“லிங்கா” தரிசனம் – விமர்சனம்

lingaa-rajini-tamil-review

டிக்கெட் விக்கிற விலைக்கு மூணு நாளைக்கு தியேட்டர் பக்கமே போக வேண்டாம்னு முடிவோட தான் இருந்தேன்.  ஆனால் முதல் நாள், காலை காட்சியே எனக்கு “லிங்கா தரிசனம்” கிடைக்கவேண்டும் என்று ப்ராப்தம் இருந்திருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், படம் தொடங்குவதற்கு  ஐந்து நிமிடம் வரை நான் அந்த ஷோவிற்கு போவேன் என்று எனக்கே தெரியாது. அப்போது நண்பர் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்.  திடீரென உறவினர் ஒருவரிடம் இருந்து போன். ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கின் வாசலை கடந்து செல்கையில் காலை காட்சிக்கு டிக்கெட் இருப்பதாக தியேட்டர் ஊழியர் ஒருவர் வழிமறித்து சொல்லியதாக  கூறினார்.

விலை எவ்வளோ என்றேன்? முதல் வகுப்பு டிக்கெட் இருநூறு ருபாய் என்றார். அங்கேயும் கூடுதல் விலை தான் ஆகவே வேண்டாம் என்றேன். நான் இந்த பக்கம் வேண்டாம் என்று கூறுவதை டிக்கெட் விற்கும் நபர் அறிந்துக்கொண்டு நூறு ரூபாய்க்கு (!) தருவதாக விலையை பாதி குறைத்துக்கொண்டான். ஆனால் படம் ஐந்து நிமிடங்களில் தொடங்குவதாக இருந்தது. இது  நல்ல டீல் என்பதால் உடனே டிக்கெட்டை வாங்கசொல்லிவிட்டு அவசர அவசரமாய் தியேட்டரை நோக்கி வண்டியை செலுத்தினேன். படம் ஒரு பத்து நிமிடம் ஓடி இருந்தது கொஞ்சம் வருத்தம் தான்.

சரி புராணத்தை விட்டுவிட்டு கதைக்கு வருவோம். 1990களில் துவக்கத்தில் ஆரம்பித்த அதே ரஜினி பார்முலா படம் தான். அதே ரவிக்குமாரின் ட்ரேட்மார்க் மசாலா கலவைதான். ஆனால் படம் எப்படி என்று பார்ப்போம். லிங்காவாக அறிமுகமாகும் ரஜினி – சந்தானம் மற்றும் கருணாகாரன் கூட்டணியுடன் சேர்த்து திருட்டு வேலை செய்யும் ஒரு ஹை-டெக் திருடன்.  பிரிட்டிஷ் காலத்தில் மதுரை மகாராஜாவாக, மதுரை கலெக்டராக இருந்த தனது தாத்தா லிங்கேஸ்வரன் அணைத்து சொத்துக்களையும் வீணாக்கிவிட்டார் என்ற வெறுப்பில் லிங்கேஸ்வரன் என்ற தன் பெயரையும் லிங்கா என்று மாற்றிக்கொண்டவர்.

இந்த சூழ்நிலையில் சோலையூர் என்ற கிராமத்திற்கு லிங்காவை அழைத்து செல்கிறார் அனுஷ்கா. மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட அணை ஒன்று அந்த ஊரில் இருக்கிறது. தன் தாத்தா வாழ்ந்த போது மழைகாலங்களில் வெள்ளஓட்டத்தில் அழிந்தும், கோடைகாலங்களில் வறட்சியிலும் அழிந்துக்கொண்டு இருந்த கிராமம் அது. மக்களை காப்பாற்றுவதற்கு அணையை கட்டித்தர போராடுகிறார் தாத்தா லிங்கேஸ்வரன்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நயவஞ்சகத்தால் கலெக்டர் உத்தியோகத்தை உதறித்தள்ளிய லிங்கேஸ்வரன், ஒரு கட்டத்தில் தன் அனைத்து சொத்துக்களையும் விற்று அணையை மக்களுக்கு கட்டிகொடுத்து  ஆண்டியாக தன் வாழ்க்கையை  முடிக்கிறார். ஆனால் அப்பேர்பட்ட அணையை இடித்து தரைமட்டம் ஆக்க அரசியல்வாதி ஒருவன் இப்போது திட்டமிடுகிறான் என்பது பேரன் லிங்காவிற்கு தெரியவருகிறது.  அந்த திட்டத்தை தவிடுபொடியாக்கி, அணையை காப்பாற்றி, தன் வம்சத்தின் நற்பெயரை எப்படி நிலைநாட்டுகிறார்  என்பது தான் கதை

linga-rajini-anushka

அருமையான  கதை என்றாலும்  கட்டிமுடிக்கப்பட்ட ஒரு அணையை எப்படி கட்டினார்கள் என்று திரையில் சொல்லுவது போன்ற திரைக்கதை அமைப்பில் சுவாரசியம் கொஞ்சம் கம்மி தான்.  பிளாஸ் பேக்கை நீளமாக சொன்னதால் அணையை வெற்றிகரமாய்  கட்டுவது தான் கதை என்ற தோற்றம் உருவாகிறது. லேட்டாக சென்றதாலோ என்னவோ, எனக்கு மட்டும் தானோ எனவோ தெரியவில்லை – என்னால் படத்தில் முழுவதுமாய் ஒன்ற முடியவில்லை. ரவிக்குமார் – ரஜினி படங்களில் கதைக்குள் வரும் அந்த மெல்லிய காதல் காட்சிகளும் இதில் இல்லை. தாத்தா மற்றும் பேரன் இருவருடைய  காதலிலும் ஒரு உயிர்ப்பு இல்லை.

அனைத்தையும் இழந்து போகும் தாத்தா லிங்கேஸ்வரனை பார்க்கையில் முத்துவில் வரும் பாதிப்பு போல் இதில் ஏற்படுத்த தவறுகிறது.  ஆதவன் திரைப்பட க்ளைமாக்ஸில் சம்பந்தமே இல்லாமல் சூர்யாவை வானத்தில் வித்தைகாட்ட வைத்த ரவிக்குமார் இதிலும் அதே மாதிரி ஒரு  க்ளைமாக்ஸ் காட்சி வைத்து தேவையில்லாமால்  ரஜினியை படுத்திஇருக்கிறார். ரஜினி என்ற ஒரே காரணத்திற்காக அந்த காட்சிகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அனுஷ்காவும் சோனாக்ஷி சின்ஹாவும் அனாடமிகலி அக்கா தங்கை போல் தான் இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊர் பெண் முகத்தில் உள்ள கலை போல் அவிகளுக்கு இல்லை. நடிப்பில் தமிழ்  தெரியாதவர் போல் தெரியாமால் கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும்,  சோனாக்ஷி அந்த பாத்திரத்தில் ஏனோ ஒட்ட மறுக்கிறார். ஹீரோவிற்கு நிகரான வில்லன்களும் வில்லதனங்களும் இல்லாததாலும் படம் கொஞ்சம் பொறுமையாய் போகிறது.  அணையை காட்டும் காட்சிகளிலும், ரயில் சண்டைகாட்சிகளிலும் ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் அபாரம். வசனங்களும் காமடிகளும் பல இடங்களில் பளிச்சென்று இருக்கிறது. ஆனால் சந்திரமுகி, சிவாஜி, எந்திரன்  என்ற வரிசையில் இந்த படம் கொஞ்சம் சறுக்கல் தான். என்ன காரணத்திற்காகவோ இந்த படத்தை அவசரமாக துவங்கி இருக்கிறார்கள். அந்த அவசரம் திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் நன்றாகவே தெரிகிறது.

இருப்பினும் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் ரவிக்குமாரை தவிர யாராலும் இந்த அவசர சமையலை  தயார்செய்து இருக்கமுடியாது. ஆறு மாதங்களில் இந்த கதையை பிரமாண்டமாக படமாக்கி திரைக்கு கொண்டுவந்திருப்பது உண்மையிலேயே பெரிய சவால் தான். அதுவும் அந்த பிரம்மாண்ட அணையை கட்டும் காட்சிகள் வியப்பில் ஆழ்த்துகின்றன.   நீண்ட வருடங்களுக்கு பிறகு, ரஜினியை புதுப்பொழிவுடன் திரையில் காண்பதில் இருந்த உற்சாகம் ரகுமானிடம் இருந்து பெறமுடியவில்லை. மிகக்குறுகிய காலங்களில் ரகுமானை ரசிக்க ஆரம்பித்தவர்களுக்கு நிச்சயம் இது புரியப்போவதில்லை. இது ரஜினி என்ற ஒரு ஒற்றை மனிதனால் மட்டுமே தோளில் தூக்கிநிறுத்தப்பட்டுள்ள படம். தீவிர ரஜினி ரசிகர்களை தவிற  மற்றவர்களும் இதை கொண்டாடவதற்கு தேவையான மாஜிக் இதில் மி ஸ்ஸிங்.   ஆனாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால்  அனைவரும்  நிச்சயம்  இப்படத்தை ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *