சங்ககிரி மலை உச்சியில் அந்த காலத்து கோட்டையும், அதில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாகவும் சிறுவயதில் பலர் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த சுரங்கப்பாதை திப்பு சூல்த்தானின் மைசூர் அரண்மனை வரை செல்லும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். அப்போதே எப்படியாவது அந்த மலை சென்று அந்த கோட்டையையும், சுரங்கப்பாதையையும் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் அது ஒரு போதும் நடக்கவில்லை. அதன் பிறகு ஒவ்வொருமுறை சங்ககிரி செல்லும்போதும், அந்த மலையை பார்க்கும்போது அதன் மேல் இருந்த அந்த ஆச்சர்யம் சற்றும் குறையவில்லை.
இப்போது வளர்ந்தபின்னும், அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு கடந்த ஓரிரு வருடங்களில் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதற்கு காரணம், சுமார் 1500 அடி உயரமுள்ள அந்த செங்குத்தான மலை உச்சியை அடைய, கற்களால் அமைக்கப்பட்ட வழித்தடங்களில் கால் நடை முலம் மட்டுமே சென்றடைய முடியும். மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு, ஆள் நடமாட்டம் அதிகமில்லாமல் இருக்கும் அந்த மலையை தனியாகவோ, சிலருடனோ சென்று பார்ப்பது உகந்ததல்ல என்று கூறப்பட்டது. அது மட்டுமில்லாமல் மிகவும் சிரமான வழித்தடங்களை கொண்டுள்ளதால் சென்றுவிட்டு திரும்பிய மறுநாள் கால் வலிக்காக ஒய்வு தேவைப்பட வாய்ப்பிருக்கிறது. ஆக அந்த அனைத்துக்கும் தோதாய் இதுவரை வாய்ப்பு சரிவர அமையாமலே இருந்தது.
சென்ற வாரம் ஒரு நாள், சங்ககிரியில் உள்ள என் உறவுக்கார மாமாவிடம் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தேன். வருடமொருமுறை சங்ககிரி மலையில் உள்ள ஒரு புராதான பெருமாள் கோவிலில் பூஜை நடக்கும் என்றும், வரும் சனிக்கிழமை ஊர் மக்கள் நிறைய பேர் மலை ஏறுவர் என்றும் எதேச்சையாக கூறினார். எனக்கு ஆர்வம் அதிகமானது. “நீங்க போறீங்களா” என கேட்டேன். “ஆமா. பின்ன… கடந்த சில வருடங்களாக தொடர்ந்து போறோம், இந்த வருஷமும் போவோம். இந்த முறை நீங்களும் வரீங்களா?” என்றார். “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா!”. சந்தோஷத்தில் அந்த தேதியை காலண்டரில் பதிவு செய்து வைத்துக்கொண்டேன்.
செப்டம்பர் 15, அமாவாசை சனிக்கிழமை. சேலத்தில் இருந்து நான், என் தம்பி மற்றும் உறவினர்கள் இருவருடன் காலை எட்டு மணி அளவில் காரில் சங்ககிரி போய் சேர்ந்தோம். சங்ககிரி பஸ்நிலையம் அருகில் ஒரு உணவு விடுதியில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது என்னை அழைத்துபோவதாய் சொன்ன என் மாமா அங்கு வந்து சேர்ந்தார். அருகில் அவரது பத்து வயது மகள். “நீயுமா வர? உன்னால மலையேற முடியுமா? மூச்சு வாங்கும். கால்வலிக்கும்” என்று ஆச்சர்யத்துடன் அவளிடம் கேட்டேன். “அதெல்லாம் உங்களுக்கு தான். நான்லாம் ஏறிடுவேன்” என்று புன்னகைத்தாள். “அடேங்கப்பா. உன் கால் வலித்ததால் உன் அப்பாவை நீ தூக்க சொல்லிடுவ” என்றேன். “இல்ல… மாட்டேன். நானே நடப்பேன். பாக்கறீங்களா.. சேலஞ்?” என்றால். “ஓ.. அவ்வளவு பெரியா ஆளா நீ. சரி சேலஞ்” என்றேன் நானும். இது எவ்வளவு பெரிய தவறு என்ற அப்போது நான் உணரவில்லை.
எங்கள் காரை,மலை அடிவாரத்தில் உள்ள சங்ககிரி மேல் நிலைப்பள்ளி உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தினோம். இறங்கி பார்த்ததுமே முகப்பில் கற்களால் எழுப்பப்பட்ட நுழைவாயில் அதன் பிரம்மாண்டத்தை பறைசாற்றியது. சற்று உள்ளே அந்த முகப்பில் நுழைந்ததும், பண்டைய கால வாழ்க்கைக்குள் நாமும் நுழைந்ததாய் ஒரு உணர்வு எழாமல் இல்லை. முகப்பு மண்டபத்தின் மேற்கூரையை தாங்கிப்பிடிக்கும் கல் தூனும், அதில் நேர்த்தியாக பொறிக்கப்பட்ட சிலை வடிவமும் ஆச்சர்யம் அளித்தது. அதை தாண்டியதும் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அக்காலத்தில் அது பெரிதும் அவர்களால் பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கிறது என்று அதை பார்த்தவுடனேயே புரிந்தது. அதன் அருகிலேயே ஒரு பயன்பாடற்று கிடக்கும் ஒரு சிறிய வீரபத்திரன் கோவில். அதன் வாசலில் ஒரு சிதிலமடைந்த ஒரு நந்தி சிலை. கிளிக். கிளிக். கிளிக்.
ஆரம்பத்தில் இருந்து இவை அனைத்தையும் நான் ஒவ்வொன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்க, தூரத்தில் இருந்து என் மாமாவின் குரல் ““மாப்ள, இப்படியே போட்டோ எடுத்துட்டு இருந்தீங்கன்னா நாளைக்கு தான் நீங்க மலை உச்சிக்கு வருவீங்க”. நிமிர்த்து பார்த்தால் இப்போது அனைவரும் என்னை விட்டு தூரத்தில் சென்றுக்கொண்டுக் கொண்டு இருந்தனர். அடடா… போகிற போக்கில் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று நானும் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தேன்.
சிறிது தூரத்தில் இருந்தது இன்னொரு பிரமாண்டமான வரதராஜா பெருமாள் கோவில். அந்த கோவில் மேற்கூரை முற்றிலும் மூடப்பட்டு யாரும் மேலிருந்து கோவிலுக்குள் நுழையா வண்ணம் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கோவிலை பார்த்துகொள்ளும் குடும்பமும் உள்ளே வாழ்வதாய் கேள்விப்பட்டேன். இந்த கோவில் வாசல் வரை நாம் சென்ற பாதை சமதளம் தான். ஏனென்றால் இதுவரை எல்லாமே மலையின் கீழேதான் இருக்கிறது. சரி இந்த கோவிலை சிரமமின்றி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளாலாம் என்று மேலே ஏற ஆரம்பித்தோம்.
பாறைகளை படிக்கட்டுகளாக செதுக்கியும், கற்களைக்கொண்டும் உருவாக்கப்பட்ட அந்த மலைப்பாதை ஆரம்பமானது. எங்களை போல் பல பேர் அப்போது மேல ஏறிக்கொண்டு இருந்தனர். மலையின் கீழிருந்து உச்சி வரை, இருபது அடி உயரத்திற்கு பாதுகாப்பு அரண் போல் கற்களால் மதில் சுவர் எழும்பி இருக்கிறார்கள். அக்காலத்தில் அந்நியர்கள் யாரும் உள்ளே நுழையாமல் இருக்க இந்த ஏற்பாடு. அடிவாரத்தில் உள்ள நுழைவாயிலை தவிர அந்த மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு செல்ல வேறு பாதையே இல்லை. அதுமட்டுமில்லாமல் அந்த மதில் சுவரில் ஆங்காங்கே சிறிய அளவில் சந்து இருந்தது. அது என்ன என்று கேட்டபோது தான் என் உறவினர் சொன்னார். அந்த ஓட்டைகள் அனைத்தும் சரியாக மலை அடிவாரம் நோக்கி இருக்கும். மலை மேல் ஏற முயலும் எதிரிகளை இந்த சுவற்றிக்கு பின்னால் இருந்து துப்பாக்கியில் சுட ஏதுவாக ஓட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கே ஆச்சர்யமாக இருந்தது.
