“நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னை கேட்கிறதே.. பூட்டி வைத்த உணர்வுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே.” போன்ற வரிகளால் என் மனம் பித்துப்பிடித்துக்கொண்டு இருந்த சமயம் அது. சரியாக சொல்லவேண்டுமானால் காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்து தொலைத்ததில் இருந்து பல மாதங்களாக அந்த பாடல்கள் உள்ளே ஏப்.எம் போல் இருபத்திநாலு மணி நேரமும் ஒலித்துக்கொண்டே இருந்தது. உறங்கும் போது கூட என் உதடுகள் மறக்காமல் உளறிக்கொண்டிருந்த அந்த பாடல் வரிகளை எழுதியது நா.முத்துக்குமார் அவர்கள் என்று அப்போது தான் எனக்கு அவர் பெயர் பரிட்சயம் ஆனது. என் வாழ்நாளில் நான் அதிகமாக கேட்ட பாடல்களும் அதுவாகத்தான் இருக்கும்.
பிறகு வந்த ரெயின்போ காலனி திரைப்படத்தின் பாடல்களை கேட்டதில் இருந்து என் வாழ்க்கையில் நான் கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டிய நபரில் ஒருவராகவே அவரை கருதினேன். அதற்க்கு காரணமும் இருந்தது. வெறும் பாடல்களை கேட்டுக்கொண்டும், கவிதைகளை படித்துக்கொண்டு மட்டுமில்லாமல் அதன் மேல் எனக்கு தாகம் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. கவிதை எழுத முயற்சிப்பதற்க்காக நூலகத்தில் அவருடைய கவிதைகளை தேடி தேடி படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கவிதை தொகுப்பான “பட்டாம்பூச்சி விற்பவன்” என்னை கவிதை எழுத மிகவும் தூண்டியவை. நான் இப்போது என் வலைப்பதிவில் பதிவித்துக்கொண்டிருக்கும் கவிதைகள் யாவும் அச்சமயத்தில் கிறுக்கியவைகளே. வெறும் காகிதத்தில் மக்கிப்போகும்படி விட்டுவிடாமல் இருக்க இப்போது அதை ஒவ்வொன்றாக என் வலைப்பதிவில் பதிவேற்றம் செய்துக்கொண்டு இருக்கிறேன்.
இவை அனைத்தும் நடந்தது 2005 வரை. கல்லூரி பருவம் முடிந்து வாழ்கையின் பின்னால் ஓடத்துவங்கி இத்தோடு ஐந்து வருடமாகிவிட்டது. கவிதை, எழுத்து இவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி என்னுடைய கவிதைகளே எனக்கு சரளமாக நினைவில் வாராத அளவிற்கு வாழ்க்கை பாதை மாறியது. இத்தருணத்தில் கடந்த குடியரசுதினத்தன்று சென்னை ஜெயா டீவி அலுவலகத்திற்கு ஒரு நேர்காணலுக்காக சென்றேன். மீண்டும் சேலம் திரும்ப இருந்த என்னை அஜயன் பாலா அவர்கள் தன் வீட்டுற்கு அழைத்துச்சென்றார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு திரைப்படத்தின் திரைக்கதை விவாதம் அப்போது அவர் வீட்டில் நடந்துக்கொண்டிருந்தது. இது எனக்கு மிகப்புதிய அனுபவம்.
நடிகர் சுஜாதா ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டது போல் வெறும் நான்கு சுவற்றில் சில பேர்களால் விவாதிக்கப்பட்டு உருவாகிற கதை, பல கோடி செலவில் பிரம்மாண்டமாய் திரையில் வருவதும், மக்கள் அதை கூடி ரசிப்பது ஆச்சர்யாமான ஒன்று தான். எல்லாம் முடிந்து நள்ளிரவு உறங்கும் நேரம் இருக்கும் என் நினைக்கிறேன். நா.முத்துக்குமாரை அவர்களை பற்றிய எதேச்சையாக பேச்சு வந்தது. சில நிமிட உரையாடலிலேயே நான் நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகன் என உணர்ந்தாரோ என்னவோ தெரியவில்லை அவரை நீங்க சந்திக்கனுமா என்றார். ஆச்சர்யம் என்னால் நம்ப முடியவில்லை. சந்திக்க முடிந்தால் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருக்கும் ஆனால் முடியுமா என்றேன். நாளை சந்திக்கலாம் என்று உறங்கிவிட்டார். எனக்கு உறக்கம் வரவில்லை.
மறுநாள் காலை, அஜயன் அண்ணா அவர்கள் தனது செல்ப்போனில்” ஹலோ முத்துக்குமார், பிசியா…” என்று ஆரமித்தார்.. அதுவரை எனக்கு தெரியாது இருவரும் பலவருட நண்பர்கள் என்று. அடுத்த சில நிமிடங்களில் நானும் அஜயன் அண்ணாவும் சாலிகிராமத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் இரு சக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். நான் அவருடைய அலுவலகத்தின் காலிங்பெல்லை அடித்தேன். எழுநூறு பாடல்களுக்கு மேல் எழுதி தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நபர் எனக்கூறப்படும் அவர் கதவை திறந்து எங்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். புகைப்படத்திலும், தொலைக்காட்சிகளிலும் வழக்கமாக தோன்றும் அதே கட்டம் போட்ட சட்டை. வேட்டை என்ற லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அடுத்த படத்திற்கு பாடல் எழுதிக்கொண்டு இருந்தார் அப்போது.
