கிடைத்து சந்தோசமாக இருந்தால் கூட அவன் அம்மாவிற்கு கடைசி வரை தெரியாதே? இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டு இருந்தது. அவன் மனநிலையை நானும் உணர்த்து கொண்டிருத்த அந்த நடுநிசியில் அவனுக்காக  வெளிப்பட்ட பாதிப்பே இந்த கவிதை.

அம்மா!
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..
குழந்தையாய் நான்
சாப்பிட அடம்பிடித்த போது,
நீ பாசத்துடன் ஊட்டிய
அந்த நிலாச்சோறு.

முழுக்கால் சட்டை வயதில்
பள்ளிக்கு செல்லும் முன்
அப்பாவுக்கு தெரியாமல் நீ கொடுக்கும்
அந்த பத்து ரூபாய் நோட்டு.

எனக்கு காய்ச்சல் வரும்போதெல்லாம்
உன் கண்களில் வரும்
அந்த கண்ணீர் துளி.

சரியாக படிப்பதில்லையென
அப்பா என்னை அடிக்கும் போது
நீ மட்டுமே என் மேல் வைத்த
அந்த நம்பிக்கை.

அனைத்தையும்
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..

நீ உடல் நிலை பாதிக்கப்பட்டு
உன் கடைசி தருணத்தில்
எல்லோரும் உனக்காக வேண்டிக்கொண்டு இருக்க,
நீயோ
என்னை பற்றியும்
என் எதிர்காலம் பற்றியும் பேசியவாறு
என் மடியில் உயிர் பிரிந்த
அந்த தருணம்.

இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அனைத்தையும்
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?

அம்மா!
இப்போது
நீ எதிர்பார்த்த நிலையில்
நானிருக்கிறேன்.என்றாலும்
என்னுடன்
எனக்கு துணையாய் இருப்பதோ
உன் குரலும்
உன் உருவமும் தான்.

சிறு கவிதைகள் – தொகுப்பு ஒன்று

காதல் காவியம்

காதல் வானிலே,
வாழும் காவியம் நாம்.
நிலவாய் நீ,
ஒளியாய் நான்.

——————————————————————————————-

தனிமை

காதல் தீவிலே,
நிலமாய் நான்….
தனியாய் என்று வருந்தினேன்!
கடலாய் நீ…
அலையாய் வந்து மோதினாய்..

——————————————————————————————-

காதல் மொழி.

ஊமைகள் கூட
பேசும் மொழி,
காதல் மொழி!

——————————————————————————————-

தேடல்

மலரை தேடி வண்டு வந்தது,
மகிழ்கிறாய்!
இரவை தேடி நிலவு வந்தது,
ரசிக்கிறாய்!
உன்னை தேடி நான் வந்தால் மட்டும்
ஏனடி வெறுக்கிறாய்?

——————————————————————————————-

அவளின் பிறந்த நாள்

பூவுக்கு பிறந்த நாளாம்!
புத்தாடை போர்த்திக்கொண்டது…
பூவிலும் அவள்
மல்லிகையோ ரோஜாவோ அல்ல..
அது வாடி விடும்.
அவளோ வாடா மல்லி
என்றென்றும் “வாடா மல்லி “!

——————————————————————————————-

சிக்கல்

காதல் புயல் என்றறிந்தும்
ஆண் மனம் மாட்டிக்கொள்கிறது!
காதல் தீ என்றறிந்தும்,
ஆண் குணம் சுட்டுக்கொள்கிறது!
காதல் சுழல் என்றறிந்தும்
ஆண் இனம் சிக்கிக்கொள்கிறது!

——————————————————————————————-
உனக்காக,
நான் புதிதாய் கற்றுக்கொண்ட மொழி,
மௌன மொழி!

——————————————————————————————-

கொலை

புயலில் பிழைத்து,
இடியில் தப்பித்து,
தீயில் நடந்து,
நீரில் தவழ்ந்து
உன்னை காண வந்தேன்
ஒரே புன்னகையில் என்னை கொன்றுவிட்டாயடி!

——————————————————————————————-

கனவு

நீ என்னிடம்
கனவிலாவது காதலிப்பாய் என்றுறங்கினால்
கனவு கூட,
கனவாகி போனது!