மேலே ஏற ஆரம்பித்து ஒரு பத்து நிமிடத்திலேயே தெரிந்துவிட்டது இன்னைக்கு நமக்கு நாக்கு தள்ளப்போகிறது என்று. நல்லவேளை அடுத்த சில நிமிடங்களில் ஒரு நிழல்மண்டபம் தென்பட்டது. மலை ஏறும்போது இளைப்பாறவும், மழைக்கு ஒதுங்கவும் அப்போது அந்த மலை பாதையில் ஆங்கங்கே இதுபோன்று கட்டப்பட்டு இருக்கிறது. அங்கே ஒரு சில நிமிடங்கள் ஓய்வெடுத்து, தண்ணீர் குடித்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். சிறிது தூரத்தில் இன்னொரு நிழல் மண்டபம். அங்கிருந்து இரண்டு வழி பிரிந்தது. ஒரு வழி மேல மலை உச்சியை நோக்கி. இன்னொன்று நான் சிறுவயதில் கேள்விப்பட்ட அந்த சுரங்கப்பாதை இருக்கும் இடத்தை நோக்கி.
சுரங்கப்பாதை இருக்கும் வழியில் சென்றோம். சீனப்பெருஞ்சுவர் போல் நீண்டு சென்ற அந்த மதில் சுவர் அருகில் ஒட்டி சென்ற சிறியபாதையில் ஏறினோம். மேலே தூரத்தில் வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஒரு மண்டபம் தென்பட்டது. சுரங்கபாதைக்கு எதுக்கு மண்டபம் போல் கட்டி வெள்ளை அடித்து வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியுடன் அருகில் சென்றோம். அப்போது தான் தெரிந்தது அந்த சுரங்கத்தில் வெளியே முஸ்லிம்கள் தொழுகை செய்யும் ஒரு சின்ன இடம் இருந்தது. அது வெள்ளையடிக்கபட்டு சுத்தமாக இருந்தது. அந்த சுரங்கத்தில் நுழைவாயிலில் ஒரு லாந்தர் எரித்துக்கொண்டு இருந்தது. இன்னமும் முஸ்லிம்கள் வந்து அங்கே தொழுகை செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
சுரங்கத்தில் உள்ளே கும்மிருட்டு. எல்லாவற்றிற்கும் மேல், உள்ளே நிறைய வௌவ்வால்கள் இருப்பதால் அதன் எச்சத்தின் நாற்றம் குடலைப்புடுங்கியது. அதனால் நாங்கள் கொஞ்சதூரம் கூட உள்ளே செல்லவில்லை. இதன் வழியே எப்படியாவது மைசூர் சென்று விடவேண்டும் என்று சிறுவனாக இருக்கும்போது ஆசைப்பட்டதை நினைக்கும்போது இப்போது சிப்பு சிப்பாக வந்தது. சிலர் அந்த சுரங்கப்பாதை மைசூர் செல்கிறது என்கின்றனர். சிலர் பனைமரத்துப்பட்டியில் உள்ள ஒரு கரட்டிற்கு செல்கிறது என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். இன்னும் சிலரோ சேலம் குகை பகுதி வரை செல்கிறது, அதனால் தான் அந்த பகுதிக்கு குகை என்று பெயர் வந்தது என்று சைக்கிள் கேப்பில் குண்டை தூக்கி போட்டதும் ஞாபகம் வந்தது. எது எப்படியோ அந்த ரகசியம் திப்பு சூல்த்தானிற்க்கும், உள்ளே இருக்கும் வௌவ்வாலிற்குமே வெளிச்சம் என்று அந்த இடத்தை விட்டு நடையை கட்டினோம்.
மீண்டும் வந்த வழியே செல்லாமல், அங்கு இருந்து ஒரு காட்டு வழியாக சென்று மேலே செல்லும் அந்த மலைப்பாதையை பிடித்தோம். மாமாவும் அந்த சிறுமியும் கட கடவென மேலே அந்த செங்குத்தான பாதையில் ஏறிக்கொண்டு இருந்தனர். எனக்கு மூச்சி முட்டியது. “மாமா கொஞ்சம் நேரம் ஒட்கார்ந்துட்டு போலாமா” எனக்கேட்டேன். என்னுடன் வந்தவர்களும் அதை ஆமோதிப்பது போல் வேகமாய் தலை ஆட்டினார்கள். அப்போது மேலே இருந்து நிறைய பேர் கீழே இறங்கிக்கொண்டு இருந்தனர்.
அதில் ஒருவர் “என்ன தம்பி, மாமாவே தெம்பா மேல ஏறிட்டு இருக்கார், நீங்க இப்படி கேட்டீங்கன்னா மாப்பிள்ளைய பத்தி என்ன நினைப்பார்? அந்த கெத்தை மெயின்டேன் பண்ண வேண்டாமா..” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். “ஆஹா.. நீங்க சொல்றது சரிதாங்க… ஆனா நானும் எவ்வளவு நேரம் தான் கெத்தாவே நடிக்கறது. முடியலைங்க” என்றேன்.. அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு அவரோ “அதனால என்ன தம்பி. மாமா ரொம்ப நேரமா நடக்கறீங்க. கொஞ்சம் பொறுமையா அஞ்சு நிமிஷம் ஓட்காந்துட்டு போங்க இல்லைனா அப்பறம் கால் வலிக்கும் ஆப்படீன்னு சொல்லணும்பா. நமக்கு ஓய்வு கெடச்ச மாதிரியும் ஆச்சு. மாமாவை அக்கறையா பார்த்துகிட்டே கெத்தை மெயின்டின் பண்ண மாதிரியும் ஆச்சு” என்றதும் அந்த இடமே கலகலப்பானது..
கொஞ்ச தூரம் ஏறியதும் ஒரு வெடிமருந்து கிடங்கு இருத்தது. அந்த காலத்தில் இங்கு தான் வெடிமருந்து சேமித்து வைத்து இருந்தனர். இன்னமும் அந்த கிடங்கு கட்டுமானத்தில் உறுதியாக இருந்தது. இப்போது உள்ளே சென்றால் வெற்றிடம் தான். ஒரே ஒரு ஜன்னல். ஆனால் அந்த காலத்து மக்களின் யோசனையை பார்த்தால் இப்போது வியப்பாக இருக்கிறது. அதை நினைத்து வியந்துக்கொண்டு இருக்கையில் “இப்போதான் பாதி தூரம் வந்து இருக்கோம்.. இன்னும் ரொம்ப தூரம் போகணும்” என்று யாரோ சொல்ல உடனே லேசாக கண்ணைக்கட்டியது. மீதமிருந்த தண்ணீரில் குளுகோசை கலக்கி அனைவரும் குடித்து விட்டு மேலும் ஏற ஆரம்பித்தோம்.
சிறிது மலையேற்றத்திற்கு பிறகு அடுத்து வந்தது கோட்டையின் முக்கிய நுழைவாயில். அந்த காலத்தில், இவ்வளவு தூரம் பாதுகாப்பை கடந்து எதிரிகள் வந்த பிறகும், கோட்டையின் நுழைவு வாயில் வழியே தான் மீண்டும் மேலே தொடர்ந்து செல்ல முடியும் என்ற அடுத்தக்கட்ட பாதுகாப்பு அரண் இது. சுற்றிலும் இருபது அடிக்கு மேல் உயரமுள்ள கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர். இந்த கோட்டை நுழைவாயில் கதவை இடிப்பதற்கும் அப்போது சாத்தியமில்லை. கதவை இடிக்க நீண்ட இரும்புத்தூண் போன்ற ஒன்றை பிடித்து தூரத்தில் இருந்து பல பேர் ஓடி வந்து கதவை இடிக்க வேண்டும். ஆனால் நுழைவாயிலின் முன் குறிப்பிட்ட பேர் நிற்கும் அளவிற்கு தான் இடம். அதை அடுத்து பள்ளம் தான். மலையை சுற்றி வேறு எந்த பகுதியில் இருந்தும் அதற்கு மேல் செல்வதற்கு வாய்ப்பில்லை. காரணம், அனைத்து பக்கமும் செங்குத்தான உயரமான பாறையில் தான் மலைகோட்டை இருக்கிறது. இந்த ஒரு நுழைவாயில் வழியே தான் இதற்கு மேல் செல்லவே முடியும். என்ன ஒரு யோசனை?
அதைத்தாண்டி சில தூரம் நடந்தபிறகு ஒரு பெரிய வழுக்குப்பாறை. அதை படிகள் போல் செதுக்கி இருக்கிறார்கள். ஆனால் அது மட்டமாக ஏறுவதற்கு தோதாக இல்லாமல் சற்று சாய்வாக செதுக்கப்பட்டு உள்ளதால் கொஞ்சம் சிரமப்பட்டே ஏறினோம். ஏறியவுடன் ஒரு நிழல் மண்டபம். அப்போது கால்கள் அயர்ந்து போய் இருந்தது. வேர்த்துக்கொட்டி மூச்சிவாங்கியது. அந்த நிழல் மண்டபத்தில் அமர்ந்தோம். ஒரு நடுத்தரவயது பெண்மணியும் ஒரு ஆணும் அங்கே ஏற்கனவே அமர்த்து இருந்தனர்.
“தம்பி எந்த ஊரில் இருந்து வரீங்க?” என்று அந்த நபர் என்னிடம் கேட்டார்.
“சேலம்” என்றேன்.
ஒரு வாட்டி மேல ஏறுனதுக்கே இப்படி கஷ்டப்படுறீங்களே, இந்த ரெண்டு நாளில் இதுவரை 32வாட்டி நாங்க ஏறி எறங்கி இருக்கோம்பா” என்று பீடி புகையை ஊதியவாறு பீடிகை போட்டார் அவர்.
“அடேங்கப்பா, எதுக்குங்க 32 வாட்டி மேலே ஏறுனீங்க” அனைவரும் ஆச்சர்யத்தில் கோரசாய் கேட்டோம்.
—> அடுத்த இடுக்கையில் மேலும் மலை ஏறலாம். தொடரும்.
நன்று. இதை பார்பதற்கு சந்தொஹம். ஏனென்றால் நான் சங்ககிரியில் இருபது வருடம் இருந்திருக்கிறேன். சுமார் பத்து தடவை உச்சி வரை போய் இருக்கிறேன். ஒரு முறை அந்த suranga பாதை முழுவதும் போய் விட வேணும் என நாங்கள் எட்டு பேர் சுமார் இருநூறு மீட்டர் வரை பயணம் செய்து உள்ளோம். உள்ளே ஆக்சிஜன் இல்லாததால் பந்தம் ஏறியது. மின் விளக்கு இருந்தாலும் வெளிச்சம் தெரியாது . உள்ளே ஒரு சிறிய நீர் ஊற்று சொட்டி கொண்டு இருக்கும்.. இந்த இடுகையில் நீங்கள் இன்னும் நிறைய தகவல் கொடுத்து இருக்கலாம். என்றாலும் இதை வலைப்பூவில் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி
பிரமிக்கவைக்கும் சங்ககிரி மலைக்கோட்டை – பாகம் ௧
அருமையான பதிவு. நண்பர் பிரவீன் அவர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
எங்களுக்கு படித்து தெரிந்து கொள்ளமட்டும்தான் வாய்ப்பு.தொடர் நன்றாக உள்ளது தொடருங்கள்.
என்ன பாஸ்…இமயமலையையே அசால்ட்டா ஏறுவோம். இந்த சின்ன குன்றுல ஏறுறது கஷ்டமா..?! 😉
பலருக்கும் பயன் தரும்… படங்களுடன் விளக்கங்கள் அருமை… தொடர்கிறேன்…
@Guna உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!
@salemdeva அப்படி நம்பிதாங்க நானும் ஏறுனேன் 🙁
அனைவருக்கும் நன்றி! 🙂
பதிவு நன்றாக இருக்கிறது. ஆனால் சங்ககிரி எங்கே உள்ளது என்ற தகவல் இல்லை. எந்த மாவட்டம், தாலுகா வழி ஆகியவை இருந்தால் நாங்களும் செல்வோம்ல நன்றி பல
@Ravichandran சேலத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பலருக்கும் பயன் தரும்… படங்களுடன் விளக்கங்கள் அருமை…
சூப்பர் சங்ககிரி மலை ஐ இன்னும் அழகா ரசிசிருன்கிங்க .
போடோஸ் வெரி nice i proud of u very good.
super, very nice, keep it up.
அருமை எனக்கு ஜாலியா இருக்கு படிக்க படிக்க
இதன் அடுத்த பாகம் எப்போ வரும் அல்லது எழுதிவிட்டீர்களா
ஆல்ரெடி எழுதியாச்சு கார்த்திகேயன்!
we need more information but local people were said sankari fort temple is most powerful. The Fort god’s solve our problems and give turning point in our life. in this case they are like (Muslims and other community ) people visit regularly. The fort god give turning point in my life. so i visit most of the time in that temple.
Thank u to all visit the Fort.
நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்
எனக்கு உதவிகரமாக இருந்தது எங்க ஊர்ல இருந்து 18km மட்டும்தன் ஆனால் நான் இன்னும் அங்க போனது இல்ல thank u for the information
மிக்க நன்றி… எந்த ஊரு நீங்க?