ஒரு டிபிகல் பொழுதுபோக்கு தமிழ் சினிமாவை போலவோ, மக்கள் குடும்பத்துடன் ரசித்து பார்க்கக்கூடிய ஜனரஞ்சக சினிமாவோ அல்ல இந்த பரதேசி. 1930களில் பஞ்சம்பிழைக்க தேயிலை தோட்டத்திற்கு சென்று கொத்தடிமைகளாக துன்புறுத்தபட்டவர்களின் வலிகளையும், வேதனைகளையும் மிக அருகில் சென்று பதிவு செய்யும் ஒரு ஆவணப்படம் இது. பாலா என்ற ஒரு உன்னத கலைஞனின் இதுவரை வந்த படைப்புகளில் ஆகச்சிறந்தது இதுவெனலாம். மொத்தத்தில் தமிழில் வெளிவந்த ஓர் உண்மையான உலக சினிமா.
“எரியும் பனிக்காடு” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட “ரெட் டீ” (Red Tea) என்ற ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. டைட்டில் கார்டிலேயே படம் தரப்போகும் உணர்வை பார்வையாளர்களிடம் விதைத்துவிடுகிறார்கள். இதுதான் படம். இதை பற்றிதான் சொல்லப்போகிறோம். நீ பாட்டுக்கும் கண்டபடி எதிர்பார்த்துவிட்டு ஏமாந்துவிடாதே என்கின்ற சூட்சமம் அது. நிச்சயம் இது மாதிரி திரைப்படங்களுக்கு, குறிப்பாக தமிழ் நாட்டு மக்களுக்கு அது அவசியமான ஒன்று.
முதல் பாதியில் சூளூர் எனும் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும், பஞ்சம் பிழைக்க புறப்படும் சூழ்நிலையையும் விவரிக்கும் இப்படம் இரண்டாம் பாதியில் அவர்கள் நயவஞ்சகத்தில் சிக்குவதையும், கொத்தடிமைகளாக துன்புறுத்தப்படுவதுமென விரிகிறது. வில்லனை கொன்று பழி தீர்க்கும் வழக்கமான கதையாக அல்லாமல் யதார்த்தத்தின் உச்சமாக, வேதனையின் மிச்சத்தில் முடிகிறது படம். ஏற்கனவே இந்த படம் எதைப்பற்றியது என்று தெரிந்தபின்பும், எப்படிப்பட்ட துயரங்களை காட்சிகளாக படம் முழுக்க காட்டிவிட முடியும் என்ற ஆர்வத்தில் தான் நான் சென்றேன்.
இனிக்க இனிக்க பேசி, பஞ்சம் பிழைக்க அழைத்துச்செல்லப்படும் மக்கள், போகும் வழியில் ஒருவன் உடல் பலகீனமாகி விழுந்துவிட, அவனை சுமையாகக் கருதி அப்படியே விட்டுச்செல்ல பணிக்கிறான் அவர்களை அழைத்துச்செல்பவன். இந்த இடைவேளை காட்சின் போதுதான் கதையே துவங்குகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே நரக வேதனைகள். சரியான கூலி தராமல், உடல் உழைப்பை மட்டும் அட்டையாக உறிஞ்சி, மறுப்பவர்களை மாட்டை அடிப்பதை போல் அடித்து சித்திரவதை செய்து, வெள்ளைக்காரனின் காமப்பசிக்கு பெண்ககளை இறையாக்கி, தப்பிசெல்பர்களில் குதிக்கால் நரம்பினை துண்டித்து முடமாக்கி என நீண்டுச்செல்கிறது அந்த நரக வாழ்க்கை. இது உண்மைச்சம்பவத்தை தழுவியதென்பதால், இப்படித்தான் நம் தமிழ் மக்கள் அக்காலத்தில் வெள்ளைக்காரர்களால் அவர்களது தேயிலைத்தோட்டத்தில் கொத்தடிமைகளாக நடத்தபட்டார்கள் என்று நினைக்கும்போது மனம் கனக்கிறது.
படத்தின் முதல் காட்சியில், ஒரே ஷாட்டில் அந்த கிராமத்தின் சந்து பொந்துகளில் புகுந்து அம்மக்களில் இயல்பு வாழ்க்கைக்குள் நம்மையும் இழுத்துப்போடுகிறது செழியனின் காமிரா. படத்தின் கடைசி காட்சியில் அதர்வா கதறும் இடத்திலிருந்து அந்த மலையை சுற்றிவிட்டு மீண்டும் அதர்வா இருக்கும் இடத்திற்கே ஒரே ஷாட்டில் காமிரா வந்து நிற்கும் இடம் கூட அபாரம். இப்படி பல இடங்களில் செழியன் படத்தை தன் கையில் ஏந்தியிருக்கிறார். ஆனால் படம் முழுக்க செபியா டோன் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இது ஒரு ஆவணப்படம் என்ற தோற்றத்தைத்தான் உருவாக்குகிறது.
கிராமத்தில் நடக்கும் உரையாடல்களை சரி வர கவனிக்க இயலவில்லை. திரையரங்கின் ஒலியமைப்பில் பிரச்சனையா? அல்லது படத்தின் ஒலிச்சேர்க்கை தன்மையே அதுதானா? என்று விளங்கவில்லை. ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கையில், ஊர் பெரியவரான அந்த பெரியப்பா இறந்துவிட, அனைவரும் அவரை கிடப்பில் போட்டுவிட்டு அதை மறைத்து கொண்டாடி மகிழ்வது நமக்கு சற்று உறுத்துகிறது. அதிலும் உச்சம், கடைசிவரை அந்த பிணம் அக்கதையில் என்னவாயிற்று என்று நம்மிடம் இயக்குனர் மறைத்தது. இளையராஜாவால் மட்டுமே அந்த படம் இசையால் முழுமையடைந்திருக்கும் என்ற உணர்வு நிச்சயம் எழாமலில்லை.
இருவருடங்களுக்கு முன்பு நுவரேலியா என்று இலங்கையில் உள்ள ஒரு மலைப்பிரதேசத்திற்கு சென்றிருந்தேன். வழியில் ஒரு தேயிலை தோட்டத்தின் அருகே சாலையில் வண்டியை நிறுத்தினோம். தேயிலை தோட்டத்தில் சில புகைப்படம் எடுத்துக்கொள்வோம் என்று அந்த மலைச்சரிவில் சிறிது தூரம் ஏறினோம். சற்று தூரத்தில் அங்கு பெண்கள் பலர் தேயிலை பறித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகே செல்லச்செல்ல அனைவரும் செய்வதறியாது சற்று அதிர்ச்சியுடன் எங்களையே பார்த்தனர்.
அருகில் இருந்த நண்பனிடம் “இங்கே புகைப்படம் எடுக்கலாமானு தெரியல. இவங்ககிட்ட எப்படி கேட்கறது? இவங்களுக்கு தமிழ் வேற தெரியாதே" என்றேன்.
“தம்பி எங்களுக்கு தமிழ் நன்றாக தெரியும்" என்று அந்த தேயிலை பறிப்பவர் மத்தியில் இருந்து ஒரு பெண்மணி குரலெழுப்பினார்.
எனக்கு ஆச்சர்யம் தாழவில்லை. “ஓ… உங்களுக்கு தமிழ் தெரியுமா? இங்கே நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?”
“தம்பி, தப்பாக எடுதுத்க்கலைனா ஒன்னு சொல்லட்டுமா?"
“சொல்லுங்கமா”
“இங்க யாரும் நிக்காதீங்க தம்பி. அவுங்க பார்தாங்கன்னா எங்களுக்குத்தான் பிரச்னை. சீக்கிரம் போயுடுங்க தம்பி.”
உடனே அவசர அவசரமாக அங்கிருந்து கீழிறங்கினோம். எந்த சூழ்நிலையில் அதை சொல்லி இருப்பார் என்று அப்போது யோசிக்கவில்லை. அந்த வார்த்தைக்கான அர்த்தம் உண்மையில் அப்போது புரியவில்லை.. ஆனால் இப்போதோ அவர்களின் வேதனைகளை யோசித்துப்பார்க்கவே மனம் அஞ்சி நடுங்குகிறது.
பார்க்க வேண்டும்… விமர்சனத்திற்கு நன்றி…
எனது மூதாதையர்களும் பெரும்பாலும் இதில் குறிப்பிட்ட கால கட்டத்தில தேயிலை தோட்டங்களில் பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள்தான். ஆயினும் அந்தக் காலத்தின் துன்ப வாழ்க்கையைப் பற்றி எங்களுடன் பகிருபோது, இதுபோன்ற கொடும்மையான தண்டனைகள் கொடுத்ததாகச் சொல்லவில்லை.
ஆனால் ஒரு வேலை இது இநதியா தவிர வேறு நாடுகளில் நடந்திருக்கலாம்.
முரளியை எனக்கு ரெம்ப பிடிக்கும் அவர் மகனும் அவர் போல் சிறக்க வாழ்த்துக்கள் மேலும் இந்த படமும் வெற்றிபெற வாழ்த்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே