ஒரு பக்கம் சாமானியர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்க்க முடியாத வகையில் கபாலி பட டிக்கெட் ஆயிரங்களை தாண்டி விற்கப்பட, இன்னொரு பக்கம் இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போராக கருதி “தமிழ் ராக்கர்ஸ்” டாரண்ட் இணையதளத்திற்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர் இன்றைய இளைய இனைய தமிழர்கள். பொதுவாக தியேட்டரில் ஓடும் படத்தை இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக பார்ப்பதை தவிர்த்து சுயஒழுக்கத்தோடு வாழ்பவன் நான். நல்ல படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பதால் நம்மை நம்பி படம் எடுப்பவன் நன்றாக இருப்பான். அவன் நன்றாக இருந்தால் தான் நாமும் மறுபடியும் நல்ல படம் பார்க்க முடியும். குறைந்தபட்சம், இன்னொருவனின் உழைப்பை திருடாமலாவது நாம் கட்டுப்பாட்டுடன் வாழ்வதே அறம். இதை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் சொல்லியும் வருகிறேன், எழுதியும் வருகிறேன் ( யாரும் கேக்கப்போறது இல்லை என்பது வேறு விஷயம்)
https://www.quora.com/How-can-I-watch-tamil-movies-in-HD-within-a-few-days-of-release/answer/Praveen-Kumar-C-5
ஆனால் இங்கு ஒன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். எப்போதும் இல்லாத வகையில் திருட்டு திரைப்பட இணையத்தளங்களுக்கு (குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ்]) வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக மீம்ஸ் மூலம் ஆதரவு பெருகி வருகிறது. ஒவ்வொன்னும் அவ்வளவு கிரியேட்டிவ். சிலதுகளை பார்த்தவுடன் குபீர் என்று சிரிப்பு வருமளவிற்கு கற்பனைத்திறன். இதை பார்க்கும்போது “ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு” என்ற நியூட்டனின் மூன்றாம் விதிதான் எனக்கு நியாபகம் வருகிறது. எப்போதும் போலில்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து முக்கிய இணையதளங்களை முடக்கி கபாலி திரைப்படம் இணையத்தில் வெளிவராமல் பார்த்துக்கொண்டது கபாலி டீம்.(சில நாட்களுக்கு மட்டும்). இதனால் தங்கள் பட வருமானத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டனர். இதுவரை அருமை. Perfect move.
ஆனால் சட்டவிரோதமாக பணம் போவதை தடுத்தவர்கள், அவர்களே சட்ட விரோதமாக டிக்கெட் விலையை கண்ணாபின்னாவென்று விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். நூற்றியிருபது தான் அதிகபட்ச டிக்கெட் விலை என்று அரசு நிர்ணயத்து இருக்கிறது. ஆனால் சேலத்தில் ஒரு டிக்கெட் முன்னூறு, இருநூற்றி ஐம்பது என்று போலிஸ் பாதுகாப்போடு கவுண்டரிலேயே தைரியமாக விற்க்கப்படுகிறது.. சென்னையில் ஆயிரத்தை தாண்டி போவதாக அறிகிறேன். இணையதளங்களில் டிக்கெட் ரிசர்வேசன் இல்லை. அப்படியே இருந்தாலும் டிக்கெட் விலையை குறிப்பிடமால் தியேட்டரில் செலுத்தச்சொல்கிறார்கள். இது பகல் கொள்ளை. கபாலி படம் எப்படியும் ஓடிவிடும். போட்ட பணத்திற்கு மேலே எடுத்துவிட முடியும். ஆனால் அதிகபட்ச பணம் சம்பாதிக்க இது அவர்கள் செய்த வினை.
