நீ தானே என் பொன்வசந்தம் – விமர்சனம்

Jeeva-Samantha-Neethane-En-Ponvasantham-Movie-review

மிகவும் எதிர்பார்புக்கிடையில் வெளியான படம் இந்த “நீ தானே என் பொன்வசந்தம்”. சொல்லபோனால் இளையராஜாவின் பாடல்களின் ஈர்ப்பின் காரணமாகத்தான் நான் இந்த படத்திற்கே சென்றிருந்தேன். அதுவும் குறிப்பாக சாய்ந்து.. சாய்ந்து பாடல்… அனைவரின் எதிர்பார்ப்பை உடைக்கும் ஒரு யுக்தியாய் படத்தின் கதையை ஏற்கனவே அதன் இயக்குனர் பல மேடைகளிலும், நேர்காணல்களிலும் சொல்லி இருக்கிறார். இருப்பினும் அந்த படத்தின் கதை இது தான்.

வருண் & நித்யா. இவர்களின் குழந்தை பருவம் முதல் பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், வேலை தேடும் இளைஞர் பருவம் வரை நடக்கும், நட்பு, சந்தோஷம், துக்கம், காதல், ஊடல் போன்ற உணர்வுகளை பதிவு செய்கிறார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகவும் நெருக்கமாகி பின்பு சண்டையிட்டு பிரியும் இவர்கள் இறுதியில் வரன் தேடும் கல்யாணப்பருவத்தில் ஒன்று சேர்கிறார்களா, இல்லையா என்பது தான் கதை.

சாய்ந்து சாய்ந்து பாடல்.. எவ்வளவு மென்மையாக, மனதை வருடுகிற ஒரு பாடல் இது. கவுதம் மேனன் ஏமாற்றிவிட்டார். என்னை கேட்டால் அதை படமாக்கி இருக்கவே வேண்டாம். சில பாடல்கள் வெறும் ஆடியோவில் அப்படியே விட்டுவிடுவது உத்தமம். வெறுமனே கண்களை மூடி அந்த பாடலை கேட்டாலே எவ்வளவு விஷுவல்கள். அதே மாதிரி “பெண்கள் என்றால்” பாடல், மிகவும் அழுத்தமான வரிகள். ஆனால் அதற்கான சிச்சுவேசனோ, எமோஷனோ காட்சிகளில் இல்லை.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை வரை வருணும், நித்யாவும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆண், பெண் இருவருக்கும் நட்பிலும், காதலிலும் நடக்கும் அத்தனை இனிமைகளும், கசப்புகளும் இவர்களுக்கும் நடக்கிறது. அழகான நிகழ்வுகள் அவை. ஆனால் சுவாரசியமான சம்பவங்களின் மூலம் திரைக்கதை நகராமல் அவர்களது உரையாடல்களின் மூலமாகே நகர்கிறது. இது பல இடங்களில் தொய்வை ஏற்படுத்தி பார்ப்பவர்களை போரடிக்க வைக்கிறது. அவ்வப்போது சந்தானம் வந்து கொஞ்சம் அந்த தொய்வை தாங்கிப்பிடிக்கிறார். ஆனால் இடைவேளைக்கு பிறகு வரும் அந்த சந்தானம்-ஜெனி லவ் பயங்கர கிளிசே. தற்சமயம் மாய்ந்து மாய்ந்து காதலிப்பவர்களும், சமீபத்தில் பிரிந்தவர்களும் ஒரு வேலை இந்த படம் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

Jeeva-Samantha-Neethane-En-Ponvasantham-review

இத்தனையையும் மீறி படத்தின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் பாதித்தது. நித்யாவின் பார்வையில் படத்தை பார்த்தோமானால் மனதை கனக்கவைக்கும் தருணங்கள் அவை. வருணிற்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த திருமண வரவேற்பிற்கு நித்யா செல்கிறாள். சிறு வயது முதல் அவன் தான் உலகம் என்று வாழ்ந்துவிட்ட அவளுக்கு இப்போது அனைத்தும் கை மீறி சென்று விட்டது. மேடையேறி கைகுழுக்க அவனிடம் கை நீட்டுகிறாள். வருண் அதை உதாசினப்படுத்த அப்போது அவள் முகத்தில் தோன்றும் அந்த ஒரு நொடி வெறுமையும், கண்கலங்கியவாறே அங்கிருந்து வெளியேறுவதும், ரியலிஸ்ட்டிக் டச். வலி மிகுந்த காட்சி அது.

இரவு வரவேற்ப்பு முடிந்து, விடிந்தால் வருணிற்கு திருமணம். இரவு வருணை காரில் அழைத்துக்கொண்டு சிறுவயதில் அவர்கள் சந்தித்த இடங்களுக்கு சென்று அந்த தருணங்களை நினைவு கூறுகின்றனர். அப்போது நித்யாவிற்குள் நடக்கும் மனப்போராட்டங்களும், உரையாடல்களும் எமோஷனின் உச்சம். எப்பேர்பட்ட மேஜிக் கிரியேட் பண்ணியிருக்க வேண்டிய படம். அனைத்து சரிவர இருந்தும் அழகான வாய்ப்பை கவுதம் தவறவிட்டுவிட்டார் என்றே எனக்கு தோன்றியது.

One thought on “நீ தானே என் பொன்வசந்தம் – விமர்சனம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *