பேபால்(PayPal) நிறுவனத்துடன் என் மோசமான அனுபவம்

ditch-paypal

நீங்கள் நேர்மையான, கவுரவமான ஒரு தொழில் செய்து கொண்டு இருக்கும் பட்சத்தில், உங்களது வங்கிக்கணக்கு திடீரென முடக்கப்பட்டு, பண பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டு, அதற்கு தகுந்த காரணம் கேட்டால் “அது எங்களுடைய சொந்த விருப்பம், வேண்டுமானால் வேறு வங்கியில் கணக்கை தொடங்கிக்கொளுங்கள்”  என்று பொறுப்பற்ற முறையில் அந்த வங்கி உங்களிடம் பதில் சொன்னால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது சில வாரங்களுக்கு முன்னால் பேபால்(PayPal) எனக்கு ஈமெயில் அனுப்பி எங்களுடைய விதிகளுக்கு நீங்கள் உட்படாததால் நாங்கள் உங்கள் கணக்கை முடக்குகிறோம் என்று சொன்னபோது.

பிரச்சனையை பற்றி பேசுவதற்கு முன்னர் புதியவர்களுக்கு பேபால் பற்றிய ஒரு சிறு அறிமுகம். பேபால் நிறுவனத்தை கிட்டத்தட்ட ஒரு சர்வதேச வங்கி என்று சொல்லலாம். உலகின் அனைத்து நாடுகளுக்கும் (சிலவற்றை தவிர) எளிய முறையில் பணம் அனுப்புவதற்கும், பெறுவதற்குமான சேவையை வழங்கி வரும் நிறுவனம் இது. அதுமட்டுமல்லாமல் இணையத்தில் உள்ள அனேக இணையவர்த்தக தளங்களும் பேபால் மூலமாகத்தான் பணம் பெற்று தங்களுடைய பொருட்களை/சேவைகளை வாடிக்கையார்களுக்கு வழங்கிவருகிறது. அதாவது பேபால் கணக்கு உங்களிடம் இருந்தால் தான் அவர்களிடம் நீங்கள் அந்த இணையதளங்களில் பணம் செலுத்த முடியும். போட்டியாளர்கள் இருந்தும்  நீண்ட வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக உலகெங்கும் தனது ராஜ்யத்தை நிறுவியிருக்கிறது இந்த பேபால்.

2006/07 வருடத்திலே இணையத்திலே பணம் செலுத்துவதற்காக ஒரு பேபால் கணக்கை உருவாக்கினேன்.  பிறகு இணையம் சார்ந்த தொழில் தொடங்கியவுடன், பணம் பெறுவதற்காகவும் அந்த கணக்கை பயன்படுத்தி வருகிறேன்.  முக்கியமாக இந்தியாவில் உள்ள இணையத்தை சார்ந்த சிறுதொழில்  செய்வோருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு பேபால்’ஐ விட எளிய முறை இதுவரை இல்லை. இதன் சேவையை பயன்படுத்துவதற்கு மாதாந்திர கட்டணம் இல்லை. பணம் அனுப்புவதற்கு கடன் அட்டை மூலம் எந்த சேவை கட்டணமும் இல்லாமல் இலவசமாக அனுப்பலாம். பணம் பெறுவதற்கு மட்டும் கிட்டத்தட்ட அந்த தொகையில் 3.5% கட்டணமாக பிடித்துக்கொள்ளப்படும். தேவைப்படும் பொழுது நம் பேபால் கணக்கில் உள்ள தொகையை நம் உள்நாட்டு வங்கிக்கணக்கில் நேரிடையாக மாற்றிக்கொள்ளலாம்.