போதிய பணம் இருந்தும் முதல் நாள் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு நாம் கவலைப்பட தேவையில்லை. (First Come First Serve) – Its their Bad luck. ஆனால் போதிய பணம் இல்லாத சாமானிய மக்கள்? முண்டியடித்து கவுண்டர் வரை சென்று பாக்கட்டை தடவியபடியே ஏமாற்றத்துடன் வெளியே வரும் ரஜினி ரசிகன்? முதல் நாள் முதல் காட்சியே பார்த்து பழக்கப்பட்ட ரஜினி வெறியன்? அனைவரும் ஏமாற்றப்பட்டனர். காசில்லாதவன் அவமானபடுத்தப்படுகிறான், ஏமாற்றப்படுகிறான். முதல் நாள் முதல் காட்சியே பார்த்து தீரவேண்டும்? என்ன செய்ய? அடிடா தமிழ் ராக்கர்ஸ் டாட் டண்டனக்கா….. அந்த மனக்குமுறல், இயலாமையின் வெளிப்பாடு தான் திருட்டு பட இணையதளங்களை ஆதரிப்பது. எப்படியும் படம் அந்த இணையதளத்தின் வெளிவரவேண்டும் என்ற வேட்க்கையைத்தான் அது ஏற்படுத்துகிறது. இது தான் அதற்க்கு இணையான எதிர்வினை.
டிக்கெட் விலை சட்டத்திற்கு புறம்பாக அதிகபடுத்தி இருப்பதை ஆதரித்து சிலர் கேட்க்கிறார்கள்.”அப்படி நீ முதல் நாள் படம் பார்த்தே ஆகணுமா? When there is a demand there is a price increase. அதனால எவ்வளோ சொல்லறமோ அந்த காசை கொடு.. இல்லை கிளம்பு.”
“ஐயா. ஒன்னு புரிஞ்சிக்கோங்க. நான் முதல் நாள் டிக்கெட் புக் பண்ணாம விட்டுட்டேன். பார்த்தே ஆகணும். ஆனா டிக்கெட் வித்து தீர்ந்துடுச்சு. இப்போ நான் ப்ளாக்ல ஆயிரம் என்ன, ரெண்டாயிரம் கொடுத்து கூட வாங்குவேன். ஆனா அரசு நிர்ணயித்த விலையை விட என்னத்துக்கு சட்டவிரோதமா கவுண்டர்ல விக்கறீங்க?”
“இன்னும் புரிலையா? சரி… ஒரு குட்டி கதை ஒன்னு சொல்லறேன்.”
நான் கல்லூரி படித்துக்கொண்டு இருந்த சமயம். ஊருக்கு வந்திருந்தேன். சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி வெளியே லோக்கல் பஸ் பிடிக்க பைகளை சுமந்துகொண்டு நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்.
“தம்பி இங்க வா” என்று ஒரு குரல் கீழே இருந்து வந்தது. குனிந்து பார்த்தேன் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி.
“என்ன தம்பி காலேஜ் படிக்கிறியா?”
“ஆமாண்ணே”
இங்க பக்கத்துலவாப்பா… செருப்பு புதுசா?.”
தயக்கத்துடன் அருகில் சென்றேன் “இல்லன்னே… கொஞ்ச மாசம் ஆகுது.”
“காலேஜ் பையன் இந்த செருப்பு போடலாமா? சீக்கிரம் அறுந்துடும்னு நினைக்கிறேன். எங்க கழட்டு பாக்கலாம்.”
“இல்லன்னே பரவாயில்ல” என்று எனக்கு தயக்கம் இன்னும் அதிகமானது.
“அட சும்மா கலட்டுப்பா… பாக்கறேன்… . இங்க குடு” என்று அவராகவே காலில் இருந்து கழட்டிக்கொண்டார்.செருப்பை சுற்றி முற்றி பார்த்தார். திடீரென உள்பக்கமாக ஆணி அடிக்க ஆரம்பித்தார்.
“அண்ணா என்னானே பண்ணறீங்க?”
“சும்மா இருப்பா. எப்புடி தான் இதை போட்டுட்டு நடக்கறியோ” சில நிமிடம் உரையாடிக்கொண்டே பணியை தொடர்ந்தார். பின் மீண்டும் பாலிஸ் அடித்து என் செருப்பை காலில் மாட்டி விட்டார்.
“இப்போ எப்புடி இருக்கு?”
நடந்து பார்த்தேன் “தெரியலைண்ணே…நல்லா தான் இருக்குன்னு நினைக்கிறேன்”
“இனிமே இது அவ்வளோ சீக்கிரம் பிஞ்சிப்போகாது.. இன்னும் பல மாசத்துக்கு நீ புது செருப்பு எடுக்க தேவையில்லை”
யாருன்னே தெரியாத நம்மை கூப்பிட்டு இப்படி ஒரு உதவி செய்யுராறேனு மனசுக்குள்ள நெனச்சி சந்தோசப்பட்டு “தாக்ஸ்னே” என்றேன்,
“பரவாயில்லப்பா..”
“சரி வரண்ணே”
“வரியா? ஒரு அம்பது ரூபா எடு”
திடுக்என்றது. “அண்ணே அம்பது ரூபாயா?”
“ஆமா ஒரு செருப்புக்கு இருபத்தஞ்சு ரூபா. அப்போ ரெண்டு செருப்புக்கு எவ்வளோ ஆச்சு?”
என் கண்களில் கண்ணீர் வராத குறைதான். பாக்கட்டில் வெறும் ஐம்பது ருபாய் தான் இருந்தது. அவ்வளவு தான் இருக்கிறது என்றதும் அவன் குரல் மேலும் கடுமையானது.
“முன்னாடியே சொல்லித்தொலைய வேண்டியதுதான?”
“நீங்க தான கூப்பிடீங்க?”
“கூப்பிட்ட ஒடனே வந்துடுவியா? சரி அந்த அம்பது ரூபாய கொடுத்திட்டு போ.”
கடைசியில் பேசி, புரியவைத்து அந்த ஐம்பது ருபாய் நோட்டை கொடுத்துவிட்டு பஸ்சுக்கு பத்து ருபாய் அவனிடமே வாங்கிச்சென்றேன். அதே ஏமாற்றம், அதே அவமானம், அதே வலிதான் தான் முதல் காட்சிக்கு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க முடியவில்லை என்பது.
“டீசர் காட்டி, பாட்ட போட்டு, டிரைலர் ஓடவிட்டு, ஆசையக்காட்டி…. மொத நாளே தியேட்டர் வான்னு சொல்லி வர வச்சிட்டு,.ஆயிரம் ரூபா கேக்கறீங்க?… இதுல உன்ன யாரு மொத நாளே வர சொன்னா…. போயிட்டு ஒரு ரெண்டு நாள் கழிச்சு வான்னு சொல்லறீங்க? பண்ணுறது திருட்டு இதுல தத்துவம் வேற?”
ஒன்னு புரிஞ்சிக்கோங்க மக்கா. தமிழ் ராக்கர்ஸ் தங்களின் domain TLDயை(..com, .in, .ch) கன்னாபின்னாவென்று மாற்றிக்கொண்டு இருக்கிறது. அந்த இணையத்தளம் முடக்கப்பட்டது போல் தெரியவில்லை. பத்தாயிரம் திரையரங்கில் படம் ரிலீஸ் ஆகிறது. மக்களின் அமோக ஆதரவில் அதில் ஒரு திரையங்கில் கூடவா தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு டிக்கெட் கிடைக்காது. இத்தனைக்கும் தமிழ் ராக்கர்ஸ் மெம்பெர்ஸ்ல டிக்கெட் எடுத்து தியேட்டர்ல படம் பாக்குற ஒரே ஆளு அவருதான். (எதிர்வினை)
பிகு: நான் சத்தியமாக முதல் நாள் முதல் காட்சி தியேட்டரில் தான் படம் பார்க்க போகிறேன். அதுவும் சொந்த உழைப்பில் சம்பாதித்த காசில். ஓசி டிக்கெட் இல்லை. எதுக்கு சொல்லுறேன்னா டிக்கெட் விலை மாத திரைப்பட பட்ஜெட்டை பதம் பார்ப்பதால் அடுத்து ரிலீசாகும் நல்ல படங்களை திரையரங்குகளில் பார்ப்பதாய் இல்லை. மற்ற திரைப்படங்களுக்கு செல்லும் பணம் கபாலிக்கே சென்றுவிட்டது.(எதிர்வினை)
இதோ மேலும் நான் ரசித்த மீம்ஸ்கள் சில…. 🙂