அமைதியான அந்த அலுவலகம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. தமிழர்கள் அனைவரின் மனதை வருடி கொள்ளையடிக்கும் பாடல்களும், இளைஞர்களை உதடுகளை முனுமுனுக்கச் செய்யும் பாடல்களும் இங்கே இருந்துதான் பிறந்துக்கொண்டு இருக்கிறது என்பது தான் அதற்க்கு காரணம். சில நிமிட உரையாடலுக்கு பின்னர் அவரை பேஸ்புக்கில் அழைத்துவர முயற்சித்துப்பார்தேன். ஆனால் நேரமின்மையால் அவரால் வர இயலவில்லை என்றார். நானும் அவரை சட்டென விட்ட பாடில்லை. ரசிகர்களை சந்திக்கவும், உரையாடவும் ஒரு தளமாக அது இருக்குமே என்றேன். சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுதல் வேலையை பாதிக்கும் என்பது அவர் காரணம். அதுவும் சரிதான் பேஸ்புக்கில் அவர் ஸ்டேடஸ் போடும் நேரத்தில், மற்றவர் ஸ்டேடஸ் அப்டேட் செய்யும் சில பாடல் வரிகளை அவர் எழுதிவிடலாம்.
திடீரென அஜயன் அண்ணா என் மொபைலில் நான் பாடிய பாடல்களில் ஒன்றை போடச்சொன்னார். இதை நான் யோசிக்கவே இல்லை. எனக்கு பிடித்த சில பாடல்களை பாடகர்களின் குரலை நீக்கிவிட்டு என் குரலில் இசையுடன் (கரோகே) பதிவு செய்து வைத்து இருந்தேன். அது அவருக்கும் பிடித்து இருந்தது. அதை தான் இப்போது போட சொன்னார். எனக்கு நான் பாடியதில் யுவனின் இசையில், நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய “போகாதே பாடல்” பாடல் மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய பாடலை நான் என் குரலில் பாடி அவரிடமே காண்பிப்பேன் என்று அந்த நிமிடம் வரை நான் நினைக்கவில்லை.
அதற்கு முன்னர் ஒரு சின்ன சந்தேகம். அவரிடமே கேட்டுவிட்டேன் “போகாதே பாடல் எழுதியது நீங்கள் தானே?” என்றேன். “ஆம்” என்றார். உடனே பாடலை ப்ளே செய்தேன்.. மெல்லிய சப்தத்தில் ஆரம்பமானது இசை. என் மொபைலையே கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். சில நொடிகளில் “போகாதே. போகாதே…” என்று ஆரம்பமானதும்.. “ஹேய்,,, இது யுவன் குரல் மாதிரியே இருக்கு…, யுவன் கேட்டார்னா ஆச்சர்ய படுவார்” என்றார். இதை கேட்டவுடன் நான் ரெக்கை கட்டி வானத்தில் பறக்காத குறை… “நீங்கள் ப்ரோபசனல் சிங்கரா?” என்றார்… “இல்லை, ஜஸ்ட் பாத்ரூம் சிங்கர்,,, இது வெறும் ஆர்வத்தில் பாடியது” என்றேன்
நான் இப்போது வெறும் ரசிகனாக, முதிர்ச்சி அடைந்த ரசிகனாகவே அவரை சந்தித்தேன்.. பல வருடங்களுக்கு முன்னால் அவரால் தீவிரமாக ஈர்க்கப்பட்டு, அவர் பாடல்களினாலும், கவிதையினாலும் பித்து பிடித்து திரிந்த போது சந்தித்திருந்தால் பல கேள்விகளால் அவரை துளைத்தெடுத்திருப்பேன் என நினைக்கிறேன். இதை அவரிடமே கூறினேன். என்னுடைய கவிதை தொகுப்பில் உங்களுக்கு பிடித்தது என்ன என்றார். சட்டென ஞாபகம் வரவில்லை. தர்மசங்கடமான சூழ்நிலை. அவருக்கும் தான் என நினைக்கிறன். கவிதைகள், எழுத்துக்களை விட்டு விலகி பல வருடங்கள் ஆயிற்று அதனால் ஞாபகம் இல்லை என்றேன். இருந்தாலும் உள்ளுக்குள்ளே அந்த சூழ்நிலை வருத்தம் அளித்தது.
முன்பொருமுறை ஒரு இதழில் தன்னை தன் தந்தை சைக்கிளில் உட்காரவைத்து மகாபலிபுரம் ரோட்டில் இருட்டில் ஒட்டிசென்றதை நினைவு கூர்ந்து இப்போது அதே மகாபலிபுரம் ரோட்டில் தான் காரில் செல்வதாகவும் ஆனால் தன் தந்தை தான் இல்லை என வருத்தப்பட்டு இருந்தார். அவரை பற்றி நான் படித்ததில் என்னை மிகவும் பாதித்த ஒன்று அது. அதை பற்றி அவரிடம் பகிர்ந்து விட்டு. இன்னும் பல நல்ல பாடல்களை எழுதுமாறு என் வாழ்த்துக்களை கூறிவிட்டு அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டும் விடை பெற்றேன். உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. வெளியே வந்து பைக்கில் அமர்த்தும் அந்த கவிதை தொகுப்பு நினைவில் வராமல் போனது சங்கடம் அளிக்கிறது என்று அஜயன் பாலா அவர்களிடம் கூறினேன். சிறிது தூரம் தான் சென்றிருப்போம் “பட்டாம் பூச்சி விற்பவன்” என சட்டென ஞாபகம் வந்தது.
பின் குறிப்பு:
நான் பாடிய அந்த “போகாதே போகாதே” பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த மறக்கா முடியா சந்திப்பினை ஏற்படுத்திய தாமஸ் அண்ணாவிற்கு என் நன்றிகள். அது யார் தாமஸ் அண்ணா என்று கேட்பவர் இங்கே கிளிக் செய்யவும்.