பல வாடிக்கையாளர்களை பெற்று, இந்தியாவில் பேபால் மெல்ல மெல்ல காலூன்ற ஆரம்பித்தது. வெளிநாட்டுப்பணம் இந்தியாவிற்குள் அவர்கள் மூலமாக வருவதை கண்டதும் திடீரென ஆர்.பி.ஐ (ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா) அவர்களது சேவையை வரைமுறைக்குட்படுத்த முற்பட்டது. அச்சமயத்தில் இருந்ததுதான் இந்தியாவில் பேபால் நிறுவனத்திற்கு பிரச்சனை ஆரம்பமானது. பேபால் கணக்கை பயன்படுத்தும் இந்தியர்கள் அச்சமயம் முதல் பல சிக்கல்களுக்கு உள்ளாயினர். சுமார் ஒரு  வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தவைகள் அவை. அப்போது நானும் ஒரு பிரச்சனையை சந்தித்தேன். என்னுடைய பேபால் கணக்கிலிருந்த பணத்தை என் வங்கி கணக்கிற்கு மாற்ற முற்பட்டபோது அது வங்கியிலும் வந்தடையாமல் பேபால் கணக்கிலும் இல்லமால் மாயமாய் மறைந்து போனது. கிட்டத்தட்ட இரண்டு மாத வருமானம் அது.  இதற்காக பலமுறை பேபால்’ஐ ஈமெயில் மூலமும் போன் மூலமும் தொடர்பு கொண்டு ஒன்னரை மாதம் கழித்து தான் பணம் வந்தடைந்தது. இதற்கான மன உளைச்சல், நேர விரையம் கொஞ்ச நஞ்சமில்லை.

Why Paypal

அது நாள் வரை பேபால் பயன்படுத்துவது நம் நாட்டின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டதா என்ற பலத்த சந்தேகத்திற்கு விடையில்லாமல் இருந்தேன்.  அதன் பிறகு ஆர்.பி.ஐ விதிகளின்படி இந்திய பயனாளர்கள் ஒவ்வொருவரும் பேபால் கணக்கை பயன்படுத்த பான் நம்பர் மற்றும் பணவரவுக்கான காரண எண்ணை  சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தபட்டது. அவற்றை சேர்த்த பிறகு எந்த பிரச்சனையும் இல்லாமல் பலமாதங்களாக பேபால் சேவையை பயன்படுத்திக்கொண்டு இருந்தேன். ஆனால் எதிர்பாரவிதமாய் கடந்த செப்டம்பர் (2011) மாதத்தில் எனக்கு பேபால் இடம் இருந்து வந்த ஒரு மின்னஞ்சலில் அதிர்ச்சி காத்திருந்தது.

என்னுடைய பேபால் கணக்கில் சேர்க்கப்பட்ட என் பான் நம்பர் செல்லாது என்றும், சரியான பான் நம்பரை சேர்த்தால் மட்டுமே என்னுடைய பேபால் கணக்கை பயன்படுத்த முடியும் என்றும் அதுவரை என் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும் என்று வந்த செய்திதான் அது. ஒரே ஒரு விதிமுறை தளர்வு அவர்கள் அப்போது அனுமதித்தது என்னவென்றால், பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் நான் அனுப்பலாம், பொருட்களை இணையத்தில் வாங்கலாம் ஆனால் யாரிடம் இருந்தும் பணம் பெற முடியாது. இது எனக்கு ஒரு பெருத்த இழப்பாக இருந்தது. நான் என்னுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கான மாற்று வழிமுறைகளோ வாடிக்கயார்களுக்கு சிரமமாக இருந்தது. நான் முன்னர் சொன்னது போல் பேபால் தவிர எளிய வழிமுறை இதுவரை இருக்கவில்லை.

ஆனால் எதற்காக என்னுடய பேபால் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது? இத்தனைக்கும் என்னுடைய பான் எண் சரியானதாகும். என் வங்கிக்கணக்கிலும் அந்த எண்ணை தான் பயன்படுத்தி வந்தேன், என்னுடய வருமான வரி செலுத்துவதற்கும் அந்த எண்ணை தான் பயன்படுத்தி வந்தேன். ஒரே குழப்பம். சரி, பேபால் பக்கம் ஏதோ ஒரு மனிதத்தவறு நிகழ்த்திருக்கிறது என்று எண்ணி, அவர்களுடன் பேசி இதை தீர்த்துகொள்ளலாம் என்று பேபால் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் பேசினேன். என்னுடைய கணக்கை பார்த்த அவர்கள் என்னுடைய பான் எண்ணை சரிபார்த்தபோது அது செல்லாதது என்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சரியான எண்ணை அளித்தால் மட்டுமே பேபால் கணக்கை உபாயோகப்படுத்தமுடியும் என்று தெரிவிக்கப்பட்டேன். அது தான் சரியான பான் எண் என்றும், மீண்டும் சரி பார்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். அவர்களுக்கு மேலும் உதவ என்னுடைய பான் அட்டையின் நகலை மின்னஞ்சலிலும், தொலைபிரதியிலும் அனுப்பி வைத்தேன்.

பல வாரங்கள் பொருத்திருந்தும் அவர்களிடம் பதில் ஏதும் இல்லை. பலமுறை மின்னஞ்சல் அனுப்பி பார்த்தேன். பலமுறை தொலைபேசியில் அழைத்துப்பார்த்தேன். ஒவ்வொரு முறையும் என் பான் எண்ணை சரிபார்க்க அவகாசம் கேட்டுக்கொண்டே இருந்தனரே தவிர யாரும் எனக்கு உதவுவதாய் தெரியவில்லை. கிட்ட தட்ட ஆறு மாதங்கள் இதே நிலை நீடித்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தேன்.  சரியான பாண் என் இருந்தும், பல மாதங்களாய் எண்ணை அழைக்களிப்பதற்கு காரணம் சொல்லியே தீரவேண்டும் என்று மின்னஞ்சல் எழுதினேன்.

சிலமணி நேரத்தில் பேபால் இடம் இருந்து வெளிநாட்டு எண்ணில் அழைப்பு வந்தது. ஒரு பெண்மணி பேசினார். “உங்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தான் அணைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். அவர்கள் தான் எங்களுக்கு பல நிபந்தனைகள் அளித்து இந்தியாவில் சேவை வழங்குவதில் முட்டுக்கட்டையாய் இருக்கின்றனர் என்றார். அவர்களால் தான் உங்களை போன்று பல இந்திய பேபால் பயனாளர்கள் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்” என்று ரிசர்வ் வங்கியின் மீது பழி சுமத்தினார். அது மட்டுமில்லாமல் என்னுடைய பிரச்சனைக்கு தீர்வாக என்னுடைய பேபால் கணக்கை நிரந்தரமாக மூடிவிட்டு புதிதாக கணக்கை தொடங்க சொல்லி ஆலோசனை வழங்கினார்.

அவரது யோசனை எனக்கு தவறாகப்பட்டது. என்னுடைய பான் நம்பர் தவறு என்று அவர்கள் பலமாதங்களாக என்னை  அலைக்கழிக்கும் இந்த நேரத்தில் அவர்களின் தவற்றை அவர்கள் திருத்திக்கொள்ளாமல் என் கணக்கை மூடச்சொல்வது ஒரு முட்டாள்தனமான ஒரு யோசனை. இதை அவர்களிடமே சொல்லி எனக்கு விரைவில் தீர்வு வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன்.

அதன் பிறகு ஓரிரு நாளில் என் பான் நம்பர் சரிபார்க்கப்பட்டு விட்டதாகவும், அது சரியாக இருக்கும் காரணத்தினால் என் பேபால் கணக்கு பழையபடி இயங்கும் என்று மின்னஞ்சல் வந்தது. பொறுமையாக இருந்தது பலன் தந்தது என்று மகிழ்ந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மறுநாளே இன்னொரு மின்னஞ்சல். என்னுடைய பான் நம்பர் செல்லாது என்றும், சரியான பான் நம்பரை சேர்த்தால் மட்டுமே என்னுடைய பேபால் கணக்கை பயன்படுத்த முடியும் என்று என் கணக்கு மறுபடியும் தற்காலிகமாக  முடக்கப்பட்டது.

paypal stupid email

மீண்டும் எனக்கு குழப்பமும், கோபமும் தான் வந்தது. எதனால் இரண்டு நாளில் என் பான் எண் தவறு என்கிறீர்கள் என்று மினஞ்சல் அனுப்பினேன். பல முறை அனுப்பினேன். ஆனால் இம்முறை மின்னஞ்சல் அனுப்பிய  ஒவ்வொருமுறையும் அனுப்பிய மறுநிமிடம் ஒரு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வரும். அழைப்பு மணி அடிக்கும் முன்னமே, ஒரு நொடிக்குள் அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு மிஸ்டு கால் ஆகி விடும். மறுநிமிடம் பேபால் இடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வரும். “நாங்கள் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை. உங்களுக்கு தீர்வு காண முயன்று கொண்டு இருக்கிறோம். உங்கள் பாண் எண்ணை சரிபார்க்க அவகாசம் வேண்டும் என்று ஒரே வகையான டெம்ப்ளேட் செய்தி வரும். இதுவே ஒரு தொடர்கதை ஆனது. என் பொறுமையும் எல்லை மீறி போனது.

நானும் விடுவதாய் இல்லை. ஒவ்வொரு முறையும் எனக்கு மிஸ்டு கால் கொடுப்பது ஏன்? ஒரே மாதிரி டெம்ப்ளேட் மின்னஞ்சல் செய்தி அனுப்புவது ஏன்? இந்திய அரசாங்கம் எனக்கு அளித்த என்னுடைய பான் எண் தவறு என்று நீங்கள் கூறுவது ஏன்? இதற்க்கு பலமாதங்களாக தீர்வு அளிக்காமல் என்னை அலைக்கழிப்பது ஏன்? என்னுடைய பான் என் சரி என்று ஒரு நாளும்,  தவறு என்று மறு நாளும் குழப்புவது ஏன்? இவை அனைத்திற்கும் பதில் வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பினேன்.

ஒருகட்டத்தில் என் பான் நம்பர் சரிபார்க்கப்பட்டு விட்டதாகவும், அது சரியாக இருக்கும் காரணத்தினால் என் பேபால் கணக்கு பழையபடி இயங்கும் என்று முன்னர் போல் மீண்டும் மின்னஞ்சல் வந்தது. என் கேள்விகளுக்கு பதில் இல்லையென்றாலும் ஒரு வழியாய் தீர்வு கிடைத்ததே என்று மீண்டும் மகிழ்ச்சி அடைந்தேன். அனைத்தும் மீண்டும் மீண்டும் நடக்கும் போது பேபால் மட்டும் சும்மா இருக்குமா? மீண்டும் அடுத்த நாள் ஒரு மின்னஞ்சல் அவர்களிடம் இருந்து.  என்னுடைய என் பான் நம்பர் செல்லாது என்றும், சரியான பான் நம்பரை சேர்த்தால் மட்டுமே என்னுடைய பேபால் கணக்கை பயன்படுத்த முடியும் என்று என் கணக்கு  தற்காலிகமாக முடக்கப்பட்டது. என் கோபம் உச்சிக்கு சென்றுக்கொண்டு இருக்கையில் உடனே அவர்களிடம் இருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. இதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அப்படி ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

என்னுடைய பேபால் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டது என்று அதில் கூறப்பட்டது. அதற்க்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதுதான். அவர்களுடைய பயனீட்டாளர்களின் சேவை விதிகளுக்கும், நிபந்தனைகளுக்கு நான் கட்டுப்படவில்லை என்பதேயாகும். அப்படி என்ன நான் கட்டுபடமால் இருந்துவிட்டேன். அவர்கள் மின்னஞ்சலில் சரியான காரணம் இல்லை. உடனே அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்தேன். அதற்க்கு தங்களால் பதிலளிக்க முடியாது என்றும் இன்னொரு எண்ணை கொடுத்தனர். அந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் அமெரிக்க நேரத்தில் தான் அழைக்க முடியுமாம். நாடு ராத்திரியில் அழைத்தேன்.

பல மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஒரு பெண்மணி பேசினார். என் பிரச்சனையை கூறினேன். என் கணக்கை திறந்து பார்த்துவிட்டு “மன்னிக்கவும், அது நிரந்தரமாக முடக்கப்பட்டு விட்டது நீங்கள் வேறு ஏதேனும் நிறுவனத்தின் சேவையை பயண்படுத்திகொள்ளுங்கள், நன்றி.” என்று மூஞ்சில் அடித்த மாதிரி கூறினார். என் கணக்கை மூடியதற்க்கு தக்க காரணம் வேண்டும் என கேட்டேன். நீங்கள் உங்கள் பெயரில் பல கணக்குகளை பயன்படுத்தி வருவது போல் எங்கள் சிஸ்டம் கூறுகிறது அது மட்டும் இல்லாமல் எங்களுடைய சேவை விதிகளுக்கும், நிபந்தனைகளுக்கு நீங்கள் கட்டுப்படவில்லை என கூறினார்.

எனக்கே இது புதிதாக இருக்கிறது. எனக்கு தெரியாமல் எப்படி அது சாத்தியம்? உங்கள் பக்கம் ஏதோ தவறு நிகழ்ந்துக்கொண்டு இருக்கிறது, தயவு செய்து அதை பற்றி மேலும் விவரம் கூறுங்கள் என்றேன். விபரம் தர மறுத்து விட்டார்.  ஒரு தனி நபர் “ஒரு பெர்சனல் பேபால் கணக்கும்”, “ஒரு பிசினஸ் பேபால் கணக்கும்” வைத்துக்கொள்ளலாம் என்பது தான் அவர்களது விதி. இது அவர்களுடைய இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. நானும் அது போல் தான் இரு கணக்கு வைத்து உள்ளேன். அது தவறில்லை தானே என்றேன். சிறு மவுனம் அவரிடம் இருந்து.

இல்லை நீங்கள் எங்களுடைய பல சேவை நிபந்தனைகளுக்கு கட்டுப்படவில்லை என்றார். என் கணக்கில் இதுவரை எந்த தவறும் இல்லை, ஆரம்பம் முதலே உங்களுடன் இருந்து தான் பிரச்சனை, என்னுடைய பாண் எண் தவறு என்று கூறினீர்கள், இப்போது காரணம் இல்லாமல் என் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. எதுவாக இருந்தாலும் தீர்வு காணலாம், எனக்கு பேபால் சேவை மிகவும் அவசியமான ஒன்று அது மட்டுமில்லாமல் என்னிடம் தவறு ஏதும் இல்லை என்றேன். எங்களுக்கு உங்களோடு இணைத்து பிசினெஸ் செய்வதில் விருப்பமில்லை, மன்னிக்கவும், தயவுசெய்து வேறு ஒரு சேவை நிறுவனத்தை பயன்படுத்திக்கொள்ளவும் என மீண்டும் மூஞ்சில் அடித்தவாறு அவரிடம் இருந்து பதில் வந்தது. ஆரம்பம் முதலே அவருக்கு பிரச்சனையின் காரணத்தை கூறவும், அதற்க்கு தீர்வு காணவும் விருப்பமில்லை என்று தெரிந்தது. சரி எனக்கு உங்கள் சேவை தேவையில்லை, எனக்கு என்னுடைய கணக்கு முடக்கப்படதற்க்கு காரணம் மட்டும் கூறவும் என்றேன். “மன்னிக்கவும், எங்களால் காரணம் எதுவும் கூற முடியாது, வேண்டுமானால் சட்ட ரீதியா சந்தியுங்கள் பதில் அளிக்கிறோம் இப்போதைக்கு தொலைபேசியை துண்டிக்கவா?” என்றார். நானாக வைத்துவிட்டேன்.

சரி பழைய பேபால் கணக்கை மூடிவிட்டால் என்ன? புதிதாய் ஒன்றை தொடங்கலாமே என்று அனைவரும் யோசிக்கலாம். ஆனால் அது சாத்தியமில்லை. பேபால் கணக்கு முடக்கப்பட்டால்  அதில் உபயோகப்படுத்திய பெயர், தொலைபேசி எண், ஈமெயில் முகவரிகள், வங்கி கணக்குகள், கடன் அட்டை எண், பாண் எண் இப்படி அனைத்தும் விசயங்களும் பிளாக் செய்யப்பட்டு அதை மீண்டும் பயன்படுத்த முடியாமல் செய்து விடுவார்கள். அது மட்டும் இல்லமால் பேபால் கணக்கும் உள்ள பணம் அனைத்தும் 180நாளுக்கு முடக்கப்படும். நல்ல வேலை என் கணக்கில் அப்போது பணம் இல்லை.

எனக்கு பேபால் சேவை இல்லையென்றாலும் இந்த அராஜகத்திற்கு பதில் சொல்லியே தீரவேண்டும் என்று முடிவெடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இதை விட ஒரு அவமானம் ஒரு பயனீட்டாளருக்கு ஒரு சேவை நிறுவனம் ஏற்படுத்த முடியுமா? யாரிடம் முறையிடுவது? பேபால் வைத்தது தான் சட்டம். அப்படி தான் அவர்கள் பேசுகிறார்கள். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள். பேபால் மாதிரி பணம் கொழுத்து இருக்கும் முதலைகளிடம் நிச்சயம் நாம் சட்ட ரீதியாக மோத முடியாது. ஒருவருக்கு சேவை வழங்க மறுப்பதில் அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று வாதிட வாய்ப்பு இருக்கிறது. அவர்களை எல்லா வழிகளிலும் சட்ட ரீதியாக பாதுகாக்க அவர்கள் இயற்றிய சேவை நிபந்தனைகள் அவர்களுக்கு உதவிடும். சரி வேறு என்ன செய்யலாம்?

இந்த பிரச்சனைகளை பதிவிட்டு அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை ஏற்படுத்தலாம் என்று எழுதத்தொடங்கினேன். ஓரிரு நாளில் தீடிரென ஒரு யோசனை வந்தது.  . பதிவிடும் எண்ணத்தை தற்காலிகமாக நிறுத்தினேன்.  பெட்டர் பிசினெஸ் பீரோ (Better Business Bureau – http://www.bbb.org/ ) என்றொரு நிறுவனம் உள்ளது. அமெரிக்காவிலும், கனடாவிலும் உள்ள பல தொழில் நிறுவனங்களை தங்கள் சந்தாதர்களாக கொண்டுள்ளது.  அவர்களை பற்றிய நல்ல செய்திகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து சேகரித்து,  அவர்களின் இணையத்தளத்தில் மக்களின் பார்வைக்கு வைத்து, அந்த தொழில் நிறுவனங்களில் நம்பகத்தன்மையை உருவாக்குவதே அவர்களின் வேலை. அவர்களை தொடர்பு கொண்டு பேபால் மீதுள்ள குறையை கூறி அவர்களிடம் இருந்து பதில் பெற்றுத்தரும்படி கேட்ப்போம் என்பதுதான் அந்த யோசனை. அதற்கான வழிமுறை இருக்கிறது. ஆனால் பேபால் நிறுவனம் அவர்களுக்கு கட்டுப்படுமா என்று சிறிய சந்தேகம் இருந்தது.

