நடுக்கடலில் சிக்கிக்கொண்ட ஒரு உயிர் காக்கும் படகு. அதில் கரைசேர தவிக்கும் ஒரு இளைஞன், அவனுடன் கூடவே ஒரு பெங்கால் புலி. இது தான் “லைப் ஒப் பை” படத்தின் கதை என்று கேள்விப்பட்டு திரையரங்கம் சென்றேன். ஆனால் அங்கு போனவுடன் தான் எனக்கு தெரிந்தது அந்த புலி மற்றும் இளைஞனுடன் சேர்ந்து நானும் அந்த படகில் பயணிக்க நேரிடுமென்று. 3D யின் உதவியோடு அந்த காட்சிகளில் நாமும் பயணித்தாலும், கதையில் தாக்கத்தால் நம் வாழ்க்கையும் அதனோடு பயணப்படுவது போல் இருக்கிறது என்பது தான் உண்மை.
எனக்கு சிறு வயது முதலே விடை தெரியாமல் இருந்த ஒரு கேள்விக்கு இந்த திரைப்படம் விடை கொடுத்தது. அது என்னவென்றால். பல ஆங்கில படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து பார்க்கிறோம், ரசிக்கிறோம். வியக்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் அதே போன்ற நேரடி தமிழ் படம் நம் ஊரில், நம் நடிகர்களை வைத்து எடுத்தால் அதில் நம்பகத்தன்மை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. உதாரணத்திற்கு சூப்பர் மேன் படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்தால்? அவதார் படத்தில் விஜயும், அனுஷ்காவும் வந்தால்? டைட்டானிக் படத்தில் அஜித்தும், நயன்தாராவும் கப்பல் தளத்தில் கையை நீட்டியபடி நின்றிருந்தால்? நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அது ஏன்? ஒரு வேலை அது வெள்ளைக்காரன் நடித்திருப்பதால் நம்பிவிடுகிறோமா? அவனது இனத்தை நாம் எப்போதும் உயரத்தில் வைத்து பார்க்கும் கலாச்சாரமா? (அதாவது செவப்பா இருக்கிறவன் போய் சொல்லமாட்டான் என்பது போல்)
“லைப் ஆப் பை” ஒரு ஹாலிவுட் படம் என்றாலும், இந்தியாவில், அதுவும் பாண்டிச்சேரியை சார்ந்த கதைக்களம். நம்முடைய நேட்டிவிட்டி அதில் இருக்கிறது. நமக்கு பழக்கப்பட்ட இந்திய முகங்கள். நம்முடைய கலாச்சாரத்தை பேசுகிறது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்படி இருப்பதாலோ என்னவோ ஹாலிவூட் தரத்தில் ஒரு நேரடி தமிழ் படமாக நாம் கருதிக்கொண்டு இதை பார்க்க முடிகிறது. அப்படி பார்த்தும் காட்சிகளை நம்மால் நம்ப முடிகிறது. வியக்க முடிகிறது. பாராட்டவும் முடிகிறது. ஆக “மேக்கிங்” தான் எல்லாவற்றிக்கும் காரணம். அது சரியாக இருந்தால் விண்வெளியில் பறந்தபடி அயல் கிரகவாசிகளுடன் “தனுஷ்” சண்டை போட்டால் கூட கண் சிமிட்டாமல் நம்மால் ரசிக்கமுடியும்.
அது சரி, கதைக்கு வருவோம். நாம் கண்ணீர் சிந்தும் நேரங்களில் சாயக்கிடைக்கும் தோள்கள். கீழே விழும்போது நம்மை தூக்கிவிட நீட்டப்படும் கைகள். இப்படி சிந்தித்து பார்த்தால் நாம் ஒவ்வொரு முறை வாழ்க்கையில் சோர்ந்து போகும் தருணங்களில் ஏதேனும் ஒரு ரூபத்தில் ஒரு சக்தி நம்மை முன்னோக்கி உந்திக்கொண்டு தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. எதற்காக ஒரு சம்பவம் நமக்கு நடத்தது என்று பின்னர் யோசித்து பார்த்தால் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். நமக்கு வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.
சென்ற வருடம் எனது சித்தி அவரது கிராமத்தில் இறந்து போயிருந்தார். தற்கொலை என்பதால் அவர்களது கிராமத்தின் வழக்கத்துக்கு மாறாக அவர்களது நிலத்தில் புதைக்காமல் அவரது உடலை அருகில் உள்ள ஒரு ரிசர்வுட் பாரஸ்ட் உள்ளே ஒரு இடுகாட்டில் ஏறியூட்டினார்கள். இரவு நேரம் அது. அனைவரும் அதே பாரஸ்ட் வழியாக இப்போது திரும்பி வந்துக்கொண்டு இருந்தோம். மனித நடமாட்டம் இல்லாத, கண்ணுக்கெட்டிய தூரம் உயரமான மரங்களை கொண்ட காடு அது. பவுர்ணமி நிலா வெளிச்சத்தில் ஒரு அமனுஷ்யத்தை தனக்குள் பரப்பி இருந்தது. எனக்கு முன்னேயும், பின்னேயும், உறவினர்கள் அனைவரும் நடந்துக்கொண்டு இருந்தனர். ஆங்காங்கே அவர்களது கைகளில் டார்ச் லைட்டும், பந்தமும் இருந்தது. எங்கும் நிசப்தம். தூரத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் மைக் செட்டில் இருந்து ஒரு பாடல் மெல்லியதாய் கேட்டுக்கொண்டு இருந்தது.
தலையில் கிர்ரென்று ஒரு உணர்வு. இந்த காட்சியை, இந்த சப்தத்தை, இந்த நிகழ்வை ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன், அனுபவித்து இருக்கிறேன். கனவிலா? அல்லது நனவிலா? இனம்புரியா ஒரு உணர்வு. ஏற்கனவே பார்த்த சம்பவம் திரும்பவும் நமக்கு நடந்தால் எப்படி இருக்கும்! ஒரு நிமிடம் உறைந்து போனேன். உடனே தலையை சிலுப்பினேன். மீண்டும் வேகமாக சிலுப்பினேன். அருகில் இருந்த ஒருவர் என்ன ஆச்சு உனக்கு என்று கேட்டார்? ஒன்றும் இல்லை என்றேன். அவருக்கு என்ன சொல்லி புரிய வைக்க? அதை நான் மட்டுமே உணரமுடிந்த விஷயம். அமைதியாய் வீடு வந்து சேர்ந்தேன்.
அதே போல் ஆறு வருடங்களுக்கு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்துக்கொண்டு இருந்த அலுவலகத்தில் இருந்து வேலை முடிந்து பைக்கில் சேலம் செவ்வாய்பேட்டை வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். மணி இரவு பன்னிரெண்டை கடந்திருக்கும். வீட்டிற்கு அருகில் வந்துவிட்டேன். அன்னதானப்பட்டி பகுதி நான்கு ரோட்டை கடக்க வேண்டும். அதாவது நான்கு சாலைகள் சந்திக்கும் ஜங்க்ஷன் அது. நடு நிசி என்பதால் ஊரே வெறிச்சோடி கிடந்தது. சாலையில் யாரும் இல்லை. அதை கடக்கும் முன்னர் வலது பக்கம் பார்த்தேன் வாகனம் ஏதும் வரவில்லை. இடப்பக்கம் கட்டடம் இருந்ததால் அந்த சந்திப்பின் அருகில் செல்லும் வரை என்னால் பார்க்க முடியாது. ராங் ரூட் என்பதால் யாரும் அந்த பக்கம் இருந்து வரவும் வாய்ப்பு இல்லை.
அதனால் வேகத்தை குறைக்காமல் வந்த வேகத்திலேயே அந்த சாலை சந்திப்பை கடக்க முயன்றேன். அந்த கட்டிடிடங்களை தாண்டுகையில் திடீரென்று விர்ரென மண்டைக்குள் கரண்ட் பாய்தது போல் இருந்தது. இடப்பக்கம் இருந்து என்னை நோக்கி ஏதோ அதி வேகத்தில் என்னை மோத வந்துகொண்டு இருந்தது போல் ஒரு உள்ளுணர்வு. நான் அதுவரை இடப்பக்கம் திரும்பவே இல்லை. என்னையறியாமல் என் கை பைக்கின் விசையை கூட்டியது. அந்த சாலையை தாண்டிய அடுத்த நொடிகளில் ப்ரேக் போட்டு நிறுத்தி திரும்பிப்பார்த்தேன். கீர்ச்…. கீர்ச்… என சத்தம் எழுப்பிக்கொண்டே நான்கைந்து கடைகளை தாண்டி ஒரு டெம்போ நின்றது. என் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தது. வாயில் இருந்து வார்த்தை வரவில்லை. என்ன நடந்தது என்று நான் உணருவதற்க்குள் அந்த வாகனம் மீண்டும் வேகமெடுத்து. அதாவது பயங்கர வேகத்தில் ராங் சைடில் இருந்து அந்த டெம்போ வந்திருக்கிறது. மயிரிழையில் என்னை அது மோதுவதில் இருந்து தப்பித்து இருக்கிறேன்.
சில நொடிகளில் நடந்துவிட்ட விட்ட இந்த சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நான் அப்போது இடப்பக்கம் திரும்பி பார்த்திருந்தால், நான் என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் அந்த வாகனம் என்னை மோதி இருக்கும், பதட்டத்தில் பிரேக் அடித்திரிந்தாலோ, வண்டியின் விசையை கூட்டாமல் இருந்திருந்தாலோ கூட அது தான் நிகழ்த்திருக்கும். அந்த சம்பவத்தை என்னால் சரியாக எழுத்தால் விவரிக்க முடியவில்லை. (இந்த புகைப்படத்தை பார்க்கவும். சம்பவம் நடந்த இடம் அது. பச்சை கோடு நான் சென்ற திசை, சிகப்பு அந்த டெம்போ வந்தது, நீளம் அந்த டெம்போ சென்றிருக்க வேண்டிய திசை). நான் எப்படி தப்பித்தேன் என்று இன்னமும் தெரியவில்லை.அது ஒரு விளக்க முடியா அனுபவம். சுருக்கமாய் சொன்னால் ஏதோ ஒரு சக்தி, என் உள்ளுணர்வை தூண்டி என்னை விபத்தில் இருந்து காப்பற்றி இருக்கிறது. அது என்ன என்று வெளியே விளக்கம் தேடினால் நிச்சயம் பதில் கிடைக்காது.
இப்படி உலகம் நம்ப மறுக்கும் ஏதேனும் நம் வாழ்வின் நிகழ்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதில் இருந்து கிளறுகிறது இப்படம். படத்தின் கதாநாயகனுக்கு நடக்கும் சம்பவங்களும் அதை போன்றது தான். கடைசிவரை அவனுக்கும், பார்வையாளர்களான நம்மை தவிர யாரும் அதை நம்பப்போவதில்லை. கடலில் சிக்கிய ஒருவன் இருநூற்றி இருபத்தி ஏழு நாட்கள் கழித்து கரை ஒதுங்குகிறான். இது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் இயற்கை, சம்பவங்கள் அதுவரை அவன் பிழைத்திருப்பதற்க்கு அதுவரை ஏதேனும் வகையில் அவனுக்கு ஒத்துழைக்கிறது.அது கடவுளா? அல்லது இயற்கையை மீறிய ஒரு சக்தியா? விடையை படத்தின் முடிவில் நீங்களே யூகியுங்கள். மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை அந்த புலியின் மூலமாகவும், மனிதனுக்கும் இருக்கும் கடவுளை அந்த இளைஞன் மூலமாகவும் தோலுரித்து காட்டுகிறது இப்படம். மொத்தத்தில் “லைப் ஆப் பை” ஒரு வாழ்க்கை அனுபவம்.
உங்கள் பார்வையில் விமர்சனம் அருமை…
நன்றி…
இது போன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு.இப்போது நடக்கும் நிகழ்வுகள் எப்போதோ நான் கனவில் கண்டது போன்று நடந்திருக்கும்.வெளியில் சொன்னால் நம்பமாட்டார்கள் என்று எனக்குள்ளேயே வைத்துக்கொள்வேன்.
எனக்கும், இப்போது நடக்கும் நிகழ்வுகள் முன்பு எப்போதோ நடந்தது போல சில சமையங்களில் தோன்றும்…
Just an Superb article the same way i loved the movie and it was amazing, Life of Pi makes it to the top of the list, realizing the life of humans and the interesting facts that are hidden deep inside our souls..
Sorry for typing in English…