——————————————————————————————-

நேரம்

நீ இருக்கும் போது,
நேரம் போதவில்லை.
நீ இல்லாத போது,
நேரம் போகவில்லை!

——————————————————————————————-

காதல் என்ன  கெட்ட வார்த்தையா?
பரவாயில்லை,
பேசித்தான் பார்ப்போமே!

——————————————————————————————-

என் டைரி

உன்னை பார்த்த நாள் முதல்,
என்னிடம்,
என் டைரி கோபித்துக்கொண்டது.
எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
என் மனச்சுமை குறைவது தெரியாமல்……

——————————————————————————————-

விண்மீன்களை கண்களாக்கினான்,
சந்தனத்தை தோலாக்கினான்,
பளிங்கை உடலாக்கினான்
ஆனால்,
இதயம் மட்டும் கல்லாக்கிவிட்டானே!

——————————————————————————————-
பூக்கடையில்,
ஒவ்வொரு பூக்களும் அழகழகாய் இருந்தன,
நீ வரும் வரையில்!

புத்தகக்கடையில்,
ஒவ்வொரு புத்தகமும் அரிதாய் இருந்தன
நீ தொடும் வரையில்!

——————————————————————————————-

உன்னை பார்த்த நாள் முதல்

  • உன்னை பார்த்த நாள் முதல்,
    தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
    கவிதை எழுதுகிறேன்!
  • உன்னை ரசித்த நாள் முதல்,
    உன் உருவம் மனங்கண்டு
    தனியே பேசுகிறேன்!
  • உன்னில் மயங்கிய நாள் முதல்,
    விளங்காத ஓர் உணர்வுக்கு
    விளக்கம் தேடுகிறேன்!
  • உன்னை காதலித்த நாள் முதல்,
    ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
    சுமை தெரியாமல்!

– பிரவீன் குமார் செ

நினைத்து நினைத்து பார்த்தேன்

7ஜி ரெயின்போ காலனி என்ற தமிழ் திரைப்படத்தின் நினைத்து நினைத்து பார்த்தேன்  பாடலை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? சில வருடங்களுக்கு முன்னால் எல்லோர் மனதையும் கட்டி வைத்த பாடல் அது.  அதை முனுமுனுக்காதவர்களும் யாரும் கண்டிப்பாக இருக்க முடியாது. எனக்கும் அது மிகவும் பிடித்த  பாடல்.  கல்லூரி வாழ்கையின் போது அவ்வளவு கிரேஸ் அதன் மேல். அடிக்கடி நான் தனிமையில் பாடும் பாடலில் இதுவும் ஒன்று. நீண்ட மாதங்களாக கிடப்பில் இருந்த இதோ அதன் வீடியோ பாடல் என் குரலில் இப்போது என் வலைப்பூவில்.. ஓரளவிற்கு பீ….ல் பண்ணி பாடி இருக்கேன்.. அதனால அவ்வளவு மோசமா இருக்காதுன்னு நினைக்கிறன்…. ஹி.. ஹீ.. ஹீ.. கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.. உங்கள் பொறுமைக்கு நன்றி..

[xr_video id=”0301fedebc224ce78a3e05dd9bce0f2e” size=”md”]

இதோ வழக்கம் போல் அதன் பாடல் வரிகளும் போனஸாக…

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா…
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா…
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே!
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே!

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்.
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?…
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?…
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்….

பெண்ணும் ஐம்பூதமும்

fire-girl

  • நிலமும்
    நீயும்
    ஒன்றேயடி.
    என் ஜீவனை சுமப்பதால்!
  • நீரும்
    நீயும்
    ஒன்றேயடி.
    ஆழம் தெரியவில்லை!
  • காற்றும்
    நீயும்
    ஒன்றேயடி.
    உரசும் போது சிலிர்த்து விடுகிறேன்!
  • வானும்
    நீயும்
    ஒன்றேயடி.
    முதலும் முடிவும் தெரிவதில்லை !
  • நெருப்பும்
    நீயும்
    ஒன்றேயடி.
    கண்களால் தொடமுடிந்தும் …..
    கைகளால் முடியவில்லை!!!

– பிரவீன் குமார் செ