ரஜினி-ரஞ்சித் கூட்டணி, ஆதாலால் படத்தை நல்லா செஞ்சியிருப்பாங்கன்னு போய் பார்த்தா…. நம்மளை ஒக்காரவச்சி நல்லா செஞ்சிட்டாங்க பாஸ்…
படத்தின் கதையை ஏற்கனவே அதன் இயக்குனர் பல பேட்டிகளில் சொல்லியதுதான். அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். (கதை தெரிந்தால் படம் பார்க்கும்போது சுவாரசியம் போய்விடும் என்று பயப்படதேவையில்லை. தொடர்ந்து படிக்கலாம்)
- மலேசிய தமிழர்களின் பிரச்சனைக்காக போராடி சிறைசெல்லும் கபாலி எனும் ஒரு டான், இருபத்தைந்து வருடம் கழித்து ஜெயிலில் இருந்து திரும்பி வருகிறார்.
- வந்ததும் மக்களுக்காக பல நல்லது செய்கிறார்.
- கொல்லப்பட்டதாய் சொல்லப்படும் தன் கர்ப்பிணி மனைவி உயிருடன் இருப்பதை அறிந்து அவரை தேடி கண்டு பிடிக்கிறார். (கர்பினிப்பெண் உயிருடன் இருந்தால் அப்போ அந்த குழந்தை? – அதான் ட்விஸ்ட்).
- அப்புறம் கடைசியில் எதிரிகளை பழி வாங்குகிறார்.
கதை சுருக்கமும் அதுதான். மொத்தப்படமும் அதுதான். மாஸ் அறிமுகம் அரைமணி நேரம். நல்லது செய்வது&பிளாஸ் பேக் அரைமணி நேரம். தேடல் அரைமணி நேரம். பழிவாங்குதல் அரைமணி நேரம். கபாலி ரெடி.
கதையோடு பொருந்திய ரஜினியின் நடிப்பை கடைசியில் சந்திரமுகியில் பார்த்தது. வயதான, அனுபவமுள்ள டான் கதாபாத்திரம் என்பதால் அந்த துருதுருப்பு இதில் இல்லையென்றாலும் மாஸாக இருக்கிறார். மனைவியை பற்றி அவர் ஒவ்வொரு முறை பேசும்போதும், விரைவில் சந்திக்கபோகிறோம் என்று அவர் பூரிக்கும் போதும், மனுஷன் மனதை வருடுகிறார். மனைவியை பார்த்தவுடன் கொடுக்கும் ரியாக்சன் இருக்கே… கொஞ்சம் விட்டால் நம் கண்களை நனைத்துவிடும் வாய்ப்பு உண்டு. ராதிகா ஆப்தேவும் சிறந்த நடிப்பு, தமிழ் உச்சறிப்பும், கணீர் என்று பேசுவதும் அருமை. அடுத்து தன்ஷிகா. நடிப்பும் ஆளும் செம ஹாட். முதன் முதலாக இந்த படத்தில் தன்ஷிகாவை மிகவும் ரசிக்கிறேன். ரஜினியை கூட கவனிக்காமல். 🙂 கிஷோர், தினேஷ், கலையரசன் என்று அவர்களது பாத்திரத்தை அவர்கள் கட்சிதமாக செய்திருக்கிறார்கள். மெயின் வில்லனும் சரியாக பொருந்திப்போய்இருக்கிறார்.
படத்தின் ஓபனிங் அருமை. பஞ்ச் இல்லை.. பில்டப் இல்லை. ஒகே இது வழக்கமான ரஜினி படம் இல்லை.. எதிர்பார்த்ததுபோல் ரஞ்சித் படம்தான் என்று ஊர்ஜிதம் செய்து சந்தோசப்பட்ட கொஞ்ச நேரத்தில் ஏதோ தப்பாகவேபட்டது. ஒரு சீனை ஓபன் செய்வதிலும், நிறைவு செய்வதிலும் நிறைய இடத்தில் இயக்குனர் தடுமாற ஆரம்பித்தது புரிந்தது. உதாரணம்: ஜெயிலில் இருந்து மாஸாக கபாலி வெளியே வந்தவுடன் நடக்கும் உரையாடல்.
முதல் மற்றும் கடைசி சில நிமிடங்கள் தவிர்த்து படத்தில் சுவாரசியாமான சம்பவங்கள் இல்லை. என்கேஜிங் காட்சிகள் இல்லை. சுத்தமாய் காமடி இல்லை. படத்தோடு தான் காமெடி வரும், தனியாக வைக்க முடியாது என்று ரஜினியையே கன்வீன்ஸ் பண்ணியதாக இயக்குனரின் பேட்டியை பார்த்தேன். ஜான் விஜய் வீட்டில் அவரது மனைவி ரஜினிக்கு உணவு பரிமாறும் போது ஒரு காமடி நடக்கும் பாருங்க.. சான்சே இல்லை. அப்படி ஒரு உலக தர மொக்க காமடியை நீங்க எங்கேயும் பார்திருக்க முடியாது.. ஒருகட்டத்தில் கதையை நகர்த்த வழியில்லாமல் ஒரே ஒரு சீன் (பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் கபாலியின் கேள்வி-பதில் நேரம்) நீண்ட நேரம் ஜவ்வாக இழுக்கப்பட்டு நம் பொறுமையை மிகவும் சோதித்தது. படத்தின் முதுகெலும்பான பிளாஸ் பேக் சீனில் வீரியம் இல்லை. மேலோட்டமாய் சொல்லப்பட்டது போலிருக்கிறது. அந்த போர்ஷனை கொஞ்சம் நீட்டி சுவாரசியாமாக, ஆழமாக இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
மனைவியை தேடும் சீன்களிலும் சலுப்பு தட்டுகிறது. “கிறிஸ்டல் மேஸ்”னு ஒரு உலக புகழ் பெற்ற கேம் ஷோ ஒன்னு இருக்கு. ஒரு பொருளை கண்டுபிக்க பல இடங்களில் துருப்புசீட்டை ஒளித்து வைத்திருப்பார்கள். ஒன்றை கண்டுபிடித்தால் வேறொரு இடத்திற்கு அது அனுப்பும். அங்கே தேடி கண்டுபிடித்தால் அது வேறு ஒரு இடத்திற்கு நம்மை போகச்சொல்லும். இப்படியே ஒவ்வொரு இடமாய் அலைந்து தேடி அந்த பொருளை மீட்பதற்கும் தாவு தீர்ந்துவிடும். அப்படி தான் ராதிகா ஆப்தேவை தேடும் படலம் இருக்கிறது. மலேசியா, சென்னை, பாண்டி, ஆரோவில்லே என்று பல இடங்களில் தேடுகிறார்கள். ஒவ்வொரு இடம் நுழையும்போது ஒரு சோக இசை. ரஜினி கூலிங்கிளாசை கழட்டுவார். உள்ளே போனால் அவர்கள் வேறொரு இடத்திற்கு துருப்பு சொல்லுவார்கள். மீண்டும் அதே சோக இசை, ரஜினி கூலிங் கிளாஸ் கழட்டுவார், உள்ளே ராதிகா ஆப்தே இருக்க மாட்டார். கொடுமையிலும் கொடுமை. மொத்தத்தில் பா.ரஞ்சித் அவர்கள் கதை சொல்லியாக இந்த படத்தில் தோர்த்துவிட்டார். படம் ஜெயித்து விட்டது.
பின் குறிப்பு: படத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் நெருப்புடா பாடல் பின்னணியில் ஒலிப்பதுபோல் காதில் கேட்டது. . அய்யயோ என்னடா இது சந்தோஸ் நாராயணன் இப்படி சொதப்பிடாரே என்று நினைத்தேன். அதற்குள் நின்று விட்டது. சரி டெக்னிகல் பால்ட் போல என்று நினைத்துக்கொண்டு விட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்து ரஜினியும், ராதிகா ஆப்தேவும் கட்டிப்பிடித்து இப்போது அழுதுக்கொண்டு இருந்தார்கள். மீண்டும் அதே நெருப்புடா பாடல் பின்னணியில் மெல்லியதாக ஒலிக்கிறது. மறுபடியுமா? என்று ஷாக்காகி சுதாரித்து சுற்றும் முற்றும் பார்த்தேன். பக்கத்தில் ஒரு பார்டி வாயை பிளந்து தூங்கிக்கொண்டு இருந்தது. அவரது சாட்டை பாக்கட்டில் இருந்து “நெருப்புடா… நெருங்குடா… முடியுமா?” என்று சவால் சப்தம். படம் முடிந்து வரும்போது தான் அந்த நெருப்பை நெருங்கி எழுப்பிவிட்டுதான் வந்தேன்.
super
i getting relaxed