தீர்வு கிடைக்காவிடினும் பேபால் நிறுவனத்திற்கு எதிராக நம்முடைய குரலை பதிவு செய்து அது போது மக்கள் பார்வைக்கு சென்றால் கூட போதுமானது என கருதினேன். பேபால் நிறுவனத்துடன் ஆரம்பம் முதல் எழுந்த பிரச்சனைகளை தெளிவாக, விவரமாக, போதிய ஆதாரத்துடன் எழுதினேன். அதிக நேரம் பிடித்தது.எல்லாம் சரியாக இருந்தால் தான் அது ஏற்றுக்கொண்டு பேபால் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் இல்லையேல் நிராகரிக்கப்படும். அந்த நிறுவனம் என்னுடய கடிதத்தை பேபால் நிறுவனத்திற்கு பதில் கூறுமாறு அனுப்பி வைத்தது. முதல் படி அடைந்தாயிற்று.

BBB Paypal Complaint

ஐந்து நாள் கழித்து பேபால் இடம் இருந்து பதில் வந்தது. என் பேபால் கணக்கு தொடங்கப்பட்ட நாள், கடன் அட்டை, வங்கிக்கணக்கு சேர்க்கப்பட்ட நாள், பாண் எண் தவறு என்று கூறப்பட்ட நாள் என்று வெறும் என் கணக்கின் வரலாற்றையும், பாண் நம்பர் ரிசர்வ் வங்கியின் சட்டப்படி தேவை என்ற செய்தியுடன் மட்டுமே வழவழவென எழுதி சமாளித்து பதில் அனுப்பி இருந்தனர். நான் விடவில்லை. அது எல்லாம் இருக்கட்டும், என கணக்கு முடக்கப்பட்டதன் காரணங்களையும், நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் என்ன ஆயிற்று என்றேன். சில நாட்கள் கழித்து மீண்டும் அவர்களிடம் இருந்து பதில்.  நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும், விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும் அவர்களுடைய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதுவரை பெட்டர் பிசினெஸ் பீரோ இணையதளத்திலே விவாதித்துக்கொண்டு இருந்தோம். இப்போது அவர்களது தனிப்பட்ட மின்னஞ்சலில் தொடர்புகொண்டேன். உங்கள் பேபால் கணக்கு ஏற்கனவே ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது என்று மட்டும் பதில் வந்தது. என் கணக்கின் உள்ளே நுழைந்து பார்த்தேன். ஆச்சர்யம். நிரந்தரமாக மூடப்ட்டதாக சொன்ன என் பேபால் கணக்கு அதற்கான சுவடே இல்லாமல் பயன்படுத்தும் நிலையில் இருந்தது.

 

paypa account restored

22 thoughts on “பேபால்(PayPal) நிறுவனத்துடன் என் மோசமான அனுபவம்”

  1. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். 🙂

    நீங்களாவது பல பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு இந்தப்பிரச்சினைகளை சந்தித்துள்ளீர்கள்.நான் எதற்கும் இருக்கட்டுமே என்று புதிதாக பேபால் நிறுவனத்தில் கணக்கு தொடங்க முற்படுகையில் என்னுடைய பான் எண் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது என்று செய்தி வந்தது.வேறு யாராவது பிழைத்து போகிறார்கள் என்று விட்டுவிட்டேன்.(வேற வழி..?!) 🙁

  2. அது தவறு. அது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை இருப்பினும் உங்கள் பான் என்னை பயன்படுத்துவோரின் வருமானம் உங்கள் வருமானமாகவே கருதப்படும். ரிசர்வ் வங்கி அதனை கண்காணித்துக்கொண்டு இருக்கிறது.

  3. அவர்களுக்கு மட்டும் தமிழ் தெரிந்தால் என்னிடம் மாட்டிக்கொண்டு விழிப்பார்கள். 🙂
    (நமக்கு இங்லீஷ் தெரியாதுன்றத இப்டிதான் நாசூக்கா சொல்லணும்)

  4. நல்ல கட்டுரை. எனக்கும் சில மாதங்களுக்கு முன்னர் என்னுடைய பான் (PAN ) எண் தவறு என்று பேபால் அழிச்சாட்டியம் செய்தது. பல முறை முறையிட்டும் பேன் கார்டு நகலை அனுப்பியும் அவர்களிடம் தொலைபேசியில் பேசியும் சரியாகவே இல்லை. பின்னர் அந்த கணக்கிணை அழித்து விட்டு புதிய கணக்கினை ஏற்படுத்தி விட்டு பணத்தைப் பெற்றேன்.

  5. பிரவின் வாய்ப்பே இல்லை 🙂 செம சண்டை போட்டு இருக்கீங்க. உங்களின் விடா முயற்சி என்னை ஆச்சர்யப்படுத்தி விட்டதோடு மட்டுமல்லாமல் பின்னாளில் இது போன்ற பிரச்சனைகள் எனக்கு வந்தால் விடாமல் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது.

    உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. இவ்வளவு தூரம் சோர்வடையாமல் போராட மன உறுதி நிச்சயம் வேண்டும்.

  6. கலக்கீட்டீங்க !

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி !!

  7. சூப்பர் என்ன ஒரு விளக்கம்
    தொடர்ந்து எழுதுங்கள்

  8. திரு பிரவீன் அவர்களே,

    இந்த பதிவு எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.ஏன் எனில் நானும் paypal கணக்கு மூலமாக எனது இணையத்தில் சம்பாதித்த டாலர்களை இந்திய பணமாக பெற்றுக்கொண்டுவருகிறேன். இது போன்று paypal நடந்துகொள்ளும் என்று முன்பே எச்சரிக்கை தந்தமைக்கு மிக்க நன்றி.
    கார்த்திகேயன்

  9. நல்ல தகவல். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி பிரவீன்.

  10. @பொன்மலர் – உங்கள் பழைய கணக்கு உடனே அழிக்கப்பட்டுவிட்டதா? மீண்டும் அதே பான் எண்ணை புது கணக்கில் சேர்க்கும்போது பிரச்சனை ஏதும் எழவில்லையா?

  11. ஆமாம். பழைய கணக்கை அழித்து விட்டு சில நிமிடங்களிலேயே புதிய கணக்கு தொடங்கினேன். அப்போது அதே பான் எண்ணை ஏற்றுக் கொண்டு விட்டது. என்ன ஒரு கொடுமை.

  12. வாவ்…. மிக உபயோகமான பதிவு . சூப்பர்

  13. nanbare, vida muyarchi vettri tharum. very good infermation.indiavil ithu mattum problem illai.another one CIBIL, A VERY BIG PROBLEM.ATHAI PATHI yaaru step ettkka pogirargal.GOD ONLY KNOWS

  14. அற்புதம் மிக அருமை…….உங்களின் விட முயற்சி எனக்கு பிடித்து இருக்குகிறது ……………அவர்களிடம் மோத நல்ல ஆங்கில பேச தெரிந்து இருக்க வேண்டும்….நம்மில் பல பேருக்கு அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது…..நான் google adsense மூலம் earn பண்ணிக்கிட்டு இருக்கேன் …சில வருடங்கள் முன் என் google adsense கணக்கை மூடி விட்டார்கள் ……அவர்களின் சட்ட திட்டங்களுக்கு உதடுபட்டு தான் செயல் பட்டேன் ….அவர்களின் இந்த செயல் எனக்கு வருத்தத்தை தந்ததது …பின்னர் புது கணக்கு தொடக்கி earn பண்ணிக்கிட்டு இருக்ககேன்….
    உங்களின் இந்த கட்டுரை மிக தெளிவாக இருக்குகிறது…..நன்றி
    ஆதித்யா,திருச்சி

  15. மிகவும் உபயோகமான கட்டுரை…! பேபால் பற்றி கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. உங்களின் விடா முயற்சியைப் பாராட்டியே தீர வேண்டும்..